Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 23, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 115 )

                                                        ரிஸ்க் எடுக்கிறதுன்னா .......
"அம்மா நம்ம வீட்டுக்கு யார் வரப் போறாங்க ?"
"என்ன கேட்கிறே ? எனக்கொண்ணும் புரியலே !"
"டூ டேஸ் முன்னாடி ஆபீசிலிருந்து வந்ததுமே அப்பா சொன்னாரேம்மா, யாரோ தினகரன்னு பேர் கூட சொன்னாரேம்மா "
"இப்போ அதை ஏன் கேட்கறீங்க ? எனக்கு கிச்சனில் வேலை இருக்கு " என்றாள் வைதேகி.
"அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ நாங்க  என்ன கேட்கிறோமோ அதுக்கு பதில் சொல்லுங்க போதும் " என்றார்கள்  சரவணன் மதுமதி லாவண்யா என்ற மூவரும் .
"அவர் நமக்கு என்னம்மா வேணும் ?" என்று லாவண்யா கேட்க. " நாம அவர்கிட்டே ஏதாவது கடன் கிடன்  வாங்கியிருக்கிறோமா? அப்பா அந்த அங்கிள் வர்ற விஷயத்தை சொல்லிவிட்டு எப்பவும் ஒரே டென்சனா இருக்கிறார். யாரும்மா அவர் ? " என்று  சரவணன் கேட்டான். குழந்தைகளிடம் மாட்டிக்கொண்டு வைதேகி விழிப்பதைக் கண்ட உதயகுமார், " இங்கே வாங்க நான் சொல்றேன் " என்று அவர்களைத் தனது பக்கம் அழைத்தார்.
"என்னோட பால்ய சிநேகிதன் தினகரன்.  குழந்தையாக நாங்க இருக்கும் போதே திருச்சியில் ஒரே காலனியில் குடியிருந்தோம். படிச்சோம். யாரோ சிலர் சின்ன வயசிலிருந்தே  ஒரே ஸ்கூலில் சேர்ந்து படிக்கிறது, காலேஜில் சேர்ந்து படிக்கிறது எல்லாம் பெரிய விஷயமே இல்லே. ஆனா அப்படி சிறு வயசிலிருந்தே சேர்ந்து படிச்ச  ரெண்டு  பேர், ஒரே ஆபீசில் அதுவும் கவெர்ன்மெண்ட் செர்விசில் சேர்வது பெரிய விஷயந் தானே. அந்த அதிர்ஷ்டம் எங்களுக்கும் இருந்தது. அப்புறம் ஒரு சில பிரச்சனைகளாலே அவனே  விருப்பப்பட்டு ட்ரான்ஸ்பர்  வாங்கிட்டு கான்பூர் பிராஞ்சுக்கு போயிட்டான். அவன் போனபிறகு திருச்சியில் இருக்கப் பிடிக்காமல்  நான் சென்னைக்கு வந்துட்டேன்.  ரொம்ப வருஷம் அவனுக்கும் எனக்கும் காண்டாக்ட் என்பதே இல்லாமே போச்சு. நானாக போன் பண்ணினாக் கூட அவன்  போன் அட்டெண்ட் பண்ண மாட்டான். அவன்தான் இப்போ சென்னை வர்றதா, நம்ம வீட்டுக்கு வர்றதா போன் பண்ணி யிருக்கிறான்".
"ஆப்டர் எ லாங்க் பீரியட் நீங்க சந்திக்கிறது ரொம்ப  சந்தோஷமான விஷயந்தானே!
" நீங்க சந்தோஷப்படாமே எப்பவும் டென்சனா இருக்கீங்க . என்ன காரணம் ?" என்று மதுமதி கேட்க, அதை சற்றும் எதிர்பார்த்திராத உதயகுமார்  சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்த்தார்.
"அப்பா , சொல்லுங்கப்பா "
"அவன் ஒரு ஏடாகூட பேர்வழி "
"அப்படின்னா ?"
"அவன் எப்போ என்ன மாதிரி கிறுக்குத்தனம் பண்ணுவான்னு யாருக்கும் தெரியாது "  
"அப்படின்னா வெரி இன்ட்ரெஸ்டிங்க் கேரக்டர்னு   சொல்லுங்க. அப்பா அவர் என்னென்ன பண்ணுவார்னு எங்களுக்கு  சொல்லுங்களேன் " என்று குழந்தைகள் ஆர்வமாகக் கேட்க, "ஹோம் வொர்க் பண்ணியாச்சா கதை கேட்க உட்கார்றீங்க !" என்றார் உதயகுமார் கடுகடுப்பான குரலில்.
"அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க உங்க ப்ரெண்ட் பத்தி சொல்லுங்க "
"அவன் பண்ணினது ஒண்ணா ரெண்டா ? எதைன்னு சொல்றது ?"
"உங்க மைண்டில் எது இன்னும் ப்ரெஷ்ஷா இருக்கோ அதை மட்டும்  சொல்லுங்க "
இதற்க்கு மேலும் தப்பிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட உதயகுமார், " தெருவில் பலூன் காரன் போகும்போது அவனைக் கூப்பிட்டு அக்கம் பக்கத்தில் விளையாட்டிட்டு இருக்கிற குழந்தைங் களுக்கு பலூன் வாங்கிக் குடுப்பான். அதுங்க ஆசையா விளையாடிட்டு இருக்கிறப்போ, கையில் குண்டூசியை மறைச்சு வச்சுகிட்டு, பலூனைத் தட்டி விடுறாப்பிலே அதை வெடிக்க வைப்பான் "
"ஏன் காசு குடுத்து வாங்கணும் ? பிறகு அதை அவரே ஏன் வெடிக்க வைக்கணும் ?" என்று சரவணன் கேட்டான்.
"பலூன் வெடிக்கிற சத்தம் கேட்டு, குழந்தைகள் பதறிப் போய் பயந்து முழிப்பாங்க தானே, அதை ரசிப்பதில் அவனுக்கு அப்படியொரு இன்ட்ரெஸ்ட் "
"அப்புறம் வேறே என்னென்ன பண்ணுவார் ?"
"நாங்க ரெண்டு பேரும் M.A  இங்க்லீஷ் லிட்டரெசர் எடுத்துப் படிச்சோம் . பைனல் இயர் எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருந்தோம். ஒருநாள் நாங்க படிச்சிட்டு இருக்கிறப்போ, பக்கத்து வீட்டுப் பாட்டி ஒருத்தங்க " ஏன் தம்பி, எப்பவும் இந்த புஸ்தகத்தை வச்சே படிச்சு கிட்டே  இருக்கீங்களே. தமிழ் புஸ்தகம் படிச்சு நான் பார்க்கவே இல்லை " ன்னு சொல்ல "நாங்க சேர்ந்திருக்கிற வகுப்புக்கு இதைத்தான் பாட்டி படிக்கணும். இதில்தான் பரீச்சை எழுதணும்"னு   சொன்னோம். உடனே அந்தப் பாட்டி " ஏன் தம்பி,தமிழ்ல எழுதினாபெயிலாக்கிப் போடுவாங்களா"ன்னு கேட்டாங்க. "ஆமாம்"ன்னுசொல்லிட்டுநாங்கபடிக்க ஆரம்பிச்சிட் டோம்.
அந்த வருஷம் கடைசி எக்ஸாம் பேப்பர் எழுதி முடிச்சிட்டு வெளியே வரும்போது, எங்களோட ஜூனியர்ஸ் எங்களுக்கு பார்ட்டி குடுத்தாங்க. அப்போ இவன் "இந்த வருஷம் நான் பெயில்"ன்னு சொல்லி சிரிச்சான். "என்னடா சொல்றே"ன்னு நாங்க கேட்டதும், "அன்னைக்கு நானும் உதயனும் படிச்சிட்டு இருக்கிறப்போ எங்க பக்கத்து வீட்டுப் பாட்டி எங்க கிட்டே  "தமிழில் எழுதினா பெயில் ஆக்கிடுவாங்களா"ன்னு கேட்டாங்க. அதிலிருந்து எனக்குள் ஒரு ஆசை, ஏதாவது ஒரு சப்ஜெக்ட்டில் ஒரு கொஸ்டின்னுக்கு தமிழில்  ஆன்சர் பண்ணனும்னு. இன்னிக்கு அந்த ஆசையை தீர்த்துட்டேன்"னு சிரிச்சுகிட்டே சொன்னான். "ஏண்டா பாவி ஒரு வருஷம் வீணாப் போகுமே"னு   நாங்க கேட்க, " எனக்கு அதைப் பத்தி கொஞ்சமும் கவலையில்லே. என்னோட பேப்பரை திருத்தப் போற புண்ணியவாளன் யாரோ ? இங்கிலீஷ் லிட்டறேசருக்கு ஆன்சரை தமிழில் எழுதியிருப்பதைப் பார்த்ததும்  அந்த மகானுபாவன்  முகம் எப்படி இருக்கும்? அதை அந்த புண்ணியவாளன் பக்கத்திலிருந்து  பார்க்க முடியாதேங்கிற வருத்தம்தான் நிறைய இருக்குது"ன்னு ரொம்ப அசால்ட்டா  சொன்னான்.  சென்ட்ரல் கவெர்ன்மெண்ட் ஆபீசஸ்க்கு ஒரு வெல்பர் அசொசியசன் உண்டு. 'கல்சரல் மீட்'ன்னு காம்பெடிசன் நடத்துவாங்க. இவன் ரொம்ப அருமையா பாடுவான். படிக்கிற காலத்தில் பாட்டுப் போட்டியில் முதல் பரிசை  இவன் யாருக்கும் விட்டுத் தந்ததே இல்லை. அதனால் இந்த   'கல்சரல் மீட் காம்பெடிசனில் ' இவன்தான் முதல் பரிசை வாங்கப் போறான்னு  நான் சொன்னதை நம்பி எங்க ஆபீஸ் ஸ்டாப்ஸ் எல்லாரும் அந்த விழாவுக்கு வந்திருந்தாங்க. இவன் என்னடான்னா மேடையில் ஏறி "அம்மா இங்கே வா வா" னு நர்சரி ரைம் பாட ஆரம்பிச்சிட்டான். மேடையை விட்டு அவன் இறங்கினதும் அவன் முதுகில் நாலு போட்டு , ''ஏண்டா இப்படி பண்ணினே ?"னு கேட்டால், எனக்கு முன்னாலே பாடினவங்க நல்லா பாடினாங்க. எல்லாரும் அதை அப்படி ரசிச்சாங்க. அந்த சூழ்நிலையில் ஒரு நர்சரி ரைம் பாடினா இவங்க முகம் எப்படி மாறும்னு கற்பனை செஞ்சு பார்த்தேன். அதை நேரில் பார்த்து ரசிக்கத்தான் இப்படியொரு பாட்டு"ன்னு சொன்னான்" என்று உதயகுமார் சொல்லிக் கொண்டிருக்கும்போது, " குழந்தைகளா, சாப்பாடு ரெடி.. சாப்பிட்டுட்டு மீதிக் கதையைக் கேளுங்க. எனக்கு வேலை ஆகணும் " என்று குரல் கொடுத்தாள் வைதேகி 
"இன்னைக்கு இது போதும். நினைவு வர்றச்சே நான் ஒவ்வொண்ணா சொல்றேன்"
"அப்பா, அந்த அங்கிள்க்கு ரிஸ்க் எடுக்கிறதுன்னா ரஸ்க் சாப்பிட மாதிரின்னு  சொல்லுங்க " என்றான் சரவணன்.
மறுநாள் தினகரனை அழைத்து வர ஏர்போர்ட் போனார் உதயகுமார். அவரது கண்கள் தினகரனைத் தேடின. அவர் தோளில் கைவைத்து  " வா போகலாம் " என்று சொன்ன நபரைக் கூர்ந்து கவனித்தார் உதயகுமார் '"நீங்க ... நீ ... தினா தானே !  என்ன தினா நீயா ? என்ன இது கோலம்  என்னாச்சு உனக்கு ?" என்று அதிர்ந்து போய்க் கேட்டார்  
"அதிக பட்சம் இன்னும் இருபது அல்லது முப்பது நாள் மட்டும் உயிர் வாழப் போறவன் வேறே எப்படி இருப்பான் ? " என்று முனங்கிய குரலில் பதில் தினகரனிடமிருந்து வந்தது .
"என்னடா சொல்றே ? "
"சொல்வதெல்லாம் உண்மை "
"ப்ளீஸ் விளையாடாதே "
"எனக்கு ப்ளட்  கேன்சர். என்னோட சாவு தேதியை என்னிடம் நேரடியாக டாக்டர்ஸ் சொல்லலியே தவிர  .... சரி அதை விடுடா..."
"இந்த நிலைமையில் நீ தனியாகவா வந்தே ?"
"தனிமை எனக்குப் பழகிப் போன ஒன்று .. என்னோட தலைவிதியும் அதுதானே  "
"இந்த நிலைமையில் நீ எப்படி வொர்க் பண்றே ?"
"நான் வொர்க் பண்றேன்னு யார் சொன்னது ? நான் மெடிக்கல் லீவில் இருக்கிறேன்"
"ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் , நான் வந்து பார்த்திருப்பேனே" என்று அழும் குரலில் சொன்னார் உதயகுமார் 
"நான் என்னோட பிள்ளையைப் பார்க்க வந்தேன் "
"என்ன சொல்றே ?"
"ஆமாம், சாகிறதுக்கு முன்னாடி அவனைப் பார்க்கணும். நான் இறந்ததும் எனக்கு சேர வேண்டிய செட்டில் மென்ட்க்கு அவன்தானே நாமினி"
"இதோ பாரு தினா, உன் மனைவி பிரசவத்தில் இறந்ததும் அந்த வருத்தத்தில் அந்தக் குழந்தையை வெறுத்து அதைக் குப்பைத் தொட்டியில் போடப் போனே. அதை நான் எடுத்து என்னோட குழந்தையாக வளர்க்கிறேன். அது வளர்ப்புக் குழந்தை என்கிற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு, திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து செட்டில் ஆனேன்.ஆபீஸ் ரிக்கார்டில் தான் மாற்றம் செய்ய முடியலே. மத்த எல்லா இடங்களிலும் அவனை என் பிள்ளைன்னே சொல்றேன். இப்போ போய் சரவணன் வேறொருத்தர் குழந்தைன்னு சொன்னால் என் பொண்ணுங்க துடிச்சுப் போயிடுவாங்க. என் பொண்ணுங்களை விட்டுத் தள்ளு. உண்மை தெரிஞ்ச பிறகு அந்தப் பிஞ்சு மனசு என்ன பாடு படும் ! அதன் பிறகு எங்களோடு அது எப்படி முழு மனசா ஒட்டும் ? எங்க கிட்டே காசுபணம் அதிகம் இல்லாட்டாலும் குடும்பத்தில் சந்தோசம் அதிகம் இருக்குது, அக்கம்பக்கத்தினர் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு. அதைக் கெடுத்துடாதே. உன்னைக் கையெடுத்துக் கும்பிடறேன், வேண்டாம்னு நீ தூக்கி எரிஞ்ச ஒன்றை உரிமை கொண்டாட உன் மன சாட்சி எப்படி இடம் கொடுக்குது?"
"இதோ பாரு உதயா, கொடுமையான செயலை செய்த ஒருவனை தூக்கில் போடும் முன்னாலே அவனோட கடைசி ஆசை என்னனு கேட்டு அதை நிறைவேத்தி வைப்பாங்க. மனைவியை இழந்த துக்கத்தில் அந்தக் குழந்தையைத் தூக்கிப் போட்டதைத் தவிர வேறு எந்த தப்பும் நான் செய்யலே. என் கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்கிறேன். ஒரே ஒரு தடவை என் பிள்ளையைத் தொட்டு கொஞ்சறதுக்கு மனசு தவிக்குதுடா. அது தப்பு.அதை செய்ய எந்த தகுதியும் கிடையாதுன்னு தெரிஞ்சும் உன்கிட்டே பிச்சை கேட்கிறேன். அவனைப் பார்த்திட்டு அடுத்த நிமிஷமே  திருச்சிக்கு கிளம்பிடுவேன், ரங்கனைத் தரிசிக்க. அது முடிஞ்சதும்  நாளைக்கே நான் கான்பூர் போயிடுவேன். வெளியில் போய்வர ரெண்டே ரெண்டு நாள்தான் டாக்டர்ஸ் பர்மிஷன் குடுத்திரு க் காங்க.விஷயத்தை எடுத்து  சொல்லி உன்னை அங்கே வரவழைக்கிறதா அவங்க சொன்னாங்க. நாந்தான் அடம்பிடிச்சு இங்கே வந்தேன்.. குழந்தை வீட்டில் இருப்பாந்தானே ?"
"நேற்று அவன் ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் டே. அதனால் இன்னிக்கு ஸ்கூல் லீவு. தினா திரும்பவும் சொல்றேன் சரவணன் உன் குழந்தைங்கிற  விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது "
"சரி"  என்று தலையாட்டினார் தினகரன்.
வாசலில் கார் ஹார்ன் கேட்டதுமே குழந்தைகள் ஓடி வந்து வாசல் கதவைத் திறந்தார்கள்
தினகரனை மெதுவாக அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்த உதய குமார், குழந்தைகளை அவருக்கு அறிமுகப் படுத்தினார்.
"இது சரவணன் " என்று அவர் சொல்லி முடிக்குமுன்னமே, "நான் தாண்டா உன் அப்பா .. இந்தப் பாவியை மன்னிச்சுடு " என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லியவர் நொடியில் தனது தப்பை உணர்ந்து கடைக் கண்ணால் உதயகுமாரைப் பார்த்தார். அப்போது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்காத வகையில் சரவணன் ஓடி வந்து தினகரன் கழுத்தைக் கட்டிக் கொண்டு" அப்பா ... அப்பா... என்னை விட்டுட்டு இத்தனை நாளும் எங்கே போயிருந்தீங்க .. நானும் உங்ககூடவே வருவேன் " என்று சொன்னான் 
ஒட்டுமொத்தக் குடும்பமும் அதிர்ந்து போய் நின்றது. சரவணனை இழுத்து அனைத்து நெஞ்சோடு தழுவிய தினகரன், " இந்த ஜென்மத்தில் இந்த சந்தோசம் ஒன்று போதும் . எனக்கு வேறு எதுவும் வேண்டாம். இதைத் தந்த ரங்கன் காலடியில் விழுந்து நான் கதறி அழணும். இப்பவே எனக்கொரு டாக்சி பிடிச்சுக் கொடு .. நான் போகணும் " என்றார் 
"போகலாம் .. குளிச்சு சாப்பிட்டு விட்டு பிறகு போகலாம் "
"வேண்டாம் .. காவேரிக் கரையில்தான் என்னோட குளியல். ரங்கனைத் தரிசித்த பிறகுதான் பச்சை தண்ணீர் கூட குடிப்பேன் "
அதன் பிறகு ஒரு டாக்சி பிடிச்சு தினகரன் கிளம்பிப் போகும்வரை, மறந்தும் கூட அவர் சரவணன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை.
டாக்சியில்  ஏறி உட்கார்ந்து தினகரன் டாட்டா காட்டியபோது, " படுபாவி சாகப் போகிற வேளையில் கூட ஒரு பச்சைக் குழந்தை நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிட்டுப் போறியே சண்டாளா" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
வாசல் கதவை தாளிட்டு விட்டு தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த வரிடம், " அப்பா, உங்க ப்ரெண்டுக்கு மட்டுந்தான் மற்றவங்களுக்கு அதிர்ச்சி குடுத்துப் பார்த்து ரசிக்கத் தெரியுமா? என்னோட அப்பான்னு அவர் ஒரு  பிட் போட, அதை நம்பறமாதிரி நான் எப்படி ரிஆக்ட் குடுத்தேன் பார்த்தீங்களா  ? " என்று சரவணன் கேட்டதும்  "அப்பாடா " என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட உதயகுமார். எப்பவோ நடந்த சம்பவங்களை நான் குழந்தைகளிடம் சொன்னது எவ்வளவு நல்லதாகப் போச்சு. தாங்க்  காட் " என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் உதயகுமார்  
  

No comments:

Post a Comment