Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 12, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 00

                                 
                                                       தாய் சொல் தட்டாத தனயன் ! 
 
(  இது     என்னுடைய    கற்பனையில்   உருவான   கதை அல்ல !   கர்ண 
   பரம்பரைக்  கதை,   இருந்தாலும்   இதை   என்னுடைய   ப்ளாகில் எழுதக் 
  காரணம் ஒரு மாமியாரின் மனதை இது எந்த   அளவு ஸ்கேன் செய்து   
  காட்டுகிறதுஎன்பதை புரிந்து கொள்ளவே.முதன் முதலில்
  இந்த கதையைச் சொன்ன / எழுதிய  புண்ணியவான்  யாரோ ?  )

கணவன் மனைவி, இரு குழந்தைகள், மாமியாரைக் கொண்ட சிறிய குடும்பம் அது. கணவனுக்கு, அவனுடைய அன்னை சொல்வதெல்லாம் வேத வாக்கு. அவளை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டான்,  தாய் பேச்சை மீறி எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டான். மனைவியோ வாயில்லா பூச்சி. அந்த வீட்டில்,  தான் எது சொன்னாலும் அது எடுபடாது என்பது அவளுக்கு மிகவும் நன்றாகவே தெரியும், அதனால் அடங்கிப் போகக் கற்றுக்கொண்டாள். 

மாமியாரோ சரியான சைக்கோ. மருமகளை படுத்துவதில்  அப்படியொரு அலாதி ஆனந்தம் அவளுக்கு. மருமகள் ஒரு நிமிடம்கூட ஓய்ந்து உட்கார விடமாட்டாள். ஏதாவது வேலை வாங்கிக் கொண்டும், செய்த வேலையில் குற்றங் குறை கண்டுபிடிப்பதுமே வேலையாக இருப்பவள்.

இப்படியே பல வருடங்கள் ஓடி விட்டன, பக்கவாதம் வந்து மாமியார் படுத்த படுக்கையாகி விட்டாள். இரண்டு காலும், வாயும் இழுத்துக் கொண்டது. ஒரு கையை மட்டும் லேசாக அசைக்க முடியும். இந்த நிலையிலும் மருமகளை படுத்துவதை மட்டும் நிறுத்தவே இல்லை, மருமகள் கொண்டு வந்து வைக்கும் மருந்து மாத்திரைகளை கீழே தட்டி விடுவது, கொண்டு வந்து வைக்கும் சாப்பாடு கஞ்சியை கொட்டி விடுவது, அதை அவள் சுத்தம் செய்வதைப் பார்த்து மனதுக்குள் சந்தோசப் படுவது, இப்படியாக தன்னால் முடிந்த தலைவலியை மருமகளுக்கு கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள். மகனைக் கண்டதும் எதுவுமே முடியாதவள் போல அப்பாவி வேஷம் போடுவாள்.

ஒருநாள் மருமகளுக்கு ரொம்பவுமே உடம்புக்கு முடியவில்லை. "கொஞ்ச நேரம் படு "ன்னு உடம்பு கெஞ்சியது. இருந்தாலும், மாமியார், வயதான மனுஷி, அதுவும் உடம்புக்கு முடியாதவளுக்கு நேரத்துக்கு மருந்து மாத்திரை, பால் கொடுக்க வேண்டுமே என்ற கரிசனத்தில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு வேலையாக முடித்து விட்டு, பாலைக் காய்ச்சி வந்து மாமியார் அருகில் வைத்துவிட்டு, மருந்தை எடுப்பதற்காக அறைக்குள் சென்றாள்.

அந்த சின்ன இடைவேளைக்குள் பால் டம்ப்ளரை  கீழே தள்ளி விட்டாள் அந்த மாமியார்க்காரி..கோபத்தின் எல்லைக்கே சென்று விட்ட மருமகள், கதவோரம் இருந்த உலக்கையை எடுத்து மாமியார் தலையில் அடிக்கப் போக, அது குறி தவறி அவளுடைய கழுத்தில் விழுந்து விட்டது.  மருமகளுக்கு உயிர் கையில் இல்லை. எதோ ஒரு வேகத்தில் அடிக்கப் போய் விட்டாளே தவிர, மாமியாரை கொல்லும் நோக்கம் அவளுக்கு இல்லை. கணவன் வந்ததும் வீடு ரெண்டு பட போகிறது என்பதும் அவளுக்கு நன்றாகவே தெரியும். பிரச்சினை நம்ம கட்டுப்பாட்டில் இருக்கும்வரைதான் அதை பற்றியே சிந்தித்துக்கொண்டும் கவலைப் பட்டுக் கொண்டும் இருப்போம், நம்முடைய கட்டுப்பாட்டை மீறி பிரச்சினை போய் விட்டால், ' தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு, சாண் போனா என்ன, முழம் போனா என்ன' என்ற பக்குவத்தில் இருப்போம்தானே. அந்த பக்குவ நிலைக்கு மருமகள் வந்து விட்டாள்.

மகன் எப்போ வீட்டுக்கு வருவான். வந்ததும் அவனிடம் சொல்லி மருமகளை நாலு "திருச்சாத்து" சாத்த சொல்லலாமென்று நினைத்து மகனின் வரவை எதிர் பார்த்து காத்திருந்தது அடி பட்ட ஆத்மா.

வெகு நேரம் கழித்துதான் மகன் வந்து சேர்ந்தான். அன்றைக்கென்று அவனுக்கு வேலை பார்க்கும் இடத்தில் ஏதோ பிரச்சினை. வரும்போதே "மூட் அவுட்" என்ற நிலையில்தான் வந்து சேர்ந்தான்.அவனை கண்டதுமே, கிழவி பெருங் குரலில் அழ ஆரம்பித்தாள், சைகையாலேயே, மருமகளை காண்பித்து, கதவோரம் இருந்த உலக்கையைக் காட்டி, தன்னுடைய கழுத்தையும் காட்டினாள். அவள் என்ன சொல்கிறாள் என்பது இவனுக்கு சுத்தமாக  புரியவில்லை.
இதற்கு மேல் இதை வளர விட்டால் அது ஆபத்தில்தான் கொண்டு போய் விடும் என்பதை உணர்ந்து உஷாரான மனைவி, "என்னங்க, உங்க அம்மா என்ன சொல்ல வர்றாங்கன்னு உங்களுக்கு புரியலையா? ஏன்டா உலக்கை மாதிரி நிற்கிறே? என் கழுத்தில் கிடக்கிற செயினைக் கழற்றி உன் பொண்டாட்டி கழுத்தில் போடு"ன்னு சொல்லுதாங்க." என்று புது விளக்கத்தைக் கொடுத்தாள். "இப்போ இதுதானா பிரச்சினை?" என்று கடிந்து கொண்ட தாய் சொல் தட்டாத அந்த மகன், தாய் கழுத்திலிருந்த நகையைக் கழற்றி மனைவியின் கழுத்தில் போட்டு விட்டு கை கால் கழுவ சென்றான்.
'அப்பாடா" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் மருமகள்..

( என்னுடைய சிறு வயதில், எங்கள் வீட்டுக்கு அருகில் குடியிருந்த ஒரு அம்மா இந்த கதையை எனக்கு சொன்னார்கள்.  பல வருடங்கள் கழித்து இதனை  ALL INDIA RADIO ல் ஒலி பரப்பாகிக் கொண்டிருந்த " இன்று ஒரு தகவல்  " பகுதிக்கு எழுதி அனுப்பினேன்.  அது சில வருடங்களுக்கு முன்பு ஒலி  பரப்பானது.  இதே கதையை அவர் SUN TV ப்ரோக்ராமில் சொன்னதாக  ஞாபகம். நான் எழுதி அனுப்பிய நிறைய விஷயங்கள்  " இன்று ஒரு தகவல்  " பகுதியில் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு புத்தாண்டு தினத்துக்கும் எனக்கு வாழ்த்து அனுப்புவார்   திரு தென்கச்சி சுவாமிநாதன்.  ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன் .  இவ்வளவுக்கும் நாங்கள் இருவரும் நேரில் சந்தித்ததே இல்லை. இந்த நட்பை " சோழன் -- பிசிராந்தையார் " நட்புடன் ஒப்பிடுவாள் எனது தோழி  )


                                                    

No comments:

Post a Comment