Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, August 16, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(15)

Image result for cartoon of man in waiting hall
வீட்டினருகில் வரும்போது, டைரி வள்ளியின் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற குழப்ப நிலைக்கு ஆளானான் பிரபு.
'ஆமா.. தெரிஞ்சால்தான் என்ன ?  பவித்ரா கொடுத்துதானே நான் வாங்கிட்டு வர்றேன். அதுமட்டுமில்லே இதேடைரியை வள்ளி படித்திருப்பதாக பவித்ரா சொன்னாங்களே..ஏன் தேவையில்லாமே எதுஎதையோ நினைச்சு குழம்பணும் '  என்று தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டான்.
கேட் கதவு திறக்கும் சத்தம் கேட்டதுமே வீட்டு வாசலுக்கு வந்தாள் வள்ளி.
அவள் கண்ணில் முதலில் பட்டது பிரபுவின் கையிலிருந்த டைரிதான். அதை பிரபு கவனித்து விட்டாலும், டென்சன் ஆகாமல், "என்னங்க.. வெளியூர் போன மாமா வந்தாச்சா? நீங்க சாப்பிட்டாச்சா?" என்று கேட்டான், எதையாவது பேச வேண்டுமே என்பதற்காக.
"இல்லீங்க அய்யா.. மாமா நாளைக்குத்தான் வருவாக.. முன்னப்பின்ன கூட ஒருநா இல்லே ரெண்டுநா கூட ஆகலாம். அவகளுக்கு  என்ன... சித்தம் போக்கு .. சிவம் போக்குங்கிறாப்லே  எங்கிட்டாவது சுத்தித் திரிஞ்சுக்கிட்டு இருப்பாக.. அய்யா .. கால் கை கழுவிட்டு வாங்க.. சாப்பாடு எடுத்து வைக்கேன்."
"இப்போ பசி இல்லீங்க.. நீங்க கொண்டு வந்து வச்சிடுங்க. வேணுங்கிறப்ப நானே போட்டு சாப்பிட்டுக்கிறேன்"
"அந்தப்புள்ள எப்படி இருக்கு ?"
"எந்தப்புள்ள ?" என்று எதுவும் புரியாதமாதிரி கேட்டான் பிரபு.
"என்னோட பிரெண்டை பார்த்ததா அன்னிக்கு சொன்னீகளே .. அந்தப் புள்ளய பத்திதான் கேட்டேன்."
"ஷீ இஸ் ஆல்ரைட்.. நீங்க எங்கிட்டே மறைச்ச எல்லா ரகசியத்தையும் இப்போ நான் படிச்சு தெரிஞ்சுக்கப்போறேன்"
"படிங்கய்யா... படிச்சு நல்ல முடிவு எடுங்க !"
"நல்ல முடிவா ?"
"அதாங்க..டைரியில எழுதி இருக்கிறதெல்லாம் படிக்க நல்லா இருக்கானு சொல்லணும்.  அதத்தான் சொன்னேன்..."
"சரிங்க" என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்ற பிரபு, டிரஸ் மாற்றிக் கொள்ள க்கூட பொறுமையில்லாதவனாக நாற்காலியை இழுத்து வாசலுக்கு நேராகப் போட்டுக்கொண்டு ப்ளஸ் டூ பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவனின் மன நிலையில் டைரியைப் பிரித்து கண்களை அதில் பதித்தான்.
முதல் பக்கத்தில் "அடியே பவி!.. உன் குழப்பம் எல்லாவற்றுக்கும் இதில் விடை இருக்கிறது. கலங்காதே கண்ணே ! பெண் இனத்தின் முதல் எதிரியே கலக்கம்தான். துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்காலுக்கும் கீழேதான்!" என்று சிறிய எழுத்து வடிவத்திலும், அதை அடுத்து  கொட்டை  எழுத்தில் "நடப்பது எதுவுமே நம் கைவசம் இல்லை! எதையும் அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டால் துயரம் என்று எதுவும் இல்லை!" என்று எழுதப்பட்டிருந்தது.  
அடுத்த பக்கத்தை விரல்கள் துழாவின. கண்களை எழுத்தில் ஓடவிட்டான்.
பவித்ரா...பிறக்கும்போதே ஒட்டுமொத்த குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தையும் பெற்றவள்..
"ஆம் .. துக்கிரிப் பொண்ணு.. பிறந்த அன்னிக்கே பெத்தவளை முழுங்கிய அசுரப் பசி ராட்ஷசி !" என்றுதான் பாட்டி அவளைக் கொஞ்சுவாள்.
அன்று  நம் தலையெழுத்தை எழுதியவன் நம் வேண்டுதலுக்காக  எதையும் அழித்து மீண்டும் திருத்தி எழுதப்போவதில்லை..
விரும்பி இந்தப் பூமியில் பிறந்தவர்தான்  யார் ? பிறக்கும் போது எல்லோருமே குழந்தைகள் தானே !
சமுதாயச்சூழலில் விதி வழி மதி செல்கிறது. அதன் அசுரப்பிடியில் சிக்கி சின்னாபின்னம் அடைந்தவர்கள்  கோடானு கோடி..
அசட்டு பவி ! நீ மட்டும் அதன் கோரப்பிடியில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்  ?
உனக்கு அப்பா சொல்வது எல்லாமே வேதவாக்கு.. அதுகூட உன் விளையாட்டு த்தனம்தான் என்பது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.
அன்றொரு நாள் .. காலை நேரத்தில் ..
"பவி .. எழும்புடி "
"தூங்கறப்ப டிஸ்டர்ப் பண்ணாதே "
"மணி ஏழேகால் "
"சோ வாட் ?"
"அப்பா பூஜையில் உட்கார்ந்திட்டார் "
"வழக்கமா நடக்கிறதுதானே.. கொறைஞ்சது ரெண்டுமணி நேரமாவது சாமி கூட பேசிமுடிச்சிட்டுதான் அறையைவிட்டு அவர் வெளியே வருவார்.. இப்போ அதுக்கு என்ன ?"
"அப்பாவோட பிரெண்ட் .. ராமானுஜம் அங்கிள் வந்திருக்கிறார்டி "
"ஒரு குட்மார்னிங் சொல்லி அவரை சோபாவில் உட்கார வைக்கிறதுதானே. கையோட இன்னிக்கு பேப்பரை எடுத்து அவர் கையில் குடு"
"அதெல்லாம் ஆச்சு "
"என்னை தூங்க விடு "
"என் பப்பி செல்லமே.. அவருக்கு என்ன வேணும்னு கேட்டு, அதை செர்வ் பண்ணிட்டு அப்புறமா உன் தூக்கத்தை கன்டினியூ பண்ணு "
"அந்த வேலையை நீ செய்றதுக்கென்ன ?"
"நான் வீட்டில் இல்லேடி..அவர் ரொம்ப ஆச்சாரம் "
"நான் குளிக்காமே போனா பரவாயில்லையா ?"
"முகத்தை மட்டும் அலம்பிட்டுப் போ பவி"
வேண்டாவெறுப்பாக எழுந்து பாத்ரூம் சென்ற பவி, முகம் அலம்பியபின் ஹாலுக்கு வந்தாள்.
"ஹாய்.. அங்கிள்.. குட்மார்னிங் .. என்ன சாப்பிடறீங்க..பால், காபி, டீ, ஹார்லிக்ஸ் .. இதில் எது வேணும் ?"
"நீ உக்காரும்மா "
"மில்க் அல்லது காபின்னா  சர்க்கரை எவ்வளவு போடணும்? திக் ஆர் லைட்? லைட்னா எவ்வளவு பாலில் எவ்வளவு வாட்டர் சேர்க்கணும்? சுகர் எப்படி மீடியமா லோவா ? உங்க சாய்ஸ்   டீன்னா ஆர்டினரி டீயா ? இல்லாட்டா இஞ்சி ஏலம் சேர்த்த எக்ஸ்ட்ரா ஆர்டினரி டீயா ?  உங்க சாய்ஸ் ஹார்லிக்ஸ்ன்னா அது வித் சுகரா அல்லது வித்தவுட் சுகரா ? ஸ்ட்ராங் ஆர் லைட் ? கூல் ஆர் ஹாட் ?" என்று மூச்சு விடாமல் பேசினாள் பவித்ரா.
"எனக்கு எதுவும் வேண்டாம்மா.. நீ கேட்டதே சாப்பிட்ட மாதிரிதான். ஏன்ம்மா .. குடிக்க ஒரு ட்ரிங்க்ஸ் குடுக்க இந்த அளவுக்கு இன்டெர்வியூ பண்ணனுமா? "
"வீட்டுக்கு யார் வந்தாலும் அவங்க சாய்ஸ் என்னனு தெரிஞ்சுக்கிட்டு அதை குடுக்கணும். உங்க இஷ்டத்துக்கு எதையாவது கொண்டு போய் கெஸ்ட் முன்னாலே நீட்டி சாப்பிடுங்கனு சொல்லக்கூடாதுனு எங்க டாடி ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி இருக்கிறார். அப்பா சொல்றத அப்படியே ஃ பாலோ பண்ற சமத்து பொண்ணு நான் ?! 
"உன் பேர் என்ன? என்ன படிக்கிறே ?"
"என் பேர் பவித்ரா.. என் அக்கா சுமி.. அதான் சுமித்ரா என்னை "பவி .. பவி"னு கூப்பிடுவா.. எங்க டாடி என்னை "பாவி... பாவி"னு கூப்பிடுவார் "
"ஓ .. அப்படியா ! ஏன் ?"
"நான் பிறந்த அன்னிக்கே எங்க மம்மியை ஸ்வாகா பண்ணிட்டேனாம் "
"ஓ.. ஸாரி .. உங்க டாடி என் பிசினெஸ் ப்ரெண்ட்.. மீட் பண்றப்ப பிசினஸ் பத்தி பேசுவோம். பேமிலி விஷயம் பேசினது கிடையாது. யூஸ்வலா ஆபீசுக்கு வருவேன்.. அதே ஸ்பீடில் கிளம்பிப் போவேன்.. இன்னிக்கு வீட்டுக்கு வந்தே ஆகவேண்டிய சிச்சுவேஷன்.. உன்னை பார்த்ததில் ரொம்பவும் சந்தோசம் !"
"அங்கிள் .. பிறந்த ஒரு குழந்தை, பால் கூட குடிக்க முடியாமே சிரமப்படும். அப்படியிருக்க ஒரு பெரிய ஆளை.. மம்மியை    ஸ்வாகா பண்ண முடியுமா ? முடியாதுதானே.. நான்  ஸ்வாகா பண்ணினதா டாடி... பாட்டி எல்லாருமே சொல்றாங்க "
"அதைப்பத்தி நீ வொரி பண்ணிக்காதே பேபி.. நீ படிச்சுமுடிச்சு நல்ல ஒரு பொஸிஷனுக்கு வா.. அப்போ, இன்னிக்கு உன்மேலே பழி சொல்றவங்க உன்னை பாராட்ட ஆரம்பிடுவாங்க .."
பூஜை அறை கதவை திறக்கும் சத்தம் கேட்டதும், "டாடி வர்றார்" என்றபடி தனது  அறைக்குள் நுழைந்த பவித்ரா மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.
ஹாலில் நடந்த க்விஸ் நிகழ்ச்சியை மறைவாக நின்று பார்த்துக்கொண்டிரு ந்த எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.  
வாசலில் "சார் " என்று அழைக்கும் குரல் கேட்டு அங்கு சென்றேன்.
ரமேஷ் நின்று கொண்டிருந்தான்.
என்னைப் பார்த்ததும், "வீட்டுக்கு வந்து பார்க்க சொன்னதா ஸார் சொன்னார்னு சூப்ரெண்ட்  சொன்னார்.  என்ன விஷயம் மேடம் ?" என்று கேட்டான்.
"டாடி வர சொன்னது உங்களை இல்லை. அந்த ரமேஷை.. ஒரே பேரில் ரெண்டு பேர் இருந்துகிட்டு ரொம்பவே குழம்பறீங்க... குழப்பறீங்க.. பேர்தான் ஒண்ணு ன்னா இனிஷியல், ஊர் கூட ஒண்ணாவா இருக்கணும்.? ரியலி மிராக்கிள்தான். உங்களில் யாராவது ஒருத்தர் உங்க பேரைமாத்தி வச்சுக்கோங்கனு   சொன்னா ரெண்டுபேருமே சம்மதிக்க மாட்டேங்கிறீங்க.. குலதெய்வம் கோவிக்கும்னு ரியசன் வேறு கோரஸா சொல்றீங்க..டாடியை பார்க்க ஒரு பிரெண்ட் வர்றதா சொல்லி இருந்தார். அவரை அழைச்சிட்டு வர்ற பொறுப்பை உங்க கிட்டே விடணும்னு சொன்னார். அப்புறம் பார்த்தா அவர் நேரா வீட்டுக்கு வந்துட்டார். நீங்க இங்கே வரவேண்டாம்னு சொல்ல டாடி மறந்திருப்பார். நீங்க கம்பெனி க்கு போகலாம். நானும் டாடியும் இன்னும் ஒன்-அவரில் வந்திடுவோம்" என்றதும் ரமேஷ் கிளம்பிப் போனார்.
ஒரே பெயரில் இரண்டு பேர் - இது பெரியதொரு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள். ?

                                                                     -----------------  தொடரும் -----------------------                

No comments:

Post a Comment