பஸ்ஸிலிருந்து இறங்கிய வள்ளி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சீக்கிரம் போய் தம்பிக்கு வேணுங்கிறத செஞ்சு குடுக்கணும். இன்னிக்குனு பார்த்தா இந்தப்பாழாய் போற பஸ் நடுவழியில் நின்னு தொலைக்கணும். இந்தா..அந்தானு நாலுமணிநேரம் நடுவீதியில் நிக்க வச்சிட்டானே படுபாவி. இவன் கம்பெனிக்கு சொல்லிஅனுப்பி அங்கிட்டிருந்து ஆளு வந்து ரிப்பேரை சரி பண்ணி முடிக்கிறதுக்குள்.... ச்சே ... போதும்டா சாமி.
"ஏ வள்ளி... ஏ புள்ளே வள்ளி " என்று நாலைந்து குரல் சேர்ந்தாற்போல கூப்பிடும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தாள் வள்ளி.
"உன்னை எங்கிட்டெல்லாம் தேடிட்டு வாரோம். அப்படி எங்கேதான் போய்த் தொலைஞ்சிட்டே ?"
"அப்படி என்ன தலை போகிற அவசரம் ?"
"பெரிய வீட்டில் இருந்துச்சே அந்தப்புள்ளை செத்துப் போச்சு !"
இதைக் கேட்டதும் "ஆங்..." என்ற அலறல் வெளிப்பட்டது வள்ளியிடமிருந்து.
" என்ன சொல்லுதீக ஆத்தா.. எம்மா... இதை என்னாலே தாங்க முடியலியே .. என்ன ஆச்சு ? என் மாமனுக்குத் தெரியுமா?"
"நேத்து ராத்திரிக்கு மேலே தீப்பிடிச்சு எரிஞ்ச வெளிச்சம் தெரிஞ்சுது. உன் வீட்டுக்குப்போய் உன் மாமனை எழுப்பி விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வாறதுக்குள்ளே மொத்தமும் எரிஞ்சு சாம்பலா போச்சு. அந்தப்புள்ளை கருகிப் போய் கட்டையா கிடக்குது. உன் மாமன் சொல்லுச்சு.. அந்தப்புள்ளை புஸ்தகம் வாசிக்க விளக்கு ஏத்தி வச்சிருக்கும். படுக்கும் போது அதை அணைக்க மறந்து போயிருக்கும். வயல் எலி இல்லாட்டா பெருச்சாளி வந்து விளக்கைத் தட்டி விட்டிருக்கும். ஓலைதானே.. உடனே பத்திகிச்சுனு. "
"என் மாமன் ...?"
"அது அங்கிட்டு தலையில கையை வச்சுக்கிட்டு உக்காந்திருக்குது."
பவித்ராவின் குடிலை நோக்கி ஓடினாள் வள்ளி.
அப்போது அவள் பின்னால்வந்து கொண்டிருந்த பெண்ணொருத்தி, "நாலுநாள் மின்னே இந்த புள்ளைய டவுன் தபாலாபீஸ் பக்கம் பார்த்தேன். கையிலே டைரி மாதிரி ஒண்ணை வச்சுக்கிட்டு உள்ளே போயிட்டு இருந்துச்சு. தலை பின்னி பூமுடிச்சு எம்புட்டு அழகா இருந்துச்சு. இப்படி கருகிப்போய் கிடக்குதே" என்று சொல்வது வள்ளியின் காதிலும் விழத்தான் செய்தது.

அவளைப் பார்த்ததுமே, "வள்ளி... பார்த்தியா ? பெத்த பொண்ணாட்டம் நான் பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சேன். இப்படி ஆயிட்டே. இதை எப்படி எஜமான் கிட்டே சொல்றது ?" என்று கட்டிப்பிடித்து அழத்தொடங்கினான்.
கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு, "எஜமான் வந்து, இந்தப் புள்ளை எப்போ அந்த வீட்டைவிட்டு இங்கிட்டு வந்துச்சுனு கேட்டால், ரெண்டுநாளைக்கு முன்னாடிதான் வந்துச்சுனு சொல்லணும். மாத்திப் பேசினா எஜமான் கொன்னே போட்டுடுவாக.. ஜாக்கிரதை." என்று சொல்ல அத்தனை பேரும் பொம்மை போல தலையாட்டினார்கள்.
"அந்தத் தம்பிக்கு தெரியுமா ?" என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதபடி கேட்டாள் வள்ளி.
"தெரியாது.. நீ பக்குவமா சொல்லி அந்த தம்பியை இப்பவே இங்கேருந்து போக வச்சிடு. துக்கம் தாளாமே அந்த தம்பி ஏதாச்சும் பண்ணிட்டா பிறகு பெரிய வம்பில வந்து முடிஞ்சிடும். போ.. உடனே அந்த தம்பியை வீட்டை விட்டு அது ஊருக்குப் போக வச்சிடு "
"சரி" என்று தலையாட்டிவிட்டு வீட்டுக்கு விரைந்தாள்.
கதவு மூடி இருந்தது. தம்பி இன்னுமா தூங்குது ? எல்லாருக்கும் முந்தியே எந்திரிச்சு வந்துருமே .. இன்னும் தூங்குதா ? கதவைத் தட்டி எழுப்பலாமா என்று ஒரு நொடியோசித்த வள்ளி, "அய்யா .. தம்பி...கதவைத் திறங்க.. இன்னுமா தூங்குதீக.. எந்திரிச்சு வந்து கதவைத் திறங்க " என்று நெடுநேரம் தட்டிய பின்புதான் கதவைத் திறந்தான் பிரபு.
"தூங்கிட்டு இருந்தீகளா ?"
"என்னமோ தெரியலே... கண்ணைத் திறக்கவே முடியலே. நீங்க கூப்பிட்டது கூட யாரோ எங்கோ தள்ளி நின்னு கூப்பிட்ட மாதிரி கேட்டுது."
"நேத்து சாப்பிட்டீகளா ?"
"பசிக்கலேன்னு சாப்பாடு வேண்டாம்னேன். உங்க மாமா வந்து சூடா ஒரு கப் பால்குடுத்தார்.அதைக்குடிச்சிட்டு படுத்ததுதான்தெரியும். நல்லா தூங்கிட்டேன் போலிருக்கு.. இப்போ மணி என்ன?" என்று சொல்லி கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், "ஓ ..காட்.. 12.30. அவ்வளவு நேரம் தூங்கி இருக்கிறேனா ?" என்று கேட்டான்.
அமைதியாக நின்று கொண்டிருந்த வள்ளியைப் பார்த்து, "நீங்க போன வேலை முடிஞ்சுதா ? உங்க முகம் ஏன் என்னவோ போல் இருக்குது ?"
"தம்பி.. பவி செத்துப்போச்சு தம்பி. அது குடிசையில் தீப்பிடிச்சு, அந்தப் புள்ளையை கரிக்கட்டையா ஆக்கி வச்சிருக்கு " என்று சொல்லும்போதே கதறி விட்டாள் வள்ளி.
"என்ன சொல்றீங்க?" என்று கேட்டு வள்ளியின் தோள்களைப்பிடித்து உலுக்கிய பிரபு, சேரில் கிடந்த ஷர்ட்டை மாட்டிக் கொண்டு வாசலுக்கு ஓடினான்.
அவனைத்தடுத்து நிறுத்திய வள்ளி, "வேண்டாம் தம்பி. பார்த்தா தாங்க மாட்டீ ங்க. அங்கிட்டு இருக்கிறது உருத்தெரியாத கட்டை மட்டுந்தான். அதை பார்த்து நீங்க கண்ணீர் விடவேண்டாம். இனி நீங்க அந்தப்புள்ளையை நினைக்கும் போது அதோட சிரிச்ச முகம் மட்டுந்தான் உங்களுக்கு நினைவுக்கு வரணும். உருத்தெரியாத கரிக்கட்டை நினைவுக்கு வரவே கூடாது. நீங்க இப்பவே ஊருக்கு கிளம்புங்க" என்றாள்.
"நேத்துதான் உங்க மாமா, அந்த வாத்தியார் கிட்டே, 'நான் பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கொண்டு இதே வீட்டில் இருக்கப்போறேன்னு சொன்னேன். எல்லாமே கனவா போச்சே " என்று கண்ணீர் விட்டான்.
"என்னது ? எங்க மாமா கிட்டே சொன்னீகளா .. கல்யாணம் பண்ணப்போறேன். இந்த வீட்டில் வந்து ரெண்டுபேரும் இருக்கப்போறோம்னு சொன்னீகளா?" என்று திரும்பத் திரும்ப கேட்ட வள்ளி, "ஓஹோ.." என்று மட்டும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
"ச்சே.. என்னவொரு கொடூரம். பிறந்ததில் இருந்து தாய் முகத்தைப் பார்க்காத பாவப்பட்ட ஜீவன் இவள். சிறைக்கைதி மாதிரி அப்பாவின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டே அவரின் அன்புக்காக ஏங்கித் தவித்திருக்கிறாள். எவனோ ஒரு கிரிமினல் செய்த பித்தலாட்டத்தால் அப்பா இறந்துபோய் விட, தனக்கென இருந்த ஒரேஒரு உறவையும் வறட்டுப்பிடிவாதத்தால் உதறித்தள்ளிவிட்டு , குடும்பஉறவுகளை மறந்து, எல்லாம் இருந்தும்... எதுவுமே இல்லாத ஒரு அநாதையாக .. ஒரு தனி இடத்தில் இருந்து கொண்டு வாழக்கையை நகர்த்திய பெண்.. அதுவும் இப்போது இல்லையென்று ஆகிவிட்டது. இறைவா.. உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா? அவ்வளவு கல்நெஞ்சுக்காரனா நீ ? போதும்.. போதும்.. தெய்வமே.. இந்த பூமிக்கு ஒரு பவித்ரா போதும். வேறொரு பவித்ராவை உருவாக்கி விட்டுவிடாதே.. போதும். வேறே பவித்ரா வேண்டாம்! " என்று வாய் விட்டுப் புலம்பினான்.
அப்படியே சிலைமாதிரி உட்கார்ந்திருந்தான். அதன்பிறகு வாய்திறந்து எதுவும் பேசவில்லை.
"அய்யா..உங்க ஊருக்குப் புறப்படுதீகளா? கதை எழுதப்போறேன்னு சொல்லி ட்டு வந்தீக. இங்கே எல்லாமே கதையா போச்சு. எழுதினது வரை போதும். எல்லாத்தையும் இங்கேயே கதையா நினைச்சு மறந்துட்டு உங்க அம்மாவுக்கு பிள்ளையா இருங்க..அதுபோதும். உங்களுக்கு கல்யாணம் காட்சின்னா தகவல் சொல்லுங்க. கண்டிப்பா வருவோம்.. உங்க சாமானை எடுத்து வைக்கிறேன். மாமாவை வண்டிகட்ட சொல்லவா?" என்று வள்ளி சொல்லிக்கொண்டே போக எதற்கும் பதில் சொல்லும் சக்தி அற்றவனாக உட்கார்ந்திருந்தான் பிரபு.
வள்ளி அவன் கையில் எடுத்துக்கொடுத்த அவனுடைய லக்கேஜை சுமந்தபடி வாசலைப் பார்த்து நடந்தான்.
அதைப்பார்க்க சக்தியற்றவளாக தலையை சுவரில்மோதிக்கொண்டு அழுதாள் வள்ளி.
நாடார்கடை போன்பூத்திலிருந்து ராம்குமாருக்கு போன் செய்த முருகய்யன், "அய்யா .. பவிம்மா நம்மள விட்டுட்டுப் போயிட்டாங்க.. நேத்து ராத்திரி குடிசை எரிஞ்சு அதில் கருகிப்போயிட்டாங்கய்யா " என்று கதறினான்.
"இடியட்.. என்ன சொல்றே ? அவங்க ஏன் குடிசைக்குப் போகணும். யாரோட குடிசைக்குப் போனாங்க ? என்று இரைந்தார் ராம்குமார் .
"ரெண்டு நாளைக்கு முன்னேதான் குடிசைக்குப் போச்சு. அதோட அக்காவுக்கு கல்யாணம் நடக்கணும்னு தனியா இருந்து மூணுநாள் பூஜை பண்ணனும் சொல்லி அதுக்கு தேவையானதை வாங்கித் தர சொன்னாங்க.. பூஜைக்கு ஆள் அரவம் இல்லாத இடமா வேணும். மலையடிவாரம் பக்கத்திலே ஒரு குடிசை போட்டுக்குடுங்கனு சொல்லுச்சு. நான் எம்புட்டோ மல்லாடி பார்த்தேன். கேக்கலே. சாமி காரியம்..மூணே மூணு நாள்தானே. தடங்கல் சொல்லாதீகனு சொல்லி என் வாயை அடைச்சிட்டாங்க. அவங்க கேட்டதை எல்லாம் செஞ்சு குடுத்தேன். பூஜைக்குனு விளக்கு ஏத்தி வச்சிட்டு அணைக்காமே படுத்திட்டு போலிருக்குது.ராத்திரி எலிகிலி வந்து விளக்கை கீழே தள்ளிட்டோ என்னவோ. குடிசை பத்திக்கிச்சு. ஆள் அடையாளமே தெரியாமே கருகி, விறகுக்கட்டை மாதிரி இருக்குது ஐயா " என்று சொல்லி விட்டு கதறினான் முருகய்யன் .

"அந்த தம்பி எங்கே இருக்குது ?"
"அது ரெண்டுநாள் முன்னேயே கிளம்பிபோயிட்டுதுங்க ஐயா . பட்டணத்துக்கு போறதுக்கு முன்னாலே மதுரைக்குப்போய் கூடப்படிச்ச பிள்ளைகளைப் பார்த்துட்டு அதுக்குப்பிறகு வீட்டுக்குப் போவேன்னு சொல்லுச்சு "
"சரி. சுமிக்கு தகவல் சொல்லிட்டு நான் உடனே கிளம்பி வர்றேன்" என்று போன் தொடர்பை துண்டித்தார் ராம்குமார்.
நேற்று சுமித்ரா போன் பண்ணும்போது, பவித்ராவுக்கு இருபத்துமூணு வயசு ஆகும் போது அவளோட எல்லாப் பிரச்னையுமே தீர்ந்துடும். அதுக்குப்பிறகு அவளைப்பற்றி நாங்க கவலைப்படறதுக்குனு ஒண்ணுமே இருக்காது .. எந்தப் பிரச்னையும் வராதுன்னு ஜோஸ்யர் சொல்லி இருக்கிறதா சொன்னாங்களே. ஜோஸ்யர் சொன்னது இந்தமாதிரியான முடிவைத் தெரிந்து கொண்டுதானா ? ஓ .. கடவுளே.. இதை சுமி காதில் போட்டாகணுமே. எப்படி தெரிவிப்பது என்ற கவலையில் ஆழ்ந்தார்.

அந்தஊர்வாசிகள்அத்தனைபேரும் எரிந்துபோனகுடிலின் முன்பாக உட்கார்ந்தி ருக்க, பிரபு பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தான். அங்கிருந்து கிராமத்தை திரும்பிப் பார்த்தான். சென்னையிலிருந்து இங்கே வந்தபோது பச்சைப்பசேல் என்று தெரிந்த வயல்வெளி, இப்போது காய்ந்துபோன பாலைவனம்போல அவன் கண்களுக்குத் தோன்றியது.
பஸ்சுக்காக நின்றிருந்த பிரபு மீது வேகமாக வந்த மோதிய டெம்போ ஒன்று சற்றுத் தொலைவில் போய் பிரேக் பிடித்து நின்றது. டிரைவரின் கண்கள் நாலு புறமும் தேடி மரத்தின் பின்னால் நின்றிருந்த முருகய்யனை அடையாளம் கண்டு கொண்டது. பெருவிரலை உயர்த்தி "முடிஞ்சுது " என்பதுபோல் சைகை காட்டினான் ட்ரைவர்.
அங்கே ஓடிவந்த முருகய்யன். "சொன்னது ஞாபகம் இருக்குதானே. இந்த சனியனை மதுரைக்குப் பக்கத்தில் ஏதாவது ஒரு ரோட்டில் ஆள்நடமாட்டம் இல்லாத இடமா பார்த்து தூக்கிப் போட்டுட்டு போயிடு. அங்கே அடிபட்டு செத்த மாதிரி இருக்கட்டும்" என்று சொல்லிவிட்டு ட்ரைவரின் கைகளில் பணத்தை திணித்தான். 'விஷயம் காதும்காதும் வச்ச மாதிரி இருக்கணும். யாருக்காவது சந்தேகம்னு ஒண்ணு வந்தால் முதல்பலி நீதான்' என்று எச்சரித்துவிட்டு, பிரபுவின் உயிரற்ற உடலை வண்டிக்குள் ஏற்ற சொன்னான்.
பிரபு மீது வண்டிமோதியதை அடுத்து நடந்துமுடிந்த அத்தனையையும் வள்ளி பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிதுநேரம் பிரமைபிடித்த மாதிரி நின்று கொண்டு இருந்தவள் நேராக நாடார்கடைக்குப் போய் 'எலி மருந்து பொட்டலம் நாலு குடுங்க " என்றாள்.
"என்னம்மா.. திடீர்னு.. ஒருநாளும் இல்லாத திருநாளா எலிமருந்து கேக்கிறே . இப்பதான் உன் மாமன் வந்து போன் பண்ணிட்டுப் போனாக " என்றார் நாடார்.
"எங்க வீட்டிலும் எலி நடமாட்டம் அதிகமா இருக்குது. இன்னிக்கு இந்த குடிசை எறிஞ்ச மாதிரி நாளைக்கு என் வீடும் பத்திக்கிட்டா என்ன பண்றது ? இன்னிக்கு ஒரு முடிவு பண்ணிடுதேன்."என்று சொல்லி எலிமருந்தை வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
இரவு வெகுநேரம் கழிந்தபின் மெதுவாக வீட்டுக்குள்ளே நுழைந்த முருகய்யன் வள்ளியைகட்டிப்பிடித்துக்கொண்டு, "ஐயோ.இப்பிடி அநியாயமா போயிட்டுதே . நாளைக்கு ஐயா வந்து கேள்வி மேலே கேள்வியா கேப்பாகளே .. என்னத்தை சொல்லுறது. வள்ளி.. நீதான் மாமன் பக்கம் துணை இருக்கணும்" என்று உடல் குலுங்க அழுதான்.
"என்ன மாமா நீ.. பச்ச புள்ளை மாதிரி .. அதுக்கு விதி அதுதான்.. நமக்கு விதி இதுதான். நீ என்னத்துக்கு விசனப்படுதே..காலைலேருந்து எங்கெல்லாமோ சுத்தி அலைஞ்சிட்டு வந்திருக்கே. இந்தா .. சூடா சுக்கு கஷாயம் இருக்குது. மடக் மடக்னு முழுங்கிட்டு நிம்மதியா படுத்து தூங்கு" என்றாள்.
"அப்பாடா...ரொம்ப தோண்டாமே இதோடு நிப்பாட்டிட்டாளே" என்ற திருப்தி யில் வள்ளி கொடுத்த கஷாயத்தை அவள் சொன்னது போலவே மடக் மடக் என்று குடித்து முடித்தான் முருகய்யன். கயிற்றுக்கட்டிலை இழுத்துப்போட்டு 'நீ நிம்மதியா படுத்து தூங்கு மாமா ' என்றாள்
சற்றுநேரத்தில் அரைகுறை மயக்கத்தில், 'நாளைக்கு ஐயா வந்து கேட்டா என்னத்த சொல்லுறது ? என்று உளறினான் முருகய்யன்.
தன்னுடைய கையில் வைத்திருந்த கஷாயத்தை உறிஞ்சிக் குடித்தபடியே, "நீ கவலையேபடாதே மாமா.. நாளைக்கு பதில் சொல்ற நிலைமையில் நாம ரெண்டு பேருமே இருக்கமாட்டோம். நம்மள சுத்தி நிக்கிற ஜனங்கதான் என்ன நடந்ததுனு தெரியாமே கேள்வி மேலே கேள்வியா கேட்டுகிட்டே இருப்பாங்க. எந்தக் கேள்விக்கும் நாம பதில் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது. நீ தூங்கு.. நானும் தூங்குதேன்" என்று சொல்லியபடி அவன் காலடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள் வள்ளி.
--------------முடிந்தது ---------------------
DEAR VIERS,
இந்த குறுநாவல் என்னுடைய முதல்முயற்சி. இதனை பதிவு செய்ய ஆரம்பித்தபிறகு என்னுடைய பிளாக் வியூயர்ஸ் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில் ஆச்சரியமானவிஷயம் என்னவென்றால், USA வாழ் தமிழர்களுக்கு இந்தப்பதிவு மிகவும் பிடித்திருக்கிறதென்பதுதான். தினமும் நூறு பேருக்கு குறையாமல் எனது தளத்தில் உங்கள் கால்தடம் பதித்திருக்கிறீர்கள்
இன்றைய தினம் வரை எனது BLOG VIEWERS - 63,996 இதில் U S A VIEWERS - 42,681,
உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றி. மேலே நீங்கள் காண்பது கூகிள் கொடுக்கும் புள்ளி விவரம்.
முதலில் இதனை வாரம்ஒருமுறை பதிவு செய்ய நினைத்திருந்தேன். ஆனால் பதிவைப் படிப்பதில் உங்களுக்குள்ள ஆர்வம் அறிந்தபின், தினமும் பதிவு செய்தேன். உங்களுக்கு நேரமோ, விருப்பமோ இருந்தால் இந்த குறுநாவல் பற்றிய கருத்தை பதிவு செய்யலாம். அல்லது மெயில் அனுப்பலாம். அவை என்னுடைய தவறுகளை சரிசெய்ய, மீண்டும் தவறுகள் வராமல் பார்த்து க்கொள்ள உதவியாக இருக்கும்.
இன்னும் ஒரு குறுநாவல் எழுதுவதற்கான கரு மனதுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
விரைவில் பதிவு செய்ய முடிந்த அளவு முயற்சி செய்வேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.. நன்றி... நன்றி...
DEAR VIERS,
இந்த குறுநாவல் என்னுடைய முதல்முயற்சி. இதனை பதிவு செய்ய ஆரம்பித்தபிறகு என்னுடைய பிளாக் வியூயர்ஸ் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில் ஆச்சரியமானவிஷயம் என்னவென்றால், USA வாழ் தமிழர்களுக்கு இந்தப்பதிவு மிகவும் பிடித்திருக்கிறதென்பதுதான். தினமும் நூறு பேருக்கு குறையாமல் எனது தளத்தில் உங்கள் கால்தடம் பதித்திருக்கிறீர்கள்
இன்றைய தினம் வரை எனது BLOG VIEWERS - 63,996 இதில் U S A VIEWERS - 42,681,
முதலில் இதனை வாரம்ஒருமுறை பதிவு செய்ய நினைத்திருந்தேன். ஆனால் பதிவைப் படிப்பதில் உங்களுக்குள்ள ஆர்வம் அறிந்தபின், தினமும் பதிவு செய்தேன். உங்களுக்கு நேரமோ, விருப்பமோ இருந்தால் இந்த குறுநாவல் பற்றிய கருத்தை பதிவு செய்யலாம். அல்லது மெயில் அனுப்பலாம். அவை என்னுடைய தவறுகளை சரிசெய்ய, மீண்டும் தவறுகள் வராமல் பார்த்து க்கொள்ள உதவியாக இருக்கும்.
இன்னும் ஒரு குறுநாவல் எழுதுவதற்கான கரு மனதுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
விரைவில் பதிவு செய்ய முடிந்த அளவு முயற்சி செய்வேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.. நன்றி... நன்றி...
No comments:
Post a Comment