Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 11, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 90 )

               பழகும் விதத்தில் பழகி பார்த்தால் .... ?
" இந்திரா, வாசலில் மாடிப் படிக்கட்டுப் பக்கத்தில் தண்ணீர் சிந்தி இருக்கு. ஒரு துணியைப் போட்டு துடைத்து ஈரத்தை சுத்தம் பண்ணிடு " என்றான் ராஜேந்திரன் அவசரமான குரலில்.
" நீங்க இன்னும் போகலியா ? கார் வந்துச்சு. அப்பா ஏறிப் போயிட்டார்னு வாசு சொன்னானே. வரவர அவனுக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சு. காலைலேயே கிளம்பிப் போகணும். சீக்கிரம் போகணும்னு என்னைப் போட்டு அந்தப் பாடு படுத்துனீங்க. இப்போ இங்கே நின்னுட்டு இருக்கிறீங்க ? " என்று பாத் ரூமுக்குள் இருந்தபடியே குரல் கொடுத்தாள் இந்திரா 
"நேரம் ஆயிட்டுதான். ஒரு ரெபரென்ஸ் புக். அது  தேவைப் படாதுன்னு நினைச்சு எடுத்து வச்சுக்கலே. எதற்கும் இருக்கட்டும். எடுத்து வச்சுக்கலாம்னு ஆடிட்டர் சொன்னார். அதான் எடுக்க வந்தேன். நல்ல வேளை , நீ கதவை லாக் பண்ணாமே குளிக்கப் போனே. இல்லாட்டா நீ வரும்வரை நான் வெயிட் பண்ண வேண்டியதிருக்கும். ஆமா .. வாசு எங்கே ? "
" உங்க தலை அங்கே திரும்பினா போதும். இவன் உடனே விளையாடக் கிளம்பிடுவான். ஸ்கூல் போகணும்கிற எண்ணமெல்லாம் துளிக்கூடக் கிடையாது. வரட்டும் அவன். வீடு திறந்திருக்கு என்கிற நினைப்பு கூட இல்லாமே வீட்டைத்  திறந்து போட்டுட்டு வெளியில் போயிருக்கிறான் வர வர துளிக் கூட பயமில்லாமே போச்சு "
" சரி விடு. ஸ்கூல் போற டைம்மில் அவனை டென்சன் பண்ணாதே. நீ குளிச்சு முடிச்சுட்டு வர்ற வரை நான் வெயிட் பண்றேன் "
இதற்குள் வாசலில், மேல் போர்சன் பரந்தாமனின் குரல் கேட்டு வெளியில் வந்தான் ராஜேந்திரன். இவன் தலையை கண்டதுமே " ஏன் சார், உங்களுக்கு முன்னே பின்னே அபார்ட்மெண்டில் குடியிருந்து பழக்கம் கிடையாதா ? மாடிப் படிக்கட்டு, வாசல், விரான்டா எல்லாமே காமன் ஏரியா. என்னவோ இந்த பிளாட் உங்க ஒருத்தருக்குத்தான் சொந்தங்கிற மாதிரி வாசல் பூரா தண்ணீரைக் கொட்டி வச்சிருக்கீங்க. குழந்தைங்க இருக்காங்க. பெரியவங்க வயசான இருக்காங்க. கீழே விழுந்து வச்சா யார் சார் பார்க்கிறது ? தெருவிலே கூவி விக்கிறவங்க யாரையும்  போர்சனுக்குள் விடக்கூடாதுங்கிற  ரூல் உங்களுக்குத் தெரி யும் தானே ? அன்னிக்குப் பார்த்தால் பழம் விக்கிவனை மாடிக்குக் கூப்பிடறீங்க. உங்க மனசில் என்னதான் நினச்சிட்டு இருக்கீங்க. சின்ன சின்ன விசயத்தில்  கூட டிசிப்ளின் இல்லாத நீங்களெல்லாம் எப்படித் தான் ஒரு நிர்வாகத்தில் குப்பை கொட்டறீங்களோ  தெரியலை " என்று இரைந்தார்.
" என்னங்க ? " என்று கேட்டபடி அரைகுறையாக புடவையை சுற்றியபடி வெளியில் வந்த இந்திராவை,அமைதியாக இருக்கும்படி பார்வையாலே எச்சரித்தான் ராஜேந்திரன்.
பிறகு பரந்தாமன் பக்கம் திரும்பி " சாரி சார். இனிமே இப்படி நடக்காமே பார்த்துக்கிறேன் " என்றான் 
"நடந்தால் நான் சும்மா விட மாட்டேன். அதுவும் உங்க  நினைவில் இருக்கட்டும் " என்று சொல்லிவிட்டு பரந்தாமன் மாடிப்படி ஏற, வீடு துடைக்கும் மாப்பை   எடுத்து வந்து வாசலை சுத்தம் செய்ய ஆரம்பி த்தான் ராஜேந்திரன் 
அதுவரை அங்கு நடந்ததை படிக்கட்டில் நின்று  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாசு " அப்பா. நீங்க இப்படியொரு பயந்தாங்கொள்ளியாக இருப்பீங்கன்னு நான் கொஞ்சமும்  நினைக்கலே. கத்திட்டுப் போனாரே அந்த அங்கிள், அவங்க வீட்டு அக்கா குடம் எடுத்துப் போகச்சே கால் தடுக்கி விழப் பார்த்தாங்க. நீங்கதான் ஓடிப்போய் அவங்க கீழே விழாமே  பிடிச்சீங்க. அவங்க வீட்டுக் குடத்திலிருந்த தண்ணீர்தான் வாசல் முழுக்க சிந்திக் கிடக்குது. பார்த்து வர்துக்கு என்னன்னு   கேட்டு நாம சண்டை பிடிச்சிருக்கனும். அவங்க மேலே தப்பை வச்சுகிட்டு நம்ம கிட்டே அந்த அங்கிள் கத்திட்டுப் போறார். இவர் வீட்டுக்கு கெஸ்டா வந்த வயசான மாமி பழ வண்டிக் கானை மேலே கூப்பிட்டாங்க, அவங்களுக்குக் கீழே வர முடியாதுன்னு சொல்லி. பழத்தை எடுத்துட்டு வந்த பழக்காரனை, மேலே போக விடாமே நிறுத்தி அவன்ட்ட யிருந்து  பழத்தை வாங்கி நீங்க  மேலே கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்தீங்க. அந்த மாமி பழ வண்டிக்கானைக் கூப்பிட்டதையும்  இவர் பார்க்கலே. வாங்கின பழத்தை   நீங்க மேலே கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்ததையும் இவர் பார்க்கலே. ஆனா அந்த மாமி கொடுத்த பணத்தை வண்டிக்காரனிடம்  நீங்க கொடுத்ததை  மட்டும் பார்த்துட்டு, இப்போ உங்க கூட சண்டை போடறார். அவருக்கு லெப்ட் அண்ட் ரைட் கொடுக்காமே ஏன் நீங்க பயந்து போய்  நிற்கணும் ? குண்டா உயரமா இருக்கிறாரேன்னு நினைச்சு அவரோட சண்டை போட பயப்படறீங்களா?உங்களுக்குப் பயமா இருந்தா சொல்லுங்க. நான் லெப்ட்  அண்ட் ரைட் வாங்கறேன் " என்று இரைந்தான்  வாசு 
" பயமெல்லாம் ஒன்னும் கிடையாதுடா "
" அப்படின்னா போங்க. போய்ச் சண்டை போடுங்க "
" இதோ பார் வாசு, நீ குழந்தை. சில விஷயங்கள் உனக்குப் புரியாது. படிக்கிற இந்த வயசில்  லெப்ட் அண்ட் ரைட்ங்கிற ரவுடித்தனமெல்லாம் உனக்கு வேண்டாம். நீ ஸ்கூல்க்குக் கிளம்பற வழியைப் பாரு " என்று சொன்ன ராஜேந்திரன் "நான் வர்றேன் " என்று கண்களாலேயே இந்திரா விடம் ஜாடை காட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.  
அலுவலக வேலையாக காஞ்சிபுரம் சென்ற ராஜேந்திரன், வீடு திரும்பும் போது இரவு 10.30 ஆகியிருந்தது. மெயின் கேட்டில்  ராஜேந்திரன் தலை தெரிந்ததுமே, கீழே வேகமாக வந்த பரந்தாமன் " சார் ஒரு நிமிஷம் " என்று சொல்ல  " அடடா, காலையில் ஆரம்பித்த பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லையா  " என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாலும் கூட, " சொல்லுங்க சார். ஏதாவது பிரச்சினையா ? " என்றான்.
"ஆமாம் "
" சொல்றதைக் கேட்டு நீங்க டென்சன் ஆகக் கூடாது "
" ஆக மாட்டேன் "
" இன்னிக்குக் காலையில் உங்க வொய்ப் வேலைக்குப் போறப்போ ஒரு ஆக்சிடேன்ட் "
" என்ன ? " என்று பதறிப் போனான் ராஜேந்திரன் 
"  நீங்க டென்சன் ஆகக் கூடாதுன்னு நான் சொன்னேனே. நொவ் ஷி இஸ் ஆல் ரைட். ஒரு கால்டாக்சிகாரன் வந்து மோதிட்டு நிற்க்காமே ஓடிப் போயிட்டான். உங்க மனைவி மயக்கமாயிட்டங்க. அவங்க கிட்டே யிருந்த  ஐ.டி கார்ட் அட்ரசை  வச்சு இங்கே வந்து தகவல் சொன்னாங்க. நான் உடனேயே ஆஸ்பிடலில் அட்மிட் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன். முதலுதவி கொடுத்ததுமே அவங்க நார்மல் ஆயிட்டாங்க. நீங்க எதோ முக்கியமான வேலையா வெளியூர் போனதாகவும் உங்களுக்கு இப்போ தகவல்  சொல்ல வேண்டாம்னு எனக்கு அவங்க சொன்னதாலே, என்னாலே அதை மீ  முடியலே. அதனாலே தப்பா நினைக்காதீங்க. என் பையனை வண்டியை எடுக்க சொல்றேன். அவன் உங்களை ஆஸ்பிட லுக்கு அழைச்சிட்டுப் போவான். போகும் போது  இந்த பிளாஸ்க்கில் உள்ள பாலை அவங்க கிட்டே கொடுத்துங்க " என்றார் பரந்தாமன் 
"அப்படின்னா வாசு ? "
" அவன் ஸ்கூல் விட்டு வந்ததும் பக்குவமா விவரத்தை சொல்லி காபி டிபன்  சாப்பிட வைத்து விட்டுதான் ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தேன் அவனுக்கும் உங்களுக்கும் நைட் மீல்ஸ் இந்த பாக்ஸில் இருக்கு. அவன் இங்கே வர்றேன்னு சொன்னா என் பையனோட அனுப்பி வைங்க. அவனை எங்க வீட்டில் படுக்க வச்சுக்கறேன். மாட்டேன்னு சொன்னால் நீங்க கம்ப்பல் பண்ண வேண்டாம். சின்னக் குழந்தை.  எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இரவெல்லாம் தூக்கமில்லாமே தவிப்பான். உங்களுக்கு எது சரின்னு தோனறதோ அதை செய்யுங்க. ஆனா அவன் எங்க வீட்டில் தங்கதில் எங்களுக்கு எந்த   அப்ஜெக்சனும் கிடையாது. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அங்கே இருந்தால் போதுமாம். நாளைக்கு அனுப்பிடுவாங்க. இதில் ஆயிரம் ரூபா இருக்கு.ஏதாவது அவசர செலவு க்குக்  கையில் இருக்கட்டும் "
" ஐயோ சார் பணமெல்லாம் வேண்டாம் "
"சார் இதை நான் உங்களுக்கு இனாமாக எதையும்  தரலே. எதுக்கும் கையில் வச்சுக்கோங்கன்னு  தான் சொல்றேன் "
ராஜேந்திரனைஆஸ்பிடலில் கொண்டு போய்ச் சேர்த்த சுரேஷின் இரண்டு கைகளையும்  பிடித்துக் கொண்டு குரல் நடுங்க  நன்றி சொன்னான் ராஜேந்திரன். வாசுவிடம் எதோ பேசி சிரித்துக் கொண்டிருந் த  இந்திராவைப் பார்த்த பின்புதான் நிம்மதி பெருமூச்சு விட்டான் ராஜேந்திரன். அம்மாவுடன் இருக்கப் போவதாக சொன்ன வாசுவை வற்புறுத்தாமல் அங்கிருந்து விடை பெற்றான் சுரேஷ்.  
சுரேஷ் அங்கிருந்து போனதும் " அப்பா, அந்த பைட்டர் அங்கிள் நமக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணியிருக்கிறார்  " என்றான் வாசு 
அமைதியாக சிரித்தான் ராஜேந்திரன் 
" ஏன் சிரிக்கிறீங்க ? "
" நீ காலையில் சொன்னியே, லெப்ட் அண்ட் ரைட் வாங்கபோறேன்னு. அதை நினைச்சு சிரிச்சேன். ஒரு விஷயத்தைப் பத்தி சரியாக புரிஞ்சுக்காமே ஒருத்தர் சண்டை போடும்போது  எதிர்த்து சண்டை போடறது பெரியதொரு  விசயமே இல்லை. வாய்க்கு வந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசிடலாம். அதற்க்கு ஒரு நொடிப்பொழுது போதும். அப்படிப் பேசுவதால் அவங்களுக்கு வரும்  வலி நமக்கு தெரியவே தெரியாது. ஆனால் நமக்கு ஒரு கஷ்டம்னு வரும்போது அவங்க வலிய வந்து உதவி பண்ணினால் அது ஏற்படுத்தும் வலியை மனச்சாட்சி உள்ளவங்களாலே தாங்க முடியாது. அவர் பேசும் போதெ ல் லாம் நான் மௌனமாக இருந்ததாலே, அவர் செய்த உதவியை நான் சந்தோசமாகப் பார்க்கிறேன். இன்றைக்கு காலையில்    அவருக்கு சரி சமமாக நான் சண்டை போட்டிருந்தால், இந்த நேரம் நான் கூனிக் குறுகி நின்னுட்டு இருப்பேன். என்னதான் வசதியான வாழ்க்கை இருந்தாலும் அடுத்த மனிதனின் உதவி கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும். அதை மனசில் நினைச்சுகிட்டு மத்தவங்க செய்றதை  'சரிசரி'ன்னு சொல்லி பொறுத்துகிட்டே போக பழக்கிகனும்"
" நீங்க சொல்றது சரி. இவ்வளவு உதவி செய்கிற அந்த அங்கிள் ஏன் எதையும் யோசிக்காமே பேசறார் ? "
" உலகத்தில் முழுக்க முழுக்க நல்லவனும்   கிடையாது. கெட்டவனும் கிடையாது. ஒவ்வொருவர் வளர்ந்த சூழ்நிலை ஒவ்வொரு மாதிரி. அவங்க எல்லாரையும் மாற்ற நம்மால் முடியாது. ஆனால் எல்லாரையும் அட்ஜஸ்ட்  பண்ணிப் போக நம்மாலே முடியுமே " என்று ராஜேந்திரன் சொல்ல வாசு யோசிக்க ஆரம்பித்தான்.  

No comments:

Post a Comment