Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 13, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 118 )

                                                    நம்பிக்கை !
சிவானந்தத்தின் கண்கள் ரகுராமனைத் தேடி அலை பாய்ந்தது. மனுஷன் பத்து நாளாகக் கண்ணிலேயே படலியே. ஒருவேளை நாம வர்றதுக்கு முன்னாடியோ இல்லாட்டா காலையிலேயோ வந்துட்டுப் போயிருப்பா ரோ. இருக்கலாம். உடம்புக்கு ஏதாவது முடியாமே வீட்டில் இருப்பாரோ?. அப்படி இருந்துட்டா மட்டும் நீ போய் என்னத்த கிழிச்சிடப்போறே என்று உள்மனது கேள்வி கேட்டது. ' நீ கொஞ்சநேரம் பேசாமே இரு. இப்படி நேரம் காலம் தெரியாமே நீ அப்பப்போ எதையாவது பேசப் போய்த்தான் அவனவன் உன்னை ஆரம்பத்திலேயே கழுத்தை நெரிச்சுக் கொன்னுடு தானுக ' என்று சொல்லி எச்சரித்தார் . அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்காமல் ஓட்டுக்குள் தன்னை உள்ளடக்கிக் கொள்ளும் ஆமை போல மனச்சாட்சி தன்னை அடக்கிக் கொண்டது.
கொடிமரத்தை நமஸ்கரித்துவிட்டுவழக்கமாகஉட்காரும் நடைப்படியில் உட்கார்ந்தார்.யாரோ ஒருத்தரைக் காணவில்லை என்பதற்காக நாம ஏன் வருத்தப் படணும் ? அவர்   யார் எங்கிருந்து வர்றார்னு எதுவுமே நமக்குத் தெரியாது. நாம வர்ற நேரத்தில் அவரும் கோவிலுக்கு வர்றார், அதுவும் சமீப காலமாகத்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரும்போது தலையை மட்டும் அசைத்து ஒரு புன்முறுவலைப் பரிமாறிக் கொள்வ தோடு சரி. போனமாதம்தான் அவர் பெயர் ரகுராமன் என்பதையே தெரிந்து கொண்டேன், அதுவும் கோயில் குருக்கள் "என்ன ரகுராமன் ஸார், யார் பேருக்கு அர்ச்சனை ? " என்று கேட்கும்போதுதான்! முன்பின் பழக்கமில்லாத ஒருவரை நினைச்சு நாம ஏன் இப்படி  தேவையில்லாமே கவலைப் படணும் . கோவிலுக்கு தினமும் எத்தனையோ பேர் வர்றாங்க. அவங்களைப் பத்திக் கொஞ்சமும் சிந்திச்சுப் பார்க்காத நான் இந்த ஒருத்தரைப் பற்றிக் கவலைப்படுறேனே! இதைத்தான் போன ஜென்ம விட்டகுறை தொட்ட குறைன்னு சொல்றாங்களோ என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டார். கோவில் நடையடைக்கும் வரை அங்கேயே காத்திருந்து பார்த்தார்,அவரது செயல் பைத்தியக்காரத்தன மானது என்பது தெரிந்தும் கூட .
ஆனால் மறுநாள் "அவரை" மார்க்கெட்டில் சந்திப்போம் என்று சிவா கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. உற்சாக மிகுதியில் "ரகுஸார்" என்று இரைந்தார். சிவானந்தம் அருகில் வந்த ரகுராமன் " வணக்கம் ஸார் . எப்படியிருக்கீங்க  ? " என்றார் 
"உங்களைப் பார்த்து நான் கேட்க நினைச்ச கேள்வி இது ! உங்களைக் கொஞ்சநாளாகவே கோயில் பக்கம் காணோமே ஸார் .உடம்பு ஏதாவது சரியில்லையா ? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா ?" என்று உண்மையான கரிசனத்துடன் கேட்டார்.
"எல்லாம் என் பிள்ளையோட பிரச்சினைதான் ஸார்" என்று அவர் சொல்ல ஆரம்பித்ததுமே ,"ஏன்ய்யா,உங்களுக்கு வேறே வேலைவெட்டி எதுவும் இல்லையா? எதையாவது பேசிப்பேசித்தான் பொழுதைக் கழிப்போம்னு நீங்க  சபதம் ஏதாவது எடுத்திருந்தால், மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாமே ஒரு ஓரமா நின்னுப் பேசித் தொலையுங்களேன் " என்று தோளில் மூட்டையை சுமந்து கொண்டு நின்ற ஒருவர் கத்த, "ஸாரிப்பா .. வழி விடுங்கன்னு சொன்னா விட்டுடப் போறோம். அதுக்கு ஏன் இத்தனை பேச்சு ? " என்றார் சிவானந்தம் 
"ஓஹோ. அதைக் கூட ஒருத்தன் சொன்னாதான் உங்க மூளைக்கு எட்டுமா? நாலுபேர் வந்து போகிற இடத்தில் மத்தவங்களுக்கு இடைஞ்ச லா இப்படி  வழியிலே  நிக்கிற சுரணை கூடவா உங்களுக்கு இல்லை . நீங்கள்லாம் படிச்சவங்கதானே ?" என்று மூட்டை மேலும் கத்த, " வாங்க ஸார்... நாம அப்படி ஒரு ஓரமா பார்க் பக்கம் போயிடலாம். இந்த நேரம் அங்கே கூட்டம் இருக்காது. ப்ரீயா உட்கார்ந்து பேசலாம் " என்று ரகுராமன் சொல்லவே, பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் இருவரும்.
"அதென்னவோ தெரியலை ஸார், நம்ம ரெண்டு பேருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் கிடையாது. நட்பும் கிடையாது. இருந்தாலும் சேர்ந்தாப்லெ பத்துநாள் பார்க்காததில் மனசுக்குள் ஏதோ ஒரு வருத்தம் " என்றார் சிவானந்தம் 
"அதனாலென்ன ! இனிமே நட்புக்கு பிள்ளையார் சுழி போட்டுடலாம்" என்று யதார்த்தமாகக் கூறினார் ரகுராமன்.
மரநிழலில் கிடந்த ஒரு பெஞ்சைத் தூசி தட்டி, இருவரும் அதில் உட்கார்ந்தார்கள்  
"உங்க பிள்ளையோட உங்களுக்கு என்ன பிரச்சினை ?"
"பிளஸ் டூவில் ரொம்பவும் கம்மியா மார்க் வாங்கி இருக்கிறான் "
"படிப்பில் ஆவரேஜ் ஸ்டூடண்டா ?"
"நல்லா படிக்கிற பையன் ஸார். எதனால் மார்க் குறைஞ்சுதுனே தெரியலே "
இதைக் கேட்டதும் சிரித்தார் சிவானந்தம். அதைக் கவனித்த ரகுராமன் எதுவும் புரியாமல் விழிக்கவே , " ஸார் இப்போ நீங்க சொன்னீங்களே, அது வழக்கமா எல்லா பேரண்ட்ஸ்ம் சொல்ற டயலாக் தான். வருஷம் முழுக்க " டேய் தடிமாடு .. படிக்காமே ஊர் சுத்தறியா ? நீ இந்த வருஷம் பெயில்தான்  "..." தண்டச்சோறு ..   படிக்காமே எப்பவும்  டீவீ முன்னாலே உட்கார்ந்திருக்கிறியா ? நீ இந்த வருஷம் பெயில்தான்"னு அருள்வாக்கு சொல்லிட்டே இருக்க வேண்டியது. ரிசல்ட் வந்ததும், " என் பிள்ளை என்னமா விழுந்து விழுந்து படிச்சான். அவன் விழுந்ததில் எங்க வீட்டுத் தரையில் கூட பள்ளம் விழுந்துடுச்சு. இந்தக் கம்ப்யூட்டர் தப்பு தப்பா மார்க் போட்டு நல்லா படிக்கிற  என் பிள்ளையை பெயில் ஆக்கிடுச்சுனு சபிக்க வேண்டியது... இதுதானே வழக்கமா நடந்துட்டு இருக்கு.. அதை நினைச்சு சிரிச்சேன்" என்று சொன்னார் சிவானந்தம் 
"ஸார்  கம்ப்யூட்டர் தப்பு தப்பா மார்க் போடுதுன்னு சொல்றாங்களே, அது நெஜமா  ?"
"கம்ப்யூட்டர் ரிபைர் ஆக சான்ஸ் இருக்குது. தப்பு பண்ண சான்ஸ் இல்லே... எனக்குத் தெரிஞ்ச வரையில் சொல்றேன்.. ஒரு தப்பு நடந்திருந்தால் அது  கம்ப்யூட்டர் ஆப்பரேடர் பண்ணின தப்பாக இருக்கலாம்  .. ஹூம் .. பழி ஓரிடம் ... பாவம் ஓரிடம் "
"நிறைய மார்க் வாங்கின பசங்களே மேற்படிப்புக்கு லோ லோனு அலையறாங்க. இவன் வாங்கி இருக்கிற மார்க்குக்கு எந்த இடத்திலும் சீட் கிடைக்காது .. அந்தக் கவலையில்தான் கோவிலுக்கு வரலே "
"எல்லாரும் தங்கள் கஷ்டத்தை சாமிகிட்டே சொல்ல கோவிலுக்கு வருவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறேன்.நீங்க என்னடானா  அப்படியே  உல்ட்டாவா சொல்றீங்க " என்று வியப்புடன் கேட்டார் சிவானந்தம் 
"நீங்க நாள் தவறாமே கோவிலுக்கு வருவீங்களா ! நீங்க நினைச்சது எல்லாம் நடந்திருக்கா ? கேட்டது கிடைச்சிருக்கா ?"
"நான் நினைச்சது எதுவுமே நடந்ததில்லை .. நான் கேட்ட சின்ன சின்ன சந்தோசங்களைக்  கூட கடவுள் எனக்குத் தந்ததில்லை "
"ஆச்சரியமா இருக்கே ... இருந்தும் கடவுள் நம்பிக்கை இருக்குதே .. அது எப்படி ?" என்று வியப்புடன் கேட்டார் ரகுராமன் 
"நான் ஆசைப்பட்டதை, நான் கேட்டதைத் தராத அந்தக் கடவுள்,எனக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நான் கேட்காமலே தந்திருக்கிறாரே . அந்த நன்றிக் கடனுக்குக்காக வர்றேன் "
"என்ன சொல்றீங்க ?"
"உலகம் முழுக்க எத்தனையோ பேர் பசியா பட்டினியாக கிடக்கிறாங்க. அவங்களோட வறுமைக்கு அவங்க காரணமே கிடையாது. உழைக்க தயாரா இருக்கிறாங்க. அரசாங்கமோ அல்லது இயற்கையோ ஏதோ ஒரு வகையில் சதி செய்து அவங்களைப் பட்டினி போடுது. எந்தவொரு குடியுரிமையும் இல்லாமே ஏதோ ஒரு நாட்டில் எதற்காகவோ போராடுற நிலையில் சிலர் இருக்காங்க..தீவிரவாதிங்க என்ற போர்வையில்  என்ன காரணத்துக்காக இவங்க நம்மளைத் தாக்குகிறாங்க என்பதே தெரியாமல் பலியாகிற அப்பாவி மக்கள்... இப்படி ஒவ்வொருநாளும் உலகின் ஒவ்வொரு கோடியில் இருக்கிற சிலர் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் போராடறாங்க..அந்த மாதிரி நிலைமையில் என்னைக் கொண்டு போய்த்  தள்ளாமல் இருந்ததுக்காக நன்றி சொல்ல வர்றேன். உண்ண உணவு. அது உப்புசப்பு இல்லாமல் கூட இருக்கலாம் . உடுக்க உடை.. அது கிழிசலாக்  கூட இருக்கலாம் ... இருக்க வீடு ... அது எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததாக இருக்கலாம் .. ஆனால் இருக்குது .. அந்த திருப்தி போதும் ஸார் "
"நீங்க வித்தியாசமான ஆளா இருக்கிறீங்க "
"பரிச்சையில் மார்க் குறைஞ்சதாலே உங்க பையனோட வாழ்க்கையே முடிஞ்சு போயிட்டதா நினைக்காதீங்க. முடிஞ்சா ஒரு சர்வே எடுத்துப் பாருங்க.ஒருகாலத்தில்  படிப்பில் முதலிடத்தில் வந்தவர்கள்  இப்போது வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறாங்கன்னு தெரியும். எனக்குத் தெரிஞ்சு ஆவெரேஜ் மார்க் வாங்கின எத்தனையோ பேர்  இன்னிக்கு கவெர்ன்மெண்ட் செர்வீசில் ரொம்பவும்  நிம்மதியா  இருக்கிறாங்க.. முயற்சி பண்ணிட்டே இருங்க .. "
"என்னத்த  பண்றது ?"
"நான் ஒரு கதை சொல்லட்டுமா ? ரெண்டு பேர் .. ஒருத்தன் கடவுள் நம்பிக்கை உள்ளவன் .. மற்றவனுக்கு அது கிடையாது.. கடவுள் நம்பிக்கையுள்ள அந்த ஒருத்தன் தினமும் கோவிலுக்குப் போய் சாமிக் கு பூ போட்டுட்டு வருவான். ரெண்டாவது ஆசாமி தினமும் கோயில் சுவத்தில் கல்லெறிஞ்சுட்டு வருவான். ஒருநாள் பலத்த மழை.. புயல்.. எங்கே பார்த்தாலும் ஒரே  வெள்ளக்காடு.  கடவுள் நம்பிக்கையுள்ள அந்த ஒருத்தன் அன்றைக்கு வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை தினமும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடும் அவன் கோவிலுக்குப் போகலே. ஆனால் மழை புயல் எதைப் பற்றியும் கவலைப் படாத அந்த மற்றொரு நபர் வழக்கம் போல கல் எறியக் கிளம்பிட்டான். அவனுடைய விடாமுயற்சிக்காக அவனுக்குக் கடவுள் தரிசனம் தந்ததாக  அந்தக் கதை முடியும். அதுக்காக நான் எல்லாரும் கோயில் சுவத்தில் கல் எறியணும்னு சொல்ல வரலே.முயற்சிங்கிறது அந்த மாதிரி இருக்கணும் மனசைத் தளர விடாதீங்க "
சிறிதுநேரம் அமைதியாக இருந்த ரகுராமன்," அப்போ நான் கிளம்பறேன். நாளைக்குக் கோவிலில்சந்திப்போம்" என்றார் 
"சரி " என்பதுபோல மௌனமாகத் தலையசைத்தார். இப்போது அவர் மனம் எந்த சஞ்சலமும் இல்லாமல் அமைதியாக இருந்தது   

No comments:

Post a Comment