சுமைதாங்கி
ரவீந்தர் ஹாலுக்குள் நுழையும்போது நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி வெகு நேரம் ஆகி இருந்தது. ச்சே.. சரியான நேரத்துக்கு வந்து சேரணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணியும் அது முடியாமல் போச்சே. லீலா எங்கிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள பார்வையை கூட்டத்தின் மத்தியில் ஓடவிட்டான். ஸ்டேஜில் மட்டுமே வெளிச்சம் இருந்தது . பார்வையாளர் பகுதி இருளில் மங்கலாகத் தெரிந்தது. லீலாவைத் தேடுவது வீண் முயற்சி. இப்போது கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு , விழா முடிந்ததும் அவளைத் தேடலாம் என்ற முடிவெடுத்து, அந்த மங்கலான வெளிச்சத்திலும் ஒரு காலி நாற்காலியைக் கண்டு பிடித்து உட்கார்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான். இப்போது லீலா என்னைப் பார்த்தால் இல்லாத முக்கண்ணினால் தன்னைச் சுட்டெரிப்பாள் என்பதும் , " உடம்புக்கு முடியாத குழந்தையை ஒரு தோளிலும் அவனுக்குத் தேவையான சாப்பாடு துணிமணியை ஒரு தோளிலும் தூக்கிகிட்டு தினமும் இருபது கிலோ மீட்டர் பஸ் ஏறி இறங்கி போயிட்டு வர்றேன். ஒரே ஒரு நாள் குழந்தையோட ஸ்கூல் பங்க்சனுக்கு டூ வீலரில் கூட சரியான நேரத்துக்கு வர உங்களால் முடியாதா " என்று எரிந்து விழுவாள் என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.
விழா நடத்துகிறவர்கள் மீது எரிச்சல் வந்தது . எந்த குழந்தை அரை குறையாகவாவது நார்மலாக இருக்கிறதோ அதை மட்டும் வைத்து விழா நடத்தி விட்டுப் போகாமல். ஸ்கூலில் படிக்கிற அத்தனை குழந்தைகளும் விழாவுக்கு வந்தே ஆக வேண்டும் என்று ஆர்டர் போடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தன்னையே கேட்டுக் கொண்டான், ஸ்கூல் நிர்வாகத்தைக் கேட்க முடியாதே. " எங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஸ்கூலுக்கு குழந்தையை அனுப்ப முடிஞ்சா அனுப்புங்க.இஷ்டமில்லாட்டா ஸ்கூலுக்கு வர்றதை நிறுத்திடுங்க " என்று தயவு தாட்சண்யம் இல்லாமல் பேசுவார்களே .
மனநலம் சரியில்லாத , உடல் வலுவில்லாத குழந்தையை வீட்டில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் ? என் மூதாதையர் வழியிலும் சரி , லீலா மூதாதையர் வழியிலும் சரி. இப்படியொரு குழந்தை எந்த தலைமுறையிலும் பிறந்ததே இல்லையே . பிறகு, தனக்கு மட்டும் ஏன் இப்படியொரு குழந்தை? எந்த வைத்தியத்திலும் சரியாகாத என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத மன நலம் சரியில்லாத உடல் ஊனமுற்ற குழந்தை ! சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்கத் தெரியாத, போட்டிருக்கும் துணி நனைந்தால் அதை சொல்லக் கூடத் தெரியாத குழந்தை . எங்களுக்குப் பிறகு இதை வைத்துக் காப்பாறுவார் யார் ?
ச்சே. இன்றைக்கு நான் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறேன் ?. இது என்ன நேற்று பிறந்த குழந்தையா ? பத்து வருசமா நாம பார்த்துப் பார்த்து வளர்க்கிற குழந்தைதானே என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
மனைவியை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது. பிறந்துவிட்ட குழந்தைக்காக யாரையும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் , " ஏதோ நமக்கு விதிச்சது இதுதான் " என்பது போன்ற மனப் பக்குவத்தில் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல். பத்து வயதுக் குழந்தையை , பத்து மாதப் பிள்ளையைப் போல பராமரிப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டிருக்கிறான்
நினைவுகள் திரும்பத் திரும்ப நம்மை சுற்றியே வருகிறதே . இதை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைப்பில் ஸ்டேஜ் மீது பார்வையை ஓட விட்ட நிகழ்ச்சிகளில் மனதை லயிக்க விட்டான்.
மேடையில் மைக் முன்பாக நின்று கொண்டிருந்த பெண், தனது பேச்சாலேயே கூட்டத்தைக் கட்டிப் போட்டிருந்தார். " மாற்றுத் திறனாளிகளான இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களாகிய நீங்கள் ஆண்டவனின் பரிபூர்ண நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். உலகில் கண்டிப்பாக தோன்றியே ஆக வேண்டிய ஒரு ஜீவனை கடவுள் உங்களை நம்பி ஒப்படைத்திருக்கிறார் " என்று அவள் சொல்ல, பார்வையாளர் கூட்டம் கை தட்டி ஆர்ப்பரித்தது.
தனது அருகிலிருந்தவர் பக்கம் திரும்பிய ரவீந்தர், " தனக்குக் கை தட்டல் கிடைக்கணும்கிறதுக்காக இவங்க என்ன வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் " வார்த்தை சிலம்பாட்டம் " ஆடுவாங்க. இவங்க வீட்டில் இப்படி ஒரு குழந்தை இருந்திருந்தா அந்த பாதிப்பு அதனாலே வர்ற வருத்தம் என்னன்னு இவங்களுக்குத் தெரிந்திருக்கும் . வாங்குகிற காசுக்கு வஞ்சனை இல்லாமே இவங்க பேசுறாங்க ,அதைக் கைதட்டி ஜனங்க ரசிக்கிறாங்க. என்ன வொரு பைத்தியக்கார உலகம் ஸார் இது " என்றான்
அவர் பதிலேதும் சொல்லாமல் சிரித்து விட்டு " ஸார், ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ? " என்றார்
" என்ன வேணும் ? சொல்லுங்க ஸார் "
" ஒரு டீ குடிக்கணும். வெளியே ஸ்டால் இருக்கு. போகணும் "
" அதுக்கென்ன . வாங்க போகலாம் " என்று எழுந்த ரவீந்தர், தன்னிடம் பேசிய மனிதர் ஒரு வீல் சேரில் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தான்
" ஸாரி ஸார் "
" எதுக்கு இந்த ஸாரி ? "
" நான் உங்களை ...உங்க ...கால்களை .. கவனிக்கலே "
" நீங்க கவனிச்சாலும் அதைப் பார்த்திருக்க முடியாது "
" என்ன ஸார் சொல்றீங்க ? "
"எனக்கு தொடைப் பகுதியோ கால்களோ கிடையாது. ப்ளைனா, பச்சையா சொல்லணும்னா நான் ஒரு முண்டம் "
" இந்த மாதிரி நிலைமையிலே மற்றவங்க துணையில்லாமே ஏன் ஸார் தனியா வர்றீங்க ? அதுவும் கூட்டம் வருகிற இடத்துக்கு ?"
" துணையோடுதான் வந்திருக்கிறேன் "
" அவங்க எங்கே ? "
" மேடையிலே இருக்காங்க "
" மேடையிலா ? "
" கொஞ்சம் முன்னாடி பேசினாங்க . நீங்க கூட கமாண்ட் அடிச்சீங்களே . அவங்க என்னோட வய்ப் "
" நிஜமாகவா ? " என்று அதிர்ந்து போய்க்கேட்டான் ரவீந்தர்
" இதுக்கே இப்படி ஆச்சரியப் பட்டா எப்படி ? குறைபாடு உள்ள ஒருவரைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன்னு சொல்லி என்னை விரும்பி ஏற்றுக் கொண்டவங்க அவங்க "
மௌனமாக நின்று கொண்டிருந்தான் ரவீந்தர்
" என்ன ஸார் ? என்ன யோசனை ? "
" எங்களுக்குப் பிறந்த குழந்தையைக் காப்பாற்றுவதையே நாங்க ஒரு சுமையாக நினைக்கிறோம் . அப்படியிருக்க இன்னொருவருடைய பாரத்தை ஒருவர் விரும்பி சுமக்கிறாங்கன்னு சொன்னா , அவங்க சாதாரண மனிதப் பிறவி இல்லே ஸார். தெய்வப் பிறவி ! உலகத்தில் இப்படிஎல்லாம் கூட பெண்கள் இருக்கிறார்களா என்ன ? " என்று வியந்து நின்றான் ரவீந்தர்
No comments:
Post a Comment