உங்கள் முன்பாக எனது வேண்டுகோளை சமர்ப்பிக்கிறேன், நீங்கள் இதை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் !
இன்று காலையில் தொலைக்காட்சியில் நான் பார்த்த காட்சி என்னையும் உங்கள் முன்பாக மண்டியிட வைக்கிறது.
மாற்றுத் திறனாளியான ஒரு இளம் நபர், தமிழ்நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் சப் இன்ஸ்பெக்டர் ஆக ஒரேயொரு நாள் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட அந்த நபர் சென்னையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் சப் இன்ஸ்பெக்டர் ஆக வேலைபார்க்க அனுமதி அளித்து அந்த நபரின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறீர்கள்.
என்னுடைய நெடுநாள் ஆசையை நீங்கள் நிறைவேற்றி வைப்பீர்கள் என்ற கனவுடன் இதை சமர்ப்பிக்கிறேன்.
என்னுடைய ஆசை என்ன என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.
நான் ஒரேயொரு நாள் மட்டும் ஆந்திர முதல்வராகவோ அல்லது இந்திய பிரதமராகவோ இருக்க வேண்டும்.
அதற்கான காரணம் : -
திருப்பதி ஏழுமலையானை ஐந்தே ஐந்து நிமிடம் கண்குளிர தரிசிக்க வேண்டும்.
கஷ்டப்படறவங்க தங்களோட வேண்டுதலை கடவுள்கிட்டே சொல்லு வாங்க. சாதாரண நடுத்தர வர்க்கத்தின் கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை, நாட்டில் உள்ள V I P க்கள் மனது வைத்தால்தான் நடக்கும் என்பதை கண்டு கொண்டேன்.. நான் கண்டு கொண்டேன்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். தலைவலி மட்டுமல்ல; ஒருவருடைய ஆசைகளை, ஏக்கங்களை நாம் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமா?.....அதே உணர்வுகளை நாமும் அனுபவித்து இருந்தால்மட்டுமே முடியும், மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை, ஆசைகளின் தாக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
சிதம்பரம் சென்று சிவனை தரிசிக்க நந்தனார் ஆசைப்பட்டார் என்று புராணக்கதையாக கேட்டிருக்கிறோம். அந்தஆசையின் தாக்கத்தை என்னால் மிக முழுமையாக உணர முடிந்தது. காரணம், ஸ்ரீரங்கம் சென்று ரங்கனை தரிசிக்கும் ஆசை ஒருகாலத்தில் எனக்கும் இருந்தது.
அது நிறைவேறியது.
நான் வணங்கும் நாராயணனை- ஏழுமலையான் வடிவத்தில் மனங்குளிர ஆசை தீர தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவே இல்லை.
ஆரம்பகாலங்களில் பஸ்ஸில், காரில் சென்று ஏழுமலைக்கு பயணித்து இருக்கிறேன்.
அதன்பின் டிஸம்பர் குளிரில் கால்நடையாக மலையேறும் பழக்கத்தை நானே உண்டாக்கிக் கொண்டேன். காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு மணிக்கணக்கில் க்யூ வரிசை யில் நின்று சாமியை நாங்கள் ஏறெடுத்துப் பார்க்கும் அந்த ஒரேயொரு நொடிப்பொழுதில் "ஜருகண்டி" என்று சொல்லி எங்களை இழுத்து வெளி வாசலுக்குத் தள்ளிவிடுவார்கள்.
ஆனால் V I P க்கள், திருப்பதி ஏழுமலையானை ஏதோ ஒரு எக்சிபிஷனில் பார்வையிடறமாதிரி, குடும்பத்தோடு வந்து ரொம்ப சர்வசாதாரணமாக நடந்துவந்து பூரணகும்பமரியாதையுடன் தரிசித்துவிட்டுப் போவதை டீவீ யில் பார்க்கும்போது எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வரும்.
"துட்டு இருக்கிறவன் பக்கந்தான் நீயும் சாய்வே..நீயெல்லாம் ஒரு சாமி.. உன்னை நான் நம்பறேன் !" என்று மனசுக்குள் திட்டினாலும், மனதின் ஒரு மூலையில் "பெருமாளே!" என்கிற ஓசைதான் அலையடித்துக் கொண்டு இருக்கும்.
ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினாலுங்கூட மணிக்கணக்கில் வரிசையில் நின்றாக வேண்டும் தரிசனம் செய்ய !
ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவது எனக்கு பிரச்னை அல்ல. என்னால் சேர்ந்தாற்போல் (5 நிமிடத்துக்கு மேல்) நிற்கவோ காத்திருக்க வோ முடியாது. தலைசுற்ற ஆரம்பித்து விடும். மயக்கநிலைக்கு தள்ளப் படுவேன். அது மற்றவர்களுக்கு பிரச்னை உண்டாக்கலாம்.
இந்த கஷ்டம் எல்லாமே இல்லாமே நான் பாலாஜியை தரிசிக்கணும்னா அதுக்கு ஒரேயொரு வழி நானும் V I P ஆவதுதான். ஒரேயொரு நாள் மட்டும்.
V I P ஆகிறதுதான் ஆகிறோம் அதை ஒரேயொரு நாள் மட்டும் ஆந்திர முதல்வராகவோ இந்தியப்பிரதமராகவோ இருந்துட்டுப் போவோமே என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
யாருக்கும் எந்த செலவும் வைக்காமல் என்னோட செலவில் திருப்பதி வர என்னால் முடியும். வந்து மற்றபக்தர்களோடு சேர்ந்து நின்று பாலாஜியை ஐந்தேஐந்து நிமிடம் எனது கண்குளிர பார்க்கவேண்டும். பார்த்த அடுத்த நொடியே அந்த ஒருநாள் பதவியை ராஜினாமா பண்ணிடணும். இதுதான் என்னோட ஆசை.
என்னோட ஆசை நிறைவேறுமா ?
சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள்..
டீவீ சேனலில் ஏழுமலையானின் அற்புதங்கள் என்ற தொகுப்பு ஓடிக் கொண்டு இருக்கிறது.
அதை பார்த்த நான், "நானும் உன்னைப்பார்க்க எவ்வளவு ஆசையா ஓடி வரேன். என்னிக்காவது உன் தரிசனத்தை முழுசா குடுத்திருக்கிறியா? போனதடவை வந்தப்ப தரிசனம் கிடைக்காமே ஏமாந்துபோய் திரும்பி னேன். இனிமே உன்னைப் பார்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன்" என்றெல்லாம் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த நான், "இனிமே நீயா என் முன்னாலே வந்து நின்னு, 'இதோ .. வந்திருக்கிறேன் .. பார்!"னு சொன்னால்தான் உண்டு" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
மறுநாள் காலை.. மணி என்னவோ ஏழு அல்லது ஏழரைக்குள் இருக்கும். "வெங்கட் ராமா ... கோவிந்தா " என்ற குரல் மாடிக்கு கேட்டது.
இவ்வளவு காலையில் யார் கூப்பிடறது என்று நினைத்தபடி கீழே எட்டிப் பார்க்கிறேன்.
பதினெட்டு வயதுக்குள்தான் இருக்கும் ஒரு நபர். சிறுவன் லிஸ்டிலும் சேர்க்க முடியாது. இளைஞன் லிஸ்டிலும் சேர்க்க முடியாத பருவம்.
இடுப்பில் மஞ்சள் வேஷ்டி. நெற்றியில் நீண்ட நாமம்..கையில் பாத்திரம் எதுவும் இல்லை.
"இது புரட்டாசி மாசங்கூட இல்லை.. இப்ப வந்து கோவிந்தா போடறே" னு கேட்டபடி நான் கதவைத் திறந்தேன்.
எதையுமே லட்சியம் செய்யாத ஒரு மந்தகாச சிரிப்பு அந்த முகத்தில்.
"சாப்பிட ஏதாவது குடு !"
"கோவிந்தா போடறவங்க அரிசி இல்லாட்டா காசு கேப்பாங்க. நீ சாப்பாடு கேக்கிறே. கையில் பாத்திரம் எதுவும் இல்லை. இவ்வளவு காலையில் என்ன இருக்கும் ? எனக்கே பழைய சோறுதான் இன்னிக்கு " என்றேன்.
"அதைக் குடு "
"கோவிந்தா போடறே.. பழைய சோறு கேட்கிறே ?"
"நீ குடு " என்று அவன் சொல்ல, "இரு !" என்று சொல்லிவிட்டு மாடிக்கு வந்தேன். பழைய சோற்றை போட மனம் வரவில்லை.
ஃப்ரிஜை திறந்து தோசைமாவை எடுத்து இரண்டு தோசை சுட்டு ஒரு தட்டில் வைத்து, மிளகாய்ப்பொடி, வீட்டிலிருந்த ஸ்வீட் காரம் கொஞ்சம் எடுத்து வைத்து கீழே கொண்டு வந்தேன்.
அதற்குள் வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்த எங்கள் வீட்டு உறவினர் / விருந்தாளி ஒருவர், "உள்ளே எல்லாம் வரக்கூடாது" என்று அவனை விரட்டி இருக்கிறார். என்னால் அவரையும் பகைத்துக் கொள்ள முடியாது. சாப்பாடுத்தட்டுடன் நான் வெளியில் வந்தேன். வெளியில் சாக்கடையின் மூடி மேல் உட்கார்ந்து கொண்டிருந்தான்
"என்னப்பா.. சாக்கடை மேலே உட்கார்ந்திருக்கே.. இங்கே மரத்தடியில் உக்காருவதுதானே" என்று சொல்லி தட்டை அவன் கையில் கொடுத்து விட்டு தண்ணீர் கொண்டுவர வீட்டுக்குள் வந்து திரும்புவதற்குள் அவன் அங்கிருந்து மாயமாகி இருந்தான். தெருமுனை வரை தேடி பார்த்தேன். எங்குமே அவன் இல்லை.
திரும்பவும் வீட்டுக்குள் வந்து "என்ன இது அந்த சாப்பாட்டை அவன் கையில் எடுத்துட்டு போயிருக்க முடியாது. சாப்பிடற தோரணையில் தான் உட்கார்ந்திருந்தான். அதுக்குள் போயிட்டானே .. பழைய சோற்றைக் கூட சாப்பிட ரெடின்னு சொன்னான். அவனைப் பார்த்தால் பசியில் இருக்கிறவன் மாதிரி தோணலே" என்று நினைத்தபடி வீட்டுச்சுவரில் இருந்த பெருமாளிடம் "இவன் யார்"னு எனக்குள் கேட்டபடி டீவீ சுவிச்சை ஆன் பண்றேன் மனதில் பெருங்குழப்பத்துடன்.
என்கேள்விக்கு பதில் சொல்வதுபோல் "அழைத்து யாரோ நீதானே?" என்ற பாடல் காட்சி.
எனக்கு குழப்பம் ரொம்ப அதிகமாகிவிட்டது. நேத்துதான் பெருமாள் கிட்டே நீயா வீடு தேடி வந்து காட்சி கொடுத்தால்தான் உண்டுனு சொன்னேன். இது புரட்டாசி மாசம் இல்லே. ஆனா அந்தமாசம் மலைக்குப் போறவங்க கோலத்தில் ஒருத்தன் வந்து ஏதாவது குடுன்னு கேட்கிறான். வந்தது யார்னு குழப்பத்தில் இருக்கிறப்ப "அழைத்து யாரோ நீதானே?"னு அசரீரி மாதிரி ஒரு குரல் கேட்குது. வந்தது யார் என்ற கேள்வி மனசுக்குள்.
இன்றைக்கும் இந்த நிமிடம்கூட வந்தது யார் என்ற குழப்பத்தில் இருக்கிறேன். அதை அந்த பெருமாள் முன் நேருக்கு நேராக நின்று கேட்க வேண்டும்.அதற்கு நான் பெருமாளை ஐந்தே ஐந்து நிமிடம் நிம்மதியாக தரிசிக்க வேண்டும்.
எனது ஆசை நிறைவேறுமா ?
No comments:
Post a Comment