சாதனை !!!
" என் ப்ரெண்ட் ராகவனைப் போய் பார்க்க சொன்னேனே . நீ அங்கே போகவே இல்லைன்னு கேள்விப் பட்டேன். பிசினஸ் லெவெலில் அவனுக்கு எல்லா இடத்திலும் செல்வாக்கு இருக்கு. அவனே உனக்கு ரெகமன்ட் பண்றேன்னு சொல்றப்போ உனக்கு அவனைப் போய் பார்க்கக் கூட முடியலியா என்ன ? " என்று இரைந்தார் பாலச்சந்திரன்
"அப்பா, இப்போ நான் இருக்கிற இடத்திலேயே பெட்டெர் ப்ராஸ்பெக்ட்க்கு சான்ஸ் இருக்குப்பா " மெதுவான குரலில் சொன்னான் சுரேஷ்.
" மூணு வருசமா நீயும் அங்கு குப்பை கொட்டறே / நீயும் முன்னுக்கு வரலே , கம்பெனியும் முன்னேறலே. கேட்டால், பைனான்ஸ் ப்ராப்ளெம். போகப் போக சரியாகும்னு சொல்றே ."
" அப்பா, என்னோட படிப்புக்கு ஏற்ற மாதிரி வேலை வேணும்னு நான்
நினைக்கிறேன். ரெகமெண்டேசன்ங்கிற பேரில் எனக்கு கொஞ்சமும்
தெரியாத, பழக்கமில்லாத ப்ராஜெக்டில் மாட்டிக்கொண்டு முழிக்க முடியுமா ? அதுவுமில்லாமே ......"
" போதும்டா .. நீயும்... உன் ... எனக்கு வாயில் என்னமாத்தான் வருது . எல்லா இடத்திலும் எல்லா சூழ்நிலையிலும் சமாளிக்கத் தெரியுணும். ரிஸ்க் எடுக்கத் தெரியணும். "
இவர்கள் வாக்கு வாதத்தை இடைவெட்டியது லலிதாவின் குரல். " நீங்க
ஏன் அவனன்டே தேவையில்லாமே வாக்குவாதம் பண்றேள், அவன் என்ன ஸ்கூல் பையனா ? நல்லது கெட்டது தெரியாத வயசா ?"
" அப்பாடா ..காணுமேன்னு நினைச்சேன். இதோ பாரு உன்னண்டே யாராவது அட்வைஸ் கேட்டா மட்டும் நீ வாயை திற . இவனுக்காக ஒரு பெரிய இடத்திலே சிபாரிசு பண்றேன்னு ராகவன் சொல்றான். அவனைப்போய் பார்க்கக்கூட இவனுக்கு நேரமில்லை . என்ன பிள்ளைடி இவன் ? "
" உங்க பிள்ளை உங்களைப் போலத்தானே . அவனுக்கு வரன் தேடணும். ஜாதகத்தை எடுத்துண்டு போய் ரமணி ஆத்துலே குடுங்கன்னு தலைபாடா அடிச்சுக்கிறேன் . எங்கே கேட்கிறேள் "
" ஆமாம். உருப்படியா ஒரு வேலைவெட்டி இல்லே . வரன் தேடறாளாம். எதிலும் ரிஸ்க் எடுக்கப் பயப்படறானே . எனக்குதான் தைரியமில்லே. பொட்டிப் பாம்பா வளர்ந்து அப்பா கைகாட்டின படிப்பை படிச்சேன், போக சொன்ன வேலைக்கு போனேன் கட்டிக்க சொன்ன அசமஞ்சத்தை கட்டிட்டேன் இவனாவது .. "
" ஏன், நான் அசமஞ்சம்னு இப்பத்தான் தெரியறதா? ஆத்துக்கு மாட்டுப்பொண் வர்ற சமயத்தில்கூட , என்னை கட்டிண்டதுக்காக வருத்த படறதை நிறுத்த மாட்டேள் போலிருக்கு."
" நான் என்ன சொல்ல நினைச்சேன்னா .."
" போதும் .. நீங்க நினைச்சதும் , நடத்தியதும். சுரேஷா ,,, உனக்கு ஆபீசுக்கு நாழியாகலையா ? கிளம்பற வழியைப் பாரு "
" இதோ பாரு சுரேஷ் .. லைப்ல் நாம சில சமயம் ரிஸ்க் எடுத்துதான் ஆகணும் பின்னால் வர்றதைப் பத்தி கவலைப் பட்டுண்டு இருக்கக் கூடாது. சாதிப்பேன் சாதிச்சு காட்டுவேன்கிற தன்னம்பிக்கையை நீ வளர்த்துக்கணும். உன்னோட லட்சியம் மட்டுந்தான் உன் கண்ணுக்கு தெரியணும். அதை மறைக்கிற எதையும் தூக்கி எறியப் பழகிக்கணும் . புரிஞ்சு நடந்துக்கோ " என்றார் பாலச்சந்திரன்.
ஒரு வாரம் கழித்து ....
மொபைல் மணி அடித்ததும் ,, " காலம் நேரம் தெரியாமே , இது வேறு ! ' என்று அலுத்துக் கொண்டே போனை கையில் எடுத்த பாலச்சந்திரன், சுரேஷின் நம்பரைக் கண்டதும், " என்னடா கண்ணு நீ இந்நேரத்திலே ? என்ன விஷயம் ? ஆபீஸ் அவர்ஸில் நீ என்னை காண்டக்ட் பண்ணவே மாட்டியே ? " என்று வியப்புடன் கேட்டார் பாலச்சந்திரன்
" அப்பா.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ப்பா . போன வாரம் நீங்க சொன்ன விசயங்களை நல்லா யோசிச்சு பார்த்தேன். நீங்க சொல்றது சரின்னு பட்டது "
" என்ன .. ராகவனைப்போய் பார்த்தியா .. என்ன சொன்னான் ? "
" இல்லேப்பா .. இது வேறே விஷயம் .. நான்,... நான் ... "
"மென்னு விழுங்காமே விசயத்தை சொல்லு " என்று தைரியம் கொடுத்தார் பாலச்சந்திரன்
" நான் எங்க ஆபீசில் என்னோட வொர்க் பண்ற ரோஸ் மேரியை விரும்பறேன் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க நினைத்தாலும், ரெண்டு பேருமே, மற்றவங்க விமரிசனத்துக்காக பயந்துபோய் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம். ரொம்பவும் குழப்பத்தில் இருந்த சூழ்நிலையில்தான், நீங்க சொன்ன " லைப்ல் நாம சில சமயம் ரிஸ்க் எடுத்துதான் ஆகணும் பின்னால் வர்றதைப் பத்தி கவலைப் பட்டுண்டு இருக்கக்கூடாது.சாதிப்பேன் சாதிச்சு காட்டுவேன்கிற தன்னம்பிக்கையை நீ வளர்த்துக்கணும். உன்னோட லட்சியம் மட்டுந்தான் உன் கண்ணுக்கு தெரியணும். அதை மறைக்கிற எதையும் தூக்கி எறியப் பழகிக்கணுங்கிற" வார்த்தைகள் எனக்கு ஒரு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் குடுத்தது.அதனாலே இன்னிக்கு காலையில்பிரெண்ட்சை விட்னெஸ்ஸா வச்சு நாங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மாரேஜ் பண்ணிண்டோம். சாயங்காலம் அவளை நம்மாத்துக்கு அழைச்சிண்டு வர்றேன். அம்மா ஏதாவது கத்தி கலாட்டா பண்ணாமே இருக்கணும். அதனாலே நீங்க இப்பவே அம்மாவுக்கு விசயத்தை பக்குவமா எடுத்து சொல்லணும்... நீங்க எதிர் பார்த்த மாதிரியே நானும் லைப்ல் ரிஸ்க் எடுக்கப் பழகிண்டேன் . உங்களுக்கு சந்தோசம்தானே ? " என்று சுரேஷ் சொல்லிக் கொண்டே போக, மூர்ச்சையாகி நாற்காலியில் சாய்ந்திருந்தார் பாலச்சந்திரன்
No comments:
Post a Comment