எத்தனை கோடி பணமிருந்தாலும் ......?!
"என்ன வத்சலா, பையனுக்கு வேலை கிடைச்சிருக்குது. நீ சந்தோசத்தில் பூரிச்சுப் போயிருப்பேனு நினைச்சேன். நீ ஏண்டீ இப்படி டல்லடிச்சு அழுது வடியறே? " என்று கேஷுவலாகக் கேட்டாள் பத்மா.
"த்சொ " என்ற வாயொலி மட்டுமே பதிலாக வந்தது வத்சலாவிடமிருந் து.
"என்ன ஆச்சு இவளுக்கு" என்ற நினைப்புடன் வத்சலா அருகில் வந்த பத்மா, வத்சலாவின் கலங்கிய கண்களைக் கண்டு பதறிப் போனாள்.
"என்னடி அசடு ? என்ன பிரச்சினை? வேலையில் சேரும்போதே சம்பளப் பணம் எழுபத்தைந்தாயிரம். அதை நினைச்சு சந்தோசப் படாமே, என்ன இது அசடாட்டம் .. ச்சே .. கண்ணைத் துடைச்சுக்கோ. என்னடி ? வேலை விஷயத்தில் ஏதாவது வில்லங்கமா ?"
"அதெல்லாம் இல்லை மாமி .. குழந்தைங்க மூணு பேரும் இந்நாள் வரை ஒருத்தரை விட்டு மத்தவங்க பிரிஞ்சதே இல்லை. காலையில் கையில் கிடைச்சதைக் கட்டிக்கிட்டு ஆளுக்கொரு திக்கு அரக்கப் பரக்க ஓடினாலு ம் ராத்திரி எல்லோரும் ஒண்ணா சேர்ந்து உட்கார்ந்துதான் சாப்பிடு வாங்க. எவ்வளவு பசியாயிருந்தாலும் ஒருத்தருக்காக மத்தவங்க காத்திருப்பாங்க. அந்த பாசத்தில் ஒரு இடைவெளி விழுறதை நினைச்சா மனசுக்கு வேதனையா இருக்குது மாமி ".
"சரி.. லீவு நாளில் வந்து போனா எல்லாம் சரியாகி விடும் "
"அப்படி வந்து போகும்போது யாரோ கெஸ்ட் வந்துட்டுப் போற பீலிங் தானே இருக்கும் ?"
"அப்படின்னா உன் புள்ளையை வெளி மாநிலத்துக்கு வேலைக்கு அனுப்பாதே. சென்னையில், நம்ம ஆத்துக்குப் பக்கத்திலே, முடிஞ்சா நம்ம ப்ளாட்டுக்கு பக்கத்திலே எப்போ வேலை கிடைக்குமோ அப்போ அனுப்புடி வேலைக்கு "
" கிண்டல் பண்றேளா மாமி ? "
"இல்லேடி. நடைமுறை வாழ்க்கையை சொன்னேன். மாவுக்கும் ஆசை, பணியாரத்துக்கும் ஆசைன்னா எப்படிடீ ? ஒன்றை இழந்தால்தானே மற்றது கிடைக்கும். பாலை இழந்தால்தான் தயிர். தயிரைக் கடைந்தால் தான் மோர் .. வெண்ணை .. வெண்ணை உருகினால்தானே நெய். அதைத் தான் சொன்னேன். உன்னைக் கிண்டல் பண்ணலே "
"மாமீ , நாம குழந்தையா இருந்த காலத்தில் நம்மள ஆறு வயசில்தான் படிக்க அனுப்பினாங்க. எங்க வீட்டில் நாங்க நாலு பேர் அக்கா தங்கைங்க. எங்க அப்பா எல்லாரையும் ஒரே ஸ்கூலில் சேர்த்துதான் படிக்க வைத்தார். சேர்ந்து போய் சேர்ந்து வருவோம். அம்மா வீட்டில்தான் இருப்பாங்க. அந்தக் காலத்தில் லேடீஸ் இந்த அளவுக்கு வேலைக்குப் போக ஆரம்பிக்கலையே. ஸ்கூல் விட்டு நாங்க வர்றச்சே வீட்டில் அம்மா இல்லைன்னா நாங்க அழ ஆரம்பிச்சிடுவோம். இவ்வளவுக்கும் அம்மா பக்கத்திலுள்ள கடைக்குக் காய் வாங்கவோ இல்லே ரேஷன் வாங்கவோ போயிருப்பாங்க. அந்தக் கொஞ்ச நேரப் பிரிவைக் கூட எங்களால் தாங்க முடியாது. படிப்பு முடிஞ்சு ஆளுக்கொரு திக்கிலே வேலை, கல்யாணம்னு செட்டில் ஆயிட்டோம். இன்னிக்கும் எங்க உறவில் எந்தவொரு சச்சரவும் இல்லே ... ஆனால் ஒரு விரிசல் இருக்குது. அது சரிப்பட சாத்தியமே இல்லை. இப்போ என்னோட குழந்தைகளும் ஒரு இடைவெளியை சந்திக்கப் போறதை நினைச்சா கவலையா இருக்குது. ஒருத்தனுக்கு எத்தனை கோடி பணமிருந்தாலும், வீட்டில் உறவுகள் இல்லைன்னா அவன் பரம ஏழை. குழந்தைங்க படிப்பு முடிஞ்சு வேலைக்காக ஆளுக்கொரு திக்கில் பிரிஞ்சு போவாங்க என்கிறது தெரிஞ்ச விஷயந்தான் என்றாலும் அதை ஏத்துக்கிட மனசு மறுக்குது மாமீ. எனக்கு ஒண்ணுவிட்ட தம்பி ஒருத்தன் மிலிட்டரியில் இருந்தான். வருஷம் ஒரு முறை பத்து பதினைந்து நாள் லீவில் வந்து போவான். வந்து போகும் ஒவ்வொரு முறையும், வருஷத்தில் பதினைந்து நாள்தான் நாங்க மனுஷனா வாழறோம். மத்த நாட்களில் மெஷின் மாதிரி இயங்கிக் கொண்டிருப்போம். அங்கிருந்து கிளம்பி வருவதற்கு ஒரு மாசம் முன்னாடி ஊருக்குப் போறதப் பத்தின சந்தோசத்தில் இருப்போம். லீவு முடிஞ்சு யூனிட்டுக்குத் திரும்பி ஒரு மாதம் வரை ஊரில் நடந்த விஷயங்களை சொல்லி சந்தோசப் பட்டுட்டு இருப்போம். மத்த நாட்களில் உலகமே ஒரு சூனியமாகத் தெரியும் என்பான். அப்பல்லாம், இந்த வயிறு ஒன்று இருந்து கொண்டு பாடாய்ப் படுத்தப் போய்த்தானே பணத்தைத் தேடி அலைய வேண்டியிருக்குது. வயிறுன்னு ஒண்ணு இல்லாட்டா எவ்வளவு நல்லாயிருக்கும் ! உலகத்தில் நூத்துக்குத் தொண்ணூறு பேர் உறவுகளைப் பிரிந்து காலத்தின் கட்டாயத்தில் மனசுக்குள் பாரத்தை சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே. அந்த வரிசையில் என் புள்ளையும் சேரப் போறதை நினைச்சா மனசே வெடிச்சிடும் போலிருக்குது. நல்லதோ கெட்டதோ, துக்கமோ சந்தோசமோ எதையும் பக்கத்திலிருந்து பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாத படிக்கு, பணம் ,,, ஒரு துண்டுக் காகிதம் மனுஷங்களைப் புரட்டிப் போட்டு என்னவொரு வேடிக்கை காட்டுதுன்னு பார்த்தீங்களா மாமீ "
"எத்தனை கோடி பணமிருந்தாலும் உறவுகள் வேணும் அருகிலேன்னு நீ சொல்றது சரிதான். ஆனால் கையில் பணமில்லாவிட்டால் நம்ம ரத்த சொந்தங்களே நம்மளப் பக்கத்தில் சேர்ப்பதில்லை. அதை புரிஞ்சுகிட்டு சில பிரிவுகளை சகிச்சுகிட்டுப் போகக் கத்துண்டா வாழ்க்கை என்னிக்கும் சொர்க்கம்தான் " என்று பத்மா சொல்ல, " அதுவும் சரிதான் மாமி " என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வத்சலா
No comments:
Post a Comment