Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, September 04, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(34)

Image result for cartoon of paddy field surrounded by mountain
பவித்ராவின் தனி இடப்பெயர்ச்சி பற்றி தெரிந்து கொண்ட பிரபு, அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தான்.
வள்ளி இன்னும் அழுது கொண்டுதான் இருந்தாள்.
மன அழுத்தத்தில் இருந்து அவளை வெளியில் கொண்டு வருவதற்கு இந்த டாபிக்கை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தான் பிரபு.
"என்னங்க .. உங்களுக்கு சொந்தபந்தம்னு சொல்லிக்க இங்கே அக்கம்பக்கம் வேறு  யாராவது இருக்கிறாங்களா?  போறது வர்றது உண்டா?"
"இருக்கிறாங்க..எல்லாரும் பக்கத்துக்கு ஊர்கள்லே இருக்காங்க. ஆனா போக்கு வரத்து கிடையாது. எல்லாம் எங்க அம்மாஅப்பாவோடேயே முடிஞ்சு போச்சு. எங்க குலதெய்வம் கோவிலுக்குப்போறச்சே அவங்களும் அங்கே சாமி கும்பிட வருவாக. எதுத்தாப்லே பார்க்கிறப்ப எப்படி இருக்கே, என்ன ஏதுன்னு விசாரி க்கிறதோட சரி.. நல்லவேளை.. இப்பதான் ஞாபகம் வந்தது. நான் இன்னிக்கு ராத்திரி தூத்துக்குடிக்குப் போயிட்டு நாளைக்குக் காலைலே வந்துருவேன். ராத்திரிக்கு டிபன்செஞ்சு உங்க வீட்டு மேஜை மேலே வச்சிடுவேன். நாளைக்கு காலைலே  நீங்க எந்திரிக்கிறதுக்கு முன்னாலே நான்  இங்கே வந்துருவேன் .."
"ஏதாவது விசேஷமா ?"
"இல்லே தம்பி.. வழக்கமா போயிட்டு வர்றதுதான். நம்ம குமார் அய்யாவோட குலதெய்வம் கோவில் தூத்துக்குடி பக்கம் இருக்குது. ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமிக்கு நாலஞ்சு நாள் முன்னாடியே போய் பூஜைக்கு வேணுங்கிற இளநீ சாமான்செட்டை, பூசாரிஐயா வீட்டில் கொண்டு போய்க் குடுத்துட்டு, மறுநாள் காலைலே புறப்புட்டு வந்துருவேன். தெரிஞ்சவக வீடு அங்கிட்டு இருக்குது. ராத்திரி  அங்கே தங்கிட்டு காலைலே வருவேன்."
"அப்புறம் இன்னொன்று கேக்கணும்னு நினைச்சேன். நீங்க சொன்னீங்களே.. அந்த இந்தி பேசற தாதா .. அவனை அப்புறமா பார்க்கவே இல்லையா ?"
"அய்யா .. நான் அன்னிக்கு சொன்னேனே.. அந்தக்களவாணிப்பய என் மாமன் .. அந்த கிழட்டு நாய் கூட பேசிட்டு இருந்ததைப் பார்த்தேன்னு.. அது எனக்கு ஒரு உறுத்தலாவே இருந்துச்சுது. எதுக்கும் இதை குமார் ஐயா காதிலே போட்டு வைக்கிறது நல்லதுனு  தோணுச்சு. அதனாலே அவக கிட்டே இவனைப் பத்தி சொன்னேன்!"
"அண்ணன்கிட்டேயா ? என்னன்னு சொன்னீங்க ?"
"நம்ம ஊர்ப்பக்கம் புதுசாஒருத்தன் சுத்திகிட்டு திரியுதான். பார்த்தா தமிழ் ஆளு மாதிரி தெரியுது . இந்தியிலே பேசுதான் .. யார் எவருன்னு தெரியலே. எதுக்காக நம்ம ஊர்ப்பக்கம் வட்டம் போடுதான்னு தெரியலே.. எதுக்கும் உங்க கிட்டே சொல்லி வைக்கணும்னு தோணுச்சு. அதான் சொன்னேன்னு போனிலே அவக கிட்டே சொன்னேன். அதுக்குப்பிறகு அந்தப்பயலைக் காண்கலே. அய்யா, போனிலே நான் பேசினது என்மாமனுக்கோ பவிம்மாவுக்கோ தெரியாது. இதை நீங்க அவக  காதுக்கு கொண்டு போயிடக்கூடாது "
"நீங்க பயப்படவே வேண்டாம். நான் இப்பவே இதை மறந்துட்டேன். போதுமா ? பவித்ரா இங்கே இருப்பது அந்த ராஸ்கலுக்கு எப்படி தெரியும் ?"
"அவன்தான் இந்தப்பொண்ணோட அக்காவை குறிவச்சு அவளை சுத்திசுத்தி வாரான். அவக இங்கிட்டுவந்துபோறதுதெரிஞ்சு, என்னஏதுனு மோப்பம் பிடிக்க வந்திருக்கலாம் "
"வேலைவெட்டி இல்லாத பைத்தியக்காரன்."
"அய்யா.. நான் இப்போ உங்களுக்கு டிபன் ரெடிபண்ணி மேஜை மேலே வச்சிடு தேன். வச்சிட்டு தோட்டத்துக்குப்போய் காய்கிழங்கு எடுத்துட்டு, தோப்பு பக்கம் போய் இளநீ பறிச்சிட்டு நான் கிளம்புதேன். சாப்பாடு மேஜைமேலே இருக்கும்.   மறந்திடாதீக..நாளைக்கு காலைல கண்டிப்பா வந்துருவேன்.." என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிப்போனாள் வள்ளி.
வேறு வேலை எதுவும் இல்லாததால் பொழுதைப் போக்க மலையடிவாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அங்கிருந்து பார்த்தபோது பவித்ராவின் குடில் தெரிந்தது.
இந்தப்பெண்ணிற்கு ரொம்பவும் தைரியந்தான்.! ஆள்நடமாட்டம். மின்சாரம் எதுவும்இல்லாத ஒரு இடத்தில், அதுவும் காடு மாதிரி மரமும் செடியும் புதராக இருக்கின்ற சூழ்நிலையில், பாம்பு பல்லி தேள் நடமாட்டம் அதிகம் இருக்கும் தானே! அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்னவொரு துணிச்சலாக இந்த இடத்தில் தனியே இருக்கிறாள் !
'மனுஷங்க கூட பழகும்போது, அவங்ககூட சேர்ந்து வாழும்போதுதான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். தனியா இருக்க எந்த பயமும் தேவை இல்லை'னு அம்மா அடிக்கடி சொல்லுவாள். பவித்ரா உண்மையிலேயே பிரேவ் லேடிதான்.
பவித்ரா தனியாக இருக்க என்ன காரணம்னு துப்பறியும் நிபுணர் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தேன். கடைசியில் பார்த்தால், அது வள்ளிக்கும் இந்த முட்டாள் முருகய்யனுக்கும் நடுவில் விரிசல் விழாமல் இருக்கத்தான் என்பது தெரிந்து விட்டது.
எந்தவொரு நோய்பற்றியும் தேவையில்லாத பயம் வேண்டாம். இன்றைய தேதியில் எல்லாநோய்க்குமே மருந்திருக்கிறது. நோயினால் இறந்து போகிற வர்களைவிட அது பற்றிய பயத்தால் இறந்து போகிறவர்கள் அதிகம் என்று முருகய்யனுக்கு   புரிய  வைக்க வேண்டும். பவித்ராவுக்கு எந்தவொரு நோயும் கிடையாது. ஒரு கிரிமினல் சொன்ன கட்டுக்கதை அது என்பதை புரிய வைத்து, முருகய்யனே நேரில் போய், பவித்ராவை அவளின் பழைய இருப்பிடத்துக்கு அழைத்துவரும்படி செய்யவேண்டும். இது மட்டும் முடிந்து விட்டால், அடுத்த நிமிடமே ஊருக்குக் கிளம்பிவிடலாம். அம்மா ரொம்ப கோபமாக இருப்பாள். அவளை சமாதானம் பண்ணவேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டு வீட்டை  நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பிரபு வீடுவரும் முன்பாகவே வீட்டுக்கு திரும்பி விட்ட முருகய்யன் மரத்தடி நிழலில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அவனருகில் உட்கார்ந்து தட்டிலிருந்த வேர்க்கடலையை கொறித்துக் கொண்டிருந்தார் வாத்தியார். வாசல் கதவைத் திறந்து கொண்டு பிரபு அவர்கள் அருகில் வந்ததும், "இதுதான் நம்ம பட்டணத்து தம்பி" என்று பிரபுவை வாத்தியாருக்கு அறிமுகம் செய்தான் முருகய்யன்.
"தெரியுமே. ஸார்கிட்டே நேருக்குநேரா பார்த்து பேசினதில்லையே தவிர, அந்த குடில் பக்கமா அடிக்கடி ஸார் போறதைவர்றதை நான் பார்த்திருக்கேன்" என்று கேலியான குரலில் சொன்னார்  வாத்தியார் .
வள்ளி சொல்கிற மாதிரி இது வம்புக்கார  கிழட்டு நாய்தான் என்று  நினைத்துக் கொண்டான் பிரபு.
"ஸார் .. இப்போ எங்கேருந்து வர்றாப்லே ?" என்று  கிழட்டு நாய் கேட்க, "நான் பவித்ரா வீட்டிலிருந்துதான் வர்றேன்!" என்று பதில் சொன்னான் பிரபு.
"ஸார் அந்த வீட்டிலிருந்து கிளம்பி இங்கே வரும்போது, தயவுசெஞ்சு கைகால் கழுவி சுத்தம் பண்ணிட்டு ..முடிஞ்சா குளிச்சிட்டே வாருங்க.  அங்கே இருக்கிற நோயை இங்கே எல்லாருக்கும் கொண்டாந்து விட்டுடாதீங்க!"
"அவங்களுக்கு நோய் இருக்குதுனு எந்த சாக்கடை சொல்லுச்சு? அப்படியே இருந்தால் கூட  எல்லா நோய்க்கும் மருத்துவம் இருக்கிறதென்று பள்ளிக்கூட வாத்தியார் உங்களுக்குத் தெரியாதா ?"
"ஏன் நோயை இழுத்து விட்டுக்கணும்? ஏன் வைத்தியம் பார்க்கணும்? நேர்த்திக் கடனா என்ன?"
இந்த நாயை கொஞ்சம் குழப்பி அனுப்பணும் என்று நினைத்த பிரபு, "இதுக்கே பயந்தால் எப்படி? நானும் அவங்களும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இதே ஊரில் இந்த வீட்டில்தான் இருக்கப்போறோம்" என்றான்.
இதைக்கேட்டு பதறிப்போன முருகய்யன், "என்னதம்பி சொல்லுதீக?" என்றான் .
"எங்க ரெண்டுபேருக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகப்போகுது. ரெண்டு வீட்டிலும் ஓகே சொல்லிட்டாங்க. நாங்கஇங்கேதான் இருக்கப்போறோம்" என்றான் பிரபு.
இதைக்கேட்ட அடுத்தநொடியே, "நான் வீட்டுக்குகிளம்பறேன் முருகா" என்று சொல்லியபடி  கிழட்டுநாய் கிளம்ப, "நானும் வர்றேன்ய்யா" என்று  அவரைப் பின்தொடர்ந்து நடக்கலானான் முருகய்யன்.
பரவாயில்லை. எனக்குக்கூட சமய சந்தர்ப்பத்துக்கு தகுந்தபடி பொய் சொல்ல வருகிறதே என்று நினைத்து தனக்குத்தானே சபாஷ் சொல்லிக் கொண்ட பிரபு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
மேஜைமீது அவனுக்கான டிபன் இருந்தது. ஏனோ சாப்பிடப் பிடிக்கவில்லை.
என்ன செய்து இந்த முருகய்யனின் பயத்தைப் போக்க முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.
ஒரு முட்டாளுக்கு ஒரு நிதர்சனத்தைப் புரியவைப்பது எவ்வளவு கடினமான காரியம் என்பது அவனுக்குப் புரிந்தது.
நமக்கு எதிரியும்  துரோகியும் வேறே எங்கேயும் இருக்க மாட்டாங்க. நம்ம கூடவேதான் இருப்பாங்கனு  அம்மா சொல்லும்போதெல்லாம் நான் எவ்வளவு கிண்டலாக சிரிப்பேன்.
"விளையாட்டு இல்லேடா. நிஜமா சொல்றேன். வெள்ளைக்காரனை எதிர்த்து காந்திஜி பண்ணாத போராட்டமா? அவர் பார்க்காத அடக்குமுறையா ? ஆனா அடக்கி ஆளநினைச்சவங்க எவனும் அவரை கொல்லணும்னு நினைக்கலே. ஆனா அவரை சுட்டுக் கொன்னது நம்ம நாட்டில் இருந்தவன்தான். இந்திரா காந்தி பார்க்காத போராட்டமா ? வன்முறையா ? அந்தம்மாவுக்கு குறி வச்சது அவங்க வீட்டிலே இருந்தவன்தான். ராஜீவ்காந்திக்கு குண்டு வச்சது யார் ? எதிரி துரோகிங்க எல்லாரும் நம்மகூட இருந்தவனாத்தான் இருப்பான்" என்று அம்மா சொல்வாள்.
பவித்ராவுக்கு,  அம்மா சொல்ற மாதிரியான எதிரி இந்த முருகய்யனும் அந்த கிழட்டு நாயுந்தானா என்ற யோசனையில் ஆழ்ந்தான் பிரபு. இந்த முருகய்யன் தான் ஒரு வடிகட்டின முட்டாள் என்றால், அவனோடு சேர்க்கை வைத்திரு க்கிறவர்கள் அவனைவிட கேடுகெட்ட ஜென்மமாக இருக்கிறார்களே.. ஹூம்.. இனம் இனத்தோடு தானே சேரும்.
அவனை அமைதி இழந்து தவிக்க வைத்த  ஒரு விஷயம் என்னவென்றால், பரபரப்பு மிகுந்த டில்லியில், பவித்ராவின் மொபைலில் பதிவாகி இருந்த ஒரு போன் நம்பரை மட்டும் அடிப்படையாக வைத்து,  ஒரு கிரிமினலைக்கண்டு பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தவர் அண்ணன். ஆனால் அவருடைய ஊரில், அவரோட வீட்டில் நடக்கிற விஷயம் எதுவும் அவருக்குத் தெரியாமல் இருக்கிறதே. பரிதாபம்... அந்தோ பரிதாபம்...

                                                                              -----------------------தொடரும் ----------------------

No comments:

Post a Comment