Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 28, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 88 )

                                    எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் !!

" சாமா சார். சாப்பாடு பிரமாதம். என் ஆத்துக்காரி சொல்லிண்டே இருந்தா, கல்யாண சாப்பாட்டில் மட்டும் எந்தக் குறையும் வந்துடக் கூடாதுன்னு. அவ ஆசை பட்டபடி அமர்க்களப் படுத்திட்டீர். யாரிடமாவது அவங்க வீட்டுக் குழந்தைங்க கல்யாணம் எப்போன்னு யாரும் டைரெக்டா கேட்கிறது கிடையாது. கல்யாண சாப்பாடு எப்போ போடப் போறேள்ன்னு தானே கேட்கிறாங்க. ஒருத்தன் ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிட்டு வர்றான்னு தெரிஞ்சா " பொண்ணுக்கு எத்தனை பவுன் நகை போட்டா ? மாப்பிள்ளை எப்படி இருக்கிறார் ? என்ன செய்றார் "ன்னு கேட்கிறவா எத்தனை பேர் ? கல்யாண சாப்பாடெல்லாம் எப்படின்னு கேட்கிறவா தான் அதிகம் பேர். எதை கண்டும் திருப்தி அடையாத மனம், வயிறு நிறைந்த மணமான  சாப்பாட்டு விஷயத்தில் மட்டும்தான் திருப்தி அடையுது. அதனாலே சாப்பாடு பிரமாதமா இருக்கணும்னு சொல்லிண்டே இருந்தா. அவ ஆசைப்பட்டபடியே கல்யாண விருந்தை அமர்க்களப் படுத்திட்டீர். செட்டில்மென்ட்  என்னான்னு சொல்லும். செக் குடுத்திடறேன். நீர்  அட்வான்ஸ் கூட வாங்கிகலேன்னு என் பையன் சொன்னான். பிளாங்க் செக் குடுத்திடறேன். நீரே கூட அமௌன்ட் பில் பண்ணிக்கலாம் " என்று சொல்லி சாமா ஐயர் முகத்தைக் கூர்ந்து கவனித்தார் ரிடையர்ட் ஜட்ஜ் கோதண்ட ராமன்.
"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்கக் கூடாது. பெரியவா கிட்டே ஒரு சிறு விண்ணப்பம் "
" என்ன வேணும் ? தயங்காமே சொல்லும். நீர் கேட்கிறதை செஞ்சு தர நான் ரெடி "
"பெரியவா வீட்டு விசேஷம்தான் நான் எடுத்து நடத்துகிற நூறாவது விசேஷம். ஒரு காலத்தில் நான் ஒரு பிரைவட் கம்பெனியில் வேலை பார்த்துண்டு இருந்தேன். நிர்வாகப் பிரச்சினையால் கம்பெனியை இழுத்து மூடிட்டா. பொழைப்புக்கு வழி தேடித்தான் கரண்டியை கையில் பிடித்தேன். அனுபவமில்லேன்னு சொல்லி என்னை நம்பி சமையல் பொறுப்பை விடறதுக்கு எல்லாரும் தயங்கினா. அப்போ, நான் என்னோட குலதெய்வம் குருவாயூரப்பனிடம் " இந்த சமையல் வேலையில் நான் நல்ல படியாக காலூன்றி நின்னுட்டா, நான் எடுத்து நடத்தப்  போற நூறாவது சமையல் கான்ட்ராக்டுக்கு  என் கையால் பணத்தை வாங்க மாட்டேன். என்னை நம்பி நூறாவது சமையல்  பொறுப்பை விடறவா கையாலேயே அந்தப் பணத்தை உன்னிடமோ  இல்லாட்டா யாராவது கஷ்டப் படறவாளுக்கோ கொடுத்திட சொல்றேன்னு வேண்டிண்டேன். நீங்க கொடுக்க நினைக்கிற பணத்தை கோயிலுக்கோ இல்லாட்டா  உங்க கண்ணில் படற ஏதோவொரு  கஷ்டப் படற குடும்பத்துக்கோ குடுத்திடலாம். நான் இதை முதலிலேயே சொல்லி இருந்தா நீங்க என்னை நம்பி  பொறுப்பைக் குடுத்திருக்க மாட்டேள். அதான் எல்லா விஷேசமும் முடிஞ்ச பின்னாலே சொல்றேன். இதை நீங்க என்னோட பிரார்த்தனைன்னு   நினைச்சு கண்டிப்பா  ஏத்துக்கணும். இதைப்    பெரியதனம்ன்னு   நினைச்சு கோபப்படக் கூடாது " என்று தயங்கிய குரலில் சொன்னார் சாமா.
" உம்மோட லட்சியத்தை நான் மதிக்கிறேன். நீர் ஆசைப் பட்டபடி செஞ்சு முடிப்பேன். பணம் தான் வேண்டாம்னு சொல்லிட்டீர். வேறு  ஏதாவது உதவி தேவைப் பட்டா கேளும். செய்து தர தயாரா இருக்கிறேன் "
"தேவைப்படும் போது   கண்டிப்பா கேட்பேன். இப்போ நான் உத்தரவு வாங்கிக் கிறேன்" என்று சொல்லிவிட்டு சாமா வெளியேற, அவர் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோதண்டராமன் " இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

மயிலை அக்கிரகாரத்தில் ......  
"ஏண்டா அம்பி எத்தனை நாழிதான் ஆத்து வாசலியே  நின்னுண்டு தெரு முனையை பார்த்துண்டு இருப்பாய்? தெருமுனைவரை  நடந்து    வர்றவர் ஆத்துக்குள் வராமல் போயிடுவாரா ? "
"அம்மா என்னோட தவிப்பு உனக்குப் புரியாதும்மா . அப்பா மட்டும் ஜட்ஜ் கோதண்ட ராமன் சார் காதில் விஷயத்தைப் போட்டால் போதும். அந்த வேலை கண்டிப்பா எனக்குதான். போன மாசம் நான் ரிட்டர்ன் எக்ஸாம் எழுதிட்டு வந்தேனே, அந்தக் கம்பனியில் வொர்க் பண்ற  என்னோட ப்ரென்ட் ராகவன் மூலமா  நான் தெரிஞ்சுண்ட இன்னொரு விஷயம் செலேக்சன் கமிட்டியில் முக்கியமான ஆளு ரிடையர்ட் ஜட்ஜ் கோதண்ட ராமன் சார் என்பதும் அவர் பேச்சுக்கு அந்த கம்பனியில் அப்பீல் ஏதும் கிடையாது என்கிறதும். தெய்வாதீனமா அப்பா அவர் ஆத்துக் கல்யாணத்துக்குதான் சமையல் கான்ட்ராட்க் வேலைக்குப் போயிருக்கிறார். நம்ம நிலைமையை பக்குவமா எடுத்து சொன்னா கண்டிப்பா கேட்பார். அப்பாவோட கைமணம் தெரிஞ்சு அப்பாவைத் தேடிக் கண்டு பிடிச்சு கேட்டரிங் சான்ஸ் குடுத்த அவர், நாம கேட்கிற உதவியை செய்யாமே போயிடுவாரா ? அப்பாதான் அவரண்டே பக்குவமா எடுத்து சொல்லணும் " என்று சீனு சொல்லும்போதே அவன் குரலில் ஒரு தவிப்பு தெரிந்தது.
இந்தப் பிள்ளையும் வேலை வேலைன்னு எவ்வளவோ அலைஞ்சு பார்த்துட்டான். வேலைதான் கிடைச்ச பாடில்லே. பகவானே இந்த இடமாவது அவனுக்குக் கூடி வரணும். அதுக்கு நீதான் மனசு வைக்கணும். வெறும் தகுதியை மட்டும் வச்சு வேலைன்னா, இவன் என்னிக்கோ வேலைக்குப் போயிருப்பான். இவன் முட்டி மோதிப் பார்த்த இடத்தி லெல்லாம் ஒன்னு பணம் விளையாடுது. இல்லாட்டா யாரோ ஒரு பெரிய மனுஷன் தயவாலே யாரோ ஒருத்தன் அந்த வேலையைத் தட்டிண்டு போயிடறான். இவன் தகுதிக்குக் குறைவான  வேலையில் உட்கார இவனுக்கு விருப்பமில்லே. என்னிக்குதான் இவனுக்கு வேலைக்கான வேளை வரப் போறதோ தெரியலை  என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டாள் நீலாம்பரி 
" அம்மா, அப்பா வந்துட்டார் " என்ற சீனுவின் குரலில் உள்ள சந்தோசம் அவளையும் தொற்றிக் கொண்டது  
" அவர் ஆத்துக்குள் வந்து கைகால் அலம்பி பூஜையை முடிக்கிற வரை நீ அவரண்டே எதுவும் பேசாதே. எல்லாத்தையும் முடிச்சுட்டு ஈசி சேரில்  வந்து  சாய்ந்து பேப்பரைக் கையில் எடுப்பர்ர் பாரு அப்போ போய்  அவரண்டே எது  வேணும்னாலும் கேளு " என்று நீலாம்பரி எச்சரித்தாள் 
சாமா சாய்வு நாற்காலியில் வந்து சாயும் வரை பொறுமையாகக்  காத்திருந்த சீனு, " அப்பா,  நான்  சொன்ன விஷயம் பத்தி ஜட்ஜ் கிட்டே  நீங்க பேசுனீங்களா ? என்னப்பா சொன்னார் ? " என்று ஆவலாகக் கேட்டான் சீனு.
பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தார் சாமா.
"பண்ண மாட்டேன்னுட்டாரா ? "
"அந்த விஷயம் பத்தி நான் பேசவே இல்லை ? "
இந்த வார்த்தையைக் கேட்டதும் " ஏன் ? கேட்டால் உங்க கௌரவம் குறைஞ்சு போயிடுமா  ? " என்று கோபமாகக் கேட்டான் சீனு 
"இதில் கௌரவப் பிரச்சினை எங்கிருந்து வந்தது ? என்னோட நூறாவது சமையல் வேலையை  குரூவாயூரப்பன்  பேராலே செய்றதா கொஞ்ச வருஷத்துக்கு முன்னமேயே  ஒரு வேண்டுதல். அந்த நூறாவது காண்ட்ராக்ட்  கோவில் பிரசாத வேலையாக இருந்தாலும் சரி, இல்லாட்டா யாராவது ஒரு ஏழை  எளியவர் வீட்டு விசேஷமாக இருந்தாலும் சரி. அதுக்கு பணம் வாங்காமே தான் செய்து குடுத்திருப்பேன். எதிர் பாராவிதமாக ஜட்ஜ் வீட்டு விசேஷம்  நூறாவதா அமைஞ்சு போச்சு. அவரண்டே சமையல் வேலைக்கு பணம் வேண்டாம்னு சொல்லிட்டு, என்னோட பையன் வேலைக்கு ரெகமென்ட் பண்னுங்கோன்னு சொன்னா, அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பார் ? சரி அவரை விட்டுத் தள்ளு. " ஏண்டா கில்லாடி, சமையல் வேலைக்கு பணம் வேண்டாம்னு சொல்லிட்டு, அதை விட பல மடங்கு லாபம் வர்ற மாதிரி  உன் பையனோட  வேலைக்கு ஒரு வழி பண்ணிட்டு வந்துட்டே  போலிருக்கு" ன்னு என் தெய்வம் என்னைப் பார்த்துக் கிண்டலா சிரிக்கிறமாதிரி  இருக்கும். அதைத் தாங்குகிற சக்தி எனக்கில்லே . அதான் ஜட்ஜ் கிட்டே  எதையும் கேட்கலே "
" நீங்க எல்லாம் ஒரு தகப்பனா ? " என்று கோபத்துடன் இரைந்தான் சீனு 
" வெறும் சராசரித் தகப்பனா இருந்திருந்தா, என் சுயநலம்தான் முக்கியம்னு நினைச்சு நடந்துருப்பேன். தர்ம நியாயத்துக்கு கட்டுப்படுகிற தகப்பனா வாழ்ந்து பழகிட்டேன். என்னால் அந்த வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாது. என்னை மன்னிச்சுடு சீனு. உனக்கு கண்டிப்பா நல்ல வேலை கிடைக்கும். எதுவுமே கிடைக்காட்டா என்னைப் போல கரண்டி பிடிக்க கத்துக்கோ. மற்றவங்களை ஏமாற்றிப் பிழைக்காத, வஞ்சனை  செய்யாத எல்லா தொழிலுமே  கௌரவமான தொழில்தான் " என்றார் சாமா பொறுமையாக.
இரண்டு நாட்கள் யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்தான் சீனு. காலப் போக்கில் சரியாகி விடும். விட்டுப் பிடிக்கலாம் என்று நினைத்தார் சாமா.
மூன்றாம் நாள் வெளியில் போன சீனு வீடு திரும்பவில்லை. இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், தேட ஆரம்பித்தார்கள். " என்னை தேட வேண்டாம். வருகிறேன் " என்ற ஒற்றை வரி சுவரில் எழுதப் பட்டிருந்தது. சாமா நிலை குலைந்து போனாலும், நீலாம்பரி முன்பாக தைரியத்தைக்  கை விட்டு விடக் கூடாது என்ற நினைப்பில், " ஆம்பிளைப் பிள்ளை தானேடி. ஏன் கவலைப் படறே. கையில் படிப்பு இருக்கு. அதற்க்கான சர்டிபிகேட் இருக்கு. எங்கு போனாலும்  கௌரவமா பொழைச்சுக்குவான்.  கோபம் தணிந்ததும் போனது போலே  திரும்பி வருவான் " என்று சமாதானம் சொன்னார் சாமா.
"நீங்களும், உங்க சமரசமும் .. அவன் சர்டிபிகேட் எல்லாம் பீரோவில் அப்படியே  இருக்கு. அதைக் கவனிக்கலையா நீங்க" என்று இரைந்தாள் நீலாம்பரி. 
சீனு வீட்டை விட்டுப் போன நான்காம் நாள், எந்தக் கம்பெனி வேலையை எதிர் பார்த்துக் காத்திருந்தானோ, அந்த இடத்திலிருந்து வேலைக்கான ஆர்டர் வந்தது. ஆனால் வீட்டை விட்டுப் போன சீனுதான் வரவே இல்லை.

No comments:

Post a Comment