Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 17, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(16)

Image result for cartoon of crying  young girl
டைரியைப் படித்துக் கொண்டிருந்த பிரபு, ஒரே பெயரில் இரண்டு பேர் இருந்தால் அப்படி என்ன குழப்பம் வந்துவிடப் போகிறது என்ற நினைப்புடன் ஆர்வத்துடன் அடுத்த பக்கத்துக்கு தாவினான்.
"நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ - நெஞ்சில் 
நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ  !
கோடு போட்டு வாழந்தவர்கள் எத்தனையோ - கொண்ட 
குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ !!
என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளைப் படித்ததும், இது ஒரு பழைய சினிமா பாடலில் வரும் வரிகளாச்சே.. இந்த பவித்ராவோட அக்கா வாழ்க்கையின் நடைமுறை யதார்த்தங்களை ரொம்பவும் சிந்திச்சு பார்க்கிற டைப்  போலிருக்கு. ஹேண்ட்ரைட்டிங் கூட எவ்வளவு அழகா இருக்குது என்று மனதுக்குள் ரசித்தவன், மேற்கொண்டு டைரியைப் படிப்பதில்  அதிக அக்கறை காட்டினான்.
பவித்ரா தூக்கம் வராமல் படுக்கையிலேயே உருண்டு கொண்டிருந்தாள்.
"என்ன பவி .. தூக்கம் வரலியா ... சூடா ஒரு கப் பால் கொண்டு வரட்டுமா ?" என்று அவளருகில் சென்று அவள் தலைமுடியைக் கோதியபடி கேட்டதுதான் தாமதம், என்னை இழுத்து அவளருகில் உட்காரவைத்துக்கொண்டு எனது மடியில் சாய்ந்து கொண்டு தேம்ப ஆரம்பித்தாள்.
"என்னடி இது? ஏதாவது சப்ஜெக்டில் பெயில் ஆயிட்டியா ?"
"இல்லை "
"யாராச்சும் திட்டினாங்களா ?"
"ஊஹூம்."
"பிறகு ஏன்டி அழறே  ?"
"இங்கே பிறந்ததுக்குப் பதிலா நம்ம வாட்ச் மேன் அங்கிள் வீட்டில் பிறந்து இருக்கலாம்னு தோணுது "
இதைக் கேட்டு அதிர்ந்த நான், "ஏன் அப்படி நினைக்கறே ? உனக்கு இங்கே என்ன குறைச்சல் ?"
"ஸ்கூல் முடிஞ்சதும் அந்த அங்கிளோட குழந்தைங்க இங்கே வர்றாங்க. வாட்ச்மேன் அங்கிள் அவங்ககிட்டே எவ்வளவு ஆசையா அன்பா பேசறார். அவருக்கு குடிக்க குடுக்கிற டீயைக் கொண்ட அந்த குழந்தைங்ககிட்டே குடுக்கிறார். அவங்க இங்கே இருந்து கிளம்பிப் போறப்ப, "செல்லங்களா... பார்த்துப்போங்க.. ஓரமாபோங்க"ன்னு இங்கேருந்தே சொல்லிட்டு இருக்கிறார். நம்ம டாடி ஒரு நாள்கூட அப்படி கேர் எடுத்து பார்த்தது இல்லையே.. டாடிக்கு என்மேலே அன்பே கிடையாது "
"முட்டாள் பெண்ணே.. யாருடி  சொன்னது அப்படி? அப்பா உன்மேலே அதிகமா 
அன்பு வச்சிருக்கிறார் தெரியுமா?. "
"நீ பொய் சொல்றே .. அன்பு இருந்தால் எப்படி திட்ட சொல்லும்? எப்ப பாரு ஆர்மி ரூல்ஸ் .. அங்கே போகாதே.. இங்கே நிக்காதே.. எல்லா ஸ்டூடண்ட்ஸ்ம் ஸ்கூல் முடிஞ்சு அவங்க வீட்டுக்குப்போய் இஷ்டத்துக்கு டீவீ பார்க்கிறாங்க.. கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடறாங்க. ஆனா நான்...? ஸ்கூல்முடிஞ்சதும் நேரா கம்பெனிக்கு வரணும்.. அவர் கண்ணெதிரில் உட்கார்ந்து படிக்கணும். நீங்க ரெண்டு பேரும் கம்பெனியை விட்டுக் கிளம்பும்போதுதான் நானும் உங்ககூட கிளம்பி வீட்டுக்கு வரணும்.. எனக்கு அழுகை அழுகையா வருது. என்னோட படிக்கற ஸ்டூடெண்ட்ஸ் லைஃபை எப்படி எஞ்சாய் பண்ணுறாங்க தெரியுமா ?"
என்று அழும்குரலில் கேட்டாள்.
"அடி  அசடே.. அப்பா என் மேலே வச்சிருக்கிற பாசத்தைவிட உன்மேலே வச்சு இருக்கிற பாசந்தான் அதிகம்"
"ஓஹோ.. பாசம் இருந்தால் திட்ட முடியுமா ? திட்ட மனசு வருமா "
"பவி .. நீ ஆள்தான் வளர்ந்திட்டே... மனசளவில் இன்னும் நீ குழந்தைதான். அம்மா இறந்தப்போ என்கையில் நீ எப்படி சின்ன ரோஜாப்பூ மாதிரி இருந்தி யோ அதேமாதிரிதான் நீ இப்பவும் என் கண்ணுக்குத் தெரியிரேடி .."
"சும்மா ரீல் விடாதே.. டாடி என்னை திட்டறப்ப எப்பவாவது நீ எனக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருக்கிறியா ?"
"காரணம் இல்லாமே டாடி  உன்னை  திட்டி இருந்தால், நான் இன்டர்பியர் ஆகி இருப்பேன்.. அவர் திட்டற மாதிரி நடந்துக்கறே.. உனக்கு அது ஏன் புரியலே  ?"
"நீயும் டாடியும் ஒரே கட்சி..  நீ அவருக்குத்தான் சப்போர்ட் பண்ணுவே "
"பவி.. டாடி ஹார்ட் பேஷண்ட் .. அதுஇதுனு சொல்லி அவர் மனசு நோகும்படி நடந்துக்காதே. அவர் நமக்கு வேணும்டி.. பாட்டியும் இறந்து போயிட்டாங்க. நமக்கு உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லை. டாடியும் இல்லாட்டா நாம அநாதையா ஆயிடுவோம்"
இதைக்கேட்டதும் பெருங்குரலில் பவித்ரா அழ ஆரம்பித்தாள்.
அவளை ஆசுவாசப்படுத்தி "இனிமே டாடி உன்னை திட்டாதபடி நான் பார்த்து க்கறேன்.. உனக்கு அடுத்த வாரம் பெர்த் டே வருதுதானே.. உனக்கு என்னென்ன வேணும்னு சொல்" னு  பேச்சைதிசைதிருப்பி அவளைத் தூங்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..
தண்ணீர் குடித்துவிட்டு வரலாம் என்று கிச்சனுக்குப் போனபோது, அப்பாவின் அறையில் விளக்கு எரிவது  தெரிந்தது. அவர் ரூம் கதவில் கை வைத்ததுமே கதவு திறந்து கொண்டது. அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தார் டாடி.
"தூங்கலியா டாடி ?"
"தூக்கம் வரலே.. நல்ல தூக்கத்தில் இருந்தேன்.. ஏதேதோ கெட்ட கனவு.. தூக்கம் கலைஞ்சுபோச்சு. பேச்சுசத்தம் கேட்டுச்சு. வெளியில் வந்து பார்த்தேன். நீயும் பவியும் பேசிட்டு இருந்தது தெரிஞ்சுது. அவ மனசில் இருக்கிறத சுலபமா வெளியில் கொட்டிடறா. ஈஸியா இறக்கி வச்சிடறா. நிறையவிஷயங்களை மெல்லவும் முடியாமே வெளியில் சொல்லவும் முடியாமே அதை நான் என்னோடமனசுக்குள்ளேயேபோட்டு அழுத்திட்டுருக்கிறேன்.இதை என்னோட விதினு  சொல்றதைத் தவிர வேறென்னனு நான் சொல்லமுடியும்?" என்று சொல்லும்போது டாடியின் குரலில் ஒரு கலக்கம் தெரிந்தது.
"அப்படி என்ன டாடி பிரச்னை ? நம்ம பிசினெஸ் நல்லாதானே போயிட்டு இருக்குது. உங்களுக்கு துணையா நானும் பிஸினெஸில் இருக்கிறேன். எந்த தப்பு தண்டாவோ கோல்மாலோ கம்பெனியில் இல்லே. ரெண்டு ரமேஷும் அப்பப்போ ஏதாவது அடாவடி பண்ணுவாங்க. ஆனா ரெண்டு பேருமே  நல்ல ஒர்க்கர்ஸ்ங்கிறதாலே அவங்களை அங்கிருந்து தூக்காமே இருக்கிறோம். மற்றபடி  எதுவும் பிரச்னை இல்லையே டாடி "
"பவிக்கு பெர்த் டே வருதே .."
"ஆமாம்.. பதினாலு வயசு முடிஞ்சு பதினஞ்சு ஸ்டார்ட் ஆகப்போகுது. அதை கிராண்டா செலிபிரேட் பண்ணலாம் "
"எனக்கு இஷ்டமில்லே "
"என்ன டாடி சொல்றீங்க.. இப்பதான் அவகிட்டே உனக்கு பெர்த் டே வருது.. என்ன வேணும்னு சொல்னு சொல்லிட்டு வந்திருக்கிறேன். நீங்க என்னடானா பெர்த் டே செலிபிரேஷன் வேண்டாம்னு சொல்றீங்க ?"
"செலிபிரேட் பண்ற மனநிலையில் நான் இல்லே "
"டாடி.. நீங்க இப்படி சொல்றது அவ காதில் விழுந்தா அதுக்காக உட்கார்ந்து அழுது, சாப்பிடாமே அடம் பிடிப்பா... டாடிக்கு என்னை பிடிக்கவே இல்லைனு ஒருத்தர் பாக்கியில்லாமே ஊர் முழுக்க டமாரம் போட்டுட்டு திரிவா !"
"அந்த வயசில் அவ காலடி எடுத்து வைக்கிறது அவளுக்கு நல்லது செய்யாது. அவளுக்கு ஒரு கண்டம் இருக்குது.. அதை நினைச்சா அடிவயிறு கலக்குது."
"என்ன சொல்றீங்க டாடி ?"
"ஆமாம்...அவ ஜாதகத்தை குறிச்ச ஜோஸ்யர் சொல்லி இருக்கார்ம்மா "
"டாடி...நீங்க ஜோஸ்யம்...ஜாதகத்தில் ரொம்ப ஓவரா நம்பிக்கை வைக்கிறீங்க. அவங்க சொல்றதுதான் நடக்கும்னா நாம சாமியே கும்பிட வேண்டாமே. ஜோஸ்யரை கும்பிட்டு பரிகாரம் கேட்கலாமே... என்ன டாடி இது !  இந்தக் காலத்திலும் உங்களுக்கு இப்படியொரு அசட்டு நம்பிக்கை.?"
"சுமி.. நீ விவரம் புரியாமே பேசறே. நீ பிறந்து எட்டு வருஷம் கழிச்சு பவி பிறந்தா.. அவ பிறக்கிறதுக்கு முன்னமேயே, பிறக்கிற அந்தக் குழந்தை பெரிய உசிரை பலி வாங்கிடும்னு ஜோஸ்யர் சொன்னார். எனக்கு  அவர் சொன்னதில் அப்போ நம்பிக்கை இல்லை.. ஆனா அவர் சொன்னதுதான் நடந்துச்சு. அதே ஜோஷ்யர்தான் பிறக்கிற பெண்குழந்தைக்கு பதினஞ்சு வயசிலே ஒரு கண்டம் இருக்குது. அது ஒரு உயிரை பலி வாங்கும்.. அதுக்கு அடுத்து எட்டு வருஷத்திலே ஒரு கண்டம் இருக்குனு சொன்னார்.. உடனே நான், அதிலே என்ன நடக்கும்னு கேட்டேன். அதுக்கு அவர் 'எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துடும்'னு  சொன்னார்.  இந்தப்பொண்ணுக்கு என்னாகுமோ ஏதாகுமோன்னு நினைச்சு என் மனசு தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டுந்தான் தெரியும். அவ எந்த வம்பிலும் மாட்டிக்காமே இருக்கணுமேனு கழுகுகிட்டே இருந்து தன்னோட கோழிக்குஞ்சை பாதுகாக்க தாய்க்கோழி அல்லாடுமே ... அந்தமாதிரி நான் ராவும்பகலும் அல்லாடறேன். இந்தப்பொண்ணு எதையாது சொல்லி என்னை மேலும் மேலும் நோகடிக்கிறாம்மா!"னு  சொல்லும்போதே அழுகையினால் அவர் உடல் குலுங்கியது.
"டாடி .. என்ன இது ? எங்களுக்கு தைரியம் சொல்ற நீங்களா இப்படி.. இப்படி.. குழந்தை மாதிரி ? ப்ளீஸ் .. அழாதீங்க .. நான் அவளுக்குப் புரிய வைக்கிறேன் ..ப்ளீஸ் டாடி..நீங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு கம்பெனிக்கு கிளம்பி வாங்க.. நான் முன்னாடி போய் இன்னிக்கு டூட்டியை முடிச்சிடறேன் " என்று சொல்லி அவரை படுக்கையில் தூங்க வைத்துவிட்டு ரூமைவிட்டு வெளியில் வந்தபோது பொழுது விடிந்து அதிகநேரம் ஆகி இருந்தது.

                                                                              ---------------  தொடரும் ------------------------------

No comments:

Post a Comment