Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 07, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 105

                                 இது நியமம் - OK !  நியாயமா !!??

உஷ் . அப்பாடா ... ஒரு வழியா வீடு கிளீனிங் வேலை முடிஞ்சுது. உலர்ந்த துணியை மடித்து வைக்கலாம் என்ற நினைப்பில், கம்பிக் கொடி யிலிருந்து துணிகளை எடுத்து வந்த மரகதம்,  டீவீ பார்த்துக் கொண்டு துணிகளை மடிக்கலாம் என்ற நினைப்பில் டீவீயை ஆன் பண்ணவும் கரண்ட் போகவும் சரியாக இருந்தது. ச்சே .. ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து டீவீ பார்க்கலாம் என்று பார்த்தால் அதற்க்குக் கூட கொடுப்பினை இல்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். ஒவ்வொருத்தர் எவ்வளவு பெரிய விஷயங்களைக் கூட என்னவொரு அசால்ட்டா செஞ்சு முடிச்சிடறாங்க. எதை எதையோ அனுபவிக்கிறாங்க. நாம நினைக்கிற சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு " பெப்பே " காட்டுதே என்ற சுய பச்சாதாபம் எழுந்தாலும்,  அவங்க வாங்கி வந்த வரம் அப்படி ; நான் வாங்கி வந்த சாபம் இப்படி என்று தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
"மாமி உங்காத்திலே கரெண்ட் இருக்கா ? " என்ற பத்மாவின் குரல் கேட்டு வெளியில் வந்த மரகதம், " இல்லே இன்றைக்கு மூணு ஸ்பேசுமே   போயிட்டு போலிருக்கு. கோடை ஆரம்பிக்கும் முன்னாடியே இந்த அமர்க்களம். கத்திரியை எப்படி சமாளிக்கப் போகிறோமோ தெரியலை. வா .. பத்மா .. உள்ளே வந்து உட்கார் ... வேலை பார்க்கிறதா இருந்தாலும், பொழுது போக்கிறதா இருந்தாலும் கரெண்ட் வந்தாத் தானே முடியும் " என்று சொல்ல, ஈரக் கையை புடவைத் தலைப்பில் துடைத்தபடி உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்த பத்மா, "கிரைண்டரில் மாவு ஆட்டிட்டு இருந்தேன். அரிசிமாவை பாத்திரத்தில் அள்ளிப் போட்டுட்டு ருக்கறச்சே கரெண்ட் போயிட்டுது. இனி எப்போ மற்ற வேலையை முடிக்கிறது? " என்றாள்.
"இந்த மாச சீட்டுப்பணத்தை நீ எடுக்கப் போறதா ராகவன் ஸார் கிட்டே சொன்னியாமே.ரெண்டாவது பொண்ணு "பெரிய மனுஷி" லிஸ்டில்  சேர தயாரா இருக்கிறாளே. விசேஷம் பண்ண முன்னேற்பாடா பணத்தை ரெடி பண்றியா ? "
"ஐயய்யோ .. இல்லை மாமீ  .. பெரியவளுக்கு விசேஷம் பண்ணின கடனே இன்னும் அடைபடலே . கடன் குடுத்தவன்  மென்னியைப் பிடிக்கிறான். அவன் வாயை அடைக்கத்தான் இந்த மாச சீட்டுப்பணம் எனக்கு வேணும் னு முன்னாடியே சொல்லி வச்சேன். இந்தப் பொண்ணு "பெரியவ" ஆனாக் கூட விசேஷம் பண்ற ஐடியா எல்லாம் எதுவும் கிடையாது. மூத்தவளுக்கு ப்  பண்ணியாச்சு .. அது போதும் "
"என்னடி இப்படி சொல்றே ?.. அக்காவுக்கு எல்லாம் பண்ணினாங்க. எனக்கு எதுவும் செய்யலையேன்னு  உன்னோட சின்னப் பொண்ணு கோபப்பட மாட்டாளா ?"
"தலைச்சன் பிள்ளைக்கு எல்லாமே செய்யறது நம்ம வழக்கம் ஆச்சே மாமி. நமக்கு வளைகாப்பு, குழந்தை பிறந்ததும் புண்ணியா ஸ்நானம், அப்புறம் ஓராண்டு நிறைந்சதும் பிறந்தநாள் காது குத்து எல்லாமே தலைச்சன் பிள்ளைக்குத் தானே செய்றோம். அதுதானே வழக்கம்"
" வழக்கம் சரி ... அதை யார் ஏற்படுத்தினா ? நாமதானே !. நம்ம வசதிக்காக ஒரு குழந்தைக்கு எல்லாத்தையும் பண்ணிப் பார்த்துட்டு அடுத்த குழந்தைக்கு எதுவும் வேணாம்னு நாமளே முடிவு பண்ணிட்டா எப்படி பத்மா ? நம்ம குழந்தைங்க கிட்டே நாம பாரபட்சம் காட்டற மாதிரிதானே ஆயிடுது. இப்போ உங்க மூத்த பொண்ணோட முதல் வயசு பிறந்த நாள் விழா போட்டோ இருக்கும்தானே ... அதை உங்க சின்னப் பொண்ணு பார்ப்பாதானே ? "
" சண்டையே போடுவா மாமி. "என்னை ஏன் போட்டோ எடுக்கலே. சின்னக் குழந்தைன்னு ஏமாத்திட்டீ ங்க"ன்னு ஒரு மூச்சு அழுது ஓய்வா " என்று அழுகின்ற  குரலில் சொன்னாள் பத்மா 
"பத்மா .. நான் ஒண்ணு சொல்றேன் .. கேட்டுக்கோ ... எங்க வீட்டு ராமாயணத்தை சொல்றேன்.  எங்க மாமனார் மாமியார்க்கு மூன்று குழந்தைங்க. எங்காத்துக்காரர்தான் தலைச்சன். அந்தக் காலத்தில் எங்க மாமனார்கிட்டே அப்படியொன்னும் வசதி இல்லையாம். இருந்தாலும் கடனை உடனை வாங்கி  " ஆண்டு நிறைவு ", "பூணூல் "ன்னு இவருக்கு மட்டுமே பெரிசா பண்ணியிருக்கிறா .. மத்த ரெண்டு பையன்களுக்கும் கோவிலில் வச்சு ஏதோ சிம்பிளா கடமையை செஞ்சு விட்டுட்டா. இவங்க மூணு பேரும் வளர்ந்து பெரிசாகி விவரம் தெரியற பக்குவம் வந்ததும், இவரோட தம்பிங்க ரெண்டு பேரும் பெத்தவாளை மதிக்கிறதே கிடையாதாம். ஏதாவது சொன்னாக் கூட 'எங்ககிட்டே ஏன் சொல்றீங்க. உங்க மூத்த பிள்ளை கிட்டே சொல்லுங்கோ'ன்னு சண்டை பிடிப்பாங்க ளாம். அதுவே அவங்க மனசிலே ஒரு வன்மம் மாதிரி வளர்ந்து, இவரைக் கண்டாலே பிடிக்காதுங்கிற  நிலைமையில் கொண்டு போய் விட்டுட்டுது ஆனாலும்  அந்த வன்மமே  ஒரு வெறியா மாறி வாழ்க்கையில் மேலே மேலே முன்னேறணும். ஆனா பெத்தவங்க தயவாலே அது இருக்கக் கூடாதுங்கிற வைராக்கியத்தையும் தந்திருக்குது. அது நல்ல விஷயம் தான். ஆனா அவங்க ரெண்டு பேரும் எங்களையோ, என் மாமனார் மாமியாரையோ மதிக்கிறதே கிடையாது. படிச்சு நல்லா முன்னுக்கு வந்து நல்ல வேலையைத் தேடிட்டு அவங்க விருப்பபடி கல்யாணமும் பண்ணிகிட்டாங்க. கல்யாணத்துக்கு வாங்கனு பேருக்கு ஒரு வார்த்தை எங்களைக் கூப்பிட்டாங்களே தவிர, 'இது இதை' செய்யலாமா கூடாதானு ஒரு வார்த்தை கூட யாரையும் கேட்கலே . எதோ மூணாவது மனுஷங்க மாதிரி கல்யாண வீட்டில் போய் நின்னுட்டு வந்தோம். ரெண்டு வருஷம் முன்னாடி எங்க மாமியாருக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ண வேண்டி வந்தது. எங்க கையில் போதுமான வசதியில்லே. அவங்க ரெண்டு பேரிடமும்  கேட்டதுக்கு ' எல்லாக் கடமையும் மூத்த பிள்ளைக்குத் தான் இருக்கு. நாங்க செய்யாமே விட்டுட்டா தர்மமோ நியாயமோ எங்களைத் தண்டிக்காது'ன்னு  அடாவடியா பேசி  எங்க மனசை ரணப் படுத்திட்டாங்க பெத்தவங்களோட  பொருளாதார வசதி தெரிஞ்சு பிள்ளைகளாக எதையும் பெரிசா எடுத்துக்காமே இருக்கப் பழகிட் டாங்கன்னா பிரச்சினை இல்லே. பேதம் பிரிச்சுப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா அப்புறம் வீடு,   வீடாக இருக்காது. சண்டை சச்சரவுன்னு நிம்மதி இல்லாமே போயிடும். இப்போக் கூட ஒரு விளம்பரம் வருதே  டீவீயிலே, "அண்ணனுக்குக் குடுத்த  பாக்கெட்டில் அத்தனை இருந்துச்சு. எனக்குக் குடுத்ததிலே குறைச்சலா இருந்துச்சு. அதனாலே நான் போறேன்னு ". அது வெறும் விளம்பரம் இல்லே. பெத்தவங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்தக் கால குழந்தைங்க  மனசு எது எதை எப்படி யோசிக்கும்னு யாராலும் கண்டுபிடிக்க முடியறதில்லே. அந்தக்காலத்தில் பத்துக் குழந்தைங்களை பெத்து வளர்த்தவங்க வீட்டில்கூட    சொத்துக்காக எப்பவாவது சண்டை வரும். இப்போ ரெண்டு குழந்தைங்க இருக்கிற வீட்டில் கூட அல்ப விஷயத்துக்குக் கூட  சண்டை வருது. அது அவங்க தப்பா, இல்லாட்டி அவங்களை அந்த சூழ்நிலைக்குக் கொண்டு வந்துட்ட நம்ம தப்பான்னு தெரியலே. அப்படியிருக்கிறச்சே  இருக்கிற ரெண்டு குழந்தைகளில் இதுக்கு  இது போதும்னு நீயே ஏன் பேதம் பிரிச்சுப் பார்க்கிறே  ? ரெண்டு பேரையும் சமமா நடத்தப் பாரு. எங்க வீட்டு அனுபவத்தை வச்சு நான் சொல்றேன். கேட்டுக்கிறதும் கேட்காததும் உன் விருப்பம் " என்றாள்  மரகதம்.
"நீங்க சொல்றது சரிதான் மாமி .. என் சின்னப் பொண்ணு இருக்கிறாளே அவளுக்கு கோபம் எப்பவும் மூக்கு நுனியில்தான் இருக்கும். எங்களுக்கு வயசாகி ஏதோ ஒரு சூழ்நிலையில் அவ வீட்டில் போய் நின்றால் , "உங்க மூத்த பொண்ணுக்குத் தானே ஓடி ஓடி செஞ்சீங்க. சந்தோசத்தைக் கொண்டாட பெரிய பொண்ணு வேண்டும். சங்கடத்தைப் பங்கு போட்டுக்க ரெண்டு பொண்ணுகளும் வேணுமா? அதுக்கு வேறே ஆளைப் பாருங்க" ன்னு  நாக்கில் நரம்பில்லாமே ராட்ஷஷி மாதிரி பேசுவா " என்று நலிந்த குரலில் சொன்னாள்  பத்மா. சொல்லும்போதே குழந்தைகளின் பக்கமுள்ள நியாயத்தையும்  மனம் எடை போட்டது.   

No comments:

Post a Comment