Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 20, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 119 )

                                     வாழ்க்கையே கனவாய்,கனவுகளே வாழ்க்கையாய்....!!
"என்னப்பா ஜெகன், வாசலில் ஆள் வந்து நிக்கிறது கூட தெரியாமே அப்படி எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படியொரு ஆழ்ந்த யோசனை ?" என்ற குரலைக் கேட்டு, வாசல் பக்கம் தனது  பார்வையை ஓடவிட்ட ஜெகநாதன், "வா மூர்த்தி, வா... என்ன இது இப்படியொரு வெயிலில்!.. வெயிலுக்கு முன்னாலே காலையில் வந்திருக்கலாம் .. இல்லாட்டா வெயில் தணிஞ்சதும் சாயங்காலம் வரலாமே.. வா ஏஸி ரூமில் போய் உட்காரலாம்" என்று மூர்த்தியின் கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச்சென்ற ஜெகன் உள்பக்கம் திரும்பி, "மரகதம்... மூர்த்தி வந்திருக்கிறார். முதலில் குடிக்க ஜில்லுனு ஏதாவது கொண்டு வந்து கொடு .. அப்படியே சாப்பாடு ரெடி பண்ணு" என்றார்.
"சாப்பாடெல்லாம் வேண்டாம். நான் இப்போ கிளம்பிடுவேன்.. இந்தப் பக்கம் ஒரு வேலையாக வந்தேன்.. அப்படியே உன்னையும் பார்த்துட்டுப் போயிடலாம்னு வந்தேன்"
"என்னவிஷயம்னு போனில் சொல்லியிருந்தால் நானே பார்த்து முடித்து  விட்டு தகவல் சொல்லியிருப்பேனே "
"என் புள்ளைக்கு ஒரு வரனோட  ஜாதகம் வந்தது. பொண்ணு வீடு அடுத்த தெருவில். அதை விசாரிக்க வந்தேன். வீடு பூட்டி இருக்குது. அக்கம்பக்கத்தில் விசாரித்தேன். யாருக்கும் விவரம் தெரியலே  "  
"ஆரம்பமே அமர்க்களமா இருக்குனு சொல்லு ... அடுத்த தெருவில் யார் வீடு ?"
"பொண்ணோட அப்பா பேர் பூவராகவன்"
"ஓ . அவரா ! தங்கமான மனுஷன் .. நல்ல குடும்பம் ... நல்ல பொண்ணு "
"பொண்ணு எப்படி ?"
"அதான் சொன்னேனே .. நல்ல பொண்ணுன்னு"
"பார்க்கிறதுக்கு ஆள் எப்படி இருப்பா ?"
"பொண்ணு, பொண்ணா இருப்பா "
"பொண்ணா இருப்பா சரி ... லட்சணமா இருப்பாளா ?"
"என்ன கேட்கிறே ?"
"என் புள்ளை போட்டிருக்கிற ஒரே ஒரு கண்டிஷன் பொண்ணு அழகா இருக்கணும்கிறதுதான் "
"அப்படியொரு ஆசை இருக்கலாம் தப்பில்லை.. பையனுங்க நினைக்கிற மாதிரியே பொண்ணுங்களும் நினைக்க ஆரம்பிச்சுட்டா தெருவிலே சுத்திட்டு இருக்கிற அபிஷ்டுகளை  யார் கட்டிக்கிறது ?"
"அபிஷ்டுவா ?"
"அசிங்கங்களைன்னு  சொல்லாமே அபிஷ்டுன்னு கொஞ்சம்   பாலிஷ்டா சொன்னேன்."
"என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்"
"உலகத்தில் இதுதான் ... இது மட்டுந்தான் அழகுன்னு எதையும்  நாம முத்திரை குத்த முடியாது. இவதான் அழகுன்னு ஒரு பேச்சுக்கு நீ யார் கிட்டேயாவது சொல்லு.. உடனே அவங்க " இதைக் காட்டிலும் மூக்கு கொஞ்சம் எடுப்பா, அழகாக  அங்கே ஒரு பொண்ணு இருக்கு. இதைக் காட்டிலும் கலர்  கொஞ்சம் தூக்கலா இங்கே ஒரு பொண்ணு இருக்குனு பெரிய லிஸ்ட் குடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. அழகு அறிவு இதுக்கெலாம் இதுதான் எல்லைன்னு யாராலும் சொல்ல முடியாது. ஒருத்தன் ரொம்பப் படிச்சவனாக, அவனோடு கூட இருக்கிற எல்லாருமே அவனை நிமிர்ந்து பார்க்கிற அளவுக்கு அறிவாளியாக இருக்கலாம்.. அவனைக் கூட படிப்பறிவு எதுவுமே இல்லாத ஒருத்தன், ஏதோ ஒருவிதத்தில் ஏதாவது ஒரு வார்த்தையை சொல்லி மடக்கி விடுவான்.. உதாரணமா நம்ம ஆபீஸ் ராகவனையே எடுத்துக்கோயேன். எப்பேர்ப்பட்ட ஜீனியஸ். அவரையே ஒரு  வில்லேஜ் ஆள் மடக்கிட்டான். ஒரு சமயம் ராகவன் ஆபீசை விட்டு வெளியே வர்றப்போ  இந்த ஆள் ஆபீசுக்குள் நுழைந்தான் . கையிலிருந்த பேப்பரைக் காட்டி ஏதோ கேட்டிருக்கிறான். இதைப் பார்த்த பியூன் ஓடி வந்து 'ஆபீசரை ஏன் தொந்தரவு பண்றே?"னு சத்தம் போட்டிருக்கிறான்.இருந்தாலும் ராகவன் அதை படிச்சுப் பார்த்துட்டு "உள்ளே போய் ஜெயசீலன்னு ஒருத்தர் இருப்பார். அவரிடம் இதைக் காட்டு. என்ன செய்யணும்னு அவர் சொல்வார்"னு சொல்ல, அந்த வில்லேஜ் ஆள் "உன்னை ஆபீசர்னு இந்த ஆள் சொல்றான். உன்னைக் கேட்டால், அவனை போய்க்  கேள்னு எவனையோ கையைக் காட்டறே. உனக்கு இதைப் பத்தி தெரியாது, அவனுக்குத்தான் தெரியும்னா பேசாமே அவனை ஆபீசரா வச்சிருக்கலாமே"ன்னு  சொல்ல ராகவனுக்கு சிரிப்பை அடக்க முடியலே.. ஒருமுறை டாக்டர் வீட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு முன்னால் போன பேஷண்டை "உடம்புக்கு என்ன?"னு டாக்டர் கேட்க, "அட கருமமே   அது தெரியாமேத்தானே உன்னைப் பார்க்க  நான் இங்கே வந்திருக்கிறேன். உனக்குமே தெரியலையா ? "ன்னு கேட்டு சத்தம் போட அங்கே ஒரே அமர்க்களம்தான்"
"சரி நீ சொல்றதை நான் ஒத்துக்கிறேன், ஏன்னா திருவள்ளுவரே சொல்லி இருக்கிறார், எப்பேர்ப்பட்ட படிப்பாளியையும் மடக்கும் சொல் கொஞ்சம் படிச்சவங்க கிட்டே கூட இருக்கும்னு. அதனாலே இவன்தான் மேதைனு யாரையும் முத்திரை குத்த முடியாது.  ஆனா. இவதான் உலக அழகின்னு ஒரு சிலருக்கு முத்திரை குத்திடறாங்களே. அது எப்படி ?"
"அட நீ ஒண்ணுப்பா .. ஊர் உலகத்தில் இருக்கிற அத்தனை பொண்ணு களையும் தராசில் நிறுத்துப் பார்த்தா தீர்ப்பு சொல்றாங்க ! இல்லையே ! அந்தப்  போட்டியில் கலந்துக்க வந்திருக்கிற ஒரு சிலரில் ஒருத்தரை தேர்ந்தெடுக்கிறாங்க.. அவ்வளவுதானே.. வெளி உலகுக்குத் தெரியாமல் எத்தனையோ அழகிகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாங்க தெரியுமா ?இன்னொன்னு..எந்த ஒன்றுமே நாம பார்க்கிற பார்வையில்தான் இருக்கு. அழகா இருக்குனு நினைச்சா அது அழகாய் தெரியும். அவலட்சணம்னு நினைச்சுக்கிட்டே பார்த்தால், மனசில் ஓடுவதுதான் பார்வையில் தெரியும். இதை உன் பையனுக்குப் புரிய வை . பூவராகவன் குடும்பம் நல்ல குடும்பம். அந்த வரனை நழுவ விட்டுடாதே. அந்தப் பொண்ணும் குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு"
" சரி .. என் புள்ளைகிட்டே பேசிப் பார்க்கிறேன்"
"மூர்த்தி, அழகு அறிவு பத்தி நாம பேசிட்டு இருந்தோமே. அதிர்ஷ்டம்னா இதுதான் அதிர்ஷ்டம்னு யாராவது எதையாவது அடையாளம் காட்டி இருக்கிறாங்களா?"
"ஏன் கேட்கிறே ? திடீர்னு ஏன் இப்படியொரு சந்தேகம் ? ஒரு சிலருக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம் அடிக்குது . ஒரு சிலருக்கு ஜாக்பாட்டில் பணம் கிடைக்கிறது "
"சரிப்பா.. அதெல்லாம் பணம் குடுத்து டிக்கெட் வாங்கினால் மட்டும் தானே கிடைக்குது .. அப்படியெல்லாம் எதுவுமே செய்யாமே, அதாவது ஒரு நயாபைசா கூட செலவு பண்ணாமே கோடானு கோடி பணம் சம்பாதிச்சவங்க யாராவது இருக்கிறாங்களா ?"
"என்ன நீ ! புதுசு புதுசா என்னென்னவோ கேட்கிறே ?"
"ரெண்டு நாள் முன்னாடி எனக்கொரு கனவு வந்துச்சு . அதை  நினைச்சுப் பார்த்தால் வேடிக்கையாகவும் அதே சமயம் ரொம்ப  சந்தோசமாகவும் இருக்குது "
"சொல்லு .. அந்த சந்தோசத்தை நானும் ஷேர் பண்ணிக்கிறேன் "
"உலகத்திலேயே இவங்கதான் பெரிய பணக்காரர்கள்னு ஒரு லிஸ்ட் இருக்குதுதானே. அந்த லிஸ்டில் இருக்கிற முதல் இடத்தில் இருக்கிற  பத்து பணக்காரங்க ஆளுக்கு பத்து கோடி... ஆளுக்கு பத்து கோடின்னா மொத்தம் நூறு கோடி ஆச்சு.. நூறு கோடி பவுண்ட்ஸ் பணத்தை பரிசாகக் கொடுக்கப் போறதா அனௌன்ஸ் பண்றாங்க . யாருக்குக் குடுக்கிறாங்க தெரியுமா ? உலகத்தில் இருக்கிற அத்தனை ப்ளாக்கர், வெப் சைட்  ஐ டி யையும் குலுக்கிப் போட்டு, அதிலிருந்து   ஒரே  ஒருத்தரை மட்டும் தேர்ந்தெடுத்து மொத்தப் பணத்தையும்  அவங்களுக்கு கொடுக்கப் போறதா அனோன்ஸ் பண்றாங்க.அந்த ப்ளாக் தனிப்பட்ட நபரோட ப்ளாக் ஆக இருக்கணும். அரசாங்க நிறுவனமோ அல்லது தனியார் நிறுவன வெப் சைட்டோ இந்தக் குலுக்கலில்  சேர முடியாதுன்னு கண்டிசன் போடறாங்க. குலுக்கல் டேட் பிக்ஸ் பண்ணியாச்சு. அந்த டேட்டில்  ரிசல்ட்டை தெரிஞ்சுக்க உலகமே அவ்வளவு ஆர்வமாக இருக்குது   "
"அடடே .. அப்புறம் ? அந்தப் பணம் யாருக்குக் கிடைச்சுது ?"
"அதுதான் தெரியலே.. அந்த அனோன்ஸ்மெண்டைக் கேட்டுட்டு நானும் உடனே ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணி கம்ப்யூட்டர் முன்னாடி உட்காருறேன்"
"உன் வெப் சைட் பேர் என்ன ?"
"அதான் தெரியலே ... நான் கம்ப்யூட்டர் முன்னாடி உட்காரவும் தூக்கம் கலைஞ்சு கனவு கலையவும் சரியா இருந்துச்சு .. நீ வீட்டுக்குள் வரும் முன்னே என்னைப் பார்த்து  "வாசலில் ஆள் வந்து நிக்கிறது கூட தெரியாமே அப்படி எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படியொரு ஆழ்ந்த யோசனை"னு கேட்டியே.. நான் இந்த அறிவிப்பு பத்திதான் யோசனை பண்ணிட்டு இருந்தேன், நிஜமாவே இப்படி ஒண்ணு நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு  "
இதைக் கேட்டு அமைதியாக இருந்தார் மூர்த்தி. 
"என்ன யோசிக்கிறே ?"
"நீ கனவு கண்டபடி நடந்தால் எப்படியிருக்கும்னு நானும் யோசிச்சுப் பார்த்தேன். உலகத்தில் இருக்கிற பெரும் பணக்காரர்களுக்கு பத்து கோடி பணம் என்பது வெறும் தூசிக்கு சமம். டிப்ஸ் குடுக்கிற மாதிரி தூக்கிக் குடுப்பாங்க. ஆனால் அதை வாங்குகிறவங்களுக்கு, அப்பப்பா... அது எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் . நீ நினைக்கிற மாதிரி நடந்து அது யாரோ ஒருத்தருக்குக் கிடைச்சா  அது கின்னஸில் இடம் பெறணும்.. உலகத்தில் மிகவும் குள்ளமான மனிதர்களை, மிகவும் உயரமான மனிதர்களைக் கண்டு பிடிச்சு  அவர்களை .... அது இறைவனின் இயற்கையான படைப்பு என்றாலும் கூட  சாதனை லிஸ்டில் சேர்க்கும்போது, சில  மனிதர்கள் உருவாக்கும் ஒரு  முயற்சியில் ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் நிஜமாகவே பெரிய அதிர்ஷ்டசாலிதான் .. சரி .. நீ வெப் சைட் ஆரம்பிச்சிட்டியா?"
"இல்லே "
"ஏன்? ஒருவேளை உன் கனவு பலிச்சாலும் பலிக்கலாம்... உடனே ஒண்ணு ஆரம்பிச்சுடு "
"ஆரம்பிச்சாலும் அது சுத்த வேஸ்ட்... குலுக்கல் பத்தி அனௌன்ஸ் பண்ணும் போதே, 2013 ஆண்டு முடிவு வரை எந்த சைட் எந்த ப்ளாக் ஆக்டிவாக இருக்குதோ அதை மட்டுந்தான் குலுக்கலில் சேர்ப்போம் னு அனௌன்ஸ் பண்ணித் தொலைச்சிட்டாங்களே". 
"அடப் பாவி. அது பத்தி சரியா தெரிஞ்சுக்காமே அந்தக் கண்டிஷனை சரியாகப் படிச்சுப் பார்க்காமேதான் நீ வெப் சைட் ஓபன் பண்ண கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தியா ? சரி விட்டுத் தள்ளு. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் "
"அதுக்கும் வழியில்லே "
"ஏன்?"
"இது ஒரே ஒரு முறை மட்டும் நடக்கப் போகும் குலுக்கலாம் "
"அப்படின்னா இது துரதிர்ஷ்டசாலிகளுக்கான போட்டின்னு ஒண்ணை  யாராவது நடத்தினால் அதற்க்கு உன் பேரை நான் சிபாரிசு செய்யறேன் "
"நோ யூஸ் "
"ஏன் ?"
"அந்த கேட்டகரியில் எக்கச்சக்கம் பேர் இருப்பாங்க .. நான் வின் பண்றது ரொம்பவும் கஷ்டம்  "
"சரி .. நான் கிளம்பறேன் .. நீ தூங்கு .. உனக்கு எலிஜிபிலிட்டி ஆகிற மாதிரி ஏதாவது ஒரு கனவு வருதானு பார் "
"ஹூம் " என்ற பெருமூச்சு வெளிப்பட்டது ஜெகநாதனிடமிருந்து !

No comments:

Post a Comment