Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 18, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 111 )

                                          அம்மா என்றால் .... ?!
"இதோ பாருங்க, உங்க மனசிலே ஆயிரம் வருத்தம் இருக்கலாம். அதற்க்கான காரணம் நியாயமானதா இருக்கலாம். அதையெல்லாம் அனலைஸ் பண்ணிப் பார்க்க இது  நேரம் இல்லே. இறந்து போனது உங்க அம்மாங்க. உங்க காதுக்கு நியூஸ் வந்தாச்சு. நீங்க வரணும்னு உங்க அப்பா எதிர் பார்க்கிறார்ங்கிறதும் இப்போ  தெரிஞ்சு போச்சு. பிறகு எதுக்கு இத்தனை பிடிவாதம் ... அம்மா .."
"போதும் நிறுத்து ... அம்மா .. அம்மா .. அம்மா .. அம்மான்னு சொன்னால் அன்புன்னு காகிதங்கள்தான் சொல்லுது. என்னோட டிக்ஸனரியில் அம்மா என்றால் அகம்பாவம் .. அம்மா என்றால் ஆணவம் .. அம்மா என்றால் அடங்காப் பிடாரித் தனம் "
"இவ்வளவுதானா, இன்னும் இருக்கா ? " என்று அமைதியாகக் கேட்டாள் ரேவதி.
"ஏண்டி உனக்கு அறிவே கிடையாதா ? ஊரே பார்த்து சிரிக்கும்படி நம்ம ரெண்டு பேரையும் செருப்பால் அடிக்காத குறையாக வீட்டு நடை ஏற விடாமல் செஞ்சது உனக்கு மறந்து போச்சா ? ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தப்போ போறவன் வர்றவன் எல்லாம் நம்மளப் பார்த்து நக்கலா சிரிச்சதும் கண்ணடிச்சுப் பேசினதும் மறந்து போச்சா. சுரேஷ் தயவாலே ஒரு வாரத்துக்குள் நமக்கு டில்லிக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சது. தமிழ் நாட்டுக்கு ஒரு முழுக்குப் போட்டுட்டு இங்கே கௌரவமா காலம் தள்ளறோம். சுரேஷ் மட்டும் இல்லைனா 'காதல் ஜோடி தற்கொலை ' லிஸ்டில் நம்ம பேரும் சேர்ந்திருக்கும் " என்றான் சந்தோஷ் வெறுப்பாக.
"சுரேஷ் ஸார் மேலே இவ்வளவு மரியாதை வச்சிருக்கீங்களே ... அந்த சுரேஷ் ஸார்தான் இப்போ அம்மா இறந்த தகவலை  சொல்லி ஒரு முறை வந்து போன்னு சொல்றார்.. அவர் பேச்சுக்கு நாம மரியாதை குடுக்கணும்தானே.. ட்ராவெல் பண்ற நிலையில் நான் இருந்தால் இப்படி உங்களை போக சொல்லி கெஞ்சிகிட்டு இருக்க மாட்டேன். ' வாங்க போகலாம்'ன்னு சொல்லிஇருப்பேன். நம்ம  மாரேஜ்  முடிஞ்சு செவன் இயர்ஸுக்குப் பிறகு கன்சீவ் ஆகியிருக்கிறேன். லோக்கல் ஜானி கூட கூடாதுன்னு டாக்டர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்கிறப்போ, டில்லியிலி ருந்து சென்னை, அங்கிருந்து மதுரை போறது பற்றியெல்லாம் யோசிக்க வே முடியாது. என்னைத் தனியா விட்டுட்டுப் போறது பத்தியெல்லாம் நீங்க கவலையே படவேண்டாம். அக்கம் பக்கத்தில் உள்ளவங்க என்னை நல்லபடியா  கவனிச்சுப்பாங்க .. நீங்க கிளம்புங்க ".
எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான் சந்தோஷ். தனக்குள் ரேவதி சிரித்துக் கொள்வதைக் கவனித்த சந்தோஷ், " என்ன .. ? உனக்கும் என் பொழைப்பு வேடிக்கையா இருக்கா ? " என்று எரிந்து விழுந்தான்.
"ஐயய்யோ .. அதெல்லாம் இல்லை. இப்படியொரு சம்பவம் நடந்து அந்த விஷயம் ஒரு மகனுக்குத் தெரியவரும்போது, தாயைப் பார்க்க அவன் பதறிப் போய்க் கிளம்புவான். நம்ம உறவே வேண்டாம்னு சொல்லி ஒதுக்கி  வச்ச உங்க அம்மாவைப் போய்ப் பார்த்துதான் ஆகணுமானு கேட்டு அவன் கட்டிக்கிட்டு வந்த பொண்டாட்டி சண்டை போடுவா . நம்ம வீட்டில் அது தலைகீழா இருக்கேன்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிச்சேன் வேறே ஒண்ணுமில்லே "
"பொம்பளைங்களை வெறுக்கிற ஆம்பளைங்க இருக்கிறாங்க. சகோதரி யை மனைவியை வெறுக்கிற ஆம்பளைங்க இருக்கிறாங்க. ஒரு மகன் பெத்த தாயை வெறுக்கிறான்னு சொன்னா, அதிலிருந்தே அந்த தாய் எப்படிப் பட்டவளா இருந்திருப்பாங்கிறதை  கொஞ்சம் நினைச்சுப் பாரு. பொதுவா மனுஷ ஜென்மங்க உடம்பில் எலும்பு, நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம்னு இருக்கும். எங்க அம்மா உடம்பு பூரா திமிர், அகம்பாவம், ஆணவம்.. மத்தவங்க மனசை நொறுக்கிப் பார்ப்பதில் எங்க அம்மாவுக்கு ஈடு இணையே கிடையாது. உறவுகளை எங்களிடம் நெருங்க விட்டதே இல்லை . நல்லது கெட்டதை பிரித்துப் பார்க்கும் விவரம் எனக்கு தெரிய வந்த வயதில், இந்த மாதிரி ஒரு அம்மாவோடு அப்பா எப்படி மகிழ்ச்சியாக  இருக்கிறார்னு நினைச்சு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். காலேஜில் படிக்கிற காலத்தில் சங்கோஜத்தை விட்டுட்டு இது பற்றி அப்பாகிட்டே பேசியிருக்கிறேன்.'நான் பெத்த மகனே.. சந்தோசமான நல்லதொரு இல்வாழ்க்கையின்  ரகசியமே 'அடக்கு அல்லது அடங்கு ' என்பதில் தான்இருக்குது. ஆரம்பத்தில் அவளைக் கண்டிச்சுப் பார்த்தேன். விளைவு விபரீதமா போச்சு. குடும்ப விஷயம் சந்தி சிரிக்கக் கூடாதே என்கிற பயத்தில்  அவ போக்கில் விட்டுப் பிடித்தேன். அதுக்குப் பிறகு இந்த அடிமை வாழ்க்கை எனக்குப் பழகிப் போச்சு. உங்க அம்மா கெட்டவ இல்லேடா. ஈகோ பிடிச்சவ. " தான் " என்கிற அகந்தை தலைக்கேறிக் கிடக்கு.எந்த விஷயத்திலும் எதற்காகவும் மத்தவங்களை சார்ந்திருக்கக் கூடாது  என்கிற வைராக்கியம் இருக்கு. அது நல்ல விஷயந்தான். ஆனா அதை அவ ஹாண்டில் பண்ற முறைதான் தப்பு. சந்தோஷ் நீயே கவனிச்சிருப்பே, " பெர்த் டே " ன்னு சொல்லி உன்னோட பிரெண்ட்ஸ் ஸ்வீட்  தரப்போ, அந்த ஸ்வீட்டை அவ வாங்க மாட்டா. ஆனா கிப்ட் குடுப்பா. குழந்தைங்க மனசு நோகுமே, அவங்க குடுக்கிறதை வாங்கினா என்னனு நான் கேட்கும்போதெல்லாம்  'என்னோட கை, எப்பவும் குடுக்கிற கையா இருக்கணும். எதையும் யாரிட்டே இருந்தும் வாங்கிற கையா இருக்கக் கூடாதுன்னு  சொல்லுவா. அவளை சுத்தி அவளே ஒரு வட்டம் போட்டுக்கிட்டு தான் செய்றது எல்லாமே சரின்னு நினைச்சி கிட்டு தன்னையும் படுத்திகிட்டு மத்தவங்களையும் படுத்தறாடா .  நாய் வாலை நிமிர்த்த முடியாது . பிறவிக் குணத்தை மாத்த முடியாதுனு அப்பா சிரித்துக் கொண்டே சொல்வதைப் பார்த்து நான் ஆச்சரியப் படுவேன். அம்மா பண்ணின எத்தனையோ விஷயங்களை அப்பாவைப் போலவே நானும் சகிச்சுப் போயிருக்கிறேன். என்னோட பிரெண்ட்ஸ் க்கு  கிடைச்ச மாதிரி எனக்கு நல்ல அம்மா கிடைக்கலே. மனைவி யாவது என் மனசுபோல அமையணும்னு பல வருஷம் தேடித்தேடி அலைஞ்சு  உன்னைக் கண்டு பிடிச்சேன். அதற்கு அம்மா நடந்து கொண்ட விதம்  நான் சாகும் வரை என் மனசை விட்டுப் போகாது. எந்தக் காரணம் கொண்டும் அம்மாவை மன்னிக்கவும்  செய்யாது "
"சந்தோஷ் இப்போ நீங்க சொல்ற எல்லாமே, ஏழு வருஷமா நான் கேட்கிற  வழக்கமான புலம்பல்தான். அவங்க செஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்காக அம்மா சாவுக்குக் கூட வராத மகன்கிற பேரை நீங்க வாங்கிக்க வேண்டாம். எழும்புங்க ... கிளம்புங்க .. ப்ளைட்டோ , ட்ரைனோ எது எதைப் பிடிச்சு எப்படி போக முடியுமோ அப்படிப் போய்ச் சேருங்க. உங்க ப்ரெண்ட் ஷர்மாவை  வர சொல்லியிருக்கிறேன். உங்க ட்ராவல்க்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் அவர் பார்த்துப்பார். சுரேஷ் ஸாருக்கு  போன் பண்ணி நீங்க வர்ற விஷயத்தை சொல்லிடறேன் . க்விக். கெட் ரெடி " என்று அவசரப் படுத்தினாள் ரேவதி.
டில்லியில் ப்ளைட் பிடிச்சு வீடு வந்து சேர்ந்ததெல்லாம் தனிக் கதை. மகனின் வரவுக்காக  ஐஸ் பெட்டியில் அசையாமல் படுத்திருந்த அம்மா எந்தவொரு பதட்டத்தையும் சந்தோஷிடம் ஏற்படுத்தவில்லை. கூடி நின்ற உறவுகளும் அப்பாவும் சந்தோசைக் கண்டதும் பெருங்குரலெடுத் து அழுதபோது கூட அது சந்தோஷிடம் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. "டேய் .. வாய் விட்டு அழுதுவிடு. துக்கத்தை மனசிலே போட்டு பூட்டி வைக்காதே " என்று காதோரம் கிசுகிசுத்த சுரேஷிடம் " அம்மாவின் இழப்பு என்னிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாத போது நான் ஏன் அழுது டிராமா போடவேண்டும் " என்று கேட்டான் சந்தோஷ் .
அம்மாவின் உடல் கடைசி பயணத்தைத் தொடர்ந்தபோது ஒப்புக்காக ஊர்  கூடி அழுத போது, சந்தோசின் கண்கள் கண்ணீரை வெளியில் விடவில்லை. சிதையில் உடம்பு எரிந்தபோது எந்த சலனமும் இல்லாமல் அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ் . அம்மாவிடம்  சந்தோஷ் பட்ட அவமானம் இன்னும் நிழல் படமாக அப்பாவின் மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்ததால்,சந்தோஷின் மௌனத்திலிருந்தே  அவன் மன வேதனையைப் புரிந்து கொண்ட அப்பா , அவனருகில் வந்து தோளைத் தட்டி ' வா போகலாம் .. எல்லாம் ,, எல்லாமே  முடிஞ்சு போச்சு ' என்றார்.
அங்கிருந்த குளத்தில் குளித்துவிட்டு நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை யைப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வருகின்ற  வழியில், அங்கிருந்த பிள்ளையார் கோவிலை அவன் கண்கள் எதேச்சையாக ஏறிட்டுப் பார்த்தன. இதே பிள்ளையார் கோவிலின் வாசலில் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய நாட்கள் ஏராளம். பிள்ளையார் கோவில் வாசலில் யாரோ சிதற விட்ட தேங்காய்க்காக  சிறுவர்கள் கூட்டம் முந்தியடித்துக் கொண்டு  தரையில் விழுந்து புரண்டு கொண்டிருந்தது.
தேங்காய் ... தேங்காய் .. சிதறு தேங்காய் ...
" சந்தோஷ் இந்தாடா தேங்காய் " என்று உடைந்த தேங்காய் துண்டு களை அம்மா  நீட்ட, " ஏதும்மா ..  மண்ணைக் கழுவிக் கொண்டு வந்தியா. எதையும் ஒண்ணுக்கு ரெண்டுமுறை அலசிப் பார்த்து வாங்கிற ஆளாச்சே நீ . அப்படியிருக்க வாங்கும் போதே பார்த்து வாங்காமல் ... ச்சே .. மண்ணில் விழுந்து கழுவி எடுத்த மாதிரி ... என்னம்மா இது ? " என்று கேட்ட சந்தோஷிடம் " இது கடையில் வாங்கினதில்லேடா . பிள்ளையார் கோயில் வாசலில் பொறுக்கி எடுத்தது. அப்பப்பா ,, பொடிப் பசங்க என்னை எடுக்க விடாமே  கீழே தள்ளப் பார்த்தாங்க .. நான் விடலியே. கை நிறைய பொறுக்கி எடுத்துட்டுதானே நான்  அங்கிருந்து நகர்ந்தேன் " என்ற அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்த சந்தோஷ் " அம்மா என்ன சொல்றீங்க ? நீங்க தேங்காய் .. அதுவும் தெருவில் விழுந்த தேங்காய்  .. அதைப் பொறுக்கி எடுத்தீங்களா ? என்னம்மா ஆச்சு உங்களுக்கு ? " என்று பதறிப் போய்க் கேட்க, " அன்னிக்கு நீயும் உன்னோட பிரெண்ட்ஸ்ம் பேசிக் கிட்டிருந்தது என் காதில் தற்செயலா விழுந்தது. அப்போ நீ ' காசு கொடுத்து நாம எத்தனை பொருளை வாங்கினாலும்  அது தராத சந்தோசத்தை பிள்ளையார் கோயில் வாசலில் நாம பொறுக்கி எடுக்கிற தேங்காயும், யாரோ ஒருத்தர் வீட்டு வாசலில்  காய்ந்து கொண்டிருக்கும் கூழ் வடகமும் தருதே .. அது ஏன்டா' ன்னு நீ கேட்டே . ஸ்டார் கணக்குப்படி இன்னிக்கு உனக்கு பெர்த் டே. அதை நான் சொன்னா நீ ஒத்துக்க மாட்டே. பிறந்த ட்டேட் எதுவோ அதில் தான் கொண்டாடணும்னு நீ சொல்வே. உன் பேருக்கு அர்ச்சனை பண்ண கோவிலுக்குப் போனேன். அங்கே யாரோ சிதறு தேங்காய் விட்டாங்க. உனக்குப் பிடிக்கும்னு நீ சொன்னது நினைவு வந்தது. உன் பெர்த் டே க்கு  அம்மாவோட பிரசெண்ட் இது. கீழே விழுந்ததில் கை முட்டியில் காயம் பட்டுட்டுது " என்று சொல்லிக் கொண்டே அம்மா அங்கிருந்து நகர்ந்தது  நிழல் படமாக கண் முன்னே ஓடியது. கை நீட்டி எதையும் மற்றவர்களிடம் இருந்து வாங்குவது  கௌரவக் குறைச்சல் என்று நினைக்கும் அம்மா, மகனின் ஆசைக்காக தெருவில் நின்று தேங்காய் பொறுக்கி வந்ததை, அதை .. பெருமையாக நினைத்த அம்மா ... " அம்மா " என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான் சந்தோஷ். எந்த விவரமும் அறியாமல் உடன் வந்தவர்கள் ஸ்தம்பித்துப்போய் நின்றனர். "ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளுக்காக எதையும் செய்வாள். அதனால்தான் பெண்கள் செய்யும் தவறுகள், அவர்களை தாய் என்ற ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும்போது மன்னிக்கப் படுகின்றன "  என்ற எப்போதோ எங்கோ படித்த வரிகள்  அவன் நினைவுக்கு வந்தன. " அம்மா நீ எனக்கு மகளாகப் பிறக்கணும்.என் ஆசை  பாசம் நேசம் எல்லாத்தை யும்  முழுசையும் கொட்டி நான் உன்னை வளர்க்கணும்.. நீ எனக்கு மகளா வரணும் " நேரமாக ஆக சந்தோஷின் அழுகுரல் சத்தம் மட்டும் அதிகமாகிக் கொண்டே இருந்தது    

No comments:

Post a Comment