Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 30, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 116 )

                பணம் இருந்தால் இந்த உலகத்திலே ....?!

ராஜசேகரால் நம்பவே முடியவில்லை. தனக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா ? கடவுள் கண்ணைத் திறந்து விட்டார். வேலையிலிருந்து ரிடைர் ஆனதும் செட்டில்மெண்ட்டாக கைக்கு  வந்த பணம் பெண்ணின் கல்யாண செலவுக்காகவும் பையனின் படிப்புக்காக வாங்கிய கடனுக்காகவும் கரைந்து விட மீதமுள்ள வாழ்நாளை கையில் காசில்லாமல் எப்படித் தள்ள முடியும் என்று நினைத்து தவித்துக் கொண்டிருந்த தனக்கு இப்படியொரு யோகமா ? கோயில் கோயிலாகப் போய்க் கும்பிட்டதெல்லாம் வீண் போகவில்லை என்று நினைத்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட முப்பத்து நான்கு வருடம் நேரம் காலம் பார்க்காமல் ஓடியோடி உழைத்து விட்டு ரிடைர்மென்ட் என்ற பெயரில் கைகால் களைக் கட்டிக் கொண்டு வீட்டில் சும்மா இருப்பது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எங்காவது வேலைக்குப் போகலாமானு நினைக்கிறேன்னு மகனிடம்அவர் சொன்னபோது "அட, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா ? டே டைமில் உங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போய் அரட்டை அடிச்சிட்டு வாங்க " என்றான்.
"அதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத ஒன்றாச்சே " என்று ராஜசேகர் அங்கலாய்த்த போது, " அதனாலென்ன ? இனிமே பழகிட்டாப் போச்சு " என்று அசால்ட்டாகப் பதில் சொன்னான் பாலாஜி 
"ஏம்ப்பா... நீங்க இந்த ஜெனரேஷன் .. பச்சோந்தி அடிக்கடி தன்னோட நிறத்தை மாத்திக்கிறாப்ப்லே இடம், சூழ்நிலைக்குத் தக்க உங்களை மாத்திக்க உங்களாலே முடியும். ஆனா என்னாலே அப்படி முடியாதுப்பா"
"அப்படின்னா பகல் முழுக்க டீவீ பாருங்க .. ராத்திரியில் கோயில் குளம்னு போயிட்டு வாங்க "
"டீவீதானே ? அதைத்தான் நான் விரும்பாமலே பார்த்துட்டு இருக்கிறேனே ? டீவீ சீரியல் பார்க்க உட்காருற உங்க அம்மா விளம்பர இடைவேளை வரும் போதுதானே அக்கம்பக்கம் என்ன நடக்குன்னு திரும்பியே பார்க்கிறா ? ஐயோ ..ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு வில்லி வர்றாங்கடா ... அவங்க பண்ற ஒவ்வொண்ணும் .... அப்பப்பா ... அல்கொய்தா தீவிரவாதிங்க இவங்க கிட்டே ட்ரைனிங் எடுக்கணும் . இதை தொடர்ந்து பார்த்தால்  மனசும் மூளையும் கெட்டுப் போயிடும்.. சில கதைகளில் அழுதே நேரத்தைப் போக்குறாங்க . ஆனா ஒண்ணு, அவங்க கண்ணீர் விட்டாலும் செம  காமெடியா இருக்குது. வில்லித் தனம்கிற  பேரில் கோமாளித்தனம் பண்ணினாலும் செம  காமெடியா இருக்குடா .. "
"படக்காட்சிகளைக் காமெடியா பார்க்கறீங்கதானே?அப்படித்தான் எல்லா  ஆங்கிளிலும் வாழ்க்கையை ரசிக்கக் கத்துக்கணும் "
"ஆமாம் எனக்கொரு சந்தேகம் .."
"என்னப்பா ?"
"டீவீ சீரியல்க்கு டைரெக்ட் பண்ற அத்தனை பேரையும் ஒரு இடத்தில் உட்கார வச்சு ஏதாவது ஒரு  கதையை பொதுவாக  ஒருத்தன் சொல்ல, சீரியல் எடுக்கிறவங்க, டைரெக்ட் பண்றவங்க அதை தங்களோட டேஸ்ட்க்கு ஏத்த மாதிரி மாத்திக்குவாங்களோ ?"
"எதை வச்சு அப்படி கேட்கறீங்க ?"
"ஒரு தொடரில் வரும் ஒரு சில சம்பவங்களே எல்லா தொடரிலும் வருது."
"டீவீ பார்க்கிறது போராக இருந்தால் கம்ப்யூட்டர் கேம்ல் டைம் பாஸ் பண்ணுங்க "
"வேலை பார்த்துட்டு இருந்த காலத்தில், எங்க ஆபீஸ் ப்ரோக்ராமர், ஆபீஸ் வொர்க் எல்லாத்தையும் செட் பண்ணித் தருவார். அதில் நான் வெறுமனே டைப் மட்டும் பண்ணுவேன். என்னைப் பொறுத்தவரை அது ஒரு டைப் ரைட்டர்.  அதில் வேறு எதுவும் எனக்குப் பண்ணத் தெரியாதே  " என்றார் பரிதாபமாக 
"அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை " என்ற பாலாஜி, அவருக்குக் கம்ப்யூட்டர் கேம் விளையாடக் கற்றுக் கொடுத்தான். நெட் ஓபன் பண்ணுவதில் அவர் வெல் வெர்ஸ்டு ஆனதும் ஈமெயில் கிரியேட் பண்ண, அதை ஓபன் பண்ண கற்றுக் கொடுத்தான். அதில்தான் அதிர்ஷ்ட லக்ஷ்மி  அவர் பக்கம் தனது பார்வையை ஓட விட்டாள். வெளிநாட்டு லாட்டரியில் அவருக்கு ஆறு கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது.
இனிமேல்தான் ரொம்ப உஷாரா இருக்கணும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் ராஜசேகர். பணம் கையில் இல்லாதவரை ரத்த சம்பந்த உறவுகளே நம்மை யாரோ மூன்றாவது மனுஷன் மாதிரி நடத்துவாங்க. பணம் கையிலிருந்தால், பக்கத்து வீட்டுக்காரன்  கூட நம்மள அவனுக்கு நெருங்கின சொந்தம்னு சொல்லிக்குவான்.  அவங்க கிட்டே உஷாராக இருக்கணும். மாலாவைக் கட்டின புண்ணியவாளன் சும்மாவே பணம் பணம்ன்னு பறப்பான். இவ்வளவு பணம் கையில் இருப்பது தெரிஞ்சா வீட்டோடு வந்து உட்கார்ந்துகிட்டு போகமாட்டேன்னு அடம் பிடிப்பானே . கோடிகோடியா பணம் இருக்கறச்சே, மாப்பிள்ளை நம்ம வீட்டோடு வந்து இருக்கிறது தப்பில்லே. ஆனா இதுக்கு பாலாஜி ஒத்துக்க மாட்டானே. பண விஷயமா அவங்களுக்குள்ளே தகராறு வந்து அடிதடி வெட்டுக் குத்து கோர்ட் கேஸ்ன்னு  ஆயிடுமோ என்ற பயம் வந்தது. அப்படி எதுவும் ஆகாமே முதலிலேயே செட்டில் பண்ணிடணும். கூட வேலை பார்த்தவனுக சொந்தக்காரனுகனு இனிமே அவனவன் அவனுக தேவைக்காக இனிமே பணத்துக்காக நம்மகிட்டே தான் ஓடி வருவானுக . கடன் கொடுத்தாலும் தலைவலி , அதைத் திரும்பி வாங்கறதுக்குள் உயிர் போயிடும். கடன் குடுக்கும்போது அவனுக கண்ணுக்கு நாம தெய்வமா தெரிவோம். குடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால் சைத்தான் மாதிரித் தெரிவோம். கடன் கொடுக்காட்டா பகையாளியாயிடுவோம் . கடன்விஷயத்தில் குடுத்தாலும் பிரச்சினை.குடுக்காட்டாலும் பிரச்னை . சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி கடன் கொடுக்கும் விஷயத்தில்  முடிவெடுக்க வேண்டியதுதான் . பணத்துக்காக குழந்தைகளைக் கடத்துறது இப்போ அதிகமாயிடுச்சு. அதுங்களை ஸ்கூலில் கொண்டுபோய் விட்டுட்டுக் கூட்டிட்டு வர நல்ல கார் டிரைவர் ஒருத்தனைத் தேடியாகணும். கையில் பணமில்லாத ஒரே ஒரு காரணத்தால் இதுவரை   இஷ்டப்பட்ட இடங்களுக்குப் போக முடியலே வர முடியலே. வீடு முழுக்கப் பணம் கொட்டிக் கிடக்கும்போது வீட்டை விட்டுட்டுப் போகவும் பயமா இருக்குதே. முழிச்சுகிட்டு இருக்கும்போதே திருடுற கூட்டம் நிறைய இருக்கே.  சரி ... யாராவது காவலாளியைப் போட்டுடலாம்... போடலாம் ...அதிலும் பிரச்சினை இருக்கே, அவனுக நேர்மையா இருப்பானுகனு எப்படி நம்ப முடியும் ? காவல்காரனும் களவாணிப் பயலும் கூட்டு சேர்ந்தால், விடிய விடியத் திருடலாம்னு நம்ம முன்னவங்க சொல்லி யிருக்காங்களே. அது தெரிஞ்ச எந்தக் களவாணிப் பயலாவது நம்ம வீட்டுக் காவல்காரன் கூட கூட்டு சேர்ந்துட்டா என்ன பண்றது ? திருடிட்டுப் போறதோடு நின்னுட்டாப் பரவாயில்லே. ஆள் கடத்தல் கொலை அதுஇதுன்னு போயிட்டா என்ன செய்றது ? பணம் இருக்குனு தெரிஞ்சா 'அந்தக் காப்பகம்', 'இந்தக் காப்பகம்',அனாதைக் குழந்தைங்க காப்பகம்'னு இல்லாத காப்பகத்துக்குக் கூட டொனேசன் கலெக்ட் பண்ண வருவாங்க. அதுவாவது பரவாயில்லே. எலெக்சன் வரும்போதெல்லாம் நிதியுதவி கேட்டு  வந்து நிப்பாங்களே.. இவனுக எலெக்சனில் நிக்கவும் மொய் அழணும். இவனுக ஜெயிச்சு பதவியில் போய் உட்கார்ந்த பிறகு  நமக்கு ஒரு காரியம் ஆகணும்னு இவனுகளைத் தேடிப் போனா அதுக்கும் இவனுகளுக்கு மொய் எழுதணும்.. ச்சே இப்படி எல்லா வகையிலும் பிரச்சினை வருதே .. இதை எப்படி சரி பண்ணலாம் ? முன்னே போனா கடிக்கிற, பின்னே போனா உதைக்கிற விவகாரமா இருக்கே ... இதை எப்படி சரி பண்றதுன்னு நல்லா யோசிக்கணும்.
"அப்பா .. நான் வீட்டுக்குள் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. வழக்கமா நான் வந்ததும் "வா பாலா"ன்னு எதோ விருந்தாளியை வரவேற்க்கிற மாதிரி தினமும்  வரவேற்ப்பீங்க .. இன்னிக்கு என்ன ஆச்சு ? உடம்பு ஏதாவது சரியில்லையா ?" என்று அக்கறையாக கேட்டான் பாலாஜி 
"தெரியலேடா பாலா .. மத்தியானமும் சரியா சாப்பிடலே..எதோ யோசனையில் இருக்கிறார். என்ன கேட்டாலும் பதில் சொல்லலே . நாம பேசறது அவருக்குக் காதில் விழுதா என்கிறதே எனக்கு சந்தேகமா இருக்கு" என்றாள் அவர் மனைவி லஷ்மி 
"பாலா .. எனக்கு வெளிநாட்டு லாட்டரியில் ஆறு கோடி ரூபா கிடைச்சிருக்கிறதா  செய்தி வந்திருக்கு "
இதைக்கேட்டு சிரித்தான் பாலா 
"அப்பாடா, இப்படி சிரித்த முகத்தோட உன்னைப் பார்க்கிறது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா ?"
"அப்பா .. பணம் கிடைக்கிறதை நினைச்சு நான் சிரிக்கலே. உங்க ஏமாளித் தனத்தை நினைச்சு சிரிச்சேன்"
"என்னப்பா சொல்றே ?"
"நாட்டுலே எல்லா இடத்திலும் சில பிராட் கும்பல் இருக்குது. நமக்குப் பணம் தர்றதாக சொல்லி நம்ம கிட்டே இருக்கிற காசைப் பறிக்கிற கும்பல் அது. அது பொய் நியூஸ் .  பிராட் "
இதைக் கேட்டு அமைதியாக நின்றார் ராஜசேகர் 
"என்னப்பா ... பணம் வராதேனு வருத்தப் படறீங்களா ?"
"இல்லேப்பா .. பணம் இல்லாமே இருக்கிறதை நினைச்சு சந்தோசப் படறேன். பணம் இல்லாதவரை, பணம் இல்லே என்பது மட்டுந்தான் பிரச்சினை. பணம் இருந்தால் ஒவ்வொரு நொடியுமே பிரச்சினைதான் " என்றார் ராஜசேகர் நிறைந்த மனதுடன்.  

No comments:

Post a Comment