வீட்டைநோக்கி நடக்க ஆரம்பித்த பிரபுவின் நடையில் ஒரு துள்ளல் இருந்தது.
அவனை எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்த வள்ளி, "உங்களைக் காணோம்னு கவலைப்பட்டுட்டுருந்தேன். இன்னும் இந்த ஊர் உங்களுக்குத் பழக்கப்படலே. எங்கிட்டு போனாலும் நேரத்துக்கு.. இருட்டறதுக்கு முன்னே வீடு வந்து சேர்ந்திருங்க." என்றாள்.
"அதுக்கென்ன ... வந்தாப்போச்சு !"
"உங்க மாமா இல்லியா ?"
"இல்லே.. அவக சங்கரங்கோயில் வரை போயிருக்காக.. திரும்பி வர ரெண்டு நாள் ஆகும். ஏனுங்கய்யா ?"
"சும்மாதான் !" என்ற பிரபுவின் மனதில் "அப்பாடா" என்ற நிம்மதி வந்தது. அதன் விளைவாக மனதில் ஒரு இனந் தெரியாத சந்தோசம் எழுந்தது.
அதை வள்ளி கவனித்து விட்டாள்
"இன்னிக்கு அய்யா ரொம்ப குஷியா இருக்காப்லே இருக்குது. கதைக்கான விஷயம் ஏதாச்சும் மாட்டுச்சா ?"
"மாட்டின மாதிரிதான் "
"குடிக்கிறதுக்கு...இல்லாட்டா சாப்பிட ஏதாது கொண்டாரட்டுமா ?"
"வேண்டாங்க "
"வேண்டாங்க "
"பெரிய சங்கதியாதான் மாட்டி இருக்காப்லே .. அப்படின்னா ரெண்டுநாளைக்கு பசிக்காதுனு நினைக்கேன் "
"ரொம்பவும் கலாய்க்கிறீங்க! நாளைக்குக் காலைலே நான் வெளியே கிளம்பிப் போயிடுவேன்." என்று சொல்லிவிட்டு தனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இந்த அய்யா எதைக் கண்டுட்டு இப்படி குதி போடுதாக என்று யோசிக்க ஆரம்பித்தாள் வள்ளி.
அன்று இரவு சாப்பாட்டைக்கூட "சாப்பிட்டேன்" என்று காட்டிக்கொள்வதற்காக இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு எழுந்து விட்டான் பிரபு.
"வயசுப்பிள்ளை வயிறு நிரம்ப சாப்பிடுங்கய்யா..இப்படி அணில் மாதிரி கொறிச்சா உடம்பிலே எப்படி ஒட்டும்? வயிறு காலியா இருந்தா ராத்தூக்கம் எப்படி வரும் ? " என்று அக்கறையோடு சொன்னாள் வள்ளி.
"ஒட்டினவரை போதும். ரொம்பவும் ஒட்டிட்டா உடம்பு பெருத்து அதைக் கரைக்க ஓடும்படி ஆயிடும்."
"நல்லா பேசுதீக. எது சொன்னாலும் அதுக்கு ஒரு பதிலை கையிலே ரெடியா வச்சிருக்கீக.. பாதி ராத்திரியிலே பசிச்சா ஒரு குரல் குடுங்க.. பால் இருக்குது. சூடு பண்ணி தாரேன். கேக்க கூச்சப்படாதீக "
"சரிங்க "
அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு வள்ளி போனதும், மொட்டைமாடிக்குப் போன பிரபு அங்கே இருந்தபடி அந்த பர்ணசாலையைப் பார்க்க முயற்சித்தான். மங்கிய நிலவொளியில் குடிலும் மங்கலாகத் தெரிந்தது.
பவுர்ணமி முடிஞ்சு கிட்டத்தட்ட நாலு நாளுக்கு மேலாகிறதே என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அவளைப்பற்றிய முழுவிவரமும் தெரியாவிட்டால் தலைவெடித்து விடும் போல் இருந்தது.
எதற்காக இந்த இடத்தில் இவள் தனியாக இருக்கிறாள். ஆளைப் பார்த்தால், படித்தவளாக, நல்ல வசதியான வீட்டு பெண் போல தெரிகிறாள்.
ஏதாவது ஆராய்ச்சி பண்றதுக்காக இங்கே வந்து தங்கி இருக்கிறாளோ ?
வள்ளி மறைக்க நினைக்கிற பெண் இவள்தானோ ?
ஒரு பெண்ணைப்பற்றிய விஷயத்தை இன்னொரு பெண்ணே மறைக்க நினைப்பது ஏன் ?
இப்படியாக மனதில் பல கேள்விகள் எழுந்தாலும் எந்தக் கேள்விக்குமே விடை தெரியவில்லை.
நாளைக்கு விடிஞ்சதும் முதல் வேலையாக அவள் வீட்டுக்குப்போய் அதை தெரிஞ்சுக்கிட்டுதான் மறுவேலை என்று சங்கல்பம் செய்து கொண்டு கீழே இறங்கி வந்து படுக்கையில் விழுந்தவன் பலவிதமான கனவுகளுடன் தூங்க ஆரம்பித்தான்.
விழிப்பு வந்தபோது பொழுது நன்கு விடிந்திருந்ததை உணர்ந்தான்.
வாட்சை எடுத்து மணி பார்த்தவன் ,"ச்சே.. இவ்வளவு நேரமா தூங்கி இருக்கிறோம் ?" என்று பரபரப்புடன் வாசல் கதவை திறந்தான்.
கதவு எப்போது திறக்கும் என்று காத்திருந்தவள் போல வள்ளி ஓடி வந்தாள்.
"என்னங்கய்யா.. அசந்து தூங்கிட்டீகளா இல்லே உடம்புக்கு முடியலியா? விடிஞ்சு இம்புட்டு நேரமாயும் கதவு திறக்கலையே .. என்னவோ ஏதோனு பதைச்சு போயிட்டேன். கதவைத் தட்டலாமான்னு யோசனை வந்துச்சு. எதுக்கும் இன்னும் ஒரு அரைமணி நேரம் பார்ப்போம். அதுக்குப் பொறகு தட்டி எழுப்புவோம்னு இருந்தேன்"
"ராத்திரி ரொம்ப நேரம் தூங்காமே இருந்தேன். விடியற சமயத்தில் தூங்கிட்டேன் போலிருக்கு.. ஸாரிங்க "
"ஒரு பழமொழி சொல்வாங்க... 'சொர்க்கவாசல் கதவு எப்போ திறக்கும்னு விடிய விடிய காத்திருந்தவன், கதவு திறந்த நேரத்தில் தூங்கிப்போனான்னு'.. அந்த கதையா இருக்குது. முகம் கழுவிட்டு வாங்க..காபி கொண்டாறேன் "
"குடிக்கிறதும்.. சாப்பிடறதும்.. தூங்கறதும்தான் இங்கே ரொட்டீன் ஆக நடக்குது. மத்தபடி எதுவும் இல்லே "
"அது நடந்தா போதுமே ..அதைவிட வேறே என்ன வேணும் ? குடிக்கிறதுக்கும்.. சாப்பிடறதுக்கும் தானே மனுஷ ஜென்மம் நாய்படாதபாடு பட வேண்டியிருக்கு . அது சுலபமா நடந்தா சந்தோஷந்தானே !"
"அய்யோ .. அக்கா .. உங்ககிட்டே பேசி ஜெயிக்க முடியுமா ? நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடறேன். அப்ப காபி குடுத்தால் போதும்."
அடுத்த பத்து நிமிடத்தில் டைனிங் டேபிள் முன் வந்து உட்கார்ந்தவன், சாப்பாட்டை முடித்துவிட்டு "வெளியில் போயிட்டு வர்றேங்க." என்று சொல்லி விட்டு அங்கிருந்து புயல்வேகத்தில் வெளியேறினான்.
அவனுடைய ஒவ்வொரு சைகையிலும் அவசரமும் படபடப்பும் இருந்ததை வள்ளி கவனிக்கத்தான் செய்தாள்.
எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக விரைந்து நடந்த பிரபு, முதல்நாள் சென்று வந்த பாதையை நினைவில் வைத்துக்கொண்டு நடக்கலானான்.
அவனுக்கு முன்பாக ஒரு அம்மாவும் பையனும் மாட்டை ஓட்டியபடி வயலோரம் நடந்து செல்வதைக் கண்ட பிரபு, 'நாங்கூட சின்ன வயசில எப்பவும் அம்மா கையைப் பிடிச்சிகிட்டுதான் எங்கேயும் போவேன்' என்று நினைத்துக் கொண்டான்.
அவனுக்கு முன்பாக ஒரு அம்மாவும் பையனும் மாட்டை ஓட்டியபடி வயலோரம் நடந்து செல்வதைக் கண்ட பிரபு, 'நாங்கூட சின்ன வயசில எப்பவும் அம்மா கையைப் பிடிச்சிகிட்டுதான் எங்கேயும் போவேன்' என்று நினைத்துக் கொண்டான்.
"ஏன் வந்தீங்க?"னு கேட்டுட்டா என்ன பதில் சொல்றது.. என்ன... வீடு போரடிச்சுது .. அதான் வந்தேன்னு சொல்லலாமா.. அப்படி சொல்றது ரொம்ப அல்பத்தனமா இருக்கும். உங்களைப்பத்தி தெரிஞ்சிட்டுபோலாம்னு வந்தே ன்னு சொல்லலாமா?
"தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?"னு அவள் கேட்டுட்டா ...?
கேட்டால் என்ன?.. 'உங்களை மையமா வச்சு ஒரு கதை எழுதப்போறேன்'னு சொல்ல வேண்டியதுதான்... இப்படி பலவிதமாக பேசி மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு பவித்ரா வீட்டை அடைந்தான் பிரபு.
வாசலில் இவன் தலை தெரிந்ததுமே, "வாங்க!" என்று புன்னகையுடன் வரவேற்றாள் பவித்ரா.
"அம்மாடி !" நான் பயந்தமாதிரி எங்கே வந்தீங்க.. ஏன் வந்தீங்கனு கேட்கலே என்று நினைத்து மனதுக்குள் சந்தோஷப்பட்டான் பிரபு.
அவன் முன்பாக நாற்காலியை இழுத்துப் போட்டவள் கேட்ட முதல் கேள்வி "நீங்க இங்கே வர்றது முருகய்யனுக்கு தெரியாதுதானே?" என்பதுதான்.
"அவர் இல்லை. சங்கரங்கோயில் போயிருக்கிறாராம். திரும்பிவர ரெண்டுநாள் ஆகும்னு வள்ளி சொன்னாங்க".
"அப்பாடா !" என்ற பெருமூச்சுடன் " என்ன சாப்பிடறீங்க ?" என்று கேட்டாள்.
"ஃபுல் !" என்ற பாவனையில் வயிற்றைத் தொட்டுக் காட்டிய பிரபு, "எதுக்காக முருகய்யனுக்குப் பயப்படறீங்க. உங்களுக்கு அவரைப் பிடிக்காதா ?".
மூலையிலிருந்த ஒரு ஓலைப்பாயை எடுத்து உதறி அவனுக்கு முன்பாக விரித்து, அதில் உட்கார்ந்த பவித்ரா "அவருக்கு என்னைப் பிடிக்காது. பெத்த தகப்பனைவிட என்னிடம் அதிக அன்பு காட்டிய ஒரே ஒரு ஆள் அவர்தான். நான் இப்படி ஊரைவிட்டு ஒதுங்கி இருக்க காரணமும் அவர்தான்."
"என்ன சொல்றீங்க ?"
"அதெல்லாம் பிறகு நேரம் கிடைக்கிறப்ப பேசலாம். நீங்க இந்த ஊருக்கு எதுக்காக வந்தீங்க ?" - சற்றும் தயக்கமின்றி பேசினாள் பவித்ரா.
"ராம்குமார் ஸாரோட அடுத்த படம் ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட்டாம். அதுக்கான கதை எழுத.. வில்லேஜ் லைஃ பற்றி தெரிஞ்சுக்க என்னை அண்ணன் இங்கே அனுப்பினார்."
"ஓ .. நீங்க ஒரு எழுத்தாளரா ?"
"அப்படி சொல்ல முடியாது. நான் எழுதின ஒரேயொரு கதை விகடனில் வெளி வந்துச்சு. அதுக்கு பரிசும் கிடைச்சது. மத்தபடி பெரிசா எதுவும் இல்லை."
"நூத்துக்கணக்கா புத்தகங்களை எழுதிக் குவிச்சாதான் அவங்க எழுத்தாளன்னு உங்களுக்கு யாராவது சொன்னாங்களா என்ன ?"
"அப்படி இல்லீங்களா ?"
"என்னோட ஒப்பீனியன் என்னனு சொல்லட்டுமா? இப்போ வயசுங்கிறது வருடங்களோட எண்ணிக்கை. அவ்வளவுதான். அதுக்கும் நம்ம செயலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திறமையும் ஆர்வமும் இருந்தால் எந்த வயசிலும் எதுவும் செய்யலாம்..அதுக்காக கல்யாணம் பண்ணிக்கப் போறேனு கிளம்பிடக்கூடாது. தாலி கட்டறதுக்குப் பதிலா உடம்பில் கட்டு போட்டுட்டு திரும்பற மாதிரி ஆயிடும். அதுமாதிரி நிறைய எழுதிக் குவிக்கணும் என்கிறது ஒவ்வொருத்தர் ஆர்வமே தவிர ஒரு எழுத்தாளனுக்கு உள்ள அளவுகோல் அது கிடையாது!"
"பட்டிமன்ற பேச்சாளர் மாதிரி பேசறீங்க "
"இப்போ ஆங்கில இலக்கியப் படைப்பாளி ஷேக்ஸ்பியர் பத்தி இன்னிக்கும் பேசறோம். அவருடைய நாடக படைப்புகள் நாற்பதுக்கும் குறைவாகத்தான் இருக்கும். சினிமா நடிகர் அரவிந்த் சாமி நடிச்சு வெளியான படங்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனா இன்னிக்கும் அவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கு தானே. உங்க ஊர் தியாகராஜ பாகவதர்..அதான் எம்.கே.டி நடிச்ச படம் வருட க்கணக்கில் ஓடுச்சுனு கேள்விப்படறோம். அவர் நடிச்ச படங்களோட எண்ணிக்கை பதினஞ்சுதான்."
"உங்க ஊர் தியாகராஜ பாகவதர்னு சொல்றீங்க ? அப்படின்னா நீங்க எந்த ஊர் ?" என்று அவள் பேச்சை இடைமறித்துக் கேட்டான் பிரபு
"நான் பிறந்தது படிச்சது எல்லாமே டில்லியில்.. "
இந்த பதிலை சற்றும் எதிர்பாராத பிரபு அதிர்ச்சியினால் உறைந்து போய் உட்கார்ந்திருந்தான்.
--------------------- தொடரும் -------------
--------------------- தொடரும் -------------
No comments:
Post a Comment