Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 16, 2014

Scanning of inner-heart (Scan Report Number - 114 )

                     "நாணயம்" மனுஷனுக்கு அவசியம் !!
"ராஜு ஸார், இன்னிக்கு லஞ்சுக்கு வெளியே போகலாமா ? பக்கத்து தெருவிலே மெஸ் ஒண்ணு புதுசா திறந்திருக்காங்களாம். மீல்ஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு அங்கே போயிட்டு வந்த நம்ம ஸ்டாப்புங்க சொல்றாங்க . நாமளும் போய் பார்த்துட்டு வந்துடலாம் "
"ஏம்ப்பா, இதை நேத்தே சொல்லியிருந்தா நான் லஞ்ச் எடுத்துட்டு வராமே இருந்திருப்பேனே. இப்போ கொண்டு வந்த சாப்பாட்டை என்ன பண்றது தேவா ?"
"அட, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா ? நம்ம ஆபீஸ் ச்வீபர்ஸ் கிட்டே கொடுத்துட்டாப் போச்சு " என்று கேஷுவலாக சொன்னார் தேவராஜன்.
பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் ராஜு.
"என்னப்பா யோசனை ?"
"காலையில் வேலைக்கு கிளம்பற அவசரத்தில் எதையோ பண்ணி அது சாப்பாடுன்னு சொல்லி நம்ம கையில் கொடுத்து அனுப்பிடறாங்க. 'விதி'யேன்னு நினைச்சு நாமளும் முழுங்கி வைக்கிறோம். அந்த சாப்பாடு நமக்கு பழக்கப் பட்டுப் போச்சு. அதை சுவீப்பர்ஸ் டேஸ்ட் பண்ணினா அப்புறம் நம்மள கால் காசுக்குக் கூட மதிக்க மாட்டாங்க ."
"விடுங்க ஸார், இந்த விஷயத்தில் எல்லார் வீடும் ஒரே மாதிரிதான் "
அதன் பிறகு ஆபீஸ் சுவீப்பரை அழைத்து, அவனிடம் தான் கொண்டு வந்த சாப்பாட்டைக் கொடுத்து விட்டு வெளியில் கிளம்பினார் ராஜு. இருவரும் மெஸ்ஸை அடைந்த போது, அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அசந்து போனார்கள். வேறு வழியில்லாமல் தாங்களும் வரிசையில் சேர்ந்து கொண்டார்கள் 
"சும்மா சொல்லக் கூடாது ஸார். குடுக்கிற காசு வீண் போகலே. வீட்டு சாப்பாட்டை சாப்பிடுகிற மாதிரி இருக்குது. ருசிக்காக கண்டதையும் சேர்க்காமே, ஒரு பதார்த்தத்துக்கு எது எது தேவையோ அதை மட்டும் சேர்க்கிறாங்க " என்று வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர் சொல்ல," அளவு கூட பரவாயில்லே. வயித்துக்கு வஞ்சனை செய்யாமே திருப்தியா சாப்பிடுறவங்க கூட போதும் போதும்னு சொல்ற அளவுக்கு அதிகப் படியாகவே எல்லாத்தையும் வைக்கிறாங்க " என்று மற்றவர் சொல்ல, அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு நபர், "இப்பத்தானே ஆரம்பிச்சிருக்காங்க.. ஆரம்பத்தில் எல்லாம் நல்லா இருக்கும். வியாபாரம் கொஞ்சம் சூடு பிடிக்கட்டும். அதுக்குப் பிறகும் இந்த தரமும் அளவும் இருக்கானு பார்க்கலாம்" என்றார்.
"ஒரே டைமில் நூறு பேர் உட்கார்ந்து சாப்பிடுகிற அளவுக்கு இடவசதி இருந்தாலும் லஞ்ச் டைமில் காத்துத் தானே கிடக்க வேண்டியிருக்குது "
"வேறே ஒண்ணுமில்லே சார். பக்கத்துக் காலேஜ் பசங்க அவங்க காண்டீன் சாப்பாட்டை  அவாய்ட் பண்ணிட்டு இங்கே வந்துடறாங்க. அவங்க  காலேஜில் லஞ்ச் டைம் 12.30க்கு. அதனால் அவங்க முன்னாடி வந்து இடம் பிடிச்சிடறாங்க. சீக்கிரம் சாப்பிட்டோம் எழுந்து போனோம் ற நடைமுறை எல்லாம் கிடையாது. ஊர் பிரச்சினை உலகப் பிரச்சினை எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சிட்டுதான் இங்கிருந்து கிளம்புவாங்க"
"பசியோட நாம க்யுவில் நிற்கிறது நமக்குப் பிரச்சினையா இருக்கே "
"அதை யார் போய் அவனுக கிட்டே சொல்ல முடியும் "
இது போன்ற உரையாடல்கள்  அங்கொன்றும் இங்கொன்றுமாக காதில் விழுந்து கொண்டிருந்ததால் வரிசையில் நிற்கும் அலுப்பு தட்டவில்லை இருவருக்கும். சிறிது நேரத்தில் உட்கார இடம் கிடைத்தது இருவருக்கும் .கடை முதலாளியே   ஒவ்வொரு மேஜை அருகிலும் சென்று அவர்களை
உபசரித்துக் கொண்டிருந்தார். ராஜு ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைக் கவனித்த  தேவராஜன் "என்ன ராஜு உங்களுக்கு இந்த டேஸ்ட் பிடிக்கலையா ?" என்றார்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே. அருமையா இருக்குது. மெஸ் ஓனர் முகம் ரொம்பவும் பழக்கப்பட்ட முகம் போலத் தோணுது. ஆனா யார் என்ன எங்கே பார்த்திருக்கிறோம்னு நினைவுக்கு வரலே "
"ஐயர்ருக்கு தஞ்சாவூர்னு கேள்விப் பட்டேன். உங்களுக்கும் அதுதானே சொந்த ஊர்  "
"ஆமாம். என்னோடு பாஷ்யம்னு ஒரு பையன் படிச்சான். அந்த முகமும் இந்த முகமும் ஒத்துப் போகுது, வீட்டில் ரொம்பவும் கஷ்டம்கிறதாலே அவனோட படிப்பை பாதியிலே நிறுத்திட்டு அவன் அம்மாவுக்கு ஒத்தாசையா சமையல் வேலையில் இறங்கிட்டானு கேள்விப் பட்டேன். அவன் ஹை ஸ்கூல் படிப்பைக் கூட முடிக்கலே. அப்புறம் நான் காலேஜ் படிப்புக்காக சென்னை வந்து, பிறகு இங்கேயே வேலை கிடைத்து செட்டில் ஆயிட்டதாலே  ஊர்ப் பக்கமே போகலே. ஒருவேளை அந்த பாஷ்யம் தான் இந்த ஓனரா ?"
"அட இதைப்போய் இவ்வளவு டீப்பாக தின்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்க . நேராகவே கேட்டுட்டா டௌட் கிளியர் ஆயிடப் போகுது "
"அதுவும் சரிதான்"
கூட்டம் சிறிது குறைந்திருந்த வேளையில் மெஸ் முதலாளி அருகில் சென்ற  இருவரையும் பார்த்து "என்ன ஸார் சாப்பாடு திருப்தியா இருந்துதா ? ஏதாவது குறை இருந்தா தயங்காமே சொல்லலாம். அதை எங்களைக் கரெக்ட் பண்ணக் கிடைச்ச வாய்ப்பா நினைச்சுக்குவோம் " என்று சிரித்த முகத்துடன் கேட்டார் முதலாளி  
"சாப்பாட்டில் எந்தக் குறையும் இல்லே. உங்களைப் பார்த்தால் எனக்கு ரொம்பவும் பரிச்சயம் ஆன முகம் போலத் தெரியுது " என்று ராஜு சொல்ல, "அப்படியா ! என் பேர் பாஷ்யம் .  பூர்வீகம் தஞ்சாவூர் " என்று முதலாளி சொல்லி முடிக்குமுன்னே, " டேய் .. நான் ராஜாங்கம், ராஜு .. அக்கிரகாரத் தெருவில் அஞ்சாம் நம்பர் வீடு " என்றார் ராஜு. கல்லாவை விட்டு எழுந்து வந்து ராஜுவின் கைகளைப் பற்றிக் கொண்ட  பாஷ்யம், "எனக்குக் கூட  உன் முகம் பரிச்சயம் ஆன முகமாத் தோணுச்சு. ஆனா உன்னைப் போலக் கேட்கணும்னு தோணலே. இப்போ எங்கே வேலை பார்க்கிறே  ? எத்தனை குழந்தைங்க ? ஆத்துக்காரி என்ன பண்றாங்க ?" என்று பாஷ்யம் கேட்டுக் கொண்டிருக்கும்போது  தயக்கத்துடன் அங்கே வந்து நின்றான் கடைப் பையன் ஒருவன் .
"என்னடா ? என்ன சொல்ல வந்தே ? மென்னு முழுங்காமே சொல்ல வந்ததை சொல்லிட்டு கஸ்டமரைக் கவனி "
"முதலாளி .. கொஞ்சம் தனியா வாங்க "
"இவா நமக்கு வேண்டப் பட்டவாதான். சிறுவயசு சிநேகம். நீ தயங்காமே சொல்ல வந்ததை  சொல்லு " என்றபடி சுற்று முற்றும் பார்த்த பாஷ்யம் வேறு சிலரும் அங்கு இருப்பதைப் பார்த்து விட்டு ," டேய் ராமு.. கொஞ்சநேரம் வந்து கல்லாவில் உட்காரு " என்று சொல்லி விட்டு ராஜுவின் கைகளைப் பற்றியபடி  சமையலறைக்குள் வந்தார். "இப்போ சொல்லு " என்றார் கடைப் பையனிடம்.
"அய்யா, சாயங்கால டிபனுக்காக அரைத்துக் கொண்டிருந்த அடை மாவில் பல்லி விழுந்துட்டுது. அதைக் கவனிச்சதும் கிரைண்டரை நிறுத்திட்டேன். பல்லி சாகலே ஆனா வால் மட்டும் கட் ஆயிட்டுது. அந்த ரெண்டையும் வெளியில் எடுத்துட்டோம். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லிடலாம்னு  .... " என்று கடைப் பையன் சொல்லி முடிக்கும் முன்பாகவே, " மாவை அப்படியே சாக்கடையில் கொட்டு" என்று பதட்டத்துடன் சொன்னார் பாஷ்யம்.
"பல்லியைக்  கரண்டியால எடுத்து வெளியே போட்டதும் அது ஓடிப் போயிட்டுது. பல்லி செத்தால்தானே விஷம் "
"எந்த விளக்கமும் வேண்டாம். மாவைத் தூரக் கொட்டு "
"ரெண்டு கிலோ அரிசி .. பருப்பு.. காரம்..."
"அது இருநூறு கிலோவாக இருந்தாலும் சரி. பூச்சி விழுந்த பொருள் வேண்டவே வேண்டாம்... வேண்டாம் .. நீ இரு .. " என்ற பாஷ்யம் தானே கைப்பட எல்லா மாவையும் கிரைண்டரிலிருந்து வழித்து எடுத்துவிட்டு அதைக் கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு வந்தார். "ஈவினிங் டிபனுக்கு பூரி பண்ணிடு .. இனிமே எப்போ அரிசி ஊற வச்சு எப்போ அரைச்சு எடுக்கிறது " என்றார் 
"பாஷ்யம் உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. நஷ்டத்தைப் பத்திக் கவலைப் படாமே வாடிக்கைக் காரங்க நலனை நினைச்சுப் பார்க்கிறியே. உன்னை நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு.. இப்போதான் சென்னை வந்து பிசினெஸ் ஆரம்பிச்சிருக்கே.. இதுக்கு முன்னே எங்கே இருந்தே ?"
"தஞ்சாவூரில் ஒரு மெஸ் இருக்கு. அதை மச்சினர் பொறுப்பில் விட்டுருக்கேன். மதுரை திருச்சி ஏரியா மெஸ் என்னோட ஆத்துக்காரி கஸ்டடியில் இருக்குது. இங்கே வியாபாரத்தில் கால் ஊனினதும்  இதை என்னோட இன்னொரு மச்சினன் பொறுப்பில் விட்டுட்டு  வேறொரு இடத்தில் மெஸ் ஆரம்பிப்பேன்"
"தொழிலில் உனக்கிருக்கிற நேர்மையான குணம்தான் உன்னை மேலே மேலே உயர்த்திட்டே இருக்குது. நீ நல்லா வரணும். ஆபீசுக்கு நேரமாச்சு. இதோ பக்கத்தில்தான் எங்க ஆபீஸ் .. இனிமே அடிக்கடி வருவேன் " என்று சொல்லி விடை பெற்றார்  ராஜு 
ஆபீஸ் போய்ச்சேரும் வரை, "நமக்குத் தெரிந்த ஒருத்தன் பிசினெஸில் நல்லபடியா அதுவும் நாணயமா இருக்கிறதைப் பார்த்தால் மனசுக்கு எவ்வளவு நிறைவா இருக்கு " என்று  சொல்லிக் கொண்டு வந்தார் ராஜு.
கல்லாவில் உட்கார்ந்த பாஷ்யம், நாட்டிலுள்ள விஷ  ஜந்துக்களைக் கொல்ல என்னென்னவோ மருந்தெல்லாம் இருக்குது .. கடவுளே.. இந்த மனச்சாட்சியைக் கொல்ல மருந்தே இல்லையா. அதை எவ்வளவுதான் ஒதுக்கி வச்சாலும் அப்பப்போ வந்து தலை காட்டுதே. இன்றைக்கு நான் பிசினெஸ்  ரேஸில் எனக்குன்னு ஒரு இடத்தைப் பிடிக்கிறதுக்கும் ஒரு பல்லிதானே காரணம்..படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பிழைப்புக்காக அம்மாவுடன் சமையல் வேலைக்குப் போய்,அங்குள்ள  எடுபிடி வேலை பிடிக்காமல் முதலாளியாக ஆசைப் பட்டு, என்னென்ன தகிடு தத்தம் எல்லாம் பண்ணியிருக்கிறேன். சாப்பிடும்போது மயக்கம் போட்டு விழுந்த நபர்  ஆஸ்பத்திரிக்குப் போகும் வழியில் இறந்து போனது ஹார்ட் அட்டாக்கில்தான்  என்பது தெரிந்தாலும், "முதலாளி..கலந்து வச்ச காப்பியில் பல்லி விழுந்திருக்கு. அதைக் குடிச்சதால்தான் அந்த ஆள் செத்துப் போயிட்டார். போனவர் சாதாரண ஆள் இல்லே. கட்சியில் பெரிய ஆள். பல்லி விழுந்து செத்த காப்பியை அவர் குடிச்சதால் செத்த விஷயம் அவர் வீட்டுக்குத் தெரிந்தால்  உங்க குடும்பத்தில் ஒருத்தர் கூட தப்ப முடியாது" என்று மிரட்டலாக  சொல்ல, குலை நடுங்கிப்போய் நின்ற முதலாளியிடம், "இது நம்ம ரெண்டு பேரையும்  தவிர வேறு யாருக்கும் தெரியாது. நான் யாரிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்களும் இதைப் பத்தியாரிடமும்  மூச்சு விடாதீங்க"ன்னு நான் சொன்னதை நம்பி செத்தவரைப் பற்றிக் கவலைப்படாதிருந்த முதலாளியை, பல்லி பற்றி பயங் காட்டியே பணம் பறிச்சேன். அவர் மகளை எனக்குக் கட்டிக் கொடுக்க வைத்து அவர் சொத்தையும் எழுதி வாங்கிட்டேன். எல்லாரும் பணத்தை மூல தனமா வச்சு பிசினெஸ் ஆரம்பிப்பாங்க. நான் ஒருத்தனோட பயத்தை மூலதனமா வச்சு பிசினெஸ் ஆரம்பிச்சேன் இந்த பூமியில் இன்னொரு பாஷ்யம், அதுவும் என் கடையிலேயே உருவாக அதற்கு  சந்தர்ப்பம் கொடுக்க நான் என்ன மடையனா ? " என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் பாஷ்யம்.
   

No comments:

Post a Comment