Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 10, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(10)

Image result for cartoon of hut of rishies

வாத்தியாரய்யா கிளம்பிப்போன சிறிது நேரத்திலேயே வள்ளி வந்தாள்.
மரநிழலில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த முருகய்யன் அருகில் சென்று " என்ன மாமோய்..அப்பவே வந்தாச்சா ? வயலுக்கு உரத்துக்கு சொல்லணும்னு சொன்னீகளே. அதான் தலையாரி அய்யா வீடு வரை போயிருந்தேன். நாளைக்கு காலைலே குடுத்து அனுப்புறதா சொன்னாக.  நீங்க சாப்பிட்டீகளா ?" என்று அக்கறையுடன் கேட்டாள்.
"முடிஞ்சுது .. நீ போய் சாப்பிடு.. தம்பிக்கு என்ன வேணும்னு அப்பப்ப விசாரிச்சுக்கோ. நாம கவனிக்கலைங்கிற பேர் வரப்படாது ".
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைய போன வள்ளியை சைகை காட்டி அழைத்தான்  பிரபு.
"நீங்க சொன்ன கிழட்டு நாய் வந்துட்டு போயிட்டுது "
"வந்துச்சா? இன்னிக்கு என்ன வம்பை விதைச்சுது? போறச்சே என்னத்த அறுவடை பண்ணி  கட்டி எடுத்துட்டு போச்சு ?"
"நாட்டு நடப்பை விதைச்சுது . வெறுங்கையோட தான் போச்சு "
பிரபு இதை சொன்னதும், "நீங்ககூட நல்லாவே தேறீட்டீக" என்ற வள்ளி    வானத்தை ஏறிட்டுப் பார்த்தாள் .
"என்ன பார்க்கறீங்க ?"
"வந்த நாய் வெறுங்கையோட போச்சுன்னா கண்டிப்பா மழை வரும். அதான் மேகமூட்டம் ஏதாது இருக்கானு பார்த்தேன் "
"ஆளு நல்ல விவரமா பேசறார்."
"பேசிப்பேசியே குடியைக் கெடுக்கிறவன் .. கட்டையிலே போறவன் "
"குடி கெட்டா நல்லதுதானே !"
பிரபு இதைச் சொன்னதும் ஆச்சரியத்துடன் அவனை ஏறிட்டுப்பார்த்தாள் வள்ளி.
"என்ன சொல்லுதீக ? குடி கெட்டா நல்லதா ?"
"ஆமாம்.. குடியை ஒழிக்கணும்னுதானே இப்ப எல்லாரும் போராடறாங்க."
"அட .. எஞ்சாமி பகவானே... இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது .. அய்யா .. நான் சொன்ன "குடி", குடும்பம்.. நீங்க நினைக்கிறாப்லே தண்ணி பாட்டில் இல்லே " என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக்கொண்டாள்..
"ஸாரி .. ஸாரிங்க .. நீங்க வெயிலில் சுத்தி அலைஞ்சிட்டு வந்திருக்கீங்க. நான் உங்ககிட்டே  உங்க டயர்ட்னஸ் தெரியாமே பேசிட்டு இருக்கிறேன். நீங்க மொதல்ல போய் சாப்பிடுங்க.. ரெஸ்ட் எடுங்க..  சாயங்காலம் அஞ்சுமணிக்கு மேலே நான் ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன்"
"ரொம்ப இருட்டறதுக்குள் வீடு வந்து சேர்ந்துடுங்க.. எங்களுக்கு இருட்டு பழகிப் போன ஒண்ணு .. உங்களுக்கு அப்படியில்லே " என்றாள் உண்மையான கரிசனத்துடன்.
"தேங்க் யூ.. சிஸ்டர்..."
"எதுக்கு ?"
"நீங்க எங்கம்மா மாதிரியே ஒன்னொண்ணையும் பார்த்து பார்த்து செய்யறீங்க. கவலைப்படறீங்க.. அதுக்குதான் இந்த தேங்க்ஸ். உங்களை 'அம்மா'னு கூப்பிடணும் போலே இருக்கு !"
இதைக்கேட்டு பதிலேதும் சொல்லாமல் மனம்நிறைந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றாள் வள்ளி.
ஒவ்வொரு அறையாக சென்ற பிரபு அங்கிருந்த கலைநயம் மிக்க ஓவியங்க ளையும்  விளக்குகளையும் ரசிக்க ஆரம்பித்தான். அவனையும் அறியாமல் கால்கள் படிக்கட்டின் பக்கம் சென்றன.
"ஆஹா...மாடி இருக்குது..அப்படின்னா கண்டிப்பா மொட்டைமாடி இருக்கணும் " என்ற நினைப்புடன் மாடிப்படியேற ஆரம்பித்தவன் இதுவரை மாடிக்குப் போய்ப் பார்க்கணுங்கிறது எதனால் தோன்றாமல் போச்சு என்று யோசிக்க ஆரம்பித்தான்.
இதமான வெயில் காய்ந்து கொண்டிருந்தது. மொட்டைமாடியில் ஒவ்வொரு திசையிலும் நடக்க ஆரம்பித்தான்.
ஒருபுறம் நீர்நிலைகள் மறுபுறம் வயற்காடு, தென்னந்தோப்பு, வாழைத் தோட்டம், மாந்தோப்பு என்று இயற்கை அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரிந்த தூரம்வரை பசுமை... பசுமை...
சற்றுத் தொலைவில் மரம்செடி கொடிகளுக்கு நடுவில் குடிசை ஒன்று தெரிந்தது. அதைக்கூர்ந்து பார்க்கும்போது "பர்ணசாலை" வடிவில் அது இருப்பதை அறிந்தான்.
ரிஷிகள், முனிவர்கள்தான்   "பர்ணசாலை" அமைத்து காட்டுக்குள், மலைக்குள் தவம் செய்வாங்கனு படிச்சிருக்கிறோம். இந்த கிராமத்து எல்லையில் ஒரு பர்ணசாலை. அப்படின்னா அங்கே யாராவது ரிஷியோ முனிவரோ இருப்பாங்களா? அவங்க இருக்க சான்ஸ் இல்லே.. ஒருவேளை சாமியார், சித்தர்னு யாராவது இருப்பாங்களா ?
"அடே .. மக்கு... அவங்களா ... இவங்களானு யோசனை பண்ணிட்டு இருக்காமே எவங்க இருக்காங்கனு பார்த்துட்டுதான் வாயேன்" ஒரு மனசுக்குள் ஒரு குரல் சொன்னது.
அது என்னனு பார்க்கிறதை விட தலைபோகிற வேலை எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்தவன் மேஜை மீதிருந்த வாட்ச்சை எடுத்து நேரத்தை பார்த்தான். மணி 04.40
சரி .. இப்போ கிளம்பிப்போனா இருட்டும் முன்னாலே வந்துடலாம். வாசலில் முருகய்யன் படுத்திருக்கிறார். அவரிடம் விஷயத்தை சொல்லி அவரையும் கூட்டிட்டு போகலாமா என்ற நினைப்புடன் அவரருகில் சென்றவனை, அவரிடமிருந்து கிளம்பிய குறட்டை அவரை எழுப்ப விடாமல் தடுத்தது. "பாவம். மனுஷன் அசந்துபோய் தூங்கறார். அவரை ஏன் தொந்தரவு பண்ணனும்?" என்று நினைத்தவன், வள்ளியிடம் சொல்லலாமா என்ற எண்ணத்துடன் அவள் வீடுவரை சென்றவன், பிறகு ஏதோ நினைப்புடன் "வந்து சொல்லிக்கலாம்" என்று நினைத்தபடி மலையடிவாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அந்த பர்ணசாலையின் முகப்பு எந்த திசையில் இருக்கிறது என்று கண்கள் தேடிக் கொண்டிருந்தன.
ஒரு ஒற்றையடிப்பாதை மலையை நோக்கிப் போவது தெரிந்தது. அந்த பாதை யில்  நடக்க ஆரம்பித்தான்.
பிரபுவின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.  மொட்டை மாடியிலிருந்து அவன் பார்த்த அதே பர்ணசாலை.  ஆனா அங்கிருந்து பார்க்கிறப்ப பின்பக்கம் மட்டும் தெரிகிறது.  வந்து பார்த்தால் முன்பக்கம் வேறுமாதிரி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.
ஆள் உயரத்துக்கு வளர்ந்திருந்த அரளி செடியை கைகளால் விலக்கியபடி உட்பக்கமாக நோட்டமிட்டான்.
"வாவ்" என்று சந்தோஷத்தில் குதிக்க வேண்டும் போலிருந்தது. அன்று பஸ்ஸை விட்டு இறங்கிவரும்போது பார்த்த "நீளக்கூந்தல்" பெண், வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.
"கோலம் ரொம்ப நல்லா இருக்குது !"
அந்த இடத்தில் அப்படியொரு குரலை சற்றும் எதிர்பார்த்திராத அவள், கோலமாவு கிண்ணத்தைக் கீழே வைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள்.
"ஹாய்" என்று புன்னகைத்து 'நான் இங்கேதான் இருக்கிறேன்' என்று காட்டிக் கொண்டான் பிரபு.
"மிஸ்டர்... யார் நீங்க ? உங்களுக்கு இங்கே என்ன வேலை ?" - அவள் குரலில் அனல் பறந்தது.
"இல்லே... கோலம் ரொம்ப நல்லா இருக்குது !"
"கோலம் எப்படி இருக்குனு நான் கேட்டேனா என்ன ?"
"இல்லே.. சும்மா..."
"நீ சும்மா போகமாட்டே. நல்லா வாங்கிட்டுப் போகப் போறே "
"மேடம் நான் வெளியூர் "
"அது உங்க முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கே ?"
"அப்படியா?!" என்று கேட்ட பிரபு இரு கைகளாலும் முகத்தை தடவிப் பார்த்தான், பேப்பர் ஏதாவது ஒட்டியிருக்கோ என்ற பயத்துடன்.
"நான் ராம்குமார் ஸாரோட கெஸ்ட் "
"அப்படியா!! ஸாரி..ஸாரி..யாரோ ஒருத்தர் வம்பு பண்றதா தப்பா நினைச்சி பேசிட்டேன். வாங்க.. வாங்க.. உள்ளே வாங்க." என்று பரபரப்புடன் அழைத்தாள் அவள்.
"அடேயப்பா..."ராம்குமார்" என்பதே  இங்கே  மந்திரவார்த்தை   போலிருக்குதே . அந்த ஒற்றைச்சொல் என்னென்ன ஜாலமெல்லாம் காட்டுகிறது என்று மனதுக்குள் ரசித்தான்.
மூலையிலிருந்த ஓலைப்பாயை விரிக்க ஆரம்பித்தவள், அதை சுருட்டி மூலையில் வைத்துவிட்டு மேஜை அருகில் இருந்த நாற்காலியை அவன் முன்பாக இழுத்துப்போட்டு  "உட்காருங்க .. நீங்க ஸாருக்கு என்ன வேணும் ?" என்றாள்.
"தம்பி மாதிரி... அவர் என்னை அன்பா.. ஆசையா தம்பின்னுதான் கூப்பிடுவார். அண்ணன் பேரை சொன்னதுமே இவ்வளவு மரியாதை காட்டறீங்க. நீங்க அவருக்கு என்ன உறவுமுறை ? "
"நீங்க தம்பி மாதிரி... நான் தங்கை மாதிரி... அவ்வளவுதான்.."
"...................."
"என்ன குடிக்கிறீங்க? காபியா டீயா பாலா?"
"உங்களால் எதை சுலபமா ரெடி பண்ண முடியுமோ அதை குடுங்க "
"இங்கே நீங்க தனியாவா இருக்கீங்க.. அம்மா அப்பா .....?"
"அம்மா அப்பா இல்லாமே எந்தக் குழந்தையும் இருக்க முடியாதே. இருக்காங்க "
"அப்படியா ! எங்கே? வெளியில் எங்காவது போயிருக்காங்களா ?"
"மேலே போயிருக்காங்க "என்று விரலை உயர்த்திக் காட்டினாள்.
"என்னங்க... மேலே கூரைதானே இருக்குது "
"நான் சொன்னது அந்த "மேலே"!" என்று வானத்தை சுட்டிக்காட்டினாள்.
"ஸாரிங்க ... இங்க நீங்க மட்டுந்தான் இருக்கீங்களா ? தனியா இருக்க பயமா இல்லை ?"
"இல்லை.. மனுஷங்களோட சேர்ந்து வாழத்தான் பயப்படணும். யார் எதை எப்போ செய்வாங்களோனு பயந்து பயந்து வாழணும் .. தனியா வாழறப்ப  எந்த பயமும் இருக்காது.."
"நீங்க மனசளவில் ரொம்பவும் நொந்து போயிருக்கீங்கனு நினைக்கிறேன் "
"விதைச்சதை இப்போ அறுவடை பண்ணிட்டு இருக்கிறேன்."
"புரியலே !"
"புரியணுங்கிற கட்டாயம் எதுவும் கிடையாது . நீங்க பெரிய வீட்டில்தானே தங்கி இருக்கீங்க?"
"ஆமாம் "
"வள்ளி எப்படி இருக்கிறாங்க?  ஆமா... நீங்க இங்கே வர்ற விஷயம் வள்ளிக்கோ அவங்க மாமாவுக்கோ தெரியுமா ?"
"தெரியாது.. ரெண்டுபேரும் தூங்கறாங்க. அந்தவீட்டு மொட்டைமாடியில் இருந்து பார்க்கிறப்ப இந்த குடிலோட  பேக் சைட் தெரிஞ்சுது.. பார்க்க ரொம்ப வித்தியாசமா இருந்துது. அதான் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன் "
"நீங்க உடனே கிளம்புங்க "
"என்னங்க.. இப்பதான் காபி, டீ, பால்...என்னென்னமோ தர்றதா சொன்னீங்க. எதுவும் கண்ணிலேயே காட்டலே. அதற்குள் கிளம்ப சொல்றீங்க ?"
"விவரம் தெரியாமே ஜோக் அடிக்காதீங்க. உடனே கிளம்புங்க "
"அதான் ஏன் ?"
"நீங்க இங்கே வந்தது தெரிஞ்சா வள்ளியோட மாமா உங்களை உண்டு இல்லைனு பண்ணிடுவார். முருகய்யன் இருக்கிறப்ப இந்த பக்கம் தலையே காட்டாதீங்க.. ப்ளீஸ் போயிடுங்க " என்று கையெடுத்து கும்பிட்டு சொன்னாள் அவள்.
"அப்படின்னா முருகய்யன் இல்லாதப்ப வர்றேன். என்னோட பேர் பிரபு . உங்க பேர் என்னங்க ?"
"பவித்ரா"
அவள் பெயரை மனசுக்குள் மந்திரம்போல உருவேற்றியபடி அங்கிருந்து கிளம்பி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பிரபு.  

                                                                                             -------- தொடரும் ----------------- 

No comments:

Post a Comment