Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 05, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 43


                                 பட்டிக்காட்டான்

"வத்சு, வத்சும்மா , கண்ணைத் தெறந்து பாருடா . ஒனக்கு ஒண்ணும் ஆகலே . நீ நல்லாத்தான் இருக்கிறே. பயப்படாதே . கண்ணைத் தெறடா " என்ற தாயின் குரல் எங்கோ தூரத்தில் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதுபோல் இருந்தது வத்சலாவிற்கு. சிறிது நேரத்திற்குப் பின் கண்ணைத் திறந்து பார்த்த வத்சலா, மெதுவாக தலையைத் தூக்கி உட்கார முயற்சி செய்தாள் .
" வேண்டாம்டா , எழும்பாதே. இன்னிக்கு ஒருநாள் முழுக்க நீ பெட் ரெஸ்டில்  இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லியிருக்கிறேன், வண்டி ஓட்டும்போது கவனமா இருன்னு . முன்பின் தெரியாத ஊரிலே, ஒரு ஆத்திரம் அவசரம்ன்னா யாரும் வந்து ஏன்னு கேட்க கூட நாதியில்லாமே தனியா இருக்கிறோம். 'பார்த்துபோ'ன்னு நீ கிளம்பும் போதெல்லாம் சொல்லுவேனே. இப்படி கீழே விழுந்து அடிபட்டு படுத்து கிடக்கிறியே . அந்தப் புள்ளையாண்டான் சரவணன் வந்து சொன்னதும் என்னவோ ஏதோன்னு அலறி யடிச்சு ஓடிவந்தேன். உன்னைப் பார்த்ததும் தான் போன உசிர் திரும்பி வந்துச்சு."
" யாருன்னு சொன்னே ? சரவணனா ? உயரமா, கருப்பா, குங்குமப் பொட்டு   வச்சுகிட்டு , பார்க்க ' காட்டான் ' மாதிரி இருப்பானே ! அவனா ? " என்று ஈனஸ்வரத்தில் முனகியபடி கேட்டாள் வத்சலா .
" ஆமாம்மா "
சரவணனா என்னைக் கொண்டு வந்து இங்கே சேர்த்து விட்டு அம்மாவிற்கும் தகவல் சொன்னது ! அவனை எப்படியெல்லாம் திட்டியிருக்கிறேன் . வகுப்பில் அத்தனை பேர் முன்னிலையில் எவ்வளவு முறை அவமானப் படுத்தி இருக்கிறேன். பதினைந்து வயது, பள்ளிக்கூட மாணவன் போல் இல்லாமல் சுமாராக இருபத்து நாலு வயது மதிக்கலாம் போல் 'அய்யனார் ' தோற்றமும், படியப்படிய வழித்து வாரிய ... அதுவும் எண்ணெய் வழிய ..வாரிய தலையும் , தொளதொளவென்று , உருவத்துக்கும் கலருக்கும் சம்பந்தமே இல்லாத ட்ரெஸ்ஸும், என்ன சொன்னாலும் சிறிதும் முகத்தை சுளிக்காமல் சிரித்தபடியே தலையைக் குனிந்துகொண்டு நிற்பதையும் எப்படியெப்படி எல்லாம் நாலு பேர் முன்னிலையில் குத்திக் காட்டிப் பேசி இருக்கிறேன்.நேற்றுகூட ' நல்லா' வாங்கிக் கட்டிக்கொண்டானே. ஒவ்வொரு ஸ்டுடண்ட்ஸ் எப்படியெப்படி எல்லாம் சூழ்நிலைக்குத் தகுந்தபடி உடனடியாக தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் . உன்னாலே ஏன் முடியலே ? உன்னுடைய உருவத்தை ... ' காட்டான் ' மாதிரியான உருவ அமைப்பை மாற்ற முடியாது .ஆனால் தோற்றத்தை மாற்ற முடியுமே; கோவிலில் மேளம் அடிக்கிறவன்
மாதிரி குங்குமப் பொட்டும், நீயும்... நீ இந்த ஸ்கூல்க்கு வந்து ரெண்டு வருஷம் ஆகுதுன்னு கேள்விப் பட்டேன். இந்த ரெண்டு வருஷத்திலே மற்ற பையன்க மாதிரி உன்னை மாற்ற நீ ட்ரை பண்ணவே இல்லையா ? திட்டுகிறேனே.கொஞ்சமாவது சுரணை வேண்டாமா ? காட்டான், காட்டான், பட்டிக்காட்டான் என்று திட்டினேனே என்று சிந்தனையை ஓடவிட்ட வத்சலா , அந்த பையன் மீது எனக்கு ஏன் அப்படியொரு வெறுப்பு ?.... உருவத்தை வைத்தா ? நாலு பேருக்கு ரோல் மாடல் மாதிரி இருக்க வேண்டிய நான், என்னை ஒரு டீச்சர்ன்னு சொல்லிக்க தகுதி இல்லாதவளாகத், தரம் தாழ்ந்து நடந்து கொண்டது ஏன் ?
" வத்சு அந்த புள்ளையப் பார்த்தா, முன்னே நாம மதுரையில் இருக்கிறப்ப நம்ம எதிர் வீட்டில் இருந்தானே முத்து, அவனைப் பார்த்தாப்லே இருக்கு. உனக்கு அவனை நினைவு இருக்கோ இல்லையோ. நீ அப்ப சின்னப் பிள்ளை. எப்பவும் குடி கூத்துதான் . கெட்ட சகவாசந்தான். எப்பப் பாரு அடிதடிதான் குடிச்சிட்டு வந்து அவன் பொண்டாட்டியை தெருவில் இழுத்துப் போட்டு அடிப்பான். வள்ளி ஒரு வாயில்லா பூச்சி . இவனை எதிர்த்து ஒரேஒரு வார்த்தைகூட அதிர்ந்து பேசமாட்டாள் " என்று அம்மா சொல்லிக்கொண்டே போகும் போது தான் , வத்சலாவிற்கு ஒரு விஷயம், ஒரு உண்மை புரிந்தது. விவரம் புரியாத வயதில், எதிர் வீட்டில் நடக்கும் அடிதடியைப் பார்த்து, அந்த முத்துவின் மேல் உள்ள கோபம், ஆத்திரம், சிறுவயதில் இருந்த கையாலாகாத்தனந்தான் , அவனை போன்ற உருவ அமைப்பு உள்ள சரவணன் மீது காரணமில்லா வெறுப்பாக மாறி அவமானப் படுத்த வைத்ததோ என்ற எண்ணத்தில் லயித்தாள் .
" அந்த புள்ளே மெடிக்கல் ஸ்டோர் வரை போயிருக்கு. நல்ல புள்ளை . பாவம் அவன் அம்மா அப்பா ரெண்டு பேருமே ரெண்டு வருஷம் முன்னே ஒரு ஆக்சிடெண்டில் போய் சேர்ந்துட்டாங்களாம். கோவிலுக்கு பொங்கல் வைக்க வெளியூர் போனாங்களாம். திரும்பி வர்றச்சே , பஸ் ஒரு கிணத்துலே விழுந்து, அப்பளமா நொறுங்கிப் போச்சாம். அதுக்குப் பிறகு மாமாதான் இங்கு கூட்டி வந்து படிக்க வைக்கிறாராம். தாய் தகப்பன் போய்ச்சேர்ந்ததும் இவனுக்கு படிப்பிலே பிடிப்பு இல்லையாம். எப்படியாவது பிளஸ் டூ முடிச்சே ஆகணும்னு மாமா கட்டாயப் படுத்துதார்னு, அது வீட்டுக் கதையை சொல்லிட்டு இருந்துது. நீ வந்து நேரம் ஆச்சே . போய் ஏதாவது குடிச்சிட்டு வான்னு சொல்லிப் பார்த் தேன். ஊ ஹூம் .. அங்கே இங்கே நகரலே. என் கூடவே எனக்குக் காவலா உக்கார்ந்திருக்கு " என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கையில் மருந்து மாத்திரைகளுடன் வந்து சேர்ந்தான் சரவணன்.
வத்சலா அருகில் வந்து . " டீச்சர் எப்படி இருக்கீங்க ? உங்களுக்கு ஏதும் ஆகக் கூடாதுன்னு  எங்க அம்மாவை வேண்டிகிட்டேன். எனக்கு எங்க அம்மாதான் சாமி " என்றான்.
" சரவணா, நான் கீழே விழுந்து அடிபடும்போது நம்ம ஸ்கூல் ஸ்டுடென்ட் நிறைய பேர் அந்த வழியா போனாங்க. அவங்க ரோட்டில் விளையாட்டிட்டே போயிட்டு இருந்தாங்க . பின்னாலே வண்டி வந்ததைக் கவனிக்கலே .அவங்க மேலே இடிக்காமே இருக்க, வண்டியைத் திருப்பறப்போ தான் நான் கீழே விழுந்திட்டேன். நான் விழுந்து அடிபட்டது தெரிஞ்சும் நிற்காமே ஓடிட்டாங்க. ஒருவேளை தப்பு அவங்க மேலேங்கிற பயத்தால் கூட ஓடி இருக்கலாம். நீ மட்டும்தான் ரொம்ப சிரமப்பட்டு என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்துட்டு , அம்மாவுக்கும் தகவல் சொல்லிட்டு, துணைக்கும் இருந்திருக்கிறே , நான் உன்னை எப்படியெல்லாம் மனம் நோகப் பேசி இருக்கிறேன் ?" என்று மன்னிப்புக் கேட்கும் குரலில் பேசினாள் வத்சலா .
"அதனாலென்ன டீச்சர்? நீங்க என் மேலே பரம்பரை பகையை வச்சு கிட்டோ பங்காளி சண்டையிலோ என்னை திட்டலியே. நான் செய்றது உங்களுக்குப் பிடிக்கலே. அதான் திட்டினீங்க . ஒரு ஸ்டுடென்ட் கிட்டே, ஒரு டீச்சருக்கு அந்த அளவுகூட உரிமை இல்லையா என்ன ? அது வேறே விஷயம், இது வேறே விஷயம் டீச்சர் . ஒரு மனுஷி .. அதுவும் எனக்கு நல்லாத் தெரிஞ்ச ஒரு மனுஷி அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்தும், நான் பார்க்காமே போனா, அப்புறம் என்னை மனுஷன்னு நான் சொல்லிகிறதில் அர்த்தமே இல்லையே. ஒருத்தங்க பாதிக்கப் பட்டு பாதையில் கிடக்கும்போது, என்ன எதுன்னு கேட்காமே " உத்சு உத்சு ' ன்னு உச்சு கொட்டிட்டு பரிதாப உணர்ச்சிய மட்டும் காட்டிட்டு ,என்னோட வேலைப் பார்த்துக் கிட்டு போகிற அளவுக்கு எனக்கு இன்னும் பட்டணத்து நாகரீகம் பழக்கப்படலே. அந்த வகையிலும் நான் பட்டிக்காட்டான் தான் டீச்சர் " சரவணன், வெகு இயல்பாகத்தான் இதை சொன்னான். ஆனால் வத்சலாவிற்கு தன்னை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருந்தது.

No comments:

Post a Comment