Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 27, 2014

Scanning of inner - heart (Scan Report Number - 120 )

       சட்டம் தரும் சலுகைகூட சமுதாயம்  தருவதில் லையா ?!

"என்ன ஸார், பிஸியா ?" என்று குரல் கேட்டு, பார்த்துக் கொண்டிருந்த பைலை மூடி விட்டு தலையை நிமிர்த்திப் பார்த்தார் பார்த்தசாரதி.
'ஆஹா! இன்னைக்கு இவன் மென்னு முழுங்கிறதுக்கு அவலாக நாமதான் கிடைச்சோமா?'என்ற எண்ணம் எதிரே நின்று கொண்டிருந்த மதனைப் பார்த்ததுமே தோன்றினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அட, பிஸின்னு எதுவும் இல்லே. சொல்லுங்க... என்ன விஷயம் ?"என்றார் பார்த்த சாரதி.
"அப்படின்னா கேண்டீன் பக்கம் போயிடலாமா ?"
'வேண்டாம்னு சொன்னா நீ விடவா போறே ?' என்று மனதுக்குள் ஓடிய நினைப்பை வெளியில் காட்டிக் கொள்ளாமல், " அதுக்கென்ன! போகலாம்" என்று சொல்லி ரொம்பவும் கேஷுவலாக இருப்பது போலக் காட்டிக் கொண்டார் பார்த்தசாரதி 
கேண்டீன் பையனைக் கூப்பிட்டு 'ரெண்டு டீ' என்று சொல்லி விட்டு அங்கிருந்த சேர்களை எதிரெதிரே உட்கார்ந்து பேச வசதியாக இழுத்துப் போட்ட மதனைப் பார்த்ததும்,'இன்னைக்கு காலையில் டீவீயில்   ராசி பலன் நிகழ்ச்சியில் தன்னுடைய ராசிக்கு என்ன பலன் சொன்னார்கள்?' என்பதை நினைவுபடுத்திப் பார்த்தார் பார்த்தசாரதி. உடன் வேலை செய்கிறவர்களால் தொல்லை என்று சொல்லவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.
கேண்டீன் பையன் கொண்டு வந்து வைத்த டீயைக் கையில் எடுத்து, அந்த கிளாஸ் மீது படிந்திருந்த பால் நுரையை வாயால் ஊதி ஒரு ஓரத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் இருந்த மதனைப் பார்த்து ஆத்திரம் வந்தாலும், 'சரி.. அவனாகவே ஆரம்பிக்கட்டும் ' என்று பொறுமையாக இருந்தார்.
"உங்க ப்ரெண்டுக்கு என்ன ஸார் ஆச்சு ?" என்று கேட்டார் மதன்.
"இந்த ஆபீசில் எல்லாருமே எனக்கு ப்ரெண்ட்தான். நீங்க யாரைப் பத்திக் கேட்கிறீங்க ?"
"இருக்கிறதிலேயே ஓல்ட் ப்ரெண்ட் "
"யார் ? சாரங்கன் சாரை சொல்றீங்களா ?"
"ஆமாம் "
"அடுத்த மாசம் ரிடயர் ஆகப் போறார்... அவர் வயசை வச்சு அவரை ஓல்ட் ப்ரெண்ட்னு கிண்டலடிக்கிறீங்களா?" என்று கேட்கும்போது அந்தக் கேள்வி யில் ஒரு அனல் இருந்ததை பார்த்தசாரதியும் உணர்ந்தார்.
"நோ .. நோ ... உங்களோட நீண்ட நாள் நண்பர்ங்கிறதாலே அப்படி சொன்னேன்"
"இருக்கட்டும் ... அவராலே உங்களுக்கு என்ன பிரச்சினை ?"
"எங்களுக்குப் பிரச்சினைன்னு எதுவும் இல்லே .. அவருக்கு என்ன பிரச்சினை என்கிறது தெரியலே"
"அவர் எதைப் பத்தியும் என்கிட்டே டிஸ்கஸ் பண்ணலே.  நீங்க எதை வச்சு இந்த முடிவுக்கு வந்தீங்க ?"
"ஸார்.. நானும் அவரும் ஒரே ப்ளாட்டில் இருக்கிறோம்னு உங்களுக்குத் தெரியும். நானும் அவரும் ஒரே ஆபீசில் வேலை பார்க்கிறோம்னு சொன்னால் அங்குள்ள யாரும் நம்பமாட்டாங்க. அந்த அளவுக்கு அவர்  ஒரு டிஸ்டன்ஸ்  மெயின்டைன் பண்ணுவார். ஆபீசிலுமே அவர் அப்படித்தான் இருக்கிறார். உங்களைத் தவிர வேறு யாரோடயும் அவர் சகஜமா பேசிப் பழகினதை நான் பார்த்ததே இல்லை. அதனால்தான் அவரைப் பத்தி உங்க கிட்டே பேச வந்தேன்"
"சரி .. சொல்ல வந்ததை சொல்லுங்க "
"இப்படி யாரோடயும் ஒட்டாமலே இருக்கிற மனுஷன், கொஞ்ச நாளா, 'இந்த கல்யாணம் கருமாதி சடங்கு சம்பிரதாயம் எல்லாம் மனுஷன் உண்டாக்கிக் கிட்டதுதானே! குடும்பமா இருந்து வாழ்ந்து செத்தால்தான் சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா?'ன்னு அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க கிட்டே கேட்கிறார். சிலசமயம், 'பிள்ளை என்ன ஸார் பிள்ளை ? தென்னம் பிள்ளை .. அணில் பிள்ளை. நாம செய்ற பாவம்தான் பிள்ளையாகப் பொறக்குது. பிள்ளை குட்டிங்க இருக்கிறாங்க.. கடைசி காலத்தில். வயசான காலத்தில் தன்னை வச்சுக் காப்பாத்துவாங்கனு எல்லாருமே கனவு காணுறோம். அது நிஜமாவே கனவுங்கிறது நாம அனாதையா தவிக்கும்போதும் இல்லாட்டா எதோ ஒரு முதியோர் இல்லத்தில்  முடங்கிக் கிடக்கும்போதும் தானே தெரியுது. பிறகு ஏன் உதவாத ஒன்னை ஏதோ 'வரம்'ன்னு  நினைச்சு மனசில் ஆசைகளை வளர்த்துக்கணும். பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம்னு இருந்துட்டு, நமக்கு மேலேயிருந்து அழைப்பு வர்றச்சே கிளம்பிப் போயிட்டே இருக்கணும். சந்நியாசி செத்தாலும் அவனுக்குப் பேர் பிணம்தான்.  ஒரு குடும்பஸ்தன் செத்தாலும் அவனுக்குப் பேர் பிணம்தான் . முடிவு கல்லறை தான்.இவன் பிள்ளை குட்டி பெத்தவன்னு யாரையும் யாரும் அவன் செத்த பிறகும் வீட்டுக்குள் வச்சுக்கிறது  கிடையாதே .. பிள்ளை குட்டிகளைப் பெத்தவங்களுக்கு ஒரு மாதிரி சாவு அது இல்லாதவங்களுக்கு வேறே மாதிரி சாவுன்னு சாவு பிரிச்சு பிரிச்சா வருது'ன்னு கேள்வி கேட்கிறார். அவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு லேடி இருக்கிறாங்க. அவங்க விடோ . ஒரு ஆக்சிடெண்டில் அந்த அம்மா புருஷன் செத்துட்டார். அவர் செத்த பிறகு அவங்க எங்கேயும் போகமாட்டாங்க. எதிலேயும் கலந்துக்க மாட்டாங்க. இது உங்க ப்ரெண்டுக்கு நல்லாவே தெரியும். அவங்க அப்படி இருக்கிறதைப் பத்தி இவர் கவலைப் பட்டதே கிடையாது . இப்போ என்னடானா, அவங்க வீட்டுக் கதவைத் தட்டி அந்த லேடி கிட்டே  " அந்தக் காலத்தில் எவனோ பொழுது போகாத ஒருத்தன் எதை எதையோ  சடங்கு சம்பிரதாயம் மண்ணாங்கட்டி லொட்டு லொசுக்குனு  எழுதி வச்சுட்டுப் போயிட்டான். அதைக் கட்டிகிட்டு இன்னும் ஏன் அழறீங்க?அம்பது வருஷத்துக்கு முன்னே இருந்த எத்தனை யோ  விஷயங்களை தூக்கிப் போட்டுட்டு பொம்பளைங்க நீங்க வெளியில் வந்திருக்கீங்கதானே. விதவை சமாச்சாரத்தை கட்டிக்கிட்டு ஏன் அல்லல் படறீங்கனு கேட்டிருக்கிறார். தம்பதி சமேதரா இருக்கிறவங்கதான் ரொம்ப அனுபவஸ்தர். கல்யாணம் பண்ணாமே கணவன் இல்லாமே இருக்கிறவங்க எல்லாருமே என்னவோ சபிக்கப் பட்டவங்க, அனுபவமே இல்லாதவங்கனு பேசறாங்க. குடும்பஸ்தனா வாழ்வதில் அப்படியென்ன  திடீர்  ஞானம் உனக்கு பிறந்திடுச்சு? தம்பதிகளுக்குதான் எல்லாமே தெரியும்ங்கிற மாதிரி ஒரு பிரமையை உண்டு பண்ணி வச்சிருக்கீங்க? இப்போ தெரியாமத்தான் கேட்கிறேன். அவனவன்  தம்பதியா வாழ்ந்ததில் பிள்ளை பெத்துக்கிறதில் அனுபவம் வந்ததைத் தவிர வேறு என்ன அனுபவம் வந்திருக்கு ?அது இதுன்னு இவர் கேட்டிருக்கிறார் . ஒருநாளும் தன்னோட முகத்தை ஏறிட்டுக் கூட பார்க்காத ஒரு மனுஷன், திடுதிப்புன்னு வீட்டுக் கதவைத் தட்டி இப்படி யெல்லாம் பேசறார்னு அந்த லேடி அக்கம் பக்கத்தில் உள்ளவங்க கிட்டே புலம்பி இருக்கிறாங்க. இந்த மாதிரி மென்டலா எப்பவும் ஒருத்தர் பேசி கிட்டே இருந்தா அதைப் பத்தி யாரும் கவலைப்பட மாட்டாங்க. அதை கேர் பண்ணவும் மாட்டாங்க. ஒரு அவசரத் தேவைக்காகக் கூட யார் கிட்டேயும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட  பேசாத ஒரு மனுஷன் இப்போ இப்படி யெல்லாம் பேசறதுக்கான காரணம் யாருக்கும் புரியலே. அவர் என்றைக்கும் அக்கம்பக்கத்தைப் பற்றிக் கவலைப் பட்டதே இல்லை. ஆனால் நாங்க அப்படி இருக்க முடியாது. அவர் பிரச்சினை என்னனு தெரிஞ்சா  எங்களால் முடிஞ்ச உதவியை செய்வோம்.. அதுக்கு உங்க ஹெல்ப் கண்டிப்பா வேண்டும் !"
"உங்களோட நல்ல எண்ணத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். நீங்க சொல்லாதவரை இது எதுவுமே எனக்குத் தெரியாது. மாதத்தில் பாதி நாள் டூரில் இருக்கிறேன். ஹெட் குவாட்டர்ஸ் வந்ததும் இங்குள்ள வேலையில் எல்லாத்தையும் மறந்துடறேன். நீங்க சொன்ன விவரத்து க்கு  ரொம்ப நன்றி . நான் இப்பவே சாரங்கன் சாரோடு பேசறேன்.. நீங்க என்ன செய்றீங்கன்னா, பியூன் நாகராஜ் கிட்டே சொல்லி, சாரங்கன் சாரை நான் கேண்டீன்க்கு வரச் சொன்னதா சொல்லுங்க"
"சரி" என்று சொல்லி மதன் கிளம்பிப் போன சிறிது நேரத்திலேயே சாரங்கன் அங்கு வந்து சேர்ந்தார்.
"ஒரே ஆபீசில் இருக்கிறோம்னு பேர். ஆனா ஒருத்தரை ஒருத்தர் பார்க்கிறதே ரொம்பவும் அபூர்வம்னு ஆகிப் போச்சு" என்று பேச்சை ஆரம்பித்தார் பார்த்தசாரதி. மௌனமாக தலையசைத்தார் சாரங்கன். 
"ரிடைர்மென்ட் லைப்புக்கு ரெடி ஆகிட்டு வர்றீங்கன்னு நினைக்கிறேன். போதும் ஸார். ஓடியோடி உழைச்சதெல்லாம் போதும். பரபரப்பு இல்லாத அமைதியான வாழ்க்கை தொடங்கப் போகுது "
இதைக் கேட்டதும் அடுத்த நொடியே உடல் குலுங்க அழ ஆரம்பித்து விட்டார் சாரங்கன். அதைக் கண்டு பதறிப் போன பார்த்தசாரதி " என்ன சார் இது ? நான் தப்பா எதுவும் சொல்லலியே !" என்றார் 
"நீங்க தப்பா எதுவும் சொல்லலே .. ஆனா நடக்கிற விஷயங்கள் எல்லாமே தப்பா இருக்குது "
"என்ன சொல்றீங்க ?"
"என் பொண்ணு வத்சலாவை நினைச்சா கவலையா இருக்குது "
"அவங்களுக்கென்ன? நல்லாதானே இருக்காங்க... முப்பது வயசு வரையிலும்  கல்யாணமே வேண்டாம்னு இருந்தவங்க மனசை ரொம்பவும் சிரமப்பட்டு மாத்திக் கல்யாணம் பண்ணிக் குடுத்தீங்க. கல்யாணம் முடிஞ்சு இன்னும் ஒரு வருஷம்  கூட ஆகலையே.உங்க பொண்ணு புகுந்த  வீட்டில் ஏதாவது பிரச்சினை பண்றாங்களா  ? "
"மாப்பிள்ளையோட ஆயுளை நோயும்  டாக்டர்ஸ்ம் முடிவு பண்ணிட்டாங்க. அவர் உயிர் வாழப் போறது இன்னும் மூன்று மாசமோ இல்லாட்டா அதுக்கும் குறைஞ்ச நாட்களோதான்"
"என்ன சொல்றீங்க ?"
"அவருக்கு எதோ வியாதின்னு டாக்டர்ஸ் சொல்றாங்க ... அதோட பேர் விவரம் எதுவும் எனக்குப் புரியலே.ஆனால் அவரைக் காப்பாத்தறது ரொம்ப   கஷ்டம். அதுமட்டுந்தான் எனக்குப் புரியுது"
"எல்லாத்துக்கும் மேலே கடவுள்னு ஒருத்தர் இருக்கிறார். அவர் மேலே பாரத்தைப் போடுங்க "
"அது நம்மளை நாமளே ஏமாத்திக்கிற முயற்சி "
"ச்சே.. என்ன ஸார் இது ! இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடறீங்க. வாழ்க்கை ஆரம்பிக்கும் போதே முடிவுக்கு வர்றது ரொம்ப கொடுமையான விஷயம்"
"எனக்கு அவளை நினைச்சுக் கவலைப் படறதா, இல்லே இந்த சமுதாயத்தை நினைச்சுப் பயப்படறதான்னு தெரியலே... எப்பேர்ப்பட்ட குற்றவாளிகளுக்கும் சட்டம் சலுகையோ அல்லது மன்னிப்போ குடுக்கிறது, அவனால் நிறைய பேர் பாதிக்கப் பட்டிருந்தாலும்கூட. அவன் மேலே இருக்கிற பயத்தினால் இந்த சமுதாயம் அவனை விமரிசிக்கிறது கிடையாது.  அவனோட எல்லா செயலையும் தள்ளி நின்னு வேடிக்கை பார்க்குது. ஆனால் விதிவசத்தால் ஒரு பொண்ணு விதவை ஆகிட்டாலோ, பிள்ளை பாக்கியம் இல்லாதவளா இருந்தாலோ அது என்னவோ அது அவ ஒருத்தியோட தப்புங்கிற மாதிரி எல்லா நடைமுறையிலிருந்தும் இந்த சமுதாயம் அவங்களை ஒதுக்கியே வச்சிடுதே. எந்தத் தப்புமே பண்ணாத சில ஜீவன்களுக்கு மட்டும்   ரெட்டைத் தண்டனையா? சட்டம் தரும் சலுகைகளைக் கூட இந்த சமுதாயம் தராது. அந்தப் பாவப்பட்ட ஜீவன்களை வார்த்தையாலேயே கொன்று விடும். அந்த லிஸ்டில் என் பொண்ணும் பலியாகப் போறா.  நினைக்க நினைக்க மனசு ஆற மாட்டேங்குது" என்று சொல்லும் போதே அழ ஆரம்பித்து விட்டார் சாரங்கன்.
அவரது கைகளைப் பற்றி ஆசுவாசப்படுத்தினார் பார்த்தசாரதி. சாரங்கனின் நடவடிக்கை பற்றி மதன் சொன்ன விஷயங்களுக்கும் சாரங்கனின் பயத்துக் கான  காரணமும் புரிந்தது.  
"ஸார், அதிசயங்கள் எப்போது வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் நடக்கலாம். உங்க மாப்பிள்ளைக்கு பூரண குணமாகி நூறு வருஷம் நல்ல இருக்கிற மாதிரி விதி மாறலாம். அதுதான் நம்ம எல்லாரோட ஆசையும். ஆனா உங்களுக்குள் இருக்கிற சமுதாயம் பற்றிய சிந்தனை தேவை இல்லாத ஒண்ணு. யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் கவலையே படாமல் நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு நீங்க ஒதுங்கி இருந்தே பழகிட்டீங்க. அது தப்புன்னு நான் சொல்லலே. ஆனால் உங்களைப் பத்தி அக்கறைப் படற, சமுதாய நலனில் அக்கறையுள்ள ஒருசிலர் உங்களை சுத்தி இருக்கிறாங்க. விதி வசத்தால் முடிவு எப்படி வேணும்னாலும் மாறலாம். அப்படியொரு சூழ்நிலை வந்தால்  உங்களை சுத்தியுள்ள சமுதாயம் மருந்தாக இருக்குமே தவிர காயப் படுத்தற கத்தியாக  கண்டிப்பா இருக்காது. நம்புங்க. நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்க பொண்ணு அவளோட  புருஷன் குழந்தை குட்டிகளோடு   ரொம்ப காலத்துக்கு சௌக்கியமா சந்தோசமா இருப்பா"
"உங்க வார்த்தை பலித்தால் சரி " என்று குரல் நடுங்க சொன்னார் சாரங்கன்.
ஒரு சிலர் மற்றவர்கள் மீதுள்ள அக்கறையினால்தான் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுகிறார்கள். அதை வம்பு என்று நான்தான் தப்பாக நினைத்திருக்கிறேன். ஆபீசில் மதனின் நடவடிக்கைகளைப் பார்த்து மதனை வம்பு பிடிச்சவன் என்றுதானே இத்தனை நாள் நான் நினைத்திருந்தேன். அவன் நல்லதொரு நோக்கத்தினால்தான் மற்றவர் கள்  பிரச்சினையில் தலையிடுகிறான் என்பது  இப்போதுதானே என் மரமண்டைக்கு புரிஞ்சிருக்கு என்று தன்னை நொந்து கொண்டார் பார்த்தசாரதி.  

No comments:

Post a Comment