Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 15, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 157)

Image result for  cartoon of  railway station bench of tamil nadu 

                                                இது சரியா ? முறையா ?
மற்ற நாட்களில் சீண்டுவாரற்றுக் கிடக்கும் ஏரிக்கரை மிகவும் பரபரப்புடன் இருந்தது. ஏரியில் தண்ணீர்னு ஒண்ணு இருந்தா குளிக்க, குடிதண்ணி எடுக்கன்னு ஜனங்க வந்து போவாங்க. ஏரிக்கரை தெரு என்ற பெயர் போர்டில் மட்டுந்தான் ஏரிக்கரை இருந்ததே தவிர அங்கு ஏரியும் இல்லை கரையும் இல்லை. வெறும் பொட்டல்காடு மட்டுந்தான் இருக்கிறது என்பது ஊரறிந்த ரகசியம்.
"இந்தப்புள்ளே இப்படிப் பண்ணிட்டானே.. அப்படியென்ன வெறுப்பு இந்த வயசிலேயே?" என்ற அங்கலாய்ப்பு எல்லாரிடமும் இருந்த அதேவேளையில் "இந்த சேதியை ரங்கநாதன்ஸார்க்கு  யார் போய் சொல்வது ?" என்ற கவலை தான் அதிகம் இருந்தது.
"பொண்டாட்டி செத்துப்போனபிறகுகூட இந்தப் புள்ளைக்காகத்தானே வேறே கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதமா இருந்து, பொம்பளைக்குப் பொம்புளை யா ஆம்பிளைக்கு ஆம்பிளையா இருந்து இவனை வளர்த்து ஆளாக்கினாரு. சாகிறதுக்கு முடிவெடுக்கிறப்ப இதுகூட நினைவிலே வரலையா? மனசை அறுக்கலையா? அப்படி என்னதான்யா பிரச்னை?" என்ற கேள்வியை சொல்லி வைத்தாற்போல  எல்லோருமே கிருஷ்ணகுமாரிடம்தான்  கேட்டார்கள்.
"தெரியலையே ஸார்.. ஆபீஸ் வேலையா டூர் போயிட்டு இன்னிக்கு காலைலே வீட்டுக்கு வந்தேன். எதுவானாலும் என்னிடம் மனசு விட்டுப் பேசுவார். ஆபீசில் ஆடிட் .. டூர்னு நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். ரங்கன் ஸாரைப் பார்த்தே கிட்டத்தட்ட இருபதுநாளுக்கு மேலே இருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயங்காலம் வழக்கம்போல நம்ம ஊர் ரயில்வேஸ்டேஷனில் பார்க்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ளே இப்படி ஆயிட்டுதே. அவருக்கு தகவல் போயாச்சா ?"
"இல்லே..இதை அவரிட்டே எப்படி சொல்றதுன்னு தெரியாமத்தான் எல்லாரும் அல்லாடிட்டு இருக்கிறோம். போலீஸுக்கு தகவல் போயிட்டுது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடுவாங்க. அதுக்கு முன்னே  புள்ளை செத்த விஷயத்தை ரங்கநாதன்ஸார்க்கு சொல்லியாகணும் .  நீங்க ஒருத்தர்தான் அவருக்கு ரொம்பவும் நெருங்கின சினேகிதம். அவரிட்டே பக்குவமா விஷயத்தை சொல்லி இங்கே அழைச்சிட்டு வந்திடுங்க " என்று ஊர் பெருந்தலைகள் சொன்னபோது கிருஷ்ணகுமாரால் மறுக்க முடியவில்லை. 
ஆனால் ரங்கநாதன் வீடு பூட்டப்பட்டிருந்தது. 
ஒருவேளை விஷயம் தெரிஞ்சு ஏரிக்கரைக்குப் போயிருப்பாரா ? இருக்காது. ஏரிக்கரைக்கு இது ஒண்ணுமட்டுந்தானே பாதை. நம்ம கண்ணிலே படாமே போயிருக்க சான்ஸ் இல்லே. கோயிலுக்கு? ஊஹூம்.. கோயில் நடை சாத்தி ரொம்ப நேரம் ஆகியிருக்குமே.. லீவுநாள்தானேனு ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பார்மில் உட்கார்ந்திருப்பாரோ ? எதுக்கும் ஒருநடை போயிட்டு வந்து விடலாம் என்ற முடிவுடன்  ஸ்டேஷனுக்கு வந்தார்.
"ஸார் .. மெயில் வர்ற நேரம். எங்கே போறீங்க ?" என்று கேட்டார் ஸ்டேஷன் மாஸ்டர். 
"ஸார் .. நான் என்ன இன்னிக்கு நேத்தா இங்கே வர்றோம். வழக்கமா காத்து வாங்க பிளாட் பார்ம் பெஞ்சில் உட்கார்ந்திருக்கிற கேஸுங்கதானே நாங்க. புதுசா சொல்றீங்களே ஸார்.. ஆமா .. என்னோட வருவாரே .. ரங்கநாதன்.. அவர் உங்க கண்ணில் எங்காவது பட்டாரா ?"
"அதோ .. அந்த மரத்தடி பெஞ்சில் இருக்கார் பாருங்க. வழக்கமா சாயங்காலம் வருவீங்க. இன்னிக்கு நேரங்கெட்ட நேரத்தில் வந்து இடம்பிடிச்சிட்டார் " என்று ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மரத்தடி பெஞ்சை நோக்கி ஓடினார் கிருஷ்ணகுமார்.
வானத்தை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தவரின் தோள்களைப் பிடித்து உலுக்கி, "இங்கே என்ன செய்றே ?" என்றார் 
"என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கிறேன் "
"யோசிக்கிறியா? டேய்.. உன்புள்ளை போயிட்டான்டா .. தற்கொலை பண்ணி ட்டான். பாடி ஏரிக்கரையில் இருக்குது.."
"அப்படியா ? தற்கொலைதானே பண்ணிக்கிட்டான் "
"என்னடா இது ? இப்படி இருக்கிறே ?"
"யாராவது ஒரு தீவிரவாதியை இல்லாட்டா தேசவிரோதியை மடக்கிப் பிடிக்கிறமுயற்சியில் தன்னோட  உயிரைவிட்டானா? இல்லாட்டா யாரோஒரு பெண்ணோட மானத்தைக்காக்க யாரோடாவது மோதிப்பார்த்து தன் உயிரை விட்டானா ? நாட்டிலே நம்ம கண் முன்னாலே நடக்கிற  அநியாயத்தை தட்டிக் கேட்கப்போய் அதனாலே அவனை யாராவது அடிச்சிக் கொன்னுட்டாங்களா .. இல்லையே.. இவன்தான் தற்கொலை பண்ணிட்டான்.. அவனே எடுத்த முடிவு. இது ! "
"அப்படின்னா .. உனக்கு விஷயம் முன்னாடியே தெரியுமா ?"
ஷர்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டிய ரங்கநாதன், "லெட்டர் எழுதி வச்சிட்டுப் போயிருக்கிறான். ஆனா அவன் போய் ரொம்ப நேரம் கழிச்சு தான் இந்த லெட்டர் என் கண்ணிலே பட்டுச்சு "
"சாகிற அளவுக்கு அப்படி என்னதான் பிரச்னை ?"
"ஒரு பொண்ணை விரும்பறேன். அவ வீட்டில் வந்து பேசுனு சொன்னான் "
"சரி... போய்ப்பேசிப் பார்க்கிறதுதானே ?"
"எப்படி முடியும் ? ஏணி வச்சா கூட எட்டாத இடம் .."
"கேட்டுப் பார்க்கிறதுதானே ?"
"பார்த்தேன் .. ஆனா அங்கே நடந்ததை இவன்கிட்டே சொல்லலே "
"என்னதான் நடந்துச்சு..?"
"உன்பிள்ளை குயின் எலிஸபெத் வீட்டுக்கு மாப்பிள்ளையா போகணும்னு கூட ஆசைப்படலாம். அதுக்காக நீ அங்கே பெண் கேட்டுப்போயிடுவியா ? ஒருவீட்டு நடையேறி பொண்ணு கேக்குமுன்னாலே உங்க தகுதி தராதரம் பத்திஎல்லாம் யோசிச்சுப் பார்க்க மாட்டீங்களாடா முட்டாபயலுகளா?  என்வீட்டு பாத்ரூம் சைஸ் கூட இல்லாத உன் வீட்டுக்கு என் பொண்ணு மருமகளா வரணுமா ? இனி இந்த மாதிரி பேசிட்டு இங்கே வந்தா அந்த ராஸ்கலை இஞ்ச் இஞ்சா துடிக்க துடிக்க வெட்டி கடலில் வீசிடுவோம்னு சொல்லிட்டாங்க. நான் நல்ல விதமா சொல்லிப்பார்த்தேன். கேட்கிற வழியா இல்லை. அவன்  இப்படியொரு முடிவுக்கு வந்துட்டான். ஆனா ஒரு வகையில் நிம்மதி.. அவங்க கையில் அடிபட்டு சிக்கி சீரழிஞ்சு சாகலே. அந்தப்பொண்ணை கூட்டிட்டு ஓடறேன்னு சொல்லி ஊருக்குள் ஒரு கலவரத்தை ஏற்படுத்தாமல்.. யாருக்கும் எந்தவொரு சிறுதொந்தரவும் இல்லாமல் போயிட்டான். அவனை சாகச்சொல்லி யாரும் கட்டாயப்படுத்தலே..அவனா எடுத்தமுடிவு.."என்றுசொல்லிக்கொண்டிருக்கும் போதே மெயில் வருவது தெரிந்தது.
"போடா..முட்டாள்..ஆசைக்குஆசையா வளர்த்த ஒரேபிள்ளையும் உன்னை விட்டுப்  போயிட்டான் . இனி நீ என்னடா செய்யப்போறே ?" 
"நானா ? இதோ பார் !" என்று சொல்லிவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் வேகமாக வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயின் முன்பாகப் பாய்ந்தார் ரங்கநாதன். 

No comments:

Post a Comment