Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, August 09, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(08)


Image result for cartoon of a bus in a tamilnadu village bus stand
"ராஜேஷ் ... அம்மாவைப் பார்த்தியா ? எப்படி இருக்காங்க ?" என்று படபடப்பான குரலில் கேட்டான் பிரபு.
"இருக்காங்க!"
"என்ன சொல்றே ? நீ சொல்றது எனக்கு பயமா இருக்குது"
"பயப்பட எதுவும் இல்லே. ரொம்பவும் டல்லடிச்சு இருக்காங்க. நீ அவங்களை விட்டு பிரிஞ்சதே கிடையாதே.. நீ இப்போ கிளம்பி போயிட்டே. அந்த பாதிப்பு அவங்க கிட்டே அதிகம் இருக்குது"
"ஒன்லி டூ வீக்ஸ் .. அதிகபட்சம் ஒரு மாசம் நான் இங்கே இருப்பேன். என்னோடு வந்து இருங்க.. சேர்ந்து போயிட்டு வந்துடலாம்னு எவ்வளவோ சொன்னேன். கேட்கலே. வேறு ஏதாது சொன்னாங்களா ? எனக்காக அப்பப்போ போய் எட்டிப் பார்த்துக்கோ ராஜேஷ்" என்று கெஞ்சலாக பிரபு சொல்ல, "இதை நீ சொல்லித்தான் நான் செய்யணுமா?  நேரம் கிடைக்கிறப்பல்லாம் நான் போய் பார்த்துக்கறேன். நீ உன்னோட ஹெல்த்தை கவனிச்சுக்கோ. அம்மாவுக்கு உன்னைப் பத்தின கவலைதான் அதிகம்."
"அப்படி என்ன கவலை ?"
"நீ கேஷுவலா கேட்டுட்டே. அவங்க எதையோ நினைச்சு மனசுக்குள் புழுங்கறாங்க."
"என்ன சொல்றே ?"
"உன்கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம்னு அம்மா சொன்னாங்க"
"அவங்க சொன்னா, நீ அதை வேதவாக்கா நம்பி, எதையும் எங்கிட்டே சொல்லாமே மறைப்பியா ?" என்று கோபமாக கேட்டான் பிரபு.
"அவங்களுக்கு கொஞ்ச நாளாகவே மனசுக்குள் ஏதோ ஒரு அசரீரி, 'ஒரு கெட்டது நடக்கப்போகுது'னு சொல்லிட்டே இருக்குதாம். அதை நினைச்சு பயப்படறாங்க. படுத்தால், தூங்கினால் கெட்ட கெட்ட கனவா வருதாம். அதுக்காக தூங்காமே சாமி ஸ்தோத்திரம் சொல்லிட்டே இருக்காங்களாம். இதை அம்மாவே சொன்னாங்க. உங்கிட்டே சொல்ல வேண்டாம்னு திரும்பத் திரும்ப சொன்னாங்க"
"நான் வேணும்னா கிளம்பி வந்துடட்டுமா ?"
"அப்படியெல்லாம் நீ  பயப்பட்டு கிளம்பி வர்ற அளவுக்கு எதுவும் இல்லே. அவங்க மனசளவில் அப்செட் ஆகி இருக்காங்க.. அவ்வளவுதான். இன்னும் ரெண்டு வாரம் இல்லாட்டா ஒரு மாசம்.. அவ்வளவுதானே .. நான் அம்மாவை பார்த்துக்கிறேன்.  நீ வொரி பண்ணிக்காதே."
"சரிடா.  நான் இங்கே எப்பவுமே ஃப்ரீதான். ஆனால் நீ ஆபீஸில் பிஸியா இருப்பே. உன் லீஸர் டைமை கால்குலேட் பண்ணிதான் உனக்கு நான் போன் பண்ண வேண்டி இருக்குது. பை ராஜேஷ் ".
டெலிபோன் பூத்தை விட்டு வெளியில் வரவும், பஸ் ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ஓடிப்போய் ஏறிக் கொண்டான்.
"இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க. எங்கிட்டே எதையும் மனம் விட்டு பேசவும் மாட்டேங்கிறாங்க.. கதையும் ஆச்சு.. கத்தரிக்காயும் ஆச்சு. பேசாமல் ஊருக்கு கிளம்பிப்போயிடலாமா?" என்று தனக்குள் கேட்டபடி கவலையில் ஆழ்ந்திருந்தான். 
"ஸார் .. வயல்வெளி டிக்கெட்.. நீங்க கேட்ட இடம் வந்தாச்சு. இறங்குங்க." என்ற கண்டக்டரின் குரல் அவனை தட்டி எழுப்பியது போல இருந்தது.
"தேங்க்ஸ் ஸார் " என்று சொல்லிவிட்டு பஸ்ஸிலிருந்து வேகமாக குதித்து இறங்கி கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவன் கவனத்தை அவனுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த பெண்ணின் ஜடைப்பின்னல் கவர்ந்தது.
"அடேயப்பா.. இந்த பொண்ணுக்கு எவ்வளவு நீள தலைமுடி. ரெண்டு கையிலும் சுமையை தூக்கிகிட்டு இவள் யார் வீட்டுக்குப் போகிறாள் ?" என்று தனக்குள்ளாக சொல்லியவன், அவளருகில் ஓடிச்சென்று, "நான் வேணும்னா   ஒரு பையை எடுத்துட்டு வரட்டுமா?" என்று கேட்டபடி அவள் முகத்தைப் பார்த்தவன், "அடேயப்பா... என்ன ஒரு அழகு!" அதிர்ந்து போனான். இந்த கிராமத்தில் இப்படியொரு அழகு தேவதையா! நான் வந்த பஸ்ஸில் இவளை பார்த்த ஞாபகம் இல்லையே. ஒருவேளை முந்தின பஸ்ஸில் வந்து இருப்பாளோ என்ற கேள்விகளுடன் சிந்தனைக்குதிரையில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்க, "நோ.. தேங்க்ஸ். என் சுமையை தூக்க என்னால் முடியும். அதோ அந்த மரநிழலில் ஒரு அம்மா கைக்குழந்தை, கையிலே ரெண்டு பையை வச்சுக்கிட்டு நிக்கிறாங்க. நீங்க போய் உதவி பண்ணுங்க!" என்றாள். 
ஒரு அழகியின் கட்டளையை நிறைவேற்றுவதைவிட வேறுவேலை என்ன இருக்கிறது என்று மனசுக்குள் நினைத்தவனாக இரண்டே எட்டில் மரத்தை அடைந்தான். அங்கு யாரும் இல்லை. அதுமட்டுமில்லை.. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாருமே இல்லை. 
"என்னங்க.. இங்கே யாரும் இல்லையே. எந்த மரநிழலை சொன்னீங்க?" என்று குரல் கொடுத்தபடி தெருவை பார்த்தான். 
அங்கு அவளைக் காணவில்லை.
"என்னடா இது.. ஒரு நிமிஷம் முன்னாடி பார்த்தேன். அதற்குள் எங்கே போய் விட்டாள்?"
தன்னை ஒருமுறை கிள்ளிப் பார்த்தான். வலித்தது. கனவல்ல.. நடப்பது எல்லாமே நிஜந்தான்.. அந்தப்பெண் அதற்குள் எங்கே போயிருப்பாள் என்ற கேள்வி அவனைக் குடைந்தது. சரி.. வள்ளி கிட்டே கேட்கலாம் என்று தனக்கு சமாதானம் சொல்லியபடி நடக்க ஆரம்பித்தான்.  
வீட்டு வாசலில் அவன் தலையைக் கண்டதுமே ஓடி வந்த வள்ளி, "தம்பி வெளியில் போயிட்டு உள்ளே வரும்போதெல்லாம் காலை நல்லா கழுவிட்டு உள்ளே வரணும். வாசல் கேட் பக்கமே குழாய் இருக்கு பாருங்க" என்றாள் .
மறுபேச்சு பேசாமல் கீ வசப்பட்ட பொம்மை மாதிரி அவள் சொன்னபடி செய்தவன், "அப்படி ஏதாவது சாஸ்திரம் இருக்குதா? உள்ளே கோயில்.. இல்லாட்டா .. சாமி ஏதாது இருக்குதா ?" என்று கேட்டான்.
"சாமியும் இல்லை பூதமும் இல்லை. வெளியில் போயிட்டு வீட்டுக்குள்ளே நுழையறவங்க கால் கழுவாமே உள்ளே வந்தா எங்க வீட்டு ஆசாமி பேயாட ஆரம்பிச்சிடும்"
"ஏன் அப்படி ?"
"அந்த மனுஷன் உடம்புக்குள்ளே ஒரு பேய் உக்காந்துக்கிட்டு அவகள பிடிச்சு ஆட்டுது. சுத்தம். சுத்தம்.. சுத்தம் இல்லாட்டா நோய் வந்துரும். அங்கிட்டு நின்னா அது ஒட்டிக்கும். இங்கிட்டு நின்னா இது ஒட்டிக்கும். எதை தொட்டாலும் அது தன்னோட ஒட்டிக்கும். தொத்துநோய் வந்துருங்கிற பயம் அந்த மனுஷனுக்கு. நோயாலே செத்தவங்களைவிட அது பத்தின பயத்தாலே செத்தவங்கதான் அதிகம். அதை இந்த மனுஷனுக்கு புரிய வைக்க படாதபாடு படுதேன். கேக்க மாட்டேங்காக.. இந்த பயத்தால ஒரு பொண்ணு வாழ்க்கை யை நாசமடிக்கிறதுதான் மிச்சம்." என்று தன்னை மறந்து சொன்னாள்  வள்ளி.
"எந்தப்பொண்ணு ?"
"பொண்ணா ? நான் சொன்னேனா..அய்யா .. நான் என்னைத்தான் சொன்னேன். இவகள கட்டிக்கிட்டு நான் படுற வேதனையை மனசில் வச்சுக்கிட்டு அப்படி சொல்லிட்டேன். மத்தபடி ஒண்ணுமில்லே... ஒண்ணுமே இல்லை "
"அதுக்கு ஏன் இவ்வளவு டென்சன் ஆகிறீங்க ?"
"அப்படியா.. ஓடி வந்த படபடப்பு.. அம்புட்டுதான்."
அவள் சொல்வதை நம்புவது போல அமைதியாக இருந்தாலும், "இங்கே ஏதோ ஒண்ணு இருக்குது.. அதைக் கண்டுபிடிச்சு சொல் அறிவே " என்று அறிவுக்கு ஆர்டர் போட்டான். 
"தம்பி .. அம்மாகிட்டே பேசியாச்சா ?"
"இல்லே.. பிரெண்ட் கூட பேசினேன். அம்மா என்னைப் பத்தின கவலையில் இருக்கிறாங்களாம் "
"அம்மா.. அம்மானு அம்மா மேலே இம்புட்டு உசிரா இருக்கீக. எந்த மகராசி வந்து உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கப்போறாளோ ?"
"என்ன சொல்றீங்க ?"
"நாட்டு நடப்பு.. உலக வழக்கத்தை சொன்னேன் "
"எனக்கு ஒண்ணும் புரியலே "
"நேரம் வரும்போது எல்லாம் தன்னாலே புரியும்.. வாங்க சாப்பாடு ரெடி. நீங்க கழஞ்சு போட்ட துணி எல்லாத்தையும் துவைச்சு இஸ்திரி போட்டு வச்சாச்சு . கழட்டி போட்ட இடத்திலே துணியை தேடாதீங்க. அது  அதோ அந்த ரெண்டாவது ரூம் அலமாரியில் இருக்குது."
"உங்களுக்கு ஏன் வீண் சிரமம் ?"
"எனக்கு எந்த சிரமமும் இல்லை. இங்கே வந்து தங்கிறவங்க துணியை எல்லாம்  வண்ணாத்தி வந்து எடுத்துட்டு போவா.. தேய்ச்சு கொண்டாந்து வச்சிடுவா... தம்பி நான் சொன்னேனே. அந்த வாத்தி இன்னிக்கு வருவான். அவன் பேசற பேச்சை கேளுங்க. என் வீட்டு முன்னாடி கிடக்கிற கயித்துக் கட்டில்ல உக்காந்து கதை அளப்பான்.. சாமி ரூமுக்கு அடுத்தாப்லே ஒரு அறை இருக்குது பாருங்க. அங்கிட்டு நீங்க நின்னா போதும்.. இங்கிட்டு பேசறது ஒரு வார்த்தை கூட பிசகாமே அப்படியே கேட்கும். அவனை அப்படியே மொத்து மொத்துனு மொத்தணும்னு கை துறுதுறுக்குது..மொத்தத்தான் முடியலே. நீங்க போய் உக்காருங்க. நான் ரசத்தை மட்டும் சூடு பண்ணி எடுத்தாரேன்."
அவள் அங்கிருந்து போனதும் கைலிக்குள் தன்னை நுழைத்துக் கொண்ட பிரபு டைனிங் டேபிள் முன்பாக வந்து உட்கார்ந்தான்.
அவன் முன்பாக செய்து எடுத்து வந்த பதார்த்தங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்த வள்ளி, "சாப்பாட்டில் உப்பு உறைப்பு கூடுதலா இருக்கணுமா குறைவா இருக்கணுமா? குத்துமதிப்பா நான் செஞ்சிருக்கேன். உங்களுக்கு எப்படி வேணும்னு   சொல்றீகளோ நாளைக்கு அந்தமாதிரியே ரெடி பண்ணிடுவேன்".
"இப்படி வேணும் அப்படி வேணும்னு எதுவும் அளவு கிடையாது. என்னைப் பொறுத்தவரை சாப்பாடுங்கிறது வண்டி ஓட்டறதுக்கு பெட்ரோல் போடற மாதிரி வேலை செய்றதுக்கு நாம போடற  எரிசக்தி.. அவ்வளவுதான். "நீங்க சாப்பிட்டீங்களா ?"
"வந்த விருந்தாளி சாப்பிடுமுன்னாலே யாராச்சும் சாப்பிடுவாகளா? நீங்க சாப்பிடுங்க.. மாமா வந்ததும் அவகளும் நானும் சேந்து உக்காந்து சாப்பிடுவோம். தம்பி.. உங்க வீடு மாதிரி நினைச்சு கூச்சப்படாமே கேட்டு வாங்கி சாப்பிடணும்."
"உங்களை ஒண்ணு கேக்கணும். இந்த ஊருக்குள் நுழைய ஒரு பாதைதான் இருக்கா. இல்லே குறுக்கு வழி இருக்கா ?"
"ஏன் கேக்கறீக ?"
"சும்மா தெரிஞ்சு வச்சுக்கத்தான்.. கதை எழுதும்போது அதையும் சேர்த்து கதை விடலாம்தானே.. வேறு பாதை  .. இல்லாட்டா வேறே  வீடுங்க இருக்கா.?"
"இந்த கிராமத்து தெருக்குள் நுழைய நிறைய பாதை இருக்குது.  எந்த பாதையில் போனாலும் செக்கு மாடு மாதிரி சுத்திசுத்தி ஒரே இடத்துக்குத்தான் வந்து சேரும். மேட்டு வளைவு பக்கம் யாரும் போக மாட்டாங்க!"
"ஏன் போக மாட்டாங்க ? அது எங்கே இருக்குது ?"
பிரபு இதைக் கேட்டதும் பரபரப்பான குரலில், "அது எங்கிட்டோ இருக்குது. அத பத்தி இப்ப என்ன ? நீங்க தட்டைப் பார்த்து சாப்பிடுங்க "என்றாள்
"அடே .. பிரபு .. அங்கே ஏதோ இருக்குது !" என்று கணக்குப் போட்டு சொன்னது அறிவு. அதையும் பார்த்திடலாம் என்ற முடிவுடன் சாப்பிட ஆரம்பித்தான் பிரபு .
                                                                                ---------------தொடரும்-----------------

No comments:

Post a Comment