Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 04, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 156)

Image result for cartoon of fish pond and temple
"ப்ளீஸ் .. மாமா.. உங்க பேரனை  எங்கேயாவது அழைச்சிட்டு போங்களேன். நான் அவசரமா முடிக்க வேண்டிய ஆபீஸ் ஒர்க் இருக்குது. அங்கே முடியலை ன்னு இங்கே கொண்டுவந்தா இங்கே உங்கே பேரனோட தொணதொண கேள்விக்கு பதில் சொல்லி முடியலே. ப்ளீஸ் மாமா.  போயிட்டு ஒரு "ஒன் அவர்" டைம் பாஸ் பண்ணிட்டு வாங்களேன்" என்று வத்சலா கெஞ்சலாக சொல்ல, உனக்கு எப்பல்லாம் அவன் தொந்தரவா தெரியறானோ அப்பல்லாம் அவன் என்னோட பேரன். மத்த நேரத்தில் அவன் உன்னோட மகன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், "ஸ்ரீதர் கண்ணா .. வா .. நாம ரெண்டு பேரும் குளத்துக்குப் போய் மீனுக்கு பொரி போட்டுட்டு அப்படியே கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு வரலாம்" என்றார்.
"ஹய்யா .. குளத்தங்கரை கோயிலுக்கா? ஜாலிதான்.. தாத்தா, நாம அன்னிக்குப் பார்த்தோமே அந்த மீன் எல்லாம் இப்போ பெரிசா ஆகியிருக்கும்தானே ?"
"ஆமாண்டா செல்லம் "
"பொரி ?"
"அதான் கோயில் வாசல்லேயே கடலைக் கடை இருக்குதே. அங்கே வாங்கிக்கலாம். நீ உன்னோட குட்டி டவலை மட்டும் எடுத்து வச்சுக்கோ. நான் உனக்கு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்துட்டு வந்துடறேன் "
"ஜாலி.. ஜாலி .." என்று குதிக்க ஆரம்பித்தான் ஸ்ரீதர்.
தாத்தாவின் அருகில் சென்று மெல்லிய குரலில் "தாத்தா, நாம போறது அம்மாவுக்கு தெரியுமா ? அங்கே போறேனு சொன்னாலே "டஸ்ட் .. போகக் கூடாதுனு சொல்வாங்களே !"
"இன்னிக்கு உங்க அம்மாவுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குது. அதனாலே மத்த எல்லா விஷயமும் உங்க அம்மாவுக்கு டஸ்ட் தான். நம்மள போக சொன்னதே உங்க அம்மாதான் !"
இதைக் கேட்டதும் ஸ்ரீதரின் குஷி அதிகமானது.
"நாங்க கிளம்பறோம்.. நீ கதவை தாழ் போட்டுக்கோம்மா" என்று சொல்லி விட்டு பேரனின் கைகளைப் பிடித்தபடி நடக்க ஆரம்பித்தார் மகேந்திரன்.
கோவில் வாசலில் இருந்த பொரிக்கடையில் இரண்டு பாக்கெட் பொரி வாங்கி பேரன் கையில் கொடுத்தார். அவன் முகம் பிரகாசமானது.
அங்கிருந்தே குளத்தை நோட்டமிட்டார். குழந்தைகளின் கூட்டம் அதிகம் இருந்தது. படித்துறையில் கால் வைக்கவே இடம் கிடைக்காது என்கிற அளவுக்கு  குழந்தைகளின் கூட்டம். எல்லோர் கையிலும் பொரி பாக்கெட். பெரிய பெரிய சைஸில் விதவிதமான நிறங்களில் குளத்து நீரில் துள்ளித் திரியும் மீன்கள் குழந்தைகள் வீசும் பொரியை பிடிக்க நீரை விட்டு மேலே எழும்பி வந்தன. அதன் பாய்ச்சல் குழந்தைகளுக்கு குதூகலத்தை உண்டாக்க சந்தோஷமும் இரைச்சலுமாக அந்த இடம் "ஜேஜே" என்று இருந்தது.
குழந்தைகளின் விளையாட்டால் மீன்களின் வயிற்று பிரச்னை தீர்ந்து கொண்டிருந்தது. 
"கண்ணா.. படிக்கட்டில் கூட்டம் அதிகமா இருக்குது. நாம உள்ளே போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வரலாம். அதற்குள்ளே குளக்கரையில் நிற்கிற  கூட்டம் கொஞ்சம் கொறைஞ்சிடும் " 
"கொறையாட்டா ?"
"நாம வெயிட் பண்ணத்தான் வேணும். வா .. மொதல்லே தரிசனத்தை முடிச்சிடலாம்.  "
ஒவ்வொரு சன்னதியாக இருவரும் சுற்றி வந்தார்கள்.
பேரன் சுவாமி தரிசனம் செய்யும் அழகை ரசித்த மகேந்திரன், சன்னதியை விட்டு வெளியில் வந்து அங்கிருந்த தூணின் அருகில் சாய்ந்து உட்கார்ந்தார். 
அவர் மடியில் தலை சாய்த்தபடி உட்கார்ந்த ஸ்ரீதர், "மீன் " என்றான்.
"ரெண்டே ரெண்டு நிமிஷம் இங்கே உக்காந்துட்டு அப்புறம் குளக்கரைக்குப் போய் நீ போதும் போதும்னு சொல்ற வரை உக்காந்திருக்கலாம் .. சரியா ?"
"சரி தாத்தா "
"நீ சாமி கிட்டே என்ன வேண்டினே ?"
"டாடி எனக்கு புது கிரிக்கெட் பேட் வாங்கி தரணும்னு வேண்டினேன்."
"இதையெல்லாம் சாமிகிட்டே வேண்டிக்கலாமா? நல்ல புத்தியை குடுனு தான் வேண்டிக்கணும். நம்ம தகுதி தெரிஞ்சு சாமியே எல்லாம் தருவார் "
"நம்மகிட்டே எது இல்லையோ அதைதானே தாத்தா சாமி கிட்டே கேக்கணும்" 
"ஆமாம்.. ஆமாம்."
"நீங்க என்ன வேண்டினீங்க ?"
"நல்ல புத்தியை குடு .. ஆரோக்கியத்தை குடுன்னு வேண்டினேன் "
"என்னைப்போல குழந்தையா இருக்கிறப்ப என்ன வேண்டினீங்க ?"
"அப்பவும் நல்ல புத்தியை குடு .. ஆரோக்கியத்தை குடுன்னுதான் சாமி கிட்டே கேட்பேனே தவிர விளையாட பால் வேணும்.. எழுத பேனா வேணும்னு கேட்க மாட்டேன்"
"தாத்தா .. நீங்க சின்ன குழந்தையா இருந்தப்பவும் சாமி கிட்டே நல்ல புத்தியை குடு .. ஆரோக்கியத்தை குடுன்னு வேண்டி கிட்டீங்க. இப்பவும் அதைத்தான் வேண்டி கிட்டதா சொல்றீங்க. அப்படின்னா உங்க வேண்டுதல் இன்னிக்கி வரை பலிக்கவே இல்லையா. நீங்க கேட்டதை தர சாமிக்கு சக்தி இல்லையா.. இல்லே கொஞ்சம் முன்னாடி நீங்க சொன்னீங்களே, "நம்ம தகுதி தெரிஞ்சு சாமியே எல்லாம் தருவார்"னு. சாமி எதிர்பார்க்கிற தகுதி உங்ககிட்டே இல்லியா " என்று ரொம்பவும் நிதானமாக கேட்டான்.
இதை சற்றும் எதிர் பார்க்காத மகேந்திரன் யோசனையில் ஆழ்ந்தார். அவன் கேட்டதில் என்ன தவறு என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தார். 

No comments:

Post a Comment