Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 28, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 108 )

                                       காலம் மாறிப் போச்சு !!
"மம்மீ, முடிவெடுக்க வேண்டியது நீங்க. என்னடி பண்றதுங்கிற மாதிரி என் முகத்தைப் பார்த்து என்னை டென்ஷன் பண்ணாதீங்க. சாய்ஸ் இஸ் யுவர்ஸ். அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன் . போகலாமா வேண்டாமான்னு டிசைட் பண்ணுங்க. நீங்க ஓகே சொன்னா பங்க்ஷனுக்கு அழைச்சிட்டுப் போறேன். " நோ " சொன்னீங்கன்னா நான் வெளியே கிளம்பிப் போயிட்டே இருப்பேன். யோசனை பண்ணுங்க. நான் மெயில் செக் பண்ணிட்டு வந்துடறேன் " என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள் ஷாலு.
ஒன்றல்ல இரண்டல்ல, இருபத்தொரு வருட தனி வாழ்க்கை.. தன்னைத் தானே சிறைக்குள் பூட்டிக் கொண்ட ஜெயில் வாழ்க்கை. தெரு முனை எப்படி இருக்கும். பக்கத்து வீட்டு முகப்பு எப்படி இருக்கும் என்பது கூட தெரியாத அளவுக்கு ஒரு " மறைமுக " வாழ்க்கை. இத்தனை வருடம் கட்டிக் காத்த இந்த வைராக்கியத்தை விட்டு விட்டு வெளியில் வந்துதான் ஆக வேண்டுமா என்று மனதுக்குள் ஓராயிரம் கேள்விக் கணைகள். எதற்குமே பதில் தெரியாத நிலையில் இருந்தாள் ரேவதி.
உறவும் நட்பு வட்டங்களும் அவளை " நவீன காந்தாரி " என்று உரிமையோடு கிண்டல் செய்த போதுகூட அதைப் பற்றியெல்லாம் கவலைப் படவே இல்லை ரேவதி. கணவனால் காண முடியாத இந்த உலகத்தை நான் மட்டும் ஏன் கண்டு கொள்ளவேண்டும் என்ற வைராக்கியத்தில் தனது கண்களை தானே மூடி மறைத்துக் கொண்ட காந்தாரி மாதிரி, என் புருஷன் மீது அநியாயமாக பழி போட்டு அவரை தற்கொலைக்குத் தூண்டிய இந்த உலகத்தோடு எனக்கென்ன உறவு வேண்டிக் கிடக்கிறது என்ற வைராக்கியத்தில் தன்னை தானே தனிமை சிறையில் பூட்டிக் கொண்டாள் ரேவதி.
கணவன் ராஜேஷ் தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்து அலறியது ரேவதிதான். அந்த கோலத்தை எத்தனை யுகங்கள் ஆனாலும் அவளால் மறக்க முடியாது. அவன் வேலை பார்த்த நிறுவனமே ' இந்த அளவுக்கு அவசர முடிவு எடுத்திருக்க வேண்டாம் ' என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொன்னது இன்றுவரை கூட நினைவில் இருக்கிறது . 
அவனவன் பொதுப் பணத்தைக் கோடிகோடியாகக் கொள்ளையடிச்சிட்டு புது மாப்பிள்ளை மாதிரி போஸ் குடுத்துக்கிட்டு போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்து  மீடியா ஆட்களுக்கு ' டாட்டா ' காட்டிட்டு போறான். வேலை செய்ற இடத்தில்  ஒரு பிரச்சினை. இவன் பொறுப்பில் இருந்த ஒரு லட்சம்  காணாமே போயிட்டுது. அது எப்படி நடந்திருக்கும்னு யோசனை பண்ணி கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு, 'உன் பொறுப்பிலுள்ள பணம் உனக்குத் தெரியாமே கால் முளைச்சா நடந்து போச்சு. ஏதாவது அவசரத் தேவைக்காக அதை நீயே  எடுத்திருந்தால் உள்ளதை சொல்லிடு. அதை வேறே வழியில் நான் ரெகவர் பண்ணிக்கிறேன். அதை விட்டுட்டு எப்படி காணாமே போச்சுன்னு தெரியலைன்னு  சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி என்னை முட்டாளாக்காதே. 24 மணி நேரம் கெடு தர்றேன். அதற்குள் பணம் தராவிட்டால் போலீசுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை. முடிவு உன் கையில்தான்' என்று பாஸ் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக  உயிரை விட்டவன் ராஜேஷ். அப்புறம் அந்த பணக்கட்டு டேபிள் டிரா  இடுக்கில் மாட்டிக் கொண்டிருப்பது மூன்று நாட்களுக்குப் பிறகு கண்டு பிடிக்கப்பட்டது எல்லாம் வேறு விஷயம். அந்த மூன்று நாட்களும் இறந்து போனவனை நினைத்து அழுததைவிட அக்கம்பக்கத்து வீட்டினரின்  கேலிக்கும் விமரிசனத்துக்கும் ஆளாகி அழுததுதான் அதிகம். கேலி பேசிய அதே வாய், மூன்று நாட்களுக்குப் பிறகு உண்மை தெரிந்ததும், ' இப்படி அநியாயமா ஒரு உயிர் போச்சே ' என்று ஒப்பாரி வைத்து விட்டுப் போனது. அப்போது எடுத்த முடிவுதான் இந்த தனிமை சிறை வாழ்க்கை. வீட்டுக்குள் நியூஸ் பேப்பர் வராது. டீவீ யா ? அது எப்படி  இருக்கும் என்ற கேள்வி கேட்கும் நிலையில்தான் இருந்தாள் ரேவதி. ராஜேஷ் இறக்கும் போது ஷாலுவுக்கு ஒரு வயதுகூட நிரம்பி இருக்கவில்லை. விசேஷம், பண்டிகை என்றால் என்ன என்று தெரியாத நிலையில்தான் அந்த வீடு இருந்தது . ஷாலு வளர்ந்து, விவரம் தெரியும் அளவுக்குப் பக்குவப்பட்ட நிலைக்கு வந்த பின், ' ஷாலு, நான்  இப்படி இருப்பது நானே ஏற்றுக் கொண்ட முடிவு ' என்று சொன்ன போது, 'இந்த முடிவால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? ' என்று ஷாலு கேட்க, ' இது லாப நஷ்ட கணக்குப்  பார்க்க  எடுத்த முடிவு இல்லை. நான் நீ நமது உண்மையான உறவுகள் நட்புகள் தவிர வேறு எந்தவொரு ஜந்துவையும் படத்தில் கூடப்   பார்க்கக் கூடாதுங்கிறதுக்காக எடுத்த முடிவு இது. உனக்கு, நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு முட்டாள் தனமாக இருக்கலாம் இது .  ஆனால் எனக்கு இது நிம்மதியைத் தருது.  நான் இப்படி இருக்கிறதால் நீயும் இப்படித்தான் இருக்கணும்ங்கிற அவசியம் எதுவும் கிடையாது. உன் விருப்பப்படி உனக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ  உனக்கு எல்லா உரிமையும் உண்டு' என்று ரேவதி சொன்னபோது, ' உனக்குப் பிடிக்காத எதுவும் எனக்குப் பிடிக்குங்கிற காரணத்துக்காக இந்த வீட்டுக்குள் வரவே வராது' என்றாள் ஷாலு. இப்படியே இருபத் தொரு    வருஷம் ஓடியும் விட்டது.
ஒரு வாரம் முன்பாக  சாவித்திரி,ரேவதியின் தோழி, வீடு தேடி வந்து " என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கிறேன். உன் பிடிவாதம் வைராக்கியம் எல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீ வந்தே ஆகணும். அப்பத்தான் எனக்கு மனசுக்கு நிறைவாக இருக்கும்" என்று கண்களில் கண்ணீர் வழிந்தோட அழைத்தபோது கூட எதுவும் சொல்லாமல் மௌனமாகத் தான் இருந்தாள் ரேவதி. கல்யாணத்துக்குப் போவதா வேண்டாமா என்ற குழப்பத்துக்குக் காரணம்  அவள் தோழி சாவித்திரிதான். ராஜேஷின் உடல் தகனம் செய்யப்பட்டு, உறவுகள் அங்கிருந்து சென்றிருக்க, " வீட்டில் ஏதாவது பணப் பிரச்சினையா ? ஏன் இந்த முடிவுக்கு வந்தான் ? " என்று ராஜேஷின் அப்பா கேட்டபோது துடித்துப் போய் விட்டாள்  ரேவதி. ஆனால் " இல்லேடி .. எங்கேயோ ஏதோ தப்பு நடந்திருக்குது. அது என்ன ஏதுன்னு கண்டு பிடிக்கிறதுக்குள் உன்னோட  'அவர்' அவசரப் பட்டுட்டார். அவர் ஆபீசிலும் செக்யூரிட்டி கெடுபிடி அதிகம். பணம் எங்கேயும் போயிருக்காது. கண்டிப்பா அங்கேதான் இருக்கணும்" என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டி ருந்த ஒரே ஒரு ஜீவன் சாவித்திரி மட்டுந்தான். கஷ்ட வேளையில்தான் நண்பனின் யோக்கியதையை அறிய முடியும் என்பார்கள். அதை உணர்வு பூர்வமாக நிரூபித்தவள் சாவித்திரி. அந்த ஒரே ஒரு விஷயந் தான் ரேவதியை அவளது நிலையிலிருந்து நிலை தடுமாற வைத்தது.
அறைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த ஷாலு "மம்மீ என்ன முடிவெடுத்தீங் க ?" என்றாள்.
"போகலாம்டி "
"வாவ் ! வாட் எ சர்ப்ரைஸ் !! சொல்றது என்னோட மம்மியா ? குட் .. நல்ல மம்மி. நீங்க ரெடியாகுங்க. அரை மணி நேரத்தில் நான் வந்திடறேன். கால் டாக்ஸி புக் பண்ணிடறேன் " என்ற ஷாலுவின் குரலிலும் நடையி லும் ஒரு துள்ளல் இருந்தது. அதை மனதுக்குள் கண்டு ரசித்தாள் ரேவதி சிறிது நேரத்தில் வாசலில் டாக்ஸியின் ஹார்ன் சத்தம் கேட்க, ' மம்மி , டாக்சி வந்தாச்சு. வாங்க போகலாம் " என்ற ஷாலுவைப்   பார்த்த ரேவதி " என்னடி இது தலை விரி கோலம் .. நாம போறது கல்யாண வரவேற்புக்கு  " என்றாள்.
" சோ வாட் ? "
" அழகா ஜடை போட்டுட்டு வா . போகிற வழியில் பூ வாங்கி வச்சுக்கோ. கையில் இன்னும் ரெண்டு வளையல் அதிகமா போட்டுக்கலாமே "
"அதெல்லாம் போதும் . நீங்க கிளம்புங்க "
"என்னடி இது தலைவிரி கோலத்தில் ? அமங்கலம் நடக்கிற இடத்தில் தான் தலைவிரி கோலமா இருப்பாங்க.கோபத்தின் உச்சியில் இருக்கிறப் போ தலையை அவிழ்த்து விட்டுக்குவாங்க "
"அப்படி சொன்னது யார் ? "
"நீ ஸ்கூலில் படிக்கிறப்போ ராமாயாண பாடம் நடத்தி இருப்பாங்களே . அதில், ராமனுக்கு முடிசூட்டு விழான்னு கேள்விப் பட்டதுமே தனது பின்னிய கூந்தலை கைகேயி கலைத்து விட்டுக் கொண்டாள்னு ஒரு லைன்  வருமே, நல்ல விஷயங்கள் நடக்கிற இடத்தில் அப்படி தலைவிரி  கோலம் கூடாது ஷாலு "
"அப்படியா .. அதைப்பத்தி வந்தபிறகு டிஸ்கஸ் பண்ணலாம். டாக்ஸி வெயிட்டிங்கில்  இருக்குது. வாங்க போகலாம் "
வீட்டு வாசலுக்கு வந்ததும், வெளியுலகைப் பார்த்ததும் கண்கள் கூசியது சூரிய ஒளியைக் கண்டதுபோல. அதை வாய் விட்டு சொன்னாள் ரேவதி .
"மம்மி, ஆப்டர் ட்வென்டி ஒன் இயர்ஸ். வீட்டு வாசலுக்கு வந்து வெளியுலகைப் பார்க்கிறீங்க. அதனால் அப்படித்தான் இருக்கும் " என்றாள் ஷாலு.
கல்யாண மண்டபத்துக்குள் கால் வைத்தபோது பூமியே நடுங்குவது போல ஒரு பிரமை. தன்னைத் தானே திடப் படுத்திக் கொண்டாள் ரேவதி "மம்மி நான் போய் சாவித்திரி ஆன்ட்டி எங்கே இருக்கிறாங்கன்னு பார்த்துட்டு வரவா  ?"
"அவ பிஸியா இருப்பா . நீ போய்த் தொந்தரவு  பண்ண வேண்டாம். நம்ம கண்ணில் அவ படறச்சே கை காட்டினால் போதும்.. ஆமா.. என்னடி இது ! இவ்வளவு பெரிய கியூ ? எங்கே போறதுக்கு ?"
"ஸ்டேஜுக்கு போய்   பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்றதுக்கு  நாமளும் இந்த லைனில் ஜாயிண்ட் பண்ணிக்கலாம். ஒரு வேளை ஆன்ட்டி ஸ்டேஜில் கூட இருக்கலாம் ... வாங்க பார்க்கலாம் ... ஸ்டேஜில் பாருங்க ... ஜோடி எப்படி ! ஆன்ட்டி செலேக்சன் எப்படின்னு "
என்று ஷாலு சொல்ல, வரவேற்பு மேடையைக் கவனித்த ரேவதி, " என்னடி  இது !! கல்யாணப் பொண்ணு தலைவிரி கோலமா நிற்க்கிறா !! " என்று வியந்து கூவ, அருகில் நின்றிருந்தோர் இவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
"ஐயோ மம்மி ... மானத்தை வாங்காதீங்க " என்று கடுகடுத்தாள் ஷாலு.
அதன்பிறகு சாப்பிட மட்டுமே வாயைத் திறந்தாள் ரேவதி. இவர்களைக் கண்ட சாவித்திரி ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தபோதும்  அமைதியாக நின்றாள் ரேவதி 
வீட்டுக்குத் திரும்பும் வழியில், " ஸாரி மம்மீ . நான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா  ? " என்றாள் ஷாலு 
"எனக்கு என்னோட கல்யாண வரவேற்பு நினைவுக்கு வந்துச்சு "
"என்ன சொல்றீங்க மம்மீ ?"
"எங்க கல்யாணத்துக்கு வந்த பெரியவர் ஒருவர் 'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க'ன்னு எங்களை வாழ்த்த, உன்னோட அப்பா, " ஐயோ பதினாறா ? தாங்காது. ஒன்றிரண்டு போதும் " ன்னு ஜோக் அடிச்சார். அதைக் கேட்ட உன்னோட தாத்தா .. அதான் எங்க அப்பா, "இந்தக் கால பிள்ளைகளுக்கு வாழ்த்துதலோட அர்த்தமே புரியலை .." பதினாறும் பெற்று "ன்னு சொன்னால் , அது பதினாறு வகையான செல்வங்களைக் குறிக்கும் .. அது தெரியாமே இவங்களாக ஒரு தப்புக் கணக்குப் போட்டு பதினாறு பிள்ளைகள்னு நினைச்சுக்க வேண்டியது.. எல்லார் வாழ்த்துமா பலிக்கிறதுன்னு கேள்வி கேட்க வேண்டியது. இவங்க என்னத்த படிச்சு என்ன பிரயோசனம்னு அலுத்துக் கிட்டார். அதை நினைச்சேன்"
"மம்மி, காலம் ரொம்பவும் மாறிப் போச்சு "
"நல்ல விஷயங்களுக்காக மாறினால் எல்லாருக்கும் சந்தோசந்தான். எது எது வேண்டாம் .. நல்லதில்லைன்னு சொல்லி பெரியவங்க தடுக்கிறாங்களோ  அதுக்கு ஏறுக்கு மாறாக எதையாவது செஞ்சுகிட்டு அதை மாற்றம்னு சொன்னால் அதை எப்படி ஏத்துக்க முடியும் ?" என்று ரேவதி கோபமாகக் கேட்க, "மம்மி நீங்க வீட்டிலேயே இருக்கிறதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே ஸேப்ன்னு நான் நினைக்கிறேன்" என்று குறும்புச் சிரிப்புடன் ஷாலு சொல்ல, " நானும் அதையேதான் நினைக்கிறேன் " என்றாள் ரேவதி சிரித்துக் கொண்டே.  

  

No comments:

Post a Comment