ஹாய் பிரெண்ட்ஸ்,
ரொம்ப நாளைக்குப்பிறகு சந்திக்கிறோம். எனக்குள் இருக்கும் சந்தேகம் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள். சரி என்று பட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். No argument.
"குலத்தொழில்" பற்றிய சர்ச்சை சமீபகாலமாக மீடியாக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
என்னுடைய கருத்து என்னவென்றால், ஒரு ஜாதியை சேர்ந்தவன் இந்த தொழிலை மட்டுமே செய்யவேண்டும். வேறு தொழிலில் தலையிடக்கூடாது என்று யாராவது சொன்னால் அது தண்டிக்கப்படவேண்டிய செயல்.
தனி மனிதன் அவனாக விரும்பி எனக்கு இந்த தொழிலில்தான் ஆர்வம் என்று சொல்லி அவனது பாட்டன் தாத்தன் தொழிலை செய்தால் அதை மற்றவர்கள் ஏன் தடுக்க வேண்டும். இதை நான் சொல்வதற்கான அனுபவ ரீதியான மூன்று காரணங்கள்.
1.என்னுடைய சிறுவயதில் எங்கள் வீட்டில் மரத்தினால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள் உண்டு.தயிர் மத்து, கீரை மத்து, மரவை ... இப்படி பல பொருட்கள் உண்டு. இதில் மரவை என்பது பேசின் போன்ற அமைப்புடைய ஒன்று. அதில் கீரையைக் கடைவார்கள். ஊறுகாயை அதில் போட்டு வைத்தால், சீக்கிரத்தில் கெட்டுப்போகாது என்று அதில் போட்டு வைப்பார்கள்.
சிறு வயதில் வீட்டில் இருந்த பொருட்கள், சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்காத ஒரு பொருளாகவே மாறிவிட்டது.
மரத்தினால் ஆன பொருட்களுக்கு ஃ பேமஸ் ஆன இடம் அம்பாசமுத்திரம் என்று சொல்வார்கள். அந்த ஊருக்குப் போயிருந்தபோது "மரவை" பற்றி விசாரித்தேன். ஒரு சிலருக்கு அது என்னவென்றே தெரியவில்லை. ஒரு கடைக்காரர் மட்டும், "அதெல்லாம் செய்ய இப்போ யாருக்கும் தெரியாது. தொழில் தெரிந்தவர்கள் எல்லோரும் போய்ச்சேர்ந்து விட்டார்கள். இப்போ அதை செய்கிறவர்கள் யாரும் கிடையாது " என்றார்
கண்ணைக்கவரும், வர்ணம் பூசிய அழகழகான பொருட்கள் அந்த ஊரில் இருந்தது. நான் தேடிய ஒன்று கிடைக்கவில்லை.
2. சிறுவயது முதலே (இப்படி சொல்வதன் காரணம், "இன்றுவரை" என்று அர்த்தம்.) எனக்கு பொம்மைகள் மீது ஆர்வம் அதிகம். அதுவும் ஒரு குறிப்பிட்ட பொம்மை மீது அப்படியொரு வெறி உண்டு.(நெட், YOU TUBE ல் (1) குவா குவா பாப்பா இவை குளிக்க காசு கேட்பா (2) வாயார முத்தம் தந்து வண்ணப்பிள்ளை கொஞ்சுது (3) முத்தான முத்தல்லவோ - இந்த பாடல்களை கிளிக் செய்து அந்த பொம்மையை பார்க்கமுடியும். ஒரு காலத்தில் வீதிக்கு வீதி மலிந்து கிடந்த அந்த பொம்மை, இன்று தேடினாலும் கிடைப்பதில்லை. நானும் வெளியூர் கோவில்களுக்கு செல்லும்போது, கோவில் வாசலில் உள்ள கடைகளில் அதை இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. கிடைக்கும் ஒரு பதில் _ "அந்த வேலை செஞ்சவங்க இப்போ யாரு இருக்கிறா சொல்லுங்க" என்பதுதான்.
3 வீடு கட்டும்போது வீட்டில் டைல்ஸ் வேண்டாம். மொஸைக் போடுங்கள் என்றேன்.அதற்கு பில்டர் "நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க. மொஸைக் போடற ஆளுங்க இப்போ யார் இருக்காங்க? தேடிக் கண்டுபிடிப்பது கஷ்டம். இப்போ எல்லா இடத்திலும் டைல்ஸ்தான்" என்றார்.
ஆக, இந்த தலைமுறையில் நான் பார்த்த விஷயங்களே, காணக்கிடைக்காத ஒன்றாகிவிட்டது. (இவை எல்லாமே அல்ப விஷயங்கள்தான்). இதே போல எத்தனையோ மதிப்பான விஷயங்கள் இருந்து அது நடைமுறை வாழ்க்கையில் மறைந்து போயிருக்கலாம்.
இப்போ ரோபோக்களின் செயல்பாடு அதிகமாகிவிட்டது. இன்னும் கொஞ்சநாட்களில் அவை சிலை வடிக்கக்கூட ஆரம்பித்து விடும். அப்படியொன்று மட்டும் நடந்துவிட்டால், "சிற்பியா ? யார் அவங்க ?' என்று வரப்போகும் தலைமுறை கேட்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை.
அதனால் பழமையை விரும்பி ஏற்றுக்கொண்டு அதை செய்பவர்களை ஆதரிக்கக் கற்றுக்கொள்வோம்.
No comments:
Post a Comment