Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 26, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 112 )

                            தெரிந்த மிருகம் மறைந்த மனிதம் !!
விஷயத்தைக் கேள்விப் பட்டதிலிருந்து ஜெகநாதன் மனதில் இனந் தெரியாத பரபரப்பு. " நிஜமாவா ? " என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். தெருவில் வருவோர் போவோரை நிறுத்தி," ஸார், உங்களுக்கு கணேசனைத் தெரியும்தானே ? கறுப்பாக் குள்ளமா கத்திரிக்காய்க்கு கைகால் முளைச்ச மாதிரி இருப்பாரே, அதே கணேசன்தான். அவர் நேத்து ராத்திரி செத்துப் போயிடாராம் " என்று கேட்க, அவர்கள் இவரை 'ஒரு மாதிரி'யாகப் பார்த்து விட்டுப் போனார்கள்.
"அப்பாக்கு என்னம்மா ஆச்சு ? " என்று கேட்ட பார்த்திபனிடம். " உனக்கு ஆபீசுக்கு நேரமாகப் போகுது. நீ கிளம்பு. யாரிட்டேயாவது ரெண்டு வாங்கினா தான் உள்ளே வந்து உட்காருவார் " என்றாள் கௌரி 
"யாரும்மா அந்த கணேசன் ?"
"ஒரு சமயம் நமக்கு பக்கத்து வீட்டுக் காரரா இருந்தார். பிறகு தாம்பரம் பக்கம் வீடு கட்டிட்டுப் போயிட்டார். அவரோட வொய்ப் ஏதோ ஒரு கவர்மெண்ட் ஆபீசில் வேலை பார்த்திட்டுருந்தா. மாலதின்னு பேரு . ரெண்டு குழந்தைங்க அவங்களுக்கு ..."
"அம்மா எனக்கு ஒரு விஷயம் இப்போ தெரிஞ்சாகணும்... அப்பா சொல்றாரே ... அதான் ... அந்தக் கணேசன், அவர் போனதை நினைச்சு இவர் சந்தோசப் படறாரா இல்லே வருத்தப் படறாரா ?"
"சந்தோசப் படறார் "
"என்னம்மா சொல்றீங்க .. ஒருத்தர் சாவு மத்தவங்களுக்கு சந்தோசம் தருமா என்ன ? "
"மத்தவங்களைப் பத்தி நான் பேசத் தயாரில்லே..ஆனா இந்த மனுஷன் போய்  ச் சேர்ந்ததுக்காக தீபாவளியே கொண்டாடலாம் "
"ச்சே .. என்னம்மா இது ! அப்பாதான் அப்படின்னா நீங்களுமா ?"
"ஒருத்தர் பிரிவை நினைச்சு மத்தவங்க சந்தோசப் படறதை வச்சே பிரிஞ்சு போன ஆத்மா எவ்வளவு நல்ல ஆத்மான்னு நீ புரிஞ்சுக்கலாமே "
"இது டூ மச்"
"அந்த ஆளைப் பத்தி நீ தெரிஞ்சு வச்சிருந்தா இப்படிப் பேசமாட்டே. உங்க அப்பா பண்ற மாதிரி தெருவில் நின்னு கூத்தடிப்பே "
"அப்படி என்னதான் பண்ணினார் அந்த ஆளு ?"
"சுய புத்தி இல்லாத சொல் புத்தியும் கேட்காத ஜென்மம் அந்த ஆளு.. அதான் அந்தக் கணேசன். இவனைப் பத்தி அக்கம் பக்கத்திலே சரியா விசாரிக்காமே தன்னோட பொண்ணைக் கட்டிக் குடுத்திட்டான் ஒரு புண்ணிய வாளன். அந்தப் பொண்ணையும், அவளைப் பெத்த புண்ணியவாளனையும் 'ஒருவழி '
பண்ணிட்டான் இந்த ஆளு. பறவைகள் மிருகங்களுக்குக் கூட பாச உணர்ச்சி இருக்கும். அப்படி எந்தவொரு உணர்ச்சியுமே இல்லாத மரக்கட்டை அவன் . வீட்டைக் கவனிக்காமே வெளியில் ' வெட்டி பந்தா ' காட்டிகிட்டு சுத்திகிட்டு இருப்பான்.அந்தப் பொண்ணோட சம்பாத்தியத்தையும் பிடுங்கிட்டுப் போயிடு வான். ஏதாவது அடாவடி பண்ண வேண்டியது . எதற்க்கெடுத்தாலும் கோர்ட் கேஸ்ன்னு அலைய வேண்டியது. கீழ்க்  கோர்ட்டில் தோற்றால் மேல் கோர்ட்டில் போய்ப்பார்ப்பேனு வாய்ச்சவடால் விட்டுகிட்டு வக்கீலுக்கு பணத்தை வாரி இறைக்க  வேண்டியது. வீட்டு செலவுக்கு பணம் குடுக்கிறது கிடையாது . ரெண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க அவ பட்ட கஷ்டம் இருக்கே, வெறும் வார்த்தையில் சொல்லி மாளாது. நம்ம பக்கத்து வீட்டில் அவன்  குடியிருக்கிறப்போ, அவன் அடிக்கிற ரகளையைப் பார்த்திட்டு, உங்க அப்பா, "அந்த ராஸ்கலை வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிடலாம் போலிருக்கு"ன்னு சொல்வார். அந்தப் பொண்ணு நல்ல லட்சணமா இருப்பா. இவனுக்குக் கொஞ்சம் கூட பொருத்தமோ தகுதியோ இல்லாத ஜென்மம் அவன். ஒரு பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது அவன் நல்லவனா கெட்டவனான்னு மனசைக் கீறிப் பார்க்க முடியாது. வெளித் தோற்றப் பொருத்தத்தை ஈசியாக் கண்டு பிடிக்கலாமே. அந்த அளவுக்குக் கூட மண்டையிலே மசாலா இல்லாமல் இவனுக்கு எப்படித்தான் பொண் கொடுத்தாங்களோனு  நான் நிறைய தடவை யோசிச்சிருக்கிறேன்" என்று கௌரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, " வா கௌரி, நாம போயிட்டு வந்திடலாம். அவனுக்காக இல்லே , அந்தப் பொண்ணோட குணத்துக்காக. பாவம் இத்தனை வருஷத்துக்குப் பிறகாவது அதுக்கு ஒரு விமோசனம் கிடைச்சுதே " என்று ஜெகநாதன் சொல்ல, மறுபேச்சு பேசாமல் கிளம்பத் தயாரானாள் கௌரி.   
கணேசனின் கடைசிப் பயணத்திற்கான ஏற்பாட்டை வீட்டு வாசலில் சிலர் கவனித்துக் கொண்டிருக்க, அவர்களைக் கடந்து ஜெகநாதனும் கௌரியும் வீட்டுக்குள் சென்றார்கள். இவர்களைப் பார்த்ததும் " என்னையும் என்னோட குழந்தைகளையும் இப்படி அனாதையாக்கி விட்டு இந்த மனுஷன் நிம்மதி யாப் போயிட்டாரே ஸார் " என்று மாலதி சொல்ல, அதிர்ந்து போனார்கள் இருவரும்.ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. மாலதியின் துடிப்பு வெறும் நடிப்பாகத் தெரியவில்லை.
"அக்கம்பக்கத்து வீட்டு ஆட்களிடம் ரொம்ப மரியாதையா பேசுவார். எப்பவாவது  குடிச்சிட்டு காம்பௌண்டுக்குள் நுழைவார். அப்படி மப்பில் இருக்கும் போதும் கூட  எந்தப் பொம்பளையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார். எதிரே யாராவது பொம்பளைங்க வந்தா ஒதுங்கி நிற்பார்" என்று ஒரு பெண் சொல்ல, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையசைத்தார்கள்.
"வீட்டு வேலை செய்றவங்க, பூக்காரியைக் கூட ' நீங்க, நாங்க'ன்னு மரியாதை குடுத்துதான் பேசுவார்" என்று ஒரு பெண் சொன்னதும் மாலதியின் அழுகை அதிகமானது  
"என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் அவர் ஏறெடுத்துப் பார்த்தது கூட கிடையாது. இந்தப் பிள்ளைகளுக்காகத் தானே நான் என் உயிரை வச்சு கிட்டு இருக்க வேண்டியதாப் போச்சு. இதுங்க இல்லாட்டா நானும் உயிரை விட்டுருப்பேனே  " என்றாள் மாலதி.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு சிறிது நேரம் அங்கு நின்று கொண்டிருந்த ஜெகநாதனும் கௌரியும் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து  வெளியேறினார்கள்.
"என்னங்க , எதுவும் பேசாமே அமைதியா வர்றீங்க " என்று கேட்டாள் கௌரி அங்கிருந்த மௌனத்தைக் கலைக்க நினைத்து.
"சில விஷயங்கள் நமக்கு பலநாள் கழித்துதான் புரிகிறது. கணேசனுக்கு எல்லா வசதியும் இருந்துது. வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிற அளவுக்கு சொத்தும் இருந்துது. இருந்தாலும் பெண்டாட்டி சம்பாத்தியத்தையும் பிடுங்கிக் கொண்டு அவளைப் பாடாய்ப் படுத்தினார். கையில் ரெண்டு காசு இருந்தாலே உடம்பு தினவெடுத்து பொம்பளைங்க கிட்டே வம்புக்கு அலையறவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க . இவர் அந்த விஷயத்தில் யோக்கியன் என்று பொம்பளைங்களே செர்டிபிகேட் குடுக்கிறாங்க. வீடு நிறைய வசதி, நல்ல ஒழுக்க குணம் இருந்தும் அந்த ஆள் ஏன் அப்படி பொண்டாட்டி பிள்ளைங்க கிட்டேவெறிபிடிச்ச  பைத்தியக்காரன், சைக்கோ மாதிரி நடந்துகிட்டான்னு  யோசனை பண்ணிகிட்டே வர்றேன் "
"எங்க சின்ன தாத்தா, அதான் ... கோயிலில் உபன்யாசம் பண்ணுவாரே அந்த ராமுத் தாத்தா  அடிக்கடி சொல்வார் - 'உலகத்தில் முழுக்க முழுக்க நல்லவன்னு எவனும் கிடையாது.முழுக்க முழுக்க கெட்டவனும் கிடையாது. எப்பேர்ப் பட்ட  நல்லவன்கிட்டேயும் ஏதோ ஒரு கெட்ட குணம்  இருக்குது .  எந்தவொரு கெட்டவன் கிட்டேயும் ஏதோ ஒரு நல்ல குணம் இருக்கத்தான் செய்யுது. தெய்வப் பிறவி ராமன்.சலவைத் தொழிலாளி ஏதோ சொன்னாங்கிறதுக்காக கட்டின பெண்டாட்டியை காட்டுக்கு அனுப்பினான்,அதுவும்அவ கர்ப்பமா இருந்த நேரத்திலே . அவனோடு சேர்ந்து சுகவாழ்க்கை வாழ அவன் பொண்டாட்டி பிள்ளை களால் முடியலே. அடாவடிப் பேர்வழி அந்த துரியோதனன்.. எந்தவொரு சூழ்நிலையிலும்...சந்தேகத்தை உண்டு பண்ற சூழ்நிலையில் கூட அவன் தன்னோட மனைவியையும் நண்பனையும் சந்தேகப்படலியே. யாரை யாவது நல்லவன் இல்லாட்டா கெட்டவன்னு நாம முடிவு பண்ணினா அது நம்மோட முட்டாள்தனம்தான்.  நல்லவன் கண்ணுக்கு எல்லாமே நல்லதாத் தெரியுது. கெட்டவன் கண்ணுக்கு எல்லாமே கெட்டதாத் தெரியுதுன்னு தாத்தா சொல்வார். கணேசன் ஸார் அடிச்ச லூட்டியை, அடிச்ச ரகளையை பூதக் கண்ணாடியில் வச்சுப் பார்த்த நாம, அவர்கிட்டேயிருந்த நல்ல விஷயங்களை  தராசில் வச்சுப் பார்க்க மறந்து போயிட்டோம் " என்று கௌரி சொன்னதை கேட்டுக் கொண்டே நடந்த ஜெகநாதன் அதன்பிறகு கணேசனைப் பற்றி வாயைத் திறந்து எதுவுமே பேசவில்லை. 

No comments:

Post a Comment