Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 05, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 109 )

                       தெய்வ சாபமல்ல !  மனித சுபாவம் !!
"ச்சே, நாம பண்ணின பாவந்தான் பிள்ளையா வந்து பிறக்குதுங்கன்னு எவனோ ஒரு மகானுபாவான் சொல்லி வச்சிட்டுப் போயிருக்கிறானே, அவனுக்குக் கோயில்தான் கட்டிக் கும்பிடணும்" என்று வீட்டுக்குள் நுழையும்போதே வெறுப்புடன் சொல்லிக் கொண்டு வந்தார் வாசுதேவன்.
" ஏங்க .. என்னாச்சு ? " என்று கேட்டாள் கமலா முகத்தில் ஒரு அப்பாவித் தனத்தை தேக்கி வைத்துக் கொண்டு.
"உன் புத்திர பாக்கியத்தைப் பார்க்கப் போயிருந்தேன். பேரனைப்  பார்க்க ணும் போல இருந்துச்சு. அதான் பார்த்துட்டு வரலாம்னு ரமேஷ் வீட்டுக்குப் போயிருந்தேன்"
" ஏன், நீங்க போன நேரம் வீட்டில் யாருமே இல்லையா ? "
" எல்லாரும் இருந்தாங்க, உன் உத்தம புத்திரன் உட்பட.. லீவு நிறைய இருக்குதுன்னு இன்னிக்கு லீவு போட்டுட்டு இருக்கிறானாம். இதை உன் மருமகதான் சொன்னா. உன் புள்ளை வாயைத் திறந்து எதுவுமே சொல்லலே "
" அவன் என்னிக்கு வாயைத் திறந்து கலகலன்னு பேசியிருக்கிறான், நீங்க போனதும் இன்னிக்குப் பேசறதுக்கு.  இல்லே, நாம அவனைப் பேசத் தான் விட்டிருக்கிறோமா ?"
" என்னடி அதுக்கும் நான்தான் காரணமா ?"
"ஐயா சாமி ஆளை விடுங்க. நான் எது சொன்னாலும் இப்போ வம்பில் தான் முடியும் "
அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார் வாசுதேவன்.
பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள் கமலா.
ரமேஷுக்கு அப்போது ஒரு வயது இருக்கும். தத்தித் தத்தி நாலடி எடுத்து வைப்பதற்குள் குறைந்தது எட்டு முறையாவது விழுந்து எழுந்திருப்பான்.
காம்பௌன்ட் வாசலில் வாசுதேவனின் வண்டிச்சத்தம் கேட்டதும் வெகு வேகமாக தவழ்ந்து வந்து கிரில் கேட் கதவைப் பிடித்துக் கொண்டு எழும்பி நிற்க முயற்சி செய்வான்.
"ஏண்டி என்னை வீட்டுக்குள் விடக்கூடாதுன்னு உன் பிள்ளை கிட்டே சொல்லி வச்சிருக்கியா ? நான் எப்படி வீட்டுக்குள் வர்றது ? " என்ற வாசு தேவனின் இரைச்சலைக் கேட்டு வாசலுக்கு ஓடி வந்து ரமேஷை இடுப்பில் இடுக்கிக் கொண்டு கதவைத் திறந்து விடுவாள். அவர் வீட்டுக்குள் நுழையும் முன்பே அவர் மீது பாய்வான் ரமேஷ் .
"அடச் .. சீ ... என்னடி இது .. இவ்வளவு நேரம் கதவைப் பிடிச்சிட்டு இருந்தான். கதவிலே உள்ள அழுக்கு பூராவும் அவன் கையிலே . அந்த அழுக்குக் கையை  என் ஷர்ட் மேலே தேய்க்கிறானே. என் டிரஸ் வீணாப் போகுதே ... என்னடி வேடிக்கை பார்க்கிறே. அப்புறப் படுத்துடி அவனை,, நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறே ? "
" ஏங்க .. நம்ம காம்பௌண்டுக்குள் எத்தனையோ வண்டி வர்றது. ஆனால் உங்க வண்டி சத்தத்தை மட்டும் தெரிஞ்சு வச்சுகிட்டு  உங்களைப் பார்க்க ஓடி வர்றானே குழந்தை ... உங்களுக்கு அந்தப் பாசம் புரியலையா ? "
பதிலேதும் சொல்லாமல் அவளை முறைப்பார் வாசுதேவன். சப்த நாடியும் ஒடுங்கி,பாம்புப் பிடாரனின் பெட்டிக்குள் அடங்கும் பாம்பு போல தன்னைத் தானே சுருட்டிக் கொண்டு அடங்கிப் போவாள் கமலா
குடும்பத்தோடு வெளியில்  செல்வதே வெகு அபூர்வம். அந்த மாதிரி யான வேளைகளில்  அப்பாவின் தோளைத் தொட்டுத் தாவுவான் ரமேஷ் . உடனே கமலாவை இல்லாத நெற்றிக் கண்ணால் எரிப்பார் வாசுதேவன்  அதனால் முடிந்தவரை வெளியில் செல்வதையே தவிர்ப்பாள் கமலா  
குழந்தைக்கு மூன்று வயது ஆரம்பித்ததும் பள்ளியில் சேர்க்க வாசு தேவனை  துணைக்கு அழைத்தபோது, " ஏண்டி, இதற்க்கெல்லாம் நான் வந்து என்னோட நேரத்தை வீணடிக்க முடியுமா ? ஸ்கூல் எங்கே இருக்கு ன்னு உனக்குத் தெரியாதா? அங்குள்ள பார்மாலிட்டீஸ் என்னனு உனக்கு த்தெரியாதா ? படிச்சவதானே நீ ! இதற்க்கெல்லாம் நான் வந்து என்னோட நேரத்தை வீணடிக்க முடியுமா  ? " என்று கூச்சலிட்டார்.
"ஸ்கூல்க்கு போறதும் பார்மாலிட்டீஸ் ப்பாலோ  பண்றதும் எனக்கொரு பிரச்சினையே இல்லை.குழந்தை முதல்முறையாக ஸ்கூல்க்குள் காலடி எடுத்து வைக்கப் போகிறான்.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் ..."
"சேர்ந்து போய் நம்ம ஜோடிப் பொருத்தத்தை அங்கே காட்டிவிட்டு வரணுமா ? "
அதன்பிறகு ரமேஷை ஸ்கூலில் சேர்ப்பதில் ஆரம்பித்து, காலேஜில் அவன் எந்த  படிப்பில் சேரவேண்டும் என்பது வரை கமலாதான் முடிவு எடுத்தாள்.
ரமேஷ் ஸ்கூலில் படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் ... பேரன்ட்ஸ் டே நடக்கும் போதும்.. "டாடி .. என்னோட பிரெண்ட்ஸ் அவங்க டாடி மம்மி யை அழைச்சிட்டு வருவாங்க.  நீங்களும் வாங்க டாடி ... ப்ளீஸ் .." என்று கெஞ்சுவான்.
"அதுக்கெல்லாம் எனக்கு நேரம் கிடையாது "
"இல்லே டாடி ..இதுவரை நீங்க எங்க ஸ்கூலுக்கு வந்ததே கிடையாது . இந்தத் தடவை நீங்க கண்டிப்பா வருவீங்கன்னு நான் பிரெண்ட்ஸ் கிட்டே சொல்லியிருக்கிறேன் "
"ஓஹோ .. என்னை எதிர்த்துப் பேசி ஆர்க்யூ பண்ற அளவுக்கு ரொம்பப் பெரிய ஆளா ஆயிட்டியா நீ  .. இன்னொரு தடவை இப்படி ஆச்சுன்னா முதுகுத் தோலை  உரிச்சிடுவேன். செவன்த் ஸ்டாண்டர்ட் தாண்டலே. அதற்குள் இத்தனைத் திமிரா ? " என்று சொல்லி பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்ததைக்  கண்டு கமலா துடித்துப் போய் விட்டாள். அந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் எதிரில் கூட நின்றதில்லை ரமேஷ்.
"ஏங்க .. நீங்க ஓடி ஓடி உழைக்கிறது எங்களுக்காகத் தான்னு எனக்கு நல்லா தெரியும். வாழ்க்கைக்குப் பணம் தேவை. அது இல்லாவிட்டால் உலகத்தில் எதுவுமே இல்லைங்கிற உங்களோட நம்பிக்கையும் எங்களுக்குத் தெரியும். ஆனா  உங்க கிட்டே  நாங்க எதிர் பார்க்கிறது அன்பான நாலு வார்த்தைகள்தான்னு நீங்க எப்போ புரிஞ்சுக்கப் போறீங்க குழந்தையோட அன்பை, உங்க மேலே அவனுக்கிருக்கிற தவிப்பை எப்போதான் புரிஞ்சுக்கப் போறீங்க"ன்னு  கேட்க நினைத்து, அந்த கேள்வி யைத் தனக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்ட நாட்கள் எத்தனை எத்தனை !
படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்தபின் கல்யாணப் பேச்சை ஆரம்பித்த போது "அம்மா, கண்டிப்பா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா ? " என்று குழந்தைத் தனமாகக் கேட்டான் ரமேஷ்.
"என்னடா கேள்வி இது ? உனக்கு எங்களோட ஏற்ப்பாட்டில் விருப்பம் இல்லையா? நீ மனசுக்குள் யாரையாவது நினைச்சிட்டு இருக்கிறியா ? "
"இல்லேம்மா .. கல்யாணத்துக்கு வர அப்பாவுக்கு நேரம் இருக்கணும் .. அந்த சம்பவங்களினால் அப்பாவோட டிரஸ்  அழுக்காகாமே இருக்கணும்  " என்று சொன்னபோதுதான் அவன் அடிமனசிலிருந்த காயம் , அந்த ரணம், அது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வலி கமலாவுக்குப் புரிந்தது.
அந்த மனுஷனுக்கு உன் மேலே அன்பு இருக்குடா .. அதை வெளிக் காட்டும் விதம்  அவருக்குத் தெரியலே. நமக்குத் தேவையான எந்த ஒன்றிலாவது அவர் நமக்கு எந்தவொரு குறையாவது வைத்திருக்கிறா ரா. அவர் வேலையில் அவருக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கும். அவர் ஒரு சூழ்நிலைக் கைதியா அங்கே இருந்து கொண்டிருப்பார். என்ன இருந்தாலும் நாம எல்லோரும் மனுஷ ஜென்மங்க தானே. நம்மோட கோப தாபங்களுக்கு ஒரு வடிகால் வேண்டும்தானே? அதை அவர் நம்ம வீட்டில் நம்மிடம்தானே காட்ட முடியும். அப்படிப் பண்றதாலே அவருக்கு ஒரு ரிலாக்ஸ்  கிடைக்கும்னா அதை நாம தாங்கிக்கிடலாமே " என்று கமலா சொல்லும்போது"அம்மா, நீங்க அப்பாவை விட்டுக்கொடுக்காமே பேசறீங்க.. சரி .. நானும் நீங்களும் அப்பாவைப் புரிந்து கொண்டதாகவே இருக்கட்டும். அவரோட இந்த இன்சல்ட்டை   வேறொரு வீட்டிலிருந்து வரும் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியுமா ? " என்று கேட்டான் ரமேஷ்   
"ரமேஷ் என்னோட சின்ன வயசிலே நான் படிச்ச ஒரு ஹிந்திக்கதையை சொல்றேன். ஒரு ஆளு .. வீட்டில் மனைவி, குழந்தைங்க. இவர் ஒருத்தர் சம்பாத்தியம்தான். வேறே எந்த சோர்ஸ்ம் கிடையாது. அவருக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க ஆசை. ஆபீஸ் .. பாங்க்ன்னு எங்கெங்கு லோன் கிடைக்குமோ அங்கெல்லாம்  அப்ளை   பண்ணி லோன் வாங்கி யாச்சு. இந்த சமயத்தில் அவருக்கு வேறொரு இடத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. இவர் ஒரு இடத்தில் .. மனைவி குழந்தைங்க ஒரு இடத்தில் .. இரட்டை செலவு.. வாங்கின கடனை வேறு அடைக்கணும். அதனால் எந்தெந்த விதத்தில் செலவை சுருக்க முடியுமோ  அந்தந்த விதத்தில் செலவை சுருக்கி  குடும்பத்தை ரன் பண்றார். லீவு நாளில் வீட்டுக்கு வந்தால் வீண்  பஸ் செலவு என்று நினைத்து வீட்டுக்கு அதிகம் வருவதி ல்லை. அந்த நாட்களில் ஓவர் டைம் வொர்க் பண்ணி பணம் சம்பாதித்தார். பண்டிகைகளை கிட்டத்தட்ட அந்த குடும்பம் மறந்தே போயிட்டுது. அவர் மனைவி, குழந்தைங்க அவரை ஆசையாக சினிமாவு க்கோ கோவிலுக்கோ கூட்டிட்டுப் போக சொல்லி கேட்பாங்க. தன்னோட கடனை சொல்லி, இவர் அதைத் தவிர்த்து விடுவார். எந்தவொரு சந்தோசமும் இல்லாமே வாழ அவரோட  மனைவி குழந்தைங்க பழக்கப் படுத்திக் கிட்டாங்க.. இப்படியே வருஷம் ஓடிப் போச்சு . இவர் ரிடைர் ஆனார். எல்லாக் கடனும் அடைஞ்சது போக கையில் பணம் இருந்தது . அதை அனுபவிக்க நேரமும் இருந்தது. அங்கே போகலாம் இங்கே போகலாம்னு எல்லாரையும் கூப்பிடறார். ஆனா யாரும் எங்கேயும் வர தயாரா இல்லே. அவங்க யாரும் இவரைப் பழி வாங்கிறதுக்காக அப்படி நடந்துக்கலே. அந்த வாழ்க்கை அவங்களுக்குப்  பழக்கப் பட்டுட்டதாலே அவங்களாலே அதை விட்டு வெளியே வர முடியலே. தண்ணியும் எண்ணையுமா தனித்து நிற்கிற நிலைமை. அதை அவராலே சகிச்சுக்க முடியலே. 'இவ்வளவு நாளும் தனியாத் தானே இருந்தேன். இனிமேலும் அப்படியே  இருந்துக்கறேன்'னு சொல்லி லெட்டர் எழுதி வச்சிட்டு அந்த வீட்டை விட்டுட்டு அந்த ஆளு  எங்கேயோ போயிடறார். உங்க அப்பா வோட செய்கை யைப்  பார்க்கிறப்போ எனக்கு இந்தக்கதைதான் ஞாபகம் வரும்  ரமேஷ் ஒவ்வொருமனுஷ குணம் ஒவ்வொரு மாதிரி ..."
"அம்மா ஒரே ஒரு கண்டிஷன். முதலில் ஒரு தனி வீடு பாருங்க எனக்கு . அப்புறமா பெண்ணைப் பாருங்க "
"சரிப்பா .. நீ இவ்வளவு இறங்கி வந்ததே போதும் " என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை கமலாவுக்கு.
ரமேஷுக்கு கல்யாணமானது குழந்தை பிறந்தது எல்லாமே தனிக் கதை. மகனிடம் காட்ட மறந்த பாசத்தை பேரனிடம் காட்ட மனசு தவிக்கிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை என்பதும் கமலாவுக்கு தெரியும்.இரண்டு பேர்  செய்வதுமே நியாயமாகப் படுகிறது அவரவர் இடத்தில் நின்று கொண்டு பார்க்கும்போது. தான் ஒரு சூழ் நிலைக் கைதியாக ஆக்கப்படும் போதெல்லாம் மனதில் தோன்றுவதை டைரியில் எழுதுவது கமலாவின் பழக்கம். டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தாள் 
" நேற்றைய நெருடல்களில் "இன்று" தொலைந்து போக 
   நாளைய  நல்வாய்ப்புகளெல்லாம் தொலைந்த அந்த 
   இன்றுக்காக அழும் ! தொலைந்த ஒன்றைத் தேடியலையும் !!!
   தேடல் ! தேடல் !! தேடல் !!!
   தேடுதல் - தெய்வ சாபமல்ல !
   மனித சுபாவம் ! "
முதுக்குப் பக்கம் ஏதோ நிழலாடுவது போல இருந்தது. திரும்பிப் பார்த்தாள். " ஏண்டி, உனக்கு கவிதை எழுதக் கூட வருமா ? தெரியுமா ? "
என்று ஆச்சரியத்துடன் கேட்டார் வாசுதேவன்.
"மனைவிக்கு என்னென்ன தெரியும் என்பது கூட தெரியாத ஒரு   மனிதரிடம் சேர்ந்து வாழ்ந்து  முப்பது வருட காலத்தை ஓட்டி விட்டாய். சபாஷ் கமலா " என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்  கமலா.
     

No comments:

Post a Comment