Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 07, 2013

Scanning of inner - heart ( Scan Report Number 73 )

             கண்கெட்ட பின்னே சூரிய உதயம் ? !

" என்னப்பா ? இன்னும் எவ்வளவு நேரமாகும் ? "
" இதோ ஆச்சு ஸார். இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் "
" இதே பதிலை நீ அரை மணி நேரமா சொல்லிட்டு இருக்கிறே "
" கோவிச்சுக்காதே ஸார் "
" கோபப் பட என்ன இருக்கு. உச்சி வெயில் மண்டையைப் பொளக்குது. உட்கார ஒரு கல் கூட இல்லை. நல்ல வேளையா நாம மீட்டிங் முடிஞ்சு ரிட்டர்ன் ஆகிறப்போ வீல்  பஞ்சர் ஆச்சு. இதுவே நாம போகிறப்போ ஆயிருந்தா கதை கந்தல் ஆகியிருக்கும் "
" ஸார் அதோ ஒரு மரம் தெர்யுது பாருங்க. நீங்க அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. வண்டி சரியானதும் நானே எடுத்துட்டு வந்திடறேன் "
" அப்படின்னா நீ " இன்னும் அஞ்சு நிமிஷம் "ன்னு சொல்றதெல்லாம் பொய். அப்படித்தானே ? "
" அதுக்கில்லே ஸார். வெயில் தாங்க முடியலேன்னு சொல்றீங்களே. அதுக்காக சொன்னேன் "
" சரிப்பா " என்றபடி கர்சிப்பை தலையில் போட்டுக் கொண்டு மரநிழலை நோக்கி நடந்தார் வரதன் 
மர நிழலுக்கு வந்து அங்கிருந்த கல்லில் உட்கார்ந்தார். நெருப்பில் மேல் உட்காருவது போல கல் சூடு அவருக்குத் தெரிந்தது. எழுந்து மரத்தின் மையப் பகுதியில் சாய்ந்து கொண்டு பார்வையை ஓட விட்டார். அந்த மரத்தின் ஒரு புறம் குழந்தை ஒன்று துணித் தூளியில் தூங்கிக் கொண்டிருந்தது.தூளிக்குள் எட்டிப் பார்த்தார். கருகருவென்ற கலரில் " கொழுகொழு  " குழந்தை ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. நம்ம வீட்டுக் குழந்தைகளை வெயில் படாமல் மழையில் நனையாமல் பாது காக்கிறோம். ஊட்டச்ச்சத்து மாத்திரை டானிக் அது இதுன்னு கண்டதையும் வாங்கிக் கொடுக்கிறோம். எல்லாத்தையும் ஜீரணம் பண்ணிட்டு எலும்பும்  தோலுமா இருக்குதுக.   எந்த சத்தான சாப்பாடும் இல்லாமல் இந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்களே அது எப்படி என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டவர், இவங்க குடிப்பது சுத்தமான ஆற்றுத் தண்ணி . சுத்தமான காற்று கலப்படமில்லாத இயற்கை உணவு . அதனால்தான் நோய்நொடி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஒரு பதிலையும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் . குழந்தை இங்கே இருக்கு, அப்படினா .. என்றபடி பார்வையை சுற்றுமுற்றும் ஓட விட்டார். சற்றுத் தள்ளி வயலில் சில பெண்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த வெயில் காலத்தில் , வயல் வேலைக்கு தண்ணி இல்லாத நேரத்தில் இந்தப் பெண்கள் அப்படி என்னதான்  வேலை செய்கிறார்கள் என்று நினைத்தபடி ஒவ்வொருவர் மீதும் பார்வையை ஓட விட்டார் . என்ன இது இவ்வளவு வயதான லேடி கூட வேலை பார்க்கிறாங்க என்று நினைத்தவர்  அந்தப் பெண்ணின் மீது பார்வையை நிலை நிறுத்தினார். இந்த அம்மா ரொம்பவும் பழக்கப் பட்ட முகமாகத் தெரியறாங்களே. இவங்களை நான் எங்கே பார்த்திருக்கிறேன்கிறது நினைவுக்கு வரலையே என்று தன் மீதே கோபப் பட்டார்.
"ஸார், ஸார், என்ன ஸார் இது ? பக்கத்திலே நின்னு ஒரு ஆள் கத்தறது கூட  தெரியாத அளவுக்கு ? "என்று கேட்டான் வேன் டிரைவர் ரங்கசாமி 
" இல்லேப்பா. வயக்காட்டில் பாதிப் பகுதிக்கு மேலே வறண்டு கிடக்கு. ஒரு சில இடத்திலே மட்டும் ஆளுங்க வேலை செய்றாங்க  "
" செய்யட்டும் ஸார் "
"என்னப்பா இப்படிப் பேசறே? அவங்க சேத்திலே கால் வச்சாதான் நாம சோத்திலே கை வைக்க முடியும் "
" இதப் பாருடா. வயல் காய்ஞ்சு போகுது தண்ணி வேணும்னு அவங்க கதறும்போது அதை நாம டீவீ லே வேடிக்கைதானே பார்த்தோம் . கூட நின்னா குரல் கொடுத்தோம் ? இப்போ இப்படி உருகுறீங்க ?
" நம்மாலே முடிஞ்சது அது ஒண்ணுதானே "
" ரொம்பவும் உருகிடாதீங்க . ஒரு காலத்தில் அஞ்சு ரூபா குடுத்து வாங்கின அரிசியை இப்போ அம்பது ரூபா குடுத்து வாங்குறோம் "
" ஒரு காலத்தில் ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கின நீ இப்போ இருபதாயிரம் வாங்குறே  ? "
" ஐயோ ஸார் உங்களோட ரோதனையாப் போச்சு . வண்டி ரெடி. வாங்க கிளம்பலாம் "
" அதோ அங்கே ஒரு வயசான அம்மா வேலை செய்றாங்க பாரு. அவங்க யாருன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன் . இப்பதான் ஞாபகம் வர்றது மதுரையில் நாங்க இருந்தப்போ எங்க பக்கத்து வீட்டில் ஒரு குடித்தனம் இருந்தது . மாமியார், மகன் மருமகள் நான்கு குழந்தைங்க. மகன் ரொம்பவும் சுபாவமான ஆளு . ஆனா வீட்டில் மாமியார் மருமகள் சண்டை நடக்கும் பாரு, வெட்டு குத்து விழாத குறைதான். அவர் நல்ல வேலையில்  இருந்தார். ஓரளவு வசதியான குடும்பம்தான். இந்த அம்மாவைப் பார்த்தால் அந்த மாமியாரைப் பார்த்தாப்பலே இருக்கு . அதான் யோசனை பண்ணிட்டு இருக்கிறேன் " 
" இதுக்கு ஏன் ஸார் யோசனை ? பக்கத்திலே போய்க் கேட்டுட்டா போச்சு "
" அட சும்மா இருப்பா. இப்படி கூலி வேலை செய்ற அளவுக்கு அவங்க வசதி இல்லாதவங்க இல்லே . நாம போய் எதயாவது கேட்கப் போக ஏதாவது வம்பு வந்துடக்கூடாது "
" அட .. இதிலே வம்புக்கு ஏன்னா சார் இருக்கு? எதுக்கு சந்தேகத்தை மனசில் சுமந்துகிட்டு பிரயாணம் பண்ணனும் ? " என்று சொல்லியபடி அவரின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு அந்தப் பெண்ணின் அருகில் சென்றான் ரங்கசாமி. 
" அம்மாக்கு இந்த ஊர்தானுன்களா ? " என்று அவளருகில் சென்று ரங்கன் கேட்க அருகில் நின்று கொண்டிருந்தார் வரதன். அந்தப் பெண் அவர்களை உற்று நோக்க " இந்த அய்யாக்கு உங்களை எங்கோ பார்த்தாப்லே இருக்குதாம் . அதை தெளிவு படுத்திக்கத் தான் கேட்கிறேன் " என்றான் ரங்கன் 
" மதுரை " என்றபடி வரதனை உற்றுப் பார்த்தாள் அவள் 
அப்படின்னா நான் சந்தேகப் பட்டது சரிதான் என்று மனதுக்குள் நினைத்தபடி " அம்மா, நீங்க முருகன் ஸாரோட அம்மாதானே ? நான் உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியிருந்த வரதன். வேலை விசயமா சென்னைக்கு குடியேறி அங்கேயே செட்டில் ஆயிட்டேன். அதுக்குப் பிறகு எனக்கும் மதுரைக்கும் சம்பந்தமே இல்லாமல் போயிட்டது. உங்க பையன் மருமக பேரக்குழந்தைங்க எல்லாரும் எப்படி இருக்காங்க ? நீங்க ஏன் இங்கே வேலை செய்றீங்க ?. ஏதாவது சண்டை சச்சரவுன்னு கிளம்பி வந்துட்டீங்களா ? "
"சண்டை சச்சசரவுக்குதான் எங்க வீட்டிலே பஞ்சமே கிடையாதே.என் புள்ளே சாகிறவரை சண்டைதானே நடந்துச்சு "
" என்னம்மா சொல்றீங்க ? ஸார் இறந்துட்டாரா ? என்ன செஞ்சுது ? " 
"என் போய்ச் சேர்ந்து மூணு  வருஷம் ஆகப்போகுதுப்பா. வேலைக்கு போயிட்டு வீட்டுக்குள் நுழைஞ்சவன் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குனு மாரைக்  கையில் பிடிச்சிட்டு உட்கார்ந்தான். டாக்டர் வந்து பார்க்கிற துக்குளே ஜீவன் போயிட்டுப்பா "
" வீட்டில் மற்றவங்க எங்கே இருக்காங்க ?"
" மதுரையிலேதான் "
"உங்க பையன் இறந்திருந்தாக் கூட அவருக்கு வரவேண்டிய பணம் எல்லாம் வந்திருக்குமே ?"
" வந்ததுப்பா "
" அதிலே ஓரளவு கஷ்டப் படாமே காலம் தள்ளலாமே ? நீங்க ஏன் இந்த வெயிலில் வெந்து சாகுறீங்க ? உங்களுக்கும் அந்தப் பணத்தில் பங்கு உண்டே. எதுவும் தராமே ஏமாத்திட்டாங்களா ? "
" தந்தாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன் "
" ஏன்மா ?"
" அப்பா, இன்னிக்கு இருக்கிற விலை வாசியில் மொத்த சம்பளம் கைக்கு வந்தாலே உன்னைப் பிடி என்னைப் பிடின்னு சங்கடப் பட்டுதான் காலம் தள்ள முடியுது. அவன் இறந்த பிறகு வந்த பணம் குடும்ப செலவுக்கு போதுமானதா இல்லே. புள்ளைக நாலும் பள்ளிக்கூடத்திலே படிக்குதுக  செலவை சரிக் கட்ட மருமக வேலைக்குப் போறேன்னு சொன்னா. அவளுக்கு வெளியிலே வேலை வெட்டி செஞ்சு பழக்கம் கிடையாது . வெளியுலகம் பழக்கமில்லாத ஒன்னு. அதனாலே அவளை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டேன் . அவங்களுக்குப் பாரமா இருக்க வேண்டாம்னுட்டு நான் ராவோட ராவா கிளம்பி வந்திட்டேன்.என் கட்டை இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகுது ? அது இருக்கிறவரை ஒரு பிடி சோறு வேணும். அது கிடைக்குது. ஏதாவது திண்ணையிலே ஒதுங்கிக்குவேன். இன்னும் எத்தனை நாளைக்கு ஆண்டவன் எனக்கு கணக்குப் போட்டு வச்சிருக்கிறானோ  தெரியலே ..ஹூம் ... நீ எப்படிப்பா இருக்கே ? வீட்டிலே எல்லாரும் நல்லா இருக்காகளா ?"
" எல்லாரும் நல்லா இருக்கிறாங்கம்மா . சரிம்மா  நான் கிளம்பறேன் . தப்பா நினைக்காதீங்க . இந்த நூறு ரூபாயை செலவுக்கு வச்சுக்கோங்க " என்று சொல்லி அவள் கையில் திணித்து விட்டு வண்டியை நோக்கி நடந்தார் வரதன் .
நீண்ட பெருமூச்சு வெளிப் பட்டது அவரிடமிருந்து.
"என்ன ஸார், பெரியம்மா உங்களை ரொம்பவும் அப்செட் பண்ணிட் டாங்களா  ?"
" வீட்டில் ரெண்டு பொம்பளைங்களும் அடிச்சுக் கிறதைப் பற்றி முருகன் சார் என்னிடம் பலமுறை வருத்தப் பட்டிருக்கிறார். அவர் இறந்த பிறகு ஒருத்தருக் கொருத்தர் விட்டுக் குடுத்து பெருந்தன்மையா நடந்துக்கிற இந்த லேடீஸ், அவர் உயிரோடு இருக்கும்போது இதே பெருந்தன்மை பக்குவப் பட்ட தன்மையா நடந்திருந்தா, அதை அவர் பார்த்திருந்தா, அவர் உயிர் போகிற அந்த நேரத்தில், " இவங்க ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருப்பாங்க " என்று நிம்மதியா உயிரை விட்டிருப்பார். அதை நினைச்சேன் என்றார் வரதன்.  
ரங்கசாமி மௌனமானான். 


No comments:

Post a Comment