Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 28, 2014

Scanning of inner - heart (Scan Report Number - 104 )

பேசுங்க .. மனம் விட்டுப் பேசுங்க ... மனசறிஞ்சு பேசுங்க !!

"ஏண்டீ, வசு, உன் பொண்ணுகிட்டே என்ன ஏதுன்னு விசாரிச்சியா ? " என்று ஈனஸ்வரத்தில் முனகியபடி கேட்டாள் காமாட்சி.
"கேட்டால் மட்டும் ... ? அப்படியே வாய் திறந்து என்ன எதுன்னு சொல்லிடப்  போறாளா என்ன ? " என்ற எதிர்க்கேள்வி பிறந்தது வசுமதி யிடமிருந்து .
"நீ சாதாரணமா சொல்லிட்டே. எனக்குதான் மனசு கிடந்து அடிச்சுக்குது. லீவு நாளில் அவ இங்கே காலையில் வந்தால், சாயங் காலமே அவளைத் தேடி வர்ற சேகர் மாப்பிள்ளை, இவ இங்கே வந்து மூணு நாள் ஆன பிறகு  கூட இன்னும் இங்கே வந்து எட்டிப் பார்க்கலைனா அதுக்கு என்னடி அர்த்தம் ? ஏதாவது பிரச்சனைன்னா நாம பேசித் தீர்க்க வேண்டாமா ? "
"அத்தே நீங்க சொல்றது எனக்குப் புரியுதுதான் . ஆனா நம்ம துடிப்பை அவ புரிஞ்சுக்க மாட்டா .  அவ மயிலு .."
"அதென்னடி மயிலு ? "
"உருவத்தில் பெரிசா இருக்கிற யானையை ஒரு சின்ன அங்குசத்தை வச்சு  ஆட்டிப் படைக்கலாம். எல்லாரையும் நடுங்க வைக்கிற சிங்கத்தை சர்க்கஸில் ஆட்டிப் படைக்கிறாங்க, ஒரு சாட்டையைக்காட்டி. பறவை களில் டான்சுக்குப் பேர் போனது மயில்தானே. ஆனால்  அதை அவ்வளவு சீக்கிரம் நமக்கு வேணுங்கிற நேரத்தில் ஆட வைக்க முடியாது. மேகத்தை கண்டால் ஆடும். இல்லாட்டி அதுக்கு மூட் இருக்கிறப்போ ஆடும்.உங்க பேத்தி கிட்டேயிருந்து அவளா விரும்பாமே நாமா எந்த விஷயத்தையும் அவ்வளவு சீக்கிரம் வாங்கிட முடியாது. அவ மயில் மாதிரி. அவளுக்கா தோணுச்சுனா, உப்பு சப்பில்லாத குப்பை மேட்டரைக் கூட நம்ம கிட்டே வண்டி வண்டியா சொல்லுவா. அவ கழுத்தில் கத்தி வச்சு கேட்டால்கூட அவ சொல்ல விரும்பாத எதையும் வெளியில் சொல்ல மாட்டா "
"அப்ப என்னதான் பண்றது . உங்களுக்குள்ளே ஏதாச்சும் தகராறான்னு மாப்பிள்ளை கிட்டே கேட்க முடியாது. அந்த வீட்டில் பெரியவங்கன்னு யாரும் இல்லே. இவளா எதையும் வாயைத் திறந்து சொல்ல மாட்டா . அப்படின்னா இதுக்கு என்னதான் முடிவு ? "
"அத்தே, நானே குழப்பத்தில் இருக்கிறேன். என்னைக் கேள்வி கேட்டு குழப்பறத விட உங்க பேத்தி கிட்டே கேட்டீங்கன்னா புண்ணியமாப் போகும். இப்போ என்னை ஆளை விடுங்க " என்றாள் வசுமதி.
ஞாயிற்றுக் கிழமை. வீடே டீவீ முன்னால் தவம் கிடந்தது, இன்னும் சற்று நேரத்தில் மகா பாரதம் ஆரம்பித்து விடுமென்று !
"சொக்கட்டான் ஆட்டத்தில் ஒரு குடும்பம் பிரிஞ்சுது. இதே சொக்கட்டான் ஆட்டம் ஒரு குடும்பத்தை  சேர்த்து வச்சிருக்கு .. எந்த விஷயத்திலும் நல்லது கெட்டது இருக்கு . எல்லாம் நாம் எடுத்துக்கிற விதத்தில்தான் இருக்கு  " என்று காமாட்சி சொல்லிக் கொண்டிருக்கும்போது " ஓ " சத்தம் எல்லோரிடமிருந்தும் வெளிப்பட்டது.
"என்னப்பா ? " என்றபடி மூடியிருந்த கண்களை விழித்துப் பார்த்தாள் காமாட்சி  
"நல்ல சமயத்தில் கரெண்ட் கட் ஆயிடுச்சு. இனிமே எப்போ வரும்னு தோணலியே " என்று அங்கலாய்த்தாள் வசுமதி.
" சரி கரெண்ட் வர்ற வரை போரடிக்காமே இருக்க அந்த சொக்கட்டான் கதையை சொல்லேன் பாட்டி " என்றாள்  கீதா.
" என்ன கதை ? "
"இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னியே, இதே சொக்கட்டான் ஆட்டம் ஒரு குடும்பத்தை  சேர்த்து வச்சிருக்குன்னு.. அந்தக் கதையை சொல்லேன் பாட்டி  "
" ஓ . அதுவா ? ..  அது வந்து ... ஒரு ராஜா ஒரு ராணி ஒரு மந்திரி. ராஜாவும் மந்திரியும் உசுருக்கு உசுரா பழகிற  நண்பன்க. ராஜா ரொம்ப நல்லவர். நேர்மை தவறாத பேர்வழி. எந்தவொரு சங்கதின்னாலும் அதை ராஜா வோட அந்தப்புரத்திலேயே போய் பேசற அளவுக்கு அந்த மந்திரிக்கு அந்த ராஜா அனுமதி குடுத்து வச்சிருந்தார். ஒருநா ஒரு முக்கியமான விஷயம் பத்திப் பேச மந்திரி ரொம்ப வேகமா அந்தப்புரத்துக்குள்ளே  போனார். அங்கே ராணி சிரிக்கிற சத்தம் வாசல் வரை கேட்டுச்சு. சரி ..  புருஷன் பொண்டாட்டி சந்தோசமா இருக்கிறப்போ அங்கே நிக்கிறதே தப்பு. குரல் கொடுத்துக் கூப்பிட்டு  நாம நந்தி மாதிரி குறுக்கே போய்  நிக்க வேண்டாம்னு நினைச்சுகிட்டு வந்த வழியே திரும்பிப் போயிட்டார். போறவரு, போகிற அவசரத்தில் வாசலில் கழட்டிப் போட்டிருந்த செருப்பை போட மறந்து வெறுங்காலோட நடந்து போறாரு. இந்த சமயம் நந்தவனத்திலிருந்த ராஜா அந்தப்புரத்துக்குள்ளே வாராரு. ராணியோட சிரிப்பு சத்தம்.. " என்ன இது விளையாட்டு ?  அரசர் வாற நேரமாச்சு. முதல்லே இங்கிருந்து போங்க " என்று சொல்லும் சத்தம் கேட்குது ராஜாவுக்கு. ஒரு நிமிஷம் நிக்கிறாரு. அந்த இடத்திலே மந்திரியோட செருப்பு .. ஒரு நொடியில் நிலைகுலைஞ்சு போன ராஜா வந்த சுவடு தெரியாமே அங்கிருந்து போயிட்டாரு. திடீர்னு காலில் கல் இடற, அப்பத்தான் தான் செருப்பைப் போட மறந்த விஷயம் நினைவுக்கு வந்த மந்திரி திரும்ப வந்து காலில் செருப்பை மாட்டிக் கிட்டு போறாரு. மந்திரி உள்ளே நுழைஞ்சதை  கவனிக்காத ராஜா, அவர் திரும்பிப் போறதை மட்டும் கவனிக்கிறாரு. மந்திரி வந்ததோ, திரும்பிப் போனதோ ராஜா வந்ததோ திரும்பிப் போனதோ, மந்திரி திரும்ப வந்த செருப்பை மாட்டிக் கிட்டு போனதோ ... இது எதுவுமே தெரிஞ்சுக்காமே, ராணி தன்னோட சினேகிதிகளோட விளையாடிட்டு இருக்கிறா .. "
"அப்புறம் என்னாச்சு ? " என்று கேட்டாள் வசுமதி கதையில் லயித்துப் போனவளாக.
" என்ன ஆகும் ? ராஜா மனசிலே ஒரு சந்தேகம் விழுந்துட்டுது. அது சரியா தப்பான்னு தெரியாமே தவிக்கிறாரு. இதைப் பத்தி ராணி கிட்டேயும் ஏதும்  பேசலே .  நண்பன் கிட்டேயும் எதுவும் பேசலே. மந்திரிகிட்டே முன்னே மாதிரி மனம் விட்டுப் பழகாமே அதே சமயம் அவரை பகைன்னு நினைக்காமலும் இருந்துட்டு வர்றாரு. ராணியோட முகம் பார்த்துப் பேசறதை நிறுத்திட்டாரு. ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் செய்ய வேண்டிய கடமையிலிருந்து மாறலே ராஜா போக்கு மாறிப் போயிருக்கு ன்னு ராணி மந்திரி ரெண்டு பேருக்குமே தெரியுது .. ஆனா அது எதுனாலே ன்னு தெரியலே..  நவக்கிரகம் ஒன்பதும் ஒரே இடத்திலே இருந்துகிட்டு ஒண்ணை  ஒண்ணு பார்க்காமே மூஞ்சியைத் திருப்பிகிட்டு நிக்குமே .. அந்த மாதிரி மூணு பேரும்  இருக்காங்க. ராணி மனசுலே என்ன நினைப்புன்னா, அன்னிக்கு ராஜா வர்ற நேரத்திலே நம்ம தோழிகளோட சிரித்துப் பேசி விளையாடியது  அவருக்குப் பிடிக்கலையோ என்னவோ ஒருநாளும் தோழிகளை படுக்கை அறைக்குள் விடாத நான் அன்னிக்கு அப்படி செஞ்சது ராஜாவுக்கு பிடிக்கலையோ என்னவோ. அப்படியே பிடிக்காமே இருந்தால் என்னைக் கூப்பிட்டு கண்டிச்சிருக்கலாமே . அது என்ன முகத்தைத் திருப்பி கிட்டு போகிற பழக்கம். தோழிகளோடு விளையாடியது ஒரு தப்பா ? நான் எந்தத் தப்பும்  பண்ணாத நான் எதற்காகப் போய் அவரிடம் பேசணும். அவராகப் பேசினால் பேசட்டும் . இல்லாட்டி எப்போதுதான் பேசறார்னு பார்க்கலாம். என் உடம்பிலும் ராஜ பரம்பரை ரத்தம் தானே ஓடுதுன்னு  ஒரு வீராப்பில் இருக்கிறா. இப்படியே பன்னிரண்டு வருஷம் ஓடிப் போச்சு..."
"பிறகு அது எப்பத்தான் சரியாச்சு ? எப்படி சரியாச்சு ? " என்று ஆவலாகக் கேட்டாள் கீதா 
"ஒருநா ராணியோட அப்பா அந்த அரண்மனைக்கு வாராரு. வந்து கொஞ்ச நாள் தங்குறாரு. வழக்கமா மகளைப் பார்க்க அப்பப்போ வருவார். உடனே திரும்பிப் போவார். இந்த தடவை வந்தவர் அங்கேயே தங்கிட்டார். தங்கின மொத நாள்லேயே அங்கே சூழ்நிலை சரியில்லை ன்னு புரிஞ்சு கிட்டார். வேலைக் காரங்க கிட்டே விசாரிச்சார். அவங்க " கிட்டத்தட்ட ஒரு பன்னிரண்டு வருசமா இப்படித்தான் இந்த அரண்மனை சூனியம் பிடிச்சுக் கிடக்கு"ன்னு பதில் சொன்னாங்க. பிறகு நடத்தின விசாரணையில்  ராஜா ராணி மந்திரியை சுத்தி எதோ கதை ஓடுதுனும் புரிஞ்சுகிட்டார். எடுத்த எடுப்பிலேயே உங்களுக்குள் என்ன பிரச்சினை ன்னு கேட்டுட முடியாதே.அதனாலே சொக்கட்டான் ஆட்டம் ஆடலாம்னு ராஜாவை அழைச்சார். ராஜா வந்து வெளையாட உக்காந்ததும் இந்த ஆட்டத்தை நாலு பேர் சேர்ந்து ஆடினா நல்லா இருக்கும்னு சொல்லி தன்னோட மகளைக் கூப்பிட்டார்.மந்திரி வீட்டுக்கு ஆளனுப்பி அவரையும்  வர சொன்னார்.விளையாட்டு தொடங்குச்சு. சொக்கட்டான் ஆடறவங்க ஏதாவது ஒரு கேள்வியைப் பாட்டாகப் பாடிகிட்டு காயை உருட்டுவாங்க. அந்தக் கேள்விக்கு பாட்டாலேயே பதில் சொல்வார் அடுத்தாப்லே காயை உருட்டும் ஆசாமி. அந்த மாதிரி, ராணியோட அப்பா காயைக்   கையில் உருட்டிகிட்டே, " வாழுங் குலக் கன்று வாழாதிருப்ப தென்ன  வருஷம் பன்னிரண்டு ? " என்று கேட்டு காயை ராஜா பக்கம் உருட்டினார். கேள்வியோட உள்ளர்த்தத்தைப் புரிஞ்சுகிட்ட ராஜா " அன்பு   மனையாளின் படுக்கையறையில் சங்கீத சிரிப்பொலி. அந்தப்புர வாசலில் ஆணின் காலணி. அறைக்குள் சிரிப்பொலி கேட்டேன் அடுத்து நடந்ததறியேன் " என்று சொல்லி, காயை மந்திரியின் பக்கம் உருட்டினார் அதுவரை நடந்த சம்பவங்களைக் கோர்த்துப் பார்த்த மந்திரி பதறிப் போய் " அன்பு நண்பன் மனைவியிடம் அன்னையென்ற நினைவு தவிர அடுத்த நினைப்பு வந்தறியேன். அறைக்குள் சிரிப்பொலி கேட்டு, அரசர் அங்கே இருப்பதாக  நினைத்து அங்கிருந்து நகர்ந்தேன். கணவன் மனைவி இருக்கும் இடத்தில் நிற்பதே தவறென்று நினைத்து அவசரமாக அங்கிருந்து போனேன். போகிற அவசரத்தில் காலணியை அணிய மறந்து போனேன் . மறதியாய் விட்ட காலணி மற்றவர் வாழ்க்கைக்கு எமனாய் மாறுமென்று கனவிலும் நினைத்ததில்லை. சிரிப்புக்குக் காரணத்தை சிரித்தவர்தான் சொல்லவேண்டும்  " என்று சொல்லி ராணியின் பக்கமா காயை உருட்டினார் மந்திரி. ராணியும் மகா புத்திசாலியாச்சே. ராஜாவின் பாராமுகத்தைத்தான் அவள் விரல் நுனியில் கணக்கில்  வச்சிருக்கிறா ளே. ரெண்டு பேர் சொன்னதையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்து ," பொம்பளை சிரிச்சாப் போச்சு .. பொது இடங்களில் பெண்கள் வாய் விட்டு சிரிக்கக் கூடாதுன்னு மற்றவங்க சொல்லக் கேட்டு இருக்கிறேன். என்னோட படுக்கை அறையில் என்னுடைய தோழிகளோடு சேர்ந்து நான்  சிரிச்ச சிரிப்பு இவ்வளவு பெரிய விவகாரம் ஆகும்னு நினைக்கவில்லை. அறைக்குள் இருந்த எனக்கு அரசர் வந்ததும் தெரியாது . மந்திரி வந்ததும் தெரியாது. அரசரின் கோபத்துக்கான காரணமும் தெரியாது. ஒரு ஆண்மகன் கோபத்தில் இருந்தால் மனைவியானவள் அதற்க்கான காரணத்தைக் கேட்டறிய வேண்டும். அதை விட்டு விட்டு உனக்கு நான் கொஞ்சமும் குறைந்தவள் இல்லை. நான் இறங்கி வரமாட்டேன் . வேண்டுமானால் நீ இறங்கி வா என்ற மனநிலையில் மமதையில் இருந்தது என்னோட தப்பு" ன்னு சொல்லி பகிரங்கமா மன்னிப்புக் கேட்டா ராணி. ஒரு வழியா அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி பழையபடி சந்தோசம் திரும்புச்சு. இவ்வளவு நாளும் சூனியம் சூழ்ந்திருந்ததற்கு என்ன காரணம் ? மனசில் நெருடல்னு ஒண்ணு வந்ததுமே அதைப் பத்தி மனம் விட்டுக் கேட்காமே  பேசாமே இருந்ததுதானே ... சில பிரச்சனை களை பேசித் தீர்க்கலாம். சில பிரச்சனைகள் யாரும் எதுவும் பேசாமல் இருந்தாலே தீர்ந்து விடும். பேச வேண்டிய நேரத்தில் அமைதியா இருக்கிறதும் தப்பு. அமைதியா இருக்க வேண்டிய நேரத்தில் வாய்க்கு வந்தபடி பேசறதும் தப்பு. இடம் பொருள் நேரமறிந்து பேசுன்னு அனுபவப் பட்டவங்க சொல்லியிருக்கிறாங்க  ..." என்று காமாட்சி சொல்லிக் கொண்டிருக்கும்போது, " நீ ஒரு நாளும் இப்படியெல்லாம் பேசினதே கிடையாதே பாட்டி . என்னவொரு கோர்வையா கதை சொல்றே! இந்தத் திறமையை இத்தனை நாளும் எங்கே ஒளிச்சு வச்சிருந்தே ? " என்று வியப்புடன் கேட்டாள் கீதா 
" என்னோட மாமியாரைப் பத்தி என்ன நினைச்சே ? அவங்க அந்தக் காலத்து பத்தாங் கிளாஸ்  தெரியுமா ? " என்று வசுமதி சொல்ல, " அதை அப்புறமா நேரங் கிடைக்கிறப்போ வந்து கேட்டுக்கிறேன். இப்போ நான் கிளம்பறேன்  என் வீட்டுக்கு " என்றாள் கீதா 
"என்னடி இது திடு திப்புன்னு ? "
"சேகர்கிட்டே பேசவேண்டிய விஷயம் நிறைய இருக்கு .. நான் கிளம்பறேன்  " என்று சொல்லிக் கிளம்ப ஆரம்பித்த கீதாவை மன நிறைவுடன் பார்த்தனர் காமாட்சியும் வசுமதியும் .

No comments:

Post a Comment