என்னுடைய இந்த வேண்டுகோள் நல்ல எண்ணத்தோடு பதிவு செய்யப்பட்ட ஒன்று. இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில் அடிக்கடி காணப்படும் செய்தி, "ஜீ 20 மாநாட்டிற்காக" குடிசைப்பகுதிகளை மறைத்து வைத்தது பற்றித்தான்.
இதில் அப்படி என்ன குற்றம் இருக்கிறது என்பது புரியவில்லை.
ஒரு நடுத்தர குடும்பத்திற்கு, அவர்களை பற்றி நன்கு தெரிந்த ஒருவரோ பலரோ அந்த குடும்பத்தை ஏதோ ஒரு காரணத்துக்காக சந்திக்க வருவதாக இருந்தால், வீட்டினர் செய்யும் முதல் வேலை, அன்றாடம் வீடு முழுக்க பரந்து கிடக்கும் குப்பை, அழுக்கான சமாசாரங்களை ஒரு அறையில் போட்டு அடைத்து வைப்பது தான்.
ஒரு பள்ளிக்கு யாராவது ஒரு VIP வருவதாக இருந்தால் பளிச்சென்று உடை அணிந்து வந்திருக்கும் மாணவ மாணவியரைத்தான் முதல் வரிசைகளில் நிற்க வைப்பார்கள். இது நான் பள்ளி மாணவியாக இருந்தபோது எங்கள் பள்ளியில் அடிக்கடி நடக்கும் சாதாரண விஷயம்.
வாரக்கணக்கில் தெருவில் பரந்து கிடக்கும் குப்பைகளை, திடீரென்று சிலர் வந்து சுத்தம் செய்து ரோட்டின் இருபுறமும் ஒரு வெள்ளைப்பவுடரை தூவி விட்டுப்போகிறார்கள் என்றால், அந்த தெரு வழியாக யாரோ ஒரு அரசியல் பிரமுகர் பயணம் செல்லப்போகிறார் என்பதை யாரும் சொல்லாமலே அடிமுட்டாள் கூட புரிந்து கொள்ளலாம். (உங்கள் ஏழ்மை நிலையை மாற்றி உங்களை எல்லாம் மேல்மாடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கிறேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்த நபர் வந்தால் கூட அங்கிருக்கும் தரித்திர நிலையை அவர் வந்து போகும் வரை மறைத்து வைப்பது இன்று வரை நடக்கும் விஷயம்தான்.)
அப்படி இருக்க உலகத்தலைவர்கள் பலர் ஒன்று கூடும் இடத்தை அவர்கள் முகம் கோணாதபடி பளிச்சென்று வைப்பதில் எந்த தப்பும் இல்லையே. அவர்கள் முன்பு நம் நாட்டு கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள செய்யும் ஒரு சாதாரண செயல்தான் அது.
எத்தனை ஆயிரம் ஆனாலும் ஏழ்மையை வாயால் மட்டுமே ஒழிக்க முடியும். ஏதோ ஒரு வகையில் ஏதாவது ஒரு இடம் அடிபட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
கொரோனா என்று ஒரு நோய் வரும். அது உலகத்தையே புரட்டிப்போடும். பலரின் வேலை போகும். சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலை வருமென்று யாராவது கற்பனை செய்தாவது பார்த்ததுண்டா? இன்றோ உலகின் பல பகுதிகளில் புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம்.
எந்த நிமிடம் எது நடக்கும் என்று தெரியாத நிலையிலும் மற்றவர்கள் முன்பு நமது நாட்டின் சுயகெளரவத்தை விட்டுக் கொடுக்காமல் வந்தவர்களை நல்லபடியாக கவனித்து அனுப்புவதில் கவனம் செலுத்தினால், அதை பாராட்ட வேண்டாம். குறை சொல்வதை தவிர்க்கலாமே.
எந்த ஒரு நபரின் மீதும் அடுக்கப்படும் அற்பத்தனமான குற்றச்சாட்டுகள் அவர் மீது கோபம் ஏற்படுத்துவதற்குப்பதில் அவர்கள்மீது ஒரு நல்ல மதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment