Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 05, 2013

Scanning of inner - heart ( Scan Report No. 66 )

                                   சீஸரின் மனைவி

மல்லிகையின் மணம் காற்றில் கலந்து ஹால் முழுக்க மணத்தது . தலையை நிமிர்த்தி சுவர்க் கடிகாரத்தை நோட்டமிட்டான் மாது . மணி 9.30. கைக் கடிகாரத்தைப் பார்த்தான் 9.27. மல்லிகைப் பூ வாசம் வந்ததென்றால் மணி சரியாக 9.30 என்று நினைத்துக் கொண்டு  தனது வாட்சில் நேரத்தை 9.30 ல் கொண்டு வந்து நிறுத்தினான். " அலங்காரவள்ளி வந்து சேர்ந்தாச்சு . கூடவே வரவேண்டிய கூஜா தூக்கியை காணலியே " என்று நினைத்தபடி ஜன்னல் வழியாகப் பார்வையை ஓட விட்டான் மாது . வண்டியை பார்க் செய்தபடி வாசல் செக்யூரிட்டியிடம் எதோ பேசிக் கொண்டிருந்தான் "கூஜா". அதற்குள் உள்ளே நுழைந்த மதுமிதா " ஹாய் மாது " என்றாள் .பதிலுக்கு தலையை அசைத்தான் மாது 
" இந்த ஆபீசில் இதுவரை " மது " மட்டுந்தான். இப்போ " மாது " வந்தாச்சு.  சூது எப்போ வருமோ ? " என்று கேட்டு சிரித்தாள் மதுமிதா 
" நீ இருக்கிற இடமே சூதுதான் . இனிமே தனியாக சூதுன்னு ஒன்னு வந்து சேரணுமா என்ன ? " என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் மாது.
மாதுவைக் கடந்து அடுத்த டேபிள் அருகில் வந்த மதுமிதா ' என்ன குமார் ஸார், இப்போ உங்க பாதர் ஹெல்த் எப்படி இருக்கு ? ரெண்டு நாள் பாருங்க. சரிப்பட்டு வரலைனா வேறு ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிடலாம் " என்று சொல்லிவிட்டு, அடுத்த டேபிளுக்கு  நகர்ந்து   " என்ன பரந்து ஸார் , கணக்கில் ஒரு ஐம்பது பைசா எங்கே விட்டுப் போச்சுன்னு தெரியலைன்னு நேற்று பூரா அதோடு மல்லுக்கு நின்னீங்களே. கிடைச்சுதா ? இல்லாட்டாலும் டோன்ட் வொரி. என் டேபிளில் கொண்டு வந்து போடுங்க பைல் பேப்பரை . நான் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன் " என்று சொல்லி விட்டு நகர்ந்த மதுமிதா மானேஜர் முன்னே நின்று புன்னகை ஒன்றை படர விட்டாள். அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் சைன் பண்ணின மதுமிதா " ஸார் சேகரும் வந்துட்டார். வெஹிகில் ப்ராப்ளம். கீழே நிற்கிறார் " என்றாள் 
" வரட்டும் வரட்டும் " என்று சொல்லிவிட்டு தனது வேலையில் மூழ்கினார் மானேஜர். மதுமிதா தன்னுடைய இருக்கைக்கு சென்று விட்டாள் 
" இன்னிக்கு குசலம் விசாரிப்பு இவ்வளவுதானா ? மற்றவங்களை விசாரிக்க மறந்துட்டாளா " என்று தனக்குள் கேட்டுக் கொண்டான் மாது.
 " ச்சே . இப்படியும் ஒரு பொம்பளையா ? வந்தோமா வேலையைப் பார்த்தோமான்னு இல்லாமே ஒவ்வொருத்தரையும் விசாரிப்பதும் , அவனுக இவ கிட்டே வழியறதையும் பார்க்கும்போது மாதுவுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது . புருஷன் என்ற பேரில் இவ கூடவே வருகிற இதே ஆபீசில் வொர்க் பண்ணுகிற சேகரும் எதையுமே கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பார்த்தபோது எரிச்சல் இன்னும் அதிகமானது. சாப்பாட்டு வேளையின் போதும் யாரையும் விட்டு வைக்கவில்லை. தன்னோட சாப்பாட்டை மற்றவர்களுக்குக் கொடுப்பதும், அவர்களிடமிருந்து ஷேர் பண்ணிக் கொள்வதுமாக  ஒரே பரபரப்புதான் 
தன்னருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அகஸ்டினிடம் " மற்ற எல்லா லேடீஸ்ஸும் " வந்தோமா , வேலையைப் பார்த்தோமா, போனோமான்னு  இருக்கிறாங்க. இவங்க மட்டும் ஏன் இப்படி ? இவங்க ஹஸ்பண்ட் கூட எதையுமே கண்டுக்கிறதில்லையே ?" என்று கேட்டான் 
" மற்ற லேடீஸுக்கும் மது மேடத்திற்கும் இருக்கிற வித்தியாசமே இதுதான் . அந்த குணம் பிடிச்சுதான் சேகர் அவங்களை லவ் மாரேஜ் பண்ணினார் " என்று பதில் வந்தது அகஸ்டினிடமிருந்து 
தலையில் அடித்துக் கொண்டு சாப்பாட்டில் ஆழ்ந்தான் மாது 
ஒரு வாரம் கழித்து ....
கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு படுக்கையை விட்டு எழுந்த மாது, மெதுவாக நடந்து கதவைத் திறக்க முயற்சித்தான் . உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல ஒரு வலி. கதவு திறந்ததுமே , புன்சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள் மதுமிதா. அவளைத் தொடர்ந்து சேகரும் நுழைந்தான் 
" என்ன மாது , உடம்புக்கு முடியலைனா எங்களுக்கு இன்பார்ம் பண்ண மாட்டீங்களா ? நேற்று உங்களைக் காணும்னதும்  ' சரி ,  வீட்டு நினைப்பு வந்திருக்கும் அம்மா அப்பாவைப் பார்க்கப் போயிருப்பீங்கனு நினைச்சேன். இப்பதான் குமார் சொன்னார் . நாங்க ரெண்டு பெரும் லீவ் எழுதி வச்சுட்டு ஓடி வர்றோம் . நீங்க இங்கே ஜாயின் பண்ணி ஒரு வாரம்தான் ஆறது ..இந்த ஊர் இந்த தண்ணீ இந்த ஊர் சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்கலே போலிருக்கு " என்று சொல்லியபடியே அவன் தலையில் மதுமிதா  கை வைத்துப் பார்த்த போது கூச்சத்தில் நெளிந்தான் மாது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்த சேகர், மேஜை அருகில் சென்று அங்கு கிடந்த மருந்து மாத்திரைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் 
" மாது , நீங்க உங்க சொந்தக்காரங்க வீட்டில் இருக்கிறதாகத்தான் நான் நேற்று வரை நினைச்சிருந்தேன். நீங்க ஹோட்டல் ரூமில் தங்கி இருக்கிற விஷயம் இன்றுதான் எனக்குத் தெரியும். நீங்க ரொம்பவும் " ஷை டைப் ". அதைப் போக்க நானே விரும்பி வந்து பேசினாலும் நீங்க ஒதுங்கிப் போறீங்க.அறுபது வயசு வரை நாம இதே ஆபீசில் இருக்கப் போறோம் , வேறே எங்கேயும் போகப் போறது கிடையாது . அப்படி இருக்க நாம ஒரு குடும்பம் மாதிரி பழகினால் தானே லைப் இண்டரெஸ்டா இருக்கும் " என்று சொல்லிய மதுமிதா கலைந்து கிடந்த மேஜை நாற்காலியை சரி பண்ணினாள் " ஐயோ வேண்டாங்க " என்று மாது தடுத்தும் கேட்கவில்லை " சேகர், மாதுவோட டிரஸ் அங்கே இங்கே கிடக்கிறது எல்லாத்தையும் எடுத்துப் போய் லாண்டரியில் போடுங்க . இல்லாட்டா ரூம் பாயைக் கூப்பிட்டு எடுத்துட்டுப் போய் துவைச்சிட்டு வரச் சொல்லுங்க  " என்று சொல்ல , " நம்மால் செய்ய முடியற வேலையை செய்ய எதற்கு ரூம் பாய் ? பக்கத்திலேயே ஒரு லாண்டரி இருக்கு. நானே போட்டுட்டு வர்றேன் " என்று சொல்லி அள்ளிக் கொண்டு போனான் 
" உடம்புக்கு என்னதான் செய்து மாது ? வாய் விட்டு சொன்னால்தானே எனக்கு தெரியும் ? "
"உடம்பெல்லாம், எலும்புக்கு எலும்பு அடிச்சுப் போட்டாப்லே  ஒரு வலி. " என்று மாது சொன்னதுமே, செல்லில் நம்பரை அழுத்திய மதுமிதா, " சேகர், நீங்க லாண்டரி வேலையை முடிச்சதும் நம்ம வீட்டுக்குப் போய் , அப்பாவுக்கு எலும்பு வலிக்கு  வாங்கின ஆயின்மெண்ட் ஒன்று.. அது  உங்க கப்போர்ட்டில்  இருக்கு. எடுத்துட்டு வந்திடுங்க " என்றாள் 
அடுத்த அரைமணி நேரத்தில் மருந்துடன் வந்தான் சேகர். அதைக் கையில் வாங்கிய மதுமிதா " காலை நீட்டி உட்காருங்க " என்று சொல்ல , தயங்கிய மாதுவின் கால்களை இழுத்து வைத்து மருந்தை தடவ ஆரம்பித்தாள். மெதுவாக சேகரின் முகத்தைப் பார்த்தான் மாது. " முதல்லே கொஞ்சம் " கதகத " ன்னு தகிக்கிற மாதிரி இருக்கும். பிறகு இதமா இருக்கும். நடக்க முடியாமே எழுந்து வந்து கதவைத் திறந்த நீங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் மாடிப் படி இறங்கப் போறீங்க  " என்றான் சேகர் 
மருந்தை தேய்த்து முடித்த மதுமிதா அவனைப் படுக்கையில் சாய்த்து " எதைப் பத்தியும் யோசிக்காமே நல்லா தூங்குங்க . நான் வீட்டிற்குப் போய் கஞ்சி காய்ச்சி எடுத்துட்டு வர்றேன். சேகர், நான் வர்ற வரை நீங்க அங்கே இங்கேன்னு எங்கேயும் நகரக் கூடாது " என்று சொல்லிவிட்டு புயல் வேகத்தில் வெளியேறினாள் 
மேற்கூரையைப் பார்த்தபடி படுத்திருந்த மாதுவின் கண்களிலிருந்து நீர் வடிந்தது .  " என்ன மாது ? என்ன ? பெயின் இருக்கிறதா ?" என்று பதறிப்போய்க் கேட்டான் சேகர் 
" ஆமாம் " என்ற தலையசைப்பு மாதுவிடமிருந்து வந்தது 
" வாங்க டாக்டர் கிட்டே போகலாம் "
" டாக்டரிடம் போனால், சரியாகிற வலியில்லை இது "
" என்ன மாது ? "
" என்னை மன்னிக்கணும் "
" எதற்கு ? "
" உங்க வொய்ப் எல்லாரிடமும் சகஜமா பழகுவதைப் பார்த்தும் கோபப் படாமே அமைதியா இருக்க உங்களால் எப்படி முடியுதுன்னு உங்க மேலே பலமுறை ஆத்திரப் பட்டிருக்கிறேன். இப்படி எல்லாரிடமும் பழகுவதைப் பார்த்து ஒரு சிறு சந்தேகமோ சஞ்சலமோ வராமல் இருக்குமா என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆண் பெண் , பெரியவங்க சின்னவங்க என்ற எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்துதான் அவங்க மத்தவங்களை கவனிக்கிறாங்க என்கிறதை இப்போ புரிஞ்சுகிட்டேன். "
" அது அவளோட சுபாவம் . பிறவிக் குணம்.  அந்த குணம் பிடிச்சதால்தான் நான் அவளை லவ் மாரேஜ் பண்ணி கிட்டேன். மூன்று தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு எனக்கு வசதி இருக்கு . ஒருமுறை ரோட்டோரம் அடிபட்டுக் கிடந்த என்னை தனியாளா நின்று ஹாஸ்பிடலில் சேர்த்து, எங்க வீட்டுக்கும் தகவல் கொடுத்து உதவி பண்ணினா . என் உடம்பு நல்லா ஆனதும் அவளை திருமணம் பண்ணிக்கிற ஆசையை அவகிட்டே சொன்னபோது அவ போட்ட ஒரே ஒரு கண்டிஷன் " எந்தக் காரணம் கொண்டும் வேலையை விட மாட்டேன் . அதே ஆபீசில் நீங்களும் வேலைக்கு வரணும் "கிறதுதான். நானும் ஒதுக்கிட்டேன் .கல்யாணமாகி ஏழு வருஷம் ஆறது . குழந்தை இல்லை என்கிற வருத்தத்தை தவிர வேறே எந்தவொரு மனஸ்தாபமும் எங்க கிட்டே கிடையாது "
" நீங்க ரெண்டு பேருமே ரொம்பவும் வித்தியாசமானவங்க "
" ஒவ்வொரு மனுஷருக்குள்ளேயும் ஒவ்வொரு விதமான எண்ணம் ஓடிக் கிட்டே இருக்கும். மற்றவங்களை துன்புறுத்திப் பார்க்கிறதில் ஒரு சிலருக்கு இன்ட்ரஸ்ட் .மற்றவங்களை சிரிக்க வைத்து  பார்க்கிறதில் ஒரு சிலருக்கு இன்ட்ரஸ்ட் .மற்றவங்களை ஏமாற்றிப் பார்க்கிறதில் ஒரு சிலருக்கு இன்ட்ரஸ்ட் . மதுவுக்கு மற்றவங்களுக்கு உதவி செய்து, அவங்க சந்தோசப் படறதைப் பார்த்து இவ சந்தோசப் படுவதில் ஒரு   இன்ட்ரஸ்ட். இப்படி மற்றவங்களுக்கு உதவி செய்யப் போவதாலே அவ ஆபீஸ் வேலையில் அலட்சியமா இருக்கிறது கிடையாது. ஜென்ட்ஸ் , நாம ரெண்டு மணி நேரத்தில் செய்கிற வேலையை அவ ஒருமணி நேரத்தில் முடிச்சிடுவா . அது ஆபீசில் எல்லோருக்கும் தெரியும். அதனாலேதான் ஆபீஸ் வேலையில் யாருக்கு என்ன சந்தேகம் என்றாலும் மதுவைத் தான் கேட்பார்கள் . அது அவளோட திறமையா இல்லாட்டா கடவுள் கொடுத்த வரமா என்கிறது எனக்குத் தெரியாது " என்று சொல்லி சிரித்தான் சேகர் 
சிறிது நேரம் அமைதியாக இருந்த மாது, மெதுவாக எழுந்து மொபைலை எடுக்க  முயற்சித்தான் 
" என்ன வேணும்னு சொல்லுங்க . நான் செய்றேன். நீங்க ஏன் ஸ்ட்ரைன் பண்றீங்க ? " என்று பதறிப் போய்க் கேட்டான் சேகர் 
" என்னோட பால்ய சிநேகிதனுக்கு போன் பண்ணனும் . படிக்கிற காலத்தில் நானும் அவனும் " சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்ப்பட்டவள் " என்ற வரிகளைஒரு புத்தகத்தில் படித்துவிட்டு அதை ப் பற்றி அடிக்கடி டிஸ்கஸ் பண்ணுவோம்  ' அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்'னு. இப்போ அவனுக்குப் போன் பண்ணி " நான்  சீஸரின் மனைவியை நேரில் சந்திசிட்டேன்னு சொல்லணும் " என்று சொல்லியபடி நம்பரை தேடுவதில் முனைந்தான் மாது 


No comments:

Post a Comment