Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 09, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 113)

                                             உறவும் நட்பும் !
"டாடி, எனக்கு இந்த அலையன்ஸ் வேண்டவே வேண்டாம். இந்த உலகத்தில் இவங்க ஒருத்தங்கதானா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க. ஒரே ஒரு " ஆட் " கொடுத்தால் நம்மளத் தேடி மத்தவங்க வரப் போறாங்க. என்னவோ ஊர் உலகத்தில் இல்லாத குதிரைக் கொம்பு மாதிரி அவங்க அலட்டிக்கிறாங்க. நீங்க அவங்க காலில் விழாத குறையாக சேவகம் செய்றீங்க "
"ராதா. ப்ளீஸ் ஸ்டாப் யுவர் நான்சென்ஸ். கல்யாணப் பெண்ணா லட்சணமா இல்லாமல் என்ன பேச்சு பேசறே ?" என்று மகளைக் கடிந்து கொண்டார் செல்வரங்கன் .
"அவ சொல்றதில் என்ன தப்பு இருக்கு ? பொறுமைக்கும் ஒரு அளவு உண்டுங்க. நாம என்ன விலை போகாத சரக்கையா நம்ம  கையில் வச்சிருக்கோம் ? நம்ம கையில் இருக்கிறது கறவை மாடுங்க. மாசம் அம்பதாயிரம் சம்பாதிச்சுக் குடுக்கிற மாடு " என்று மகளுக்காக பரிந்து பேசிய மீனாவை பொசுக்கி விடுவது போலப் பார்த்தார் செல்வரங்கன்.
"அங்கிள், எங்க டாடி உங்க ப்ரெண்ட். நீங்க அதை மனசில் வச்சுக்காமே ஒரு மூணாவது மனுஷனைப் பார்க்கிறதா நினைச்சுகிட்டு தீர்ப்பு சொல்லுங்க. நானும் மம்மியும் பேசினதில் என்ன தப்பு ?" என்று ராபர்ட்டிடம் கேட்டாள் ராதா.
"நீங்க சொல்றதும் நியாயம். உங்க அப்பா கவலைப்படுவதும் நியாயம். நமக்கு நியாயமா தெரியிற ஒண்ணு மத்தவங்களுக்குத் தப்பா படுமே. ஒரு கல்யாணப் பொண்ணு இப்படிப் பேசினான்னு பையன் வீட்டுக்குத் தெரிஞ்சா அதற்கும் சேர்த்து  பெனால்ட்டி மாதிரி இன்னொரு இரண்டு லட்சத்தை வரதச்சனையில் ஏத்திடப் போறாங்கம்மா " என்று சொல்லி சிரித்தார் ராபர்ட்.
"அங்கிள், இந்த அலையன்ஸ் பிக்ஸ் ஆன நாளிலிருந்து, ' இனிமே அதுதான் உன்னோட குடும்பம். எது சொன்னாலும் சரிசரின்னு தலையை மட்டும் ஆட்டி அவங்க   சொல்ற வேலையை மட்டும்  செய்யணும். ஏன் எதுக்குன்னு எந்தவொரு ஆர்க்யூவும்   பண்ணக் கூடாது. அவங்க கிட்டே எந்த ஒளிவு மறைவும் வேண்டாம். எங்களுக்குக் குடுக்கிற அதே மரியாதையை அங்கேயும் காட்டணும்னு கீறல் விழுந்த டேப் ரிகார்ட் மாதிரி சொல்லிட்டு இருக்கிறாங்க. அவங்க கேட்ட எதையும் அப்பா மறுக்கலே. அதிகமாகவே செய்றார். ஏதோ பேச்சு வாக்கில் அவங்க கிட்டே 'என் பொண்ணு சம்பாதிச்சுக் கொடுத்த மூணு லட்சத்தை பிறகு அவளுக்கே குடுத்திடுவேன்'னு ஒரு வார்த்தை விட்டுட்டார்.அதைக் கல்யாணப் பந்தலிலேயே கொடுக்கணும்னு சொல்றாங்க. அந்தப் பணத்தை அப்பா ஆல்ரெடி ஸ்பென்ட் பண்ணிட்டார். பட்ஜெட் போட்டு எல்லா செலவும் போக எமெர்ஜென்சிக்காக ஒரு லட்சம் மட்டும் கையில் வச்சிருக்கார். இப்போ மேற் கொண்டு இரண்டு லட்சத்துக்கு எங்கே போவார் ? மாமாகிட்டே, அதான் மம்மியோட அண்ணா கிட்டே கேட்டுப் பார்த்தாச்சு . மல்டி மில்லியனர் அவர்.ரொம்ப லாசில் அவர் பிசினெஸ் போற மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்றார். அவர் ஆசை அதுன்னா கடைசியில் அது அப்படித்தான் ஆகப் போகுது. பணம் அதுவும் மூணு  லட்சம், இன்னும் மூணு நாளைக்குள் புரட்டறதுன்னா அது முடியற காரியமா அங்கிள் . இந்த மாதிரி என்னோட பேரெண்ட்ஸ்க்கு டார்ச்சர் குடுக்கிற குடும்பத்தை நான் எப்படி என் குடும்பமா நினைக்க முடியும் ? .......
செல்வரங்கன் முறைத்துப் பார்ப்பதைக் கண்ட ராதா வாயை மூடிக் கொண்டாள்.
"மீனா, காப்பி கொண்டு வா. ராதா நீ போய் ராபர்ட் சாப்பிட சப்பாத்தி ரெடி பண்ணு "
"எங்களை உள்ளே துரத்த இது ஒரு ட்ரிக் " என்றபடி ராதா எழுந்த செல்ல மகளைப் பின் தொடர்ந்தாள் மீனா 
"மம்மீ, இந்தக்  கல்யாணம் முடியட்டும். கல்யாணத்துக்கு முன்னாடி நீ என்ன சம்பாதிச்சியோ அது ஒரு பைசா பாக்கியில்லாமே  இன்னைக்கே இப்பவே நம்ம ஜாயிண்ட் அக்கௌண்டுக்கு வரணும்னு நான் சொல்லிடறேன் "
"யாரிட்டே ?"
"உனக்கு வந்து வாய்ச்சிருக்கிற மாப்பிள்ளை கிட்டே "
"அந்த எண்ணமெல்லாம் வேண்டாம். குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கும். சரிசரின்னு சகிச்சுப் போயிட்டா குடும்பம் சந்தோசமா இருக்கும். மல்லுக்கு நின்னா குடும்ப மானம் சந்தி  சிரிக்கும் "
"எது எது சிரிக்குது அழுது என்கிறதைப் பத்தி எனக்குக் கவலை கிடையாது . அவங்களுக்குப் பெரிசாத் தெரியற பணம் என் கண்ணுக்கும் இப்போ பெரிசாத் தெரியுது. அதுக்காக நானும் டார்ச்சர் பண்ணுவேன். அதில் என்ன தப்பு ? அம்மா நான் யாரையும் அடிக்க நினைக்கலே. என் மேலே அடி விழுது. அதை தாங்கிக் கொண்டு நிற்க  நான் காவியப் பொண்ணு இல்லே. அந்தப் பட்டமும் எனக்கு வேண்டாம். கல்யாணம் முடியட்டும் ... வச்சுக்கிறேன்.ஆர்க்யூ பண்ண வாயைத் திறக்கட்டும் .. அப்புறம் மவனே நீ தொலைஞ்சே !"
"என்னடி இது பேட்டை ரௌடி மாதிரி. இதெல்லாம் அப்பா காதில் விழுந்தால் அதற்கும் சேர்த்து வருத்தப் படுவார்  "
ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த செல்வரங்கனும் ராபர்ட்டும் எந்தெந்த  வழிகளில் பணம் புரட்டலாம் என்பது பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்.
"செல்வா எனக்கொரு யோசனை தோணுது. நீ எப்படியும் நம்ம ஸ்டாப்க்கு இன்விடேஷன் குடுப்பே. நம்ம ஆபீஸ் கலெக்சன் எப்படியும் குறைஞ்சது ஒரு இருபதாயிரம் தேறும். அதை செக்காக உன் பேரில் யாருக்கும் தெரியாமே குடுக்க ஏற்பாடு பண்றேன். வாழ்த்து மடல் ஒன்று ப்ரிபைர் பண்ணி அதை நாங்க மேடையில் குடுத்துட்டுப் போயிடறோம் "
"இது ரொம்ப சீப்பா தெரியுது. எனக்கும் ஒரு சுயமரியாதை இருக்கே "
"இருக்கட்டும். அது பிரச்சினையை சால்வ் பண்ணாது. வேணும்னா ஒண்ணு செய்யலாம். எனக்குத் தெரிஞ்ச சேட் ஒருத்தர்கிட்டே என்னோட வீட்டை அடமானம் வச்சு  பணம் வாங்கித் தர்றேன். உனக்கு முடிஞ்சப்போ அதை மீட்டுக் குடு. ஆனா வட்டியை மாசா மாசம் நீதான் கட்டணும். ஏன்னா என்னோட பட்ஜெட்டில் அதுக்கு  நூல் அளவு கூட இடமில்லை இப்படி அடாவடியா பேசறேன்னு தப்பா நினைச்சுக்காதே "
"இல்லே ராபர்ட் .. நீ இப்போ என் கண்ணுக்குத் தெய்வமா தெரியறே " என்று சொல்லி ராபர்ட்டின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார் செல்வரங்கன்.   
ராபர்ட்டின் குடும்பத்தினருக்கு டிரஸ் எடுத்துக் கொண்டு அழைப்பிதழ் கொடுக்க தனது மனைவியுடன் ராபர்ட் வீட்டுக்குப் போனபோது" என்னப்பா இது, நீயே பணத் தேவையில் இருக்கிறே . இந்த நிலையில் எங்களுக்கு டிரஸ்ஸா ? இதுக்காக எவ்வளவு செலவு பண்ணினே ?" என்று கடிந்து கொண்டார் ராபர்ட் 
"ரொம்ப இல்லேப்பா. எல்லாம் சேர்ந்தே  இரண்டாயிரத்துக்கும் கீழே தான் . ஒரு ஆசை. அதான் எடுத்தேன் "
"ஆசையை பரிசு கொடுத்துதான் காட்டணும் என்கிற கட்டாயம் எதுவும் கிடையாது. மனசில் இருந்தால் போதும். இதை அப்படியே எடுத்துக் கொண்டு போ. உன் உறவினர் லிஸ்டில் யார் பேராவது விட்டுப் போயிருந்தால் இதை அவங்க கிட்டே குடுத்திடு " என்று சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டார் ராபர்ட்  
அதன் பிறகு எந்தக் குறையும் இல்லாதபடி மாப்பிள்ளை வீட்டார்க்கு நிறைவாக  கல்யாணத்தை செய்து முடித்தார் செல்வரங்கன். தாய் மாமன் ஸ்தானத்திலிருந்த  மீனாவின் அண்ணன்தான் தனக்கு செய்த மரியாதைகள் ரொம்பவும் குறைவு என்று குறை பட்டுக் கொண்டார்.
"என்னம்மா மீனா, உன் வீட்டில் நடக்கிற முதல் விசேஷம் இது. மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கிற பொண்ணுக்கு நடக்கிற கல்யாணம். தாய்மாமனுக்கு, மாமிக்கு  மரியாதை செய்ய  குறைஞ்சது ஒரு அம்பது அறுபதாயிரம் செலவு பண்ணுவீங்கனு பார்த்தால், எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே ஒரு இருபதாயிரத்துக்குள் டிரஸ் எடுத்துட்டீங்க போலிருக்கு " என்றார் 
"அண்ணே, செய்ய ஆசைதான்.. கடைசி நேரத்தில் ஒரு குளறுபடி. அதுக்காக நாங்க கூட உங்ககிட்டே கடன் கேட்டோமே. எங்கேயும் கிடைக்கலே.அதான் பட்ஜெட்டில்சில செலவுகளை அட்ஜஸ்ட் பண்ணும் படி ஆயிட்டுது "
"அப்படின்னா ஊருக்கு எளைச்சவன்  இளிச்ச வாயன் தாய்மாமன்தான்னு சொல்லு " என்று யதார்த்தமாக சொல்வதுபோல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல சொன்ன வார்த்தைகள் செல்வ ரங்கத்தின் மனதை கத்தி போல அறுத்துக் கொண்டிருந்தது.
பொத்திப் பொத்தி வளர்த்த பெண் வீட்டை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள் என்ற கவலை ஒருபுறம், மலைபோல நம்பியிருந்த உறவுகள் தன்னைக் கைவிட்டு விட்ட வருத்தம், தாய்மாமனின் சொல்லம்புகள் இன்னொருபுறம் என்று பலவிதக் குழப்பங்களில் இருந்த செல்வ ரங்கத்தின் கைகள்  அனிச்சையாக டீவீயை ஆன் செய்தது. ஒரு சானலில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது  "உறவா ? நட்பா ? " என்ற கேள்விக்குறியுடன்.
கையில் காப்பியுடன் அங்கு வந்த மீனா, சில நொடிகள் டீவீயை பார்த்துக் கொண்டிருந்து விட்டு " உறவுக்கும் நட்புக்கும் நடுவில் அப்படி என்ன பெரிய வித்தியாசம் இருக்கு ? உறவுகள், தானாக சுயமாக அமைவது. நட்புங்கிறது நாம தேர்ந்தெடுக்கிறது,  அவ்வளவுதானே ?" என்று கேட்டாள்.
"இன்னொரு வித்தியாசம் இருக்குது. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே என்று ஒரு திருக்குறள் உண்டு, படிச்சிருப்பேதானே ! உண்மையிலேயே ரெண்டு பேர் ஆடை இழந்து நிற்கிறாங்கனு வச்சுக்குவோம். அதில் ஒருத்தன் நம்ம சொந்தக்காரன் இன்னொருத்தன் நமக்கு நண்பன்னு வச்சுக்குவோம். நாம கட்டியிருக்கிற ஆடையைக் கழற்றி நம்மோட  நண்பனுக்குக் குடுத்தால் "என்னப்பா, உன் மானத்தைப் பற்றிக் கவலைப்படாமே இப்படி உன்னோட வேஷ்டியை அவிழ்த்துக் குடுத்துட்டியே"ன்னு சொல்லி வருத்தப்படுவான். இதே காரியத்தை, அதாவது நம்ம சொந்தக்காரன் ஆடை இழந்து நிற்கிறப்போ  செய்தோம் னு  வச்சுக்கோ, அப்போ அந்த உறவு என்ன சொல்லும் தெரியுமா ? "நான் ஆபத்தில் இருக்கிறப்போ அவன் கட்டியிருக்கிற வேஷ்டியைத் தானே அவன் எனக்குக் குடுத்தான். கோவணத்தை அவனே வச்சுக் கிட்டானே'னு சொல்லிப் புலம்பும்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் செல்வரங்கன்.அதைக் கேட்டு மீனாவுக்கு சிரிப்பு வரவில்லை.  சிந்தனையில் ஆழ்ந்தாள்.  

No comments:

Post a Comment