மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !
"அப்பா, உன்னைப் பார்த்து எத்தனை நாளாச்சுடா !. இப்பவாவது என் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதே. பாகீரதி .. வந்து பார் ... யார் நம்மளைத் தேடி வந்திருக்காங்கன்னு " என்று உற்சாகமாக வரவேற்றார் ராஜாராம்.
அதைக் கண்டு சங்கோஜத்தில் நெளிந்த வெங்கடேஷன், " என்னப்பா நீ , நாங்க யாரும் வேண்டாம்னுதானே ஊரை விட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்து வீடு கட்டி உட்கார்ந்துட்டே.. பக்கத்துத் தெருவில் இருக்கறச்சே நான் ஓடி ஓடி வந்து உன்னைப் பார்க்கலியா? இப்போ உன் வீட்டுக்குக் கிளம்பி வர்றதுன்னா, ஏதோ வெளியூருக்குக் கிளம்பிப் போறாப்லே இருக்குடா. நானும் பொண்ணு வீட்டிலிருந்து சென்னைக்கு வந்ததிலிருந்து உன்னைப் பார்க்க தினமும்தான் கிளம்பறேன் . எங்கே முடியுது ?" என்றார்.
இதற்குள் ஈரம் படிந்த கைகளைப் புடவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டு அங்கு வந்த பாகீரதி, " வாங்கோ .. வாங்கோ ... ஆத்துலே எல்லாரும் ஷேமமா இருக்கிறாளா ? கிரகப் பிரவேசத்துக்கு நீங்க வாராமல் போனதில் இவருக்கு ரொம்பவும் வருத்தம் ... நல்ல வெயிலில் வந்திருக்கிறேள் . ஜில்லுனு ஒரு வாய் மோர் தரட்டுமா .. இல்லே கூல் ட்ரிங்க் ஏதாச்சும் சாப்பிடறேளா ?" என்று பரிவுடன் கேட்டாள்.
"எங்கே மாமி முடியறது ? பொண்ணோட மாமியார், அவளோட பொண்ணுக்கு பிரசவம்னுபெங்களூர் போயிட்டா.பேரக் குழந்தைகளைப் பார்த்துக்கிறதுக்காக நான் பொண்ணு வீட்டுக்குப் போய்த் தங்கும்படி ஆயிடுத்து.. போனவாரம்தான் சென்னை வந்தேன் ...ஆஹா .. இத்தனை வருஷத்துக்குப் பிறகு நீங்க சொந்தமா ஒரு வீடு கட்டிக் குடியேறினதில் எனக்கு ரொம்ப சந்தோசம் "
"உட்கார் வெங்கி .. மொதல்லே தாக சாந்தி பண்ணிக்கோ ... ஆத்தை பார்த்து உன்னோட ஒபினியன் சொல்லு ... போடி .. ரெண்டு பேருக்குமே மோர் கொண்டு வா "
மோரைக் குடித்து விட்டு சற்று நேர ஓய்வுக்குப் பின் வீட்டைப் பார்க்க ஆரம்பித்தார்.
"நல்லா பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறே ? யாரோட ஐடியா ?"
"ஆத்துலே இருக்கிற அத்தனை பேரும் சேர்ந்து ராவும் பகலுமா டிஸ்கஸ் பண்ணிக் கட்டினோம். துணிமணி நகைன்னா நினைச்ச நேரம் நினைச்ச படி மாத்திக்கலாம். குடியிருக்கிற இடம்..அதுவும் நம்ம ஆயுள் காலத்தில் மொதல் முறையா கட்டற வீடு .. அது நல்லா அமையணும்னு யோசிச்சு யோசிச்சுக் கட்டினோம் .."
"ஆமா ... அங்கங்கே ஒரு வெள்ளைக்காரன் போட்டோ மாட்டி வச்சிருக்கிறே ? யாருடா அது ?"
"என்னடா இது ! அசடாட்டம் கேள்வி கேட்கிறே ? இது பில்கேட்ஸ் படம்னா !" என்று வியப்பின் உச்ச கட்டத்துக்கு சென்று கூவினார் ராஜாராம்
"அதாவது ....இந்த கம்ப்யூட்டர் .... "
"ஆமாம் ... அதேதான் ..."
"நாம படிச்ச காலத்தில், வேலை பார்த்த காலத்தில் டைப் ரைட்டரைக் கூடத் தொட்டுப் பார்த்ததில்லை .. எல்லா ஆபீசுக்கும் கம்ப்யூட்டர் வர ஆரம்பிச்ச சமயத்தில் நாம் ரிடயர் ஆகிட்டோம் ... அதனால் அதைப் பத்தித் தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லாமப் போயிடுத்து " என்று கவலை யுடன் சொன்ன வெங்கடேசன் "அவர் படம் எப்படி, எதுக்கு உங்காத்துலே ... ?" என்று வியப்புடன் கேட்டார்
"எல்லாம் என் பிள்ளையாண்டனோட கைங்கரியம்தான் "
"இன்னும் அப்படியேதான் இருக்கிறானா, நாத்திகம் பேசிண்டு ?"
"ஆமாம் .. இப்போ நான் கொஞ்சம் கொஞ்சமா அவன் வழிக்கு வர ஆரம்பிச்சுட்டேன்... ஒரு இடத்துலே உட்கார்ந்து நிதானமா யோசிச்சுப் பார்த்தால் அவன் சொல்றது சரின்னு தோணறது .. இந்த வீட்டுக்குக் கிரகப் பிரவேஷம் டேட் பிக்ஸ் பண்ணினப்போ அவனுக்கு வேலைக்கு ஆர்டர் வந்துச்சு மெயிலில் .. அதைப் பார்த்ததுமே ' அப்பா நம்ம புது வீட்டில் பூஜை அறையில் பில்கேட்ஸ் படத்தை மாட்டி வைக்கனும்'னு சொன்னான். 'ஏண்டா .. கடவுள் படம் இருக்க வேண்டிய இடத்தில் மனுஷா படத்தை வைக்கலாமா'ன்னு கேட்டேன். உடனே 'கடவுள்னா யார்'னு கேட்டான். நம்மளைப் படைச்சு, காப்பாத்தி வாழவைக்கிற ஒரு சக்திக்குப் பேர்தான் கடவுள்'னு சொன்னேன். 'இவரும் அப்படித்தான். இவர் முதலில் ஒரு கோடு போட்டார். அவரவர் தேவைக்கு ஏத்தாப்லே அதில் ரோடு போட்டுக்கிட்டு இன்னிக்கு கோடிக் கணக்கிலே ஜனங்க அதில் சந்தோசமா ட்ராவல் பண்ணிண்டு இருக்கிறாங்க, உலகம் முழுக்க . இப்படி கோடிக்கணக்கான மனுஷங்களுக்கு பிழைப்புக்கு வழிதேடித் தந்த ஒருத்தரை கடவுள்னு சொன்னா அது தப்பில்லே'னு சொன்னான். நான் யோசிச்சுப் பார்த்தேன் . சரின்னு பட்டுச்சு. இப்போ நானும் சேர்ந்து கும்பிட ஆரம்பிச்சுட்டேன்"
"நாம படிச்சு முடிச்ச காலத்தில், அதாவது ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்து எட்டாம் வருஷ காலகட்டத்தில் வேலைக்காக எத்தனை வருஷம் காத்து இருந்திருக்கிறோம். எங்காவது ஒரு கம்பெனியில் இண்டெர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு வேலைக்கு ஆர்டர் வருமான்னு போஸ்ட் மேனை எதிர்பார்த்து எத்தனை நாட்கள் நம்ம வீட்டு வாசலில் காத்துக் கிடந்திருக்கிறோம். இப்போ உள்ள குழந்தைங்க படிப்பை முடிச்சிட்டு வெளியில் வரும்போது வருமானத்துக்கு ஒரு இடத்தைத் தேடிப் பிடிச்சிடாறாங்களே. அதுக்காக கம்ப்யூட்டர், இன்டர்நெட் இதை யெல்லாம் கண்டு பிடிச்ச்சவனுக்குக் கோயில் கட்டியே கும்பிடணும்".
"அது மட்டுமா ! 1950க்கு முன்னே பிறந்து தமிழ் நாட்டின் தெற்கு மூலையில் இருந்தவர்களுக்கு, மெட்ராஸ் என்கிறது ஒரு கனவு உலகம் . வடக்கில் இருந்தவங்களுக்கு டெல்லி என்கிறது ஒரு கனவு உலகம். இந்த இடங்களுக்குப் போவோமா, போக முடியுமாங்கிற கனவில் எத்தனைபேர் வாழ்ந்திருக்கோம். ஆனா இன்னிக்கு அவங்கவங்க வீட்டுக் குழந்தைங்க தயவால் அவங்க இப்போ வெளிநாடுகளுக்கே ரொம்ப சுலபமா போய்ட்டு வந்திடறாங்க"
"என் பிள்ளைக்கு சினிமாவைக் கண்டுபிடிச்சவன் கடவுள் .. ரயில் பஸ் இப்படி கீழ்த் தட்டு மக்களுக்கு வருமானம் கொண்டு வருகிற விஷயத்தைக் கண்டு பிடிச்சவங்க எல்லாருமே கடவுள்தான். கொஞ்சம் யோசிச்சுப் பாரு, சினிமாவை வச்சு, சினிமாவுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத எத்தனை லட்சம் பேர் பிழைக்கிறாங்கனு "
"எதை வச்சு சொல்றே ?"
"தியேட்டர் பெருக்குகிறவங்க, முறுக்கு விக்கிறவங்க, வண்டி ஸ்டாண்டில் டோக்கன் குடுக்கிறவங்கனு எத்தனை பேருக்கு படியளக்குது சினிமா. ரயில் வே மூலமா அந்த துறை ஆட்கள் மட்டுமா பிழைக்கிறாங்க. விற்கிறவன், போர்டர். டாக்சிக் காரங்க .. இப்படி சொல்லிட்டே போகலாம். இந்த மாதிரி விசயங்களைக் கண்டு பிடிச்சவங்க எல்லாருமே என் பிள்ளைக்குக் கடவுள்தான். இப்போ நானும் அவன் வழியிலேயே யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் "
அங்கு வந்து எட்டிப் பார்த்த பாகீரதி " ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சிட்டீங்கன்னா உங்களுக்கு நேரம் போறதே தெரியாதே. வாங்கோ சாப்பிடலாம்" என்றாள்.
"பாகீ சாப்பாடுன்னு சொன்னதும்தான் நினைவுக்கு வர்றது. பத்து நாள் முன்னாடி நம்ம ஆபீஸ் ஜெயபாலைப் பார்த்தேன். அடையாளமே தெரியாத அளவுக்கு எலும்பும் தோலுமா இருக்கிறான். சாப்பாட்டுக்கு ரொம்பவும் கஷ்டப் படறதா சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டுட்டு கையிலிருந்த காசில் கொஞ்சம் கொடுத்தேன். என் கையைப் பிடிச்சுக் கண்ணில் ஒத்திண்டு வாங்கிட்டுப் போனான். அவனைப் பார்த்தது மனசுக்கு ரொம்பவுமே கஷ்டமா இருந்துச்சுடா"
"அவனுக்குத்தான் பென்சன் வருமே. ரிடைர்மென்ட் செட்டில்மெண்ட் பணமெல்லாம் என்னாச்சு ?"
"மூணு பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்ததில் எல்லாம் காலி. பையன் கல்யாணத்துக்கு வாங்கிய கடனை பென்சன் பணத்தி லிருந்து குடுக்கிறானாம்"
"பையன் கல்யாணத்துக்கு இவன் ஏன் கடன் வாங்கினான் "
"பொண்ணுக்குப் புடவை, திருமாங்கல்யம் விருந்து செலவு அதுஇதுன்னு பையனுங்க கல்யாணத்துக்கும் பணம் தேவைப் படுதே. பொண்ணுங்க வீட்டில் கேட்டு வாங்கினா, ' உன் பையனை இத்தனை லட்சம் குடுத்து நான் வாங்கிட்டேன்,இனிமே எல்லா உரிமையும் எனக்குதான்னு வீட்டுக்கு வந்த மறுநாளே மருமகள் சொல்லிடறா. பிறகு எப்படிக் கடனை அடைக்கிறது ?"
இதைக் கேட்டு அமைதியாக இருந்தார் வெங்கடேசன்
"நீ ஏண்டா சைலென்ட் ஆகிட்டே ? உனக்குத்தான் பிள்ளை இல்லை. பொண்ணை நல்ல இடத்திலே கட்டிக் குடுத்திட்டியே. பிறகு என்ன கவலை ?"
"நாமெல்லாம் கவர்மெண்ட் சர்வெண்ட்ன்னு பேர். வேலை பார்த்த காலத்தில் எதையும் மிச்சம் பிடிச்சு வைக்கலே . வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு. செலவை சமாளிக்க முடியாமே எத்தனை பேர் வெட்கத்தை விட்டு 'என்னைக் கவனியுங்க'னு சொல்லி ஆபீசுக்கு வந்த வங்க போனவங்க கிட்டே கை நீட்டிக் காசு கேட்டிருக்காங்க.இன்னும் கேட்டு கிட்டு இருக்கிறாங்க"
"ஏண்டா .. நமக்கும்தான் குடும்பம் இருந்துச்சு .. செலவு இருந்துச்சு . நாம யாரிட்டே கையேந்தினோம். காசு இல்லாத சமயத்தில் பட்டினியா படுக்க பழகியிருந்தோம் தானே? அது ஏன் அவனுகளுக்கு இல்லாமே போச்சு "
"ஒரு குழந்தையை சாதாரண ஸ்கூலில் சேர்க்கவே அம்பதாயிரம் அறுபதாயிரம்னு செலவாகுது. மாசசம்பளக்காரன் அவ்வளவு பணத்தை கையில் வச்சிட்டா இருப்பான்? தேவைக்குக் கையேந்துறான். கத்தியை காட்டாமே கை ஏந்தறானேனு நினைச்சு சந்தோசப் படணும் "
"அப்படின்னா வேலைக்குக் கூலியா சம்பளமும் வாங்கிகிட்டு அந்த வேலையை செஞ்சு குடுத்ததுக்காக பார்ட்டிகிட்டே பணம் வாங்கிறது சரியா ?"
"அதைப் பத்தியெல்லாம் நான் பேசவே தயாரில்லே. நாம உழைச்சோம் ரிடைர் ஆனோம். பென்சன் வருது சந்தோசமா இருப்போம். நாம இறந்து போனாலும் நம்ம மனைவிக்கு அவங்க ஆயுட்காலம் முழுக்க பென்சன் வரும். கௌரவமா பொழைச்சுக்குவாங்க. இரண்டாயிரத்து நாலுக்குப் பிறகு வேலையில் சேர்ந்தவங்களுக்கு பென்சன் எதுவும் கிடையாதுங் கிறப்போ அந்தக் குடும்பங்கள் எப்படிப் பிழைக்கும் ?"
"அதான் செட்டில்மெண்ட் பணம் வருமே "
"செட்டில்மெண்ட் பணமும் ஐஸ் கட்டியும் ஒண்ணுதான். அது எப்போ எப்படிக் கரையும்னே சொல்ல முடியாது. வாழ்நாள் முழுக்க அதைப் பாது காக்கிற சாமர்த்தியம் எத்தனை பேருக்கு இருக்கும் ?"
அமைதியாக இருந்தார் ராஜாராம்
"ஒரு செர்வண்ட் .. அவன் ரிடைர் ஆனபிறகும் பட்டினி கிடக்காமே தன்மானத்தோடு பிழைக்கணும் .. அவன் இறந்தால்கூட அவன் குடும்பம் கௌரவமா வாழணும்னு ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவர் நினைச்சுப் பார்த்து பென்சன் திட்டத்தைக் கொண்டு வந்திருக்காங்க. அவங்க புண்ணியத்தில் நாம பட்டினி கிடக்காமே யார் கிட்டேயும் கையேந்தாமே கௌரவமா இருக்கிறோம். இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வரணும்னு நினைச்ச அந்த புண்ணியவாளன் யாருடா ?"
"அது கண்டிப்பா ஒரு வெள்ளைக்காரனாகத்தான் இருக்கணும். அப்போ இந்தியாவை ஆண்டவங்க அவங்கதானே "
"இந்தக் கதையெல்லாம் வேண்டாம். பர்டிகுலரா இன்னார்தான்னு சொல்லு "
"அது தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போறே ?"
"மற்றவங்களை வாழ வைக்கிறவங்க கடவுளுக்கு சமம்னு நீ சொல்றே . அப்படி வாழ வைக்கிறவங்கதான் கடவுள்ன்னு உன் பையன் சொல்றதா சொல்றே. யாரோ ஒருத்தர் கொண்டு வந்த பென்சன் திட்டத்தாலே நாம சந்தோசமா இருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு அது கிடையாது. நம்மள வாழ வைக்கிற அந்தப் புண்ணியவாளன் படத்தை வீட்டில் வச்சுக் கும்பிடனும் " என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னார் வெங்கடேசன்.
பின்குறிப்பு : அவருக்கு மட்டுமில்லே. எனக்குமே இந்தக் கேள்விக்கு விடை தேவை . நான் ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்கிறேன் : "நல்ல வேளை. நமக்கு மாசம் பதினாலாயிரம் ரூபாய் பென்சன் வருது . கடன் வாங்காமல் காலம் தள்ளுகிறோம். இதுவும் இல்லாவிட்டால் நமது நிலைமை என்னவாகும்? இளைஞர்களே வேலை தேடிப் பறந்து கொண்டிருக்க, நமக்கு யார் வேலை கொடுப்பார்கள்?அப்படியே கொடுத்தாலும் வயதான காலத்தில் வாங்குகிற சம்பளத்துக்கு உழைக்க நம்மால் முடியுமா என்றெல்லாம் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த திட்டத்துக்கு முதலில் "பிள்ளையார் சுழி " போட்டது யார் என்பது தெரிந்தாலோ, அவரது புகைப்படம் கிடைத்தாலோ அதை எனக்குத் தயவுசெய்து தெரிவிக்கவும்
For contact : arunasshanmugam@gmail,com
No comments:
Post a Comment