Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 11, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 110 )

                                     தகரம் ஒன்று தங்கம் ஆச்சு !!
"அம்மா ... நான் ஏர் போர்ட்டிலிருந்து போன் பண்ணின பிறகு நீங்க மீல்ஸ் ரெடி பண்ண ஆரம்பிச்சா போதும். அங்கிளுக்கு எப்பவும் சூடா சாப்பிடத்தான் பிடிக்கும். சமைக்க வேண்டியதை எடுத்து ரெடியா வச்சுக் கோங்க. என் போன் வந்ததும் மடமடன்னு அடுப்பில் ஏத்தி இறக்கிற வேலையை ஆரம்பியுங்க " என்ற சரவணன் மீது கேலிப் புன்னகையை வீசினாள் தமயந்தி.
"ஏம்மா சிரிக்கிறீங்க ? "
" என்னவோ நான் இன்னிக்குதான் புதுசா சமைக்க ஆரம்பிக்கிறாப்லே நீ ' அதை செய் ', 'இதை செய் 'ன்னு  இன்ஸ்ட்ரக்சன் குடுக்கிறேயே, அதை நினைச்சு சிரிச்சேன் " என்றாள் தமயந்தி சிரிப்புடன். 
"நான் இப்போ கிளம்பறேன் "
"டேய், நீ இன்னும் காபியே குடிக்கலே. டிபன் எடுத்து வைக்கிறேன் சாப்பிடு "
" வேண்டாம்மா .. நேரமாயிடும் "
"ரெண்டு இட்லியைப் புட்டு வாயில் போட எவ்வளவு நேரமாகிடப் போகுது. அவங்க ஏற்கனவே  மும்பை வந்துட்டாங்க. அங்குள்ள வேலையை முடிச்சிட்டு சென்னை வருவாங்க. மும்பையில் பத்து மணிக்கு ப்ளைட். இங்கு வந்து சேர பன்னிரண்டு மணியாயிடும்னு சொல்றே. மணி இப்போ எட்டு தானே ஆறது. அவங்க கிளம்பி  இன்னும் மும்பை ஏர் போர்ட்டுக்கே  வந்து சேர்ந்திருக்க மாட்டாங்க. அதுக்குள்ளே சென்னை ஏர் போர்ட் வாசலில் போய் நிக்கறேன்னு நீ  சொல்றே ? "
"அதெல்லாம் அப்படித்தான். நீ சும்மா தொணதொணக்காதே " என்று சொல்லி விட்டுக் காரை எடுத்துக் கொண்டு விரைந்த சரவணனை மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தாள் தமயந்தி 
அவ்வளவு நேரமும் அங்கு நடந்தவற்றை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவேல்முருகன் "இவன் இப்படி மாறுவான்னு நாம கனவில் கூட நினைச்சுப் பார்த்ததில்லை " என்றார் மனைவியிடம்.
இளவயதில் திருடனாக, ஸ்திரீ லோலனாக இருந்து, பிற்காலத்தில் ஞானிகளாக மாறியவர்களைப் பற்றி புத்தகங்களில் படித்திருக்கிறார். ஆனால் அப்படியொரு அதிசயம் தனது வீட்டிலும் நடக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை  வேல் முருகன். அந்த மாற்றத்து க்குக் காரணம் சரவணனின் வகுப்புத் தோழன் ஸ்ரீராமின் அப்பாதான் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. குடும்பத்தோடு மலேஷியா விற்குக்  குடியேறிய ஸ்ரீராமின் அப்பா, மூன்று வருடத்துக்குப் பிறகு முதல் முறையாக சென்னை வருகிறார். தங்கள் வீட்டில் தங்கப் போகிறார் என்ற நினைப்பே சந்தோசத்தைத் தந்தது சரவணனுக்கு.
டெலிபோன் மணி ஒலித்தது. விரைந்து சென்று எடுத்தார் வேல்முருகன் "அங்கிள் .. நான் மோகன் பேசறேன்.  சரவ் வீட்டில் இல்லையா. அவன்  மொபைலுக்குப் போட்டா ஸ்விட்ச் ஆப்ன்னு  ரிப்ளை வருது "
"அவன் இப்போ டிரைவிங்கில் இருக்கிறதாலே ஆப் பண்ணி வச்சிருக்க லாம். ஒரு முக்கியமான வேலையா ஏர் போர்ட் போயிருக்கிறான். அவன் வந்ததும் நீ கூப்பிட்டதை சொல்றேன்ப்பா "
"அங்கிள்.. வாலிபால் மாட்ச் விஷயமா ஒரு முக்கியமான முடிவெடுக் கணும். இன்னிக்கே டிசைட் பண்ணியாகணும். ராத்திரி எந்நேரம் ஆனால் கூட பரவாயில்லை. வழக்கமா நாங்க மீட் பண்ற இடத்துக்கு வரணும்னு மட்டும் சொல்லிடுங்க. ப்ளீஸ் அங்கிள் "
"கண்டிப்பா சொல்றேன்ப்பா "
ரிஸீவரைக் கீழே வைத்ததுமே அடுத்த அழைப்பு வந்தது. 
"அங்கிள் .. எங்கே அந்த ராஸ்கல் .. போன் போட்டா எடுக்கிறதில்லே. ராஜு வீட்டு பங்க்சனுக்குப்  போறது பத்தி பேசி முடிவெடுக்கணும். துரை வீட்டில் உட்கார்ந்து டீவீ பார்க்கிறாரா? "
"பேசறது சத்யாதானே ? அவன் வீட்டில் இல்லே.. வந்ததும் உன்னை வந்து பார்க்கச் சொல்றேன்"
"தேங்க்ஸ் அங்கிள் "
சோபாவில் வந்து சாய்ந்து உட்கார்ந்தார். மகனுக்கு வரும் அழைப்பு களும் அதற்க்கு அவர்கள் தரும் முக்கியத்துவமும் மகிழ்ச்சியைத் தந்தது வேல்முருகனுக்கு. சரவணனோடு பேசினால், சேர்ந்து விளையாடினால் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள் என்று அக்கம் பக்கத்தினர்  பயந்த "அந்த " நாட்களை நினைத்து இன்றும் கூட நடுங்கிப் போவார் வேல்முருகன். இன்று சரவணன் காதில் விஷயத்தைப் போட்டு விட்டால் போதும் நல்ல படியாக முடித்துத் தருவான் என்ற நிலை. எந்த நேரத்தில் எந்த வீட்டிலிருந்து சரவணனைப் பற்றிய புகார் வருமோ , எந்த போலீஷ்  ஸ்டேசனிலிருந்து அழைப்பு வருமோ என்று நினைத்து நெஞ்சு பதறிய நாட்களை நினைத்துப் பார்த்தார் வேல்முருகன். பையனுக்கு  நல்ல படியாக புத்திமதி சொல்லிப் பார்த்தாச்சு. மிரட்டிப் பார்த்தாச்சு. அடித்தும் பார்த்தாச்சு. எதற்குமே அடங்காத ஒரு நிலை. அவன் உடம்புக்குள் ஏதாவது பேய் பிசாசு புகுந்து கொண்டு அவனை ஆட்டிப் படைக்கிறதோ என்று பயந்த நாட்கள் எத்தனை. கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த டீச்சர் மீது காகித ராக்கெட் வீசியதால் பிரச்சனை பெரிதாகி  ஸ்கூலை விட்டு வெளியேறும் நிலை வந்த போது, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையைப் போட்டுக்கொண்ட வேல்முருகனை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரோடு  மீட்டுக் கொண்டு வந்ததோடு அல்லாமல்  பள்ளி நிர்வாகத்தி ட ம் அவனுக்காக வாதாடியது   ஸ்ரீராமின் அப்பாதான். " தீவிரவாதப் பிரச்சனைகளால் நாடு தடுமாறிப் போகிறது. அவர்களை நல்லதொரு குடிமக்களாக்க அரசாங்கம் முயற்சி எடுக்கிறது . பள்ளிப் படிப்பை பாதியிலேயே முடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள பையன் வருங்காலத்தில் அவனது தேவைகளுக்காகத் திருடுவான். கொலை கொள்ளைனு இறங்குவான். சந்தர்ப்பம் கிடைத்தால் தீவிர வாதக் கும்பலோடு சேர்ந்துட்டு என்னென்ன    அடாவடித்தனம் உண்டோ அத்தனையும் பண்ணுவான். நம்மாலே  ஒரு மனுஷ ஜென்மம் மிருகமாக மாற வேண்டாமே "  என்று சொன்னபோது " அவன் இப்பவே மிருகமாகத் தானிருக்கிறான்.இவனால் மற்றகுழந்தைகளும்கெட்டுப்போய்டுவாங்க " என்று பதில் சொன்னது பள்ளி நிர்வாகம்.
"இன்னும் ஒரே ஒரு மாசம் டைம் குடுங்க. அவனை நல்ல பையனாக மாற்ற முயற்சி பண்றேன். அப்படி முடியாதப்போ நானே அவனை ஸ்கூலில் இருந்து விலக்க கடிதம் குடுக்கிறேன் " என்று ஸ்ரீராமின் அப்பா சொன்னபோது அதை ஏற்றுக் கொண்டது பள்ளி நிர்வாகம்.
சரவணனை தனது வீட்டுக்கு வரவழைத்த ஸ்ரீராமின் அப்பா, " சரவணா நீ ஏன் இப்படியெல்லாம் பண்றே ? " என்று கேட்டபோது "அங்கிள் எனக்கு யார் மேலேயும் கோபம் கிடையாது . ஆனால் நான் என்ன செய்றேன்னு எனக்கே தெரியலே " என்றான் சரவணன் . அவனை அழைத்து சென்று மனோதத்துவ மருத்துவரிடம் காட்ட நினைத்த  ஸ்ரீராமின் அப்பா அதற்கு முன்பாக சுயமுயற்சியில் டெஸ்ட் பண்ணிப் பார்க்க விரும்பினார் . ஒருவனை நல்லவனென்று நம்புங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல் லாம் அவனை நல்லவனென்றே புகழ்ந்து கொண்டிருங்கள். அவன் கண்டிப்பாக ஒருநாள் நல்லவனாக மாறுவான்  என்று அவர்  எங்கோ எப்போதோ படித்தது நினைவுக்கு வர,"சரவணா உனக்கு என்னைப் பிடிக் கும்  தானே? எனக்கொரு கஷ்டம் வந்தால் நீ தாங்க மாட்டாய் தானே ? " என்று கேட்டபோது,"யாரையும் கஷ்டப்படுத்திப் பார்க்க என்னிக்கு மே  நான் நினைச்சது   கிடையாது  அங்கிள் " என்றான் சரவணன்.   
"உனக்காக நான் ஸ்கூலில் ப்ராமிஸ் பண்ணிட்டு வந்துட்டேன். உன்னை ஒரு நல்ல பையனாக மாற்றும் முயற்சியில் நான் தோற்றுப் போயிட்டா உங்க அப்பா சாப்பிட்ட மாதிரி நானும் தூக்க மாத்திரையைத் தான் சாப்பிடணும். எனக்கு ஒண்ணுன்னா ஸ்ரீராம் துடிச்சுப் போயிடுவான். அவன் உன் நண்பன்தானே. உன்னால் உன் நண்பனுக்கு ஒரு கஷ்டம் வரலாமா ? நீ நல்லவன் மாதிரி கொஞ்ச நாளைக்கு நடியேன். யாரும் கேட்காட்டாலும் கூட நீயே வலியப் போய் உன்னால் முடிஞ்ச சின்ன சின்ன உதவியை அவங்களுக்கு செய். முதலில் கொஞ்சம் கஷ்டமாகத் தெரியும். பிறகு அந்த நடிப்பு பழக்கப் பட்டுவிடும் " என்று ஸ்ரீராமையும் அருகில் வைத்துக் கொண்டு அவர் சொன்னபோது , ஸ்ரீராம் அதிர்ந்து போய் விட்டான்.  
சரவணன் அங்கிருந்து போனதும் " என்ன டாடி நீங்க ! நீங்க அட்வைஸ் பண்ணுவீங்கனு நெனைச்சேன் . நீங்க என்னடான்னா அவனை நல்லவன் மாதிரி நடிக்க சொல்றீங்க " என்று கேட்டான் ஸ்ரீராம் 
" நான் சின்ன வயசில் படிச்ச ஒருகதையை வச்சு இவனை டெஸ்ட் பண்ணிப் பார்க்க நினைச்சேன் "
" என்ன கதை டாடி ? "
"ரெண்டு பிரெண்ட்ஸ். ரெண்டு பேருமே திருட்டுப் பசங்க.கூட்டுக் களவாணிங்க . அந்த ஊரிலுள்ள ஒரு பெரிய  பணக்காரர் வீட்டில் திருட ப்ளான் போடறாங்க. அதற்க்கு முதல் படியாக, அவர்களில் ஒருத்தன் ரொம்ப நல்ல நாணயமான வேலைக்காரன் மாதிரி நடிச்சு அந்த வீட்டுக்குள் நுழையனுங்கிறது தான். இவங்க ப்ளான் போட்ட படியே எல்லாம் நல்லா நடந்தது. இவன் இல்லாமல் அந்த வீட்டில் எதுவும் இல்லைங்கிற நிலையை அவன் உருவாக்கி வச்சிட்டான். கொஞ்ச நாள் கழிச்சு இவனோட பழைய கூட்டாளி திரும்பி வர்றான். கைவரிசையை எப்போ காட்டலாம்னு இவனைக் கேட்க, " நீ சொன்னபடி நல்லவன் மாதிரி நடிக்கத்தான் நான் வந்தேன். நடிச்சேன். என்னை எல்லாரும் நம்பினாங்க.நல்லவனாக நடிப்பதிலேயே இவ்வளவு சுகமும் மரியாதையும் இருக்கிறதே. அப்படியிருக்க நிஜமாகவே  நல்லவனாக வாழ்வதில் என்னவொரு சுகம் இருக்குங்கிறதை நான் இப்போ தெரிஞ்சு கிட்டேன். என்னால் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாதுன்னு சொல்லி விடுகிறான். அதை வச்சுதான் நான் இப்போ சரவணனையும் நடிக்கும்படி  சொல்றேன் "
"என்னவோ டாடி. ரிசல்ட் நல்லா வந்தால் சரிதான் " என்றான் ஸ்ரீராம்.
ஆறுமாத காலத்துக்குள்ளாகவே  திறம்பட நடித்து எல்லார் மனசிலும் இடம் பிடித்து விட்டான் சரவணன். அவன் கல்லூரிப் படிப்பை முடிக்கும் நேரத்தில்தான் மலேசியாவிற்கு இடம் பெயர்ந்தது  ஸ்ரீராமின் குடும்பம். இப்போது பிசினசிலும் கால் பதித்து விட்டான் சரவணன்.
வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்டது. ஸ்ரீராமின் அப்பாவை அழைத்து வந்திருந்தான் சரவணன்.
வந்தவர் காலில் விழுந்து வணங்காத குறையாக அவரை வரவேற்றார் வேல் முருகன், வழக்கமான உபசரிப்பு, நலன் விசாரிப்பு எல்லாம் முடிந்ததும், பெட்டியைத் திறந்து, அவர் கொண்டு வந்திருந்த பொருட்களை ஒவ்வொருவரிடமும் கொடுத்தார்  ஸ்ரீராமின் அப்பா.
ஒரு கவரை எடுத்து சரவணனிடம் நீட்டியபடி " பாரின் சரக்கு. நீயும் பிரெண்ட்ஸ்ம்  சேர்ந்து எஞ்சாய்  பண்ணுங்க " என்றார் 
"அங்கிள் நான் இதையெல்லாம் கண்ணால் கூடப் பார்த்ததில்லை. என்னோட பிசினெஸ் பார்ட்னர்ஸ் கிட்டேயும் இதைப் பத்தி ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லியிருக்கிறேன்" என்றான் பதற்றத்துடன்.
"பார்த்தியா, இதைத்தான் தீட்டின மரத்திலேயே கூர் பார்க்கிறதுன்னு சொல்றது.நல்லவன் மாதிரி நடின்னு நான் சொன்னது வாஸ்தவம்தான் . அதற்காக எங்கிட்டேயே உன் நடிப்புத் திறமையைக் காட்டறியா ? படவா  ராஸ்கல் " என்று சிரித்துக் கொண்டே ஸ்ரீராமின் அப்பா   சொல்ல, ஒட்டு மொத்தக் குடும்பமும் நொறுங்கிப் போனது அங்கே.        

No comments:

Post a Comment