Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 04, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 89 )

               ( பொது  ) நலம் ; ( சுய ) நலமறிய ஆவல் !     
  
" ஏண்டா நான் காபி வச்சுட்டுப் போய் எவ்வளவு நேரமாச்சு. குடிக்காமே அங்கே அலமாரியில் எதை குடைஞ்சுகிட்டு இருக்கிறே ? "
" இருக்கட்டும்மா . கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாமே இரேன் "
"சரிடா. அலமாரியைக் குடைஞ்சு முடிச்சதும் ஆறின காபியை வச்சுட்டுப் போயிட்டேன்னு சொல்லி என்னை நீ டிஸ்டர்ப் பண்ணுவியே "
" ஐயோ  அதெல்லாம்  மாட்டேன். கொஞ்ச நேரம் அனர்த்தாமே இரேன் "
" சரிடாப்பா "
" அம்மா வாசலில் யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு. யாருன்னு பாரேன் "
வாசல் கதவை திறந்த பத்மா, வாசலில் நின்ற மேல் போர்சன் மரகதம் மாமியைப் பார்த்ததும் அதிசயித்துப் போனாள். "  அடடா இன்றைக்கு மழை கொட்டத்தான் போறது. கூப்பிட்டாக் கூட வராத மாமி இன்றைக்கு வீடு தேடி வந்திருக்கீங்க. வாங்க, உள்ளே வாங்க " என்று வாய் நிறைய வரவேற்றாள் பத்மா 
" பரவாயில்லே மாமீ. உங்காத்துலே நியூஸ் பேப்பர் வாங்கறேளா ? "
"இல்லையே. நிறுத்திட்டோம்.இப்பல்லாம்  பசங்க ஆன் லைன் மேகசின் படிக்கிறதாலே இப்போ பேப்பர் வாங்கதில்லே. ஏன் மாமி, என்ன விஷயம் ? "
"பரவாயில்லே, அப்போ நான் வர்றேன் மாமீ." என்று சொல்லி விடை பெற்றாள்  மரகதம்.
கதவைத் தாழிட்டு விட்டு வந்த பத்மாவிடம் " அம்மா, நீ யாரோட பேசிட்டு இருந்தே ? " என்று கேட்டான் சுந்தர்.
" ரெண்டு மாசம் முன்னாடி மேல் போர்சனுக்குக் குடி வந்திருக்கிற மாமி வந்து நியூஸ் பேப்பர் இருக்கிறதான்னு கேட்டுட்டுப் போறா "
" எதுக்கு ? மாவு சலிக்கவா ? "
"அதெல்லாம் நான் கேட்டுக்கலே. அந்த மாமி வெளியே வர்றதோ யாரோடாவது பேசறதோ ரொம்பவும்  அபூர்வம். நானே அந்த மாமி குரலை  இன்னிக்குதான் கேட்கிறேன். ஒருவேளை நீ சொல்ற மாதிரி மாவு சலிக்கத்தான் அவங்க நியூஸ் பேப்பர் கேட்டுருப்பாங்களோ நாந்தான் படிக்கிறதுக்குக் கேட்கிறாங்கனு தப்பாப் புரிஞ்சுகிட்டு  பேப்பர் வாங்கதில்லேன்னு சொல்லிட்டேனா ? அடடா நம்ம வீட்டில்தான் பழைய பேப்பர் நிறையவே இருக்கே "
" ஏனம்மா. ஒருத்தங்க வந்து ஏதாவது கேட்டால் என்ன எதுக்குன்னு விசாரிக்கக் கூட மாட்டியா  ? "
" எனக்குத் தோணலே. மாமி கீழே இறங்கிப் போனா. படி ஏறி வர்ச்சே நானே அவங்களைக்   கூப்பிட்டுக் கொடுத்திடறேன். போதுமா ?  " என்ற பத்மா வாசலிலேயே  காத்திருந்தாள். மாடிப்படி ஏறிக் கொண்டிருந்த மரகதத்தைக் கண்டதும் " வாங்கோ மாமி. பேப்பர் தர்றேன்" என்று சொல்ல, ஆவலுடன் வீட்டுக்குள் வந்தாள் மரகதம். கை நிறைய பழைய பேப்பர் கட்டுடன் வந்த பத்மா  "இந்தாங்கோ  எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோங்க " என்றாள். இதைப் பார்த்ததும், தன்னையும் அறியாமல் வாய் விட்டு சிரித்தாள்  மரகதம்.
"என்னாச்சு மாமி ? "
"நான் கேட்டது இன்னிக்குப் பேப்பர் "
"சாரி மாமி, நீங்க மாவு சலிக்கத்தான்  பேப்பர் கேட்கிறதா நான் தப்பா நினைச்சு ட்டேன்  "
" பரவாயில்லே. காலையிலிருந்து கரெண்ட் வேறே இல்லையா. நியூஸ் எதுவும் தெரியலே. அதான் பேப்பர் பார்க்கலாம்னு.. அமெரிக்கா விஷயம் என்னனு தெரியலே " என்று கவலையுடன் சொன்னாள்  மரகதம் 
இந்த உரையாடலைக் கேட்டு அதிர்ந்து போனான் சுந்தர் " என்னடா இது ! அமெரிக்க அரசியல் விவகாரம் பற்றி இங்குள்ள  ஒரு மாமி கவலைப் படுகிறாளே " என்று நினைத்து. அது பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனைத் தொற்றிக் கொள்ள, " நம்ம நாட்டில் ஏகப் பட்ட பிரச்சினை. தினம் ஒரு குண்டு வெடிப்பு,  கொள்ளை, சாலை மறியல், அது இதுன்னு. நம்மளை பத்தி கவலைப்படவே நமக்கு நேரமில்லே. நீங்க அந்நிய நாட்டைப் பத்திக் கவலைபடறீங்க. நீங்க ரொம்பவும் வித்தியாசமான மாமிதான் " என்று சிரித்துக் கொண்டே சொன்னான், தேடுவதை நிறுத்தி விட்டு அறையை விட்டு வெளியில் வந்த சுந்தர்.
" வேறே எந்த நாட்டில் சண்டை நடந்தாலும், மத்தியஸ்தம் பண்ண இவா ஓடுவா. இப்போ அவாளே அடிச்சுண்டா ஊர் உலகம் சிரிக்காதா? அட. ஊர் உலகம் சிரிக்கிறதை விட்டுத் தள்ளு. வெளிப்படையா மத்தவா ஒத்துண்டாலும் சரி. மறுத்தாலும் சரி. அமெரிக்காக்காரன்னு சொன்னா. அவன் மேலே ஒரு சிலருக்கு மரியாதையும் ஒரு சிலருக்குப் பயமும் இருக்கிறதை  யாராச்சும் மறுக்க முடியுமா? ஒரு சில அக்கிரமத்தை அடக்க துணிஞ்சு  துப்பாக்கியை தூக்குறாதானே ? ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்னு சொல்லுவா. இதனாலே ஒரு சிலருக்கு குளிர் விட்டுப் போயிடும்தானே  ? "
" மாமி, நீங்க தேவையில்லாமல் கவலைப் படறீங்க. அது அவங்க உள்நாட்டுப் பிரச்சினை. அதை அவங்க பார்த்துப்பாங்க" என்றான் சுந்தர். 
" அது எப்படிடா கவலைப் படாமே இருக்க முடியும் ? அவா நாட்டுக் காராளுக்கே வேலை இல்லேங்கிறப்போ, அவா குடுக்கிற வேலையை இங்கிருந்து செஞ்சு குடுக்கிற நம்ம நாட்டுக்காராளுக்கும் வேலை யில்லாமே போயிடுமே "
" ஏற்கனவே நிறைய பேர், "நம்ம  நாடு அமெரிக்காவுக்கு அடிமையாகி வருகிறது, அடிபணிகிறது"ன்னு   மீட்டிங் போட்டுப் பேசறா. அமெரிக்கா பத்தி மாமி  வொரி பண்ணினா, அது இன்னிக்கு ஹெட் லைன் நியூஸ் ஆயிடும்  " என்றான் சுந்தர் 
" ஆமாண்டாப்பா. நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடுகிற அளவுக்கு நம்ம வீட்டிலும் செல்வம் கொட்டிக் கிடந்தா  ஊரிலுள்ள தர்ம நியாயம் பத்தியும், நம்ம தேவைக்காக அடுத்தவன் கையை எதிர் பார்க்கிறது தப்புன்னும்  நாம தர்க்கம் பண்ணிண்டு இருக்கலாம். இந்த மாசம் சம்பளம் வந்தாதான் நம் வீட்டில் அடுப்பு எரியும் என்கிற நிலையில் இருக்கிற நாம  எதைப் பத்தியும் பேச முடியாதே. நாட்டில் ஒரு சிலர் புளிச்ச ஏப்பம் விடுறவங்க.  ஒரு சிலர் பசியில் ஏங்கி போய் நிற்கிவங்க . ஒரு சிலர் டைஜெச்டுக்கு மருத்துவம் பண்ணிண்டு இருக்கிறா. ஒரு சிலர் உணவைத் தேடி ஓடிண்டு இருக்கிறா. நாம ரெண்டாவது ரகம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்க முடியுமா?  எங்காவது ஒரு இடத்தில் நெருப்பு பத்திண்டா அக்கம் பக்கத்துக்காரா தண்ணி வாளியைத் தூக்கிண்டு ஓடி வர்றது எதுக்காக ? அந்த நெருப்பு நம்ம ஆத்தையும் துவம்சம் பண்ணிடக் கூடாதேங்கிற பயத்தினால் தான்.எங்காத்துக்காரர் கவர்மெண்ட் ஆபீசில் முப்பது வருஷம் குப்பை கொட்டினார். ரிடைர் ஆகிறவரை முழுசா முப்பதாயிரம் ரூபாயை நாங்க எங்க  கண்ணால் கூட பார்த்தது கிடையாது. இப்போ  என்னோட பிள்ளை வேலையில்  சேரும்போதே நாற்பதுக்கு மேலே கையில் வாங்கினான். அதை நம்பித்தான் வீட்டுக்கு லோன் வாங்கினோம். பெண்ணுக்கு வரன் பார்க்கிறோம். இப்போ அதுக்கு எந்த பங்கமும் வந்துடக் கூடாதேன்னு தான்  கவலைப் படறேன்" என்று மாமி கவலையுடன் சொல்ல , " மாமி, உங்க பிள்ளை ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறாரா ? " என்று கேட்டான் சுந்தர் 
" ஆமாம், இப்போ பெங்களூரில் இருக்கிறான் "
" அப்படின்னா உங்க கவலையில் ஒரு அர்த்தமும் இருக்கு. நியாமும் இருக்கு. அங்கே நிலைமை சரியாகனும்னு இங்கே நாம பிரார்த்தனை பண்ணுவோம் "
"நம்ம வீட்டு பஞ்சம் தீரனும்னா, அவா பிரச்சினை நல்லபடியா தீரனும் " என்ற மரகதம் அங்கிருந்து விடை பெற்றாள்.
மாமி அங்கிருந்து போனதும், வாசல் கதவை தாளிட்டு விட்டு வந்த பத்மா  " என்னடா இது, நாட்டிலே இப்படியெல்லாம் கூட பைத்தியக்கார ஜனங்க இருப்பாங்களா ? " என்று வியந்து போய்க் கேட்டாள்  பத்மா.
"இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை! இதயமற்ற மனிதரு க்கோ இதுவெல்லாம் வாடிக்கை  !! " என்று பாடிய சுந்தர், " அம்மா. மும்பையில் குண்டு வெடிப்புன்னு நியூஸ் பார்த்ததுமே " ஐயோ, சுந்தர் உங்க அப்பா அங்கே இருக்காரே. எப்படி இருக்கிறாரோ தெரியலை யே"ன்னு நீ பதறி துடிச்சது உனக்கு நினைவிருக்கோ இல்லையோ, ஆனா இன்னைக்கும் அந்த சீன் என்னோட கண் முன்னாலே ஓடிட்டு இருக்கு.அமெரிக்காவில் குடியுரிமை  உள்ளவங்களுக்கே வேலை போகிற நிலைமைன்னா, அந்த நாட்டு வேலையை, வேறேவேறே நாட்டில் இருந்தே செய்து கொடுக்கிறவங்க கதி என்ன ஆகுமோன்னு நினைச்சு மாமி  கவலைப்படறாங்க. அமெரிக்க  நாட்டுக்காரன் அளவுக்கு அதிகமாகவே  படியளக்கிறான். இவங்க வீட்டு அடுப்பு எரியுது. அது அணைஞ்சுடக் கூடாதுன்னு இவங்க படும் கவலை நியாயம்தானே ? " என்றான் 
"எதுக்கெடுத்தாலும் நக்கல், கேலி பேசற நீயாடா இப்படி பேசறே ? "
"அம்மா, மாமியோட பிரச்சினையாலே என்னோட பிரச்சினை சால்வ் ஆயிடுச்சு "
" என்னடா சொல்றே ? "
" எங்க காலேஜில் ஒரு காம்பெடிசன். அதில் "பொதுநலம். சுயநலம் " இந்த ரெண்டு டாபிக்கில், ஏதாவது ஒன்று பத்தி  யார் வேண்டுமானாலும் பேசலாம்னு சொல்லி இருந்தாங்க. பொது நலம் பத்தி பேசினா கை தட்டல் கிடைக்கும்னு நிறைய பேர்  அந்த டாப்பிக் செலக்ட் பண்ணி இருந்தாங்க. நான் சுயநலம் பத்தி பேசறதா சொல்லிட்டேனே தவிர, அதற்க்கான பாய்ண்ட்ஸ் தேடித்தான் இவ்வளவு நேரமா  புத்தக அலமாரியை  குடைஞ்சு கிட்டு இருந்தேன். மாமி பேசறப்போ ஒரு அழகான உதாரணம் சொன்னாங்க கவனிச்சியா," அடுத்த வீடு தீப்பிடிக்கும் போது அதை ஓடிப்போய் அணைக்கிறதே, அந்த நெருப்பு நம்ம வீட்டை பதம் பார்த்துவிடப் போகிறதே என்ற பயத்தினால்தான்னு. அந்த ஒரு உதாரணம் போதும். சுயநலத்தில் இருந்து தான்  பொதுநலம் பிக்கிதுன்னு சொல்லி நான் பாயிண்ட்சை அள்ளி விடறதுக்கு. உலகம் என்பது ஒன்றுக்குள் ஒன்றாக உருவானது. ஒன்றை ஒன்று பகைத்தால்  உயர்வேது என்று கேட்டு என் பக்கமிருக்கிற  நியாயத்தை கூட்டத்தின் முன் எடுத்து வைப்பேனே " என்றான் சுந்தர்.
" ஐயோ, என் சுயநலக் கொழுந்தே. அடுத்த வீடு தீப்பிடிக்கும்போது அந்த வெளிச்சத்தில் நான் போக வேண்டிய வழியைத் தேடிக் கண்டு பிடிச்சிடுவேன்னு சொல்றியே, உன்னைப் போல வீட்டுக்கு ஒரு பிள்ளை இருந்தால் இந்த உலகம் உருப்பட்டாப் போலத்தான்  " என்று சொல்லி அவன் கன்னத்தை வழித்து வாரி முத்தமிட்டாள்  பத்மா.


No comments:

Post a Comment