Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 07, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No:39


( இச்சிறுகதை 20.09.1992 தினமணி கதிரில் வெளியாகியுள்ளது. இந்த கதையில் வரும் சம்பவங்கள் 90 சதவிகிதம் உண்மையானவை. கதை தொகுப்பு மட்டுமே கற்பனை  )

                                                      ஐ லவ் யூ 

மே மாத வெயிலின் கொடுமையை காட்டிலும்  காலனி குழந்தைகளின் விளையாட்டும் இரைச்சலும் தலைவலியைக் கொடுத்தது.  ஹவுஸிங்  போர்ட் காலனியில் குடி யிருப்பவர்களின் மிகப் பெரிய கஷ்டமே இது தான். அடுத்த வீட்டில் யாராவது தும்மினால் கூட நம் வீட்டுக்குக்கேட்கும். சுவர்களுக்குள் அந்த ஒருஅளவுக்கு  அன்னியோன்யம்.

ஏதோ மெட்ராஸில் தனி வீடு பார்த்து வாடகை கொடுக்கும் அளவு வசதி இல்லாததால்தான் இத்தனை இரைச்சலையும் சகித்துக் கொண்டு இருக்க
வேண்டியதிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகளின் பொழுது, ஆட்டபாட்டம், வேடிக்கை விளையாட்டுகளில் கழிகிறது. ஆனால் என் கவலை எனக்கு. வீட்டுக்கு வீடு டேப் ரிகார்டர் , வீடியோ,டிவி,குழந்தைகளின் அலறல்-இத்தனைக்கும் நடுவில்  என்னுடைய எக்ஸாம்க்கு நான் ரெடியாக வேண்டும். 

ஓபன் யூனிவர்சிடியில் சேர்ந்து கல்லூரிப் படிப்பைத் தொடர நினைக்கிற
என்னைப் போன்ற நாற்பது வயது அரைக் கிழடுகளுக்கு மே மாதம் ஒரு எம கண்டம் . படிக்க வேண்டும் என்ற ஆவலில் ஆபீஸுக்கு லீவு போட்டு
விட்டேனே தவிர , இதுவரை உருப்படியாக ஒரு பாடம் கூட படிக்க வில்லை.குழந்தைகளுடன் சேர்ந்து கும்மாளம் அடிக்க வேண்டும் என்று 
தோன்றினாலும், உள் மனதில் ஒரு குரல் அவ்வப்போது  " நீ ஒழுங்காகப்
படி.. படி " என்று அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. வரக்கூடாத ஆசைகள்
எல்லாம் வரக்கூடாத  வயதில் ஏன் வருகிறது என்று என்னை நானே 
நொந்து கொண்டேன். ஒரு கௌரவமான, நிரந்தரமான உத்யோகத்தில்
இருக்கும் எனக்கு இது ஒரு தேவை இல்லாத தலை வலி. படித்துப் பாஸ்
பண்ணி விட்டாலும், ஆபீசில் பிரமாதமாக எதையும் அள்ளித்தந்து விடப்
போவதில்லை . ஏதோ , போன ஜென்மத்தில் கவர்ன்மென்ட்க்கு கடன்
பட்டிருப்பேன் போலும். அதை இப்போது வட்டியுடன் செலுத்துவதாக 
என்னை நானே காம்ப்ரமைஸ்  செய்து கொள்வேன் .

எங்கள் பிளாக்கில்  மொத்தாம் பதினாறு வீடு. நாலு குடித்தனக் காரர்கள் 
கோடைவிடுமுறையைக்கொண்டாடகொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் 
சென்று விட்டனர்.  சில வீட்டிற்கு, வெளியூரிலிருந்து உறவினர்களும்
 நண்பர்களும் வந்திருக்க பிளாக்  முழுவதும் திருவிழாக் கொண்டாட்டம் தான். இத்தனைக்கும் நடுவில் என் மனதுக்கு அமைதியைத் தருகிற ஒருவிஷயம் இருந்த தென்றால், அது கீழ்ப் போர்ஷனில் குடியிருக்கும் ஹிந்திக்காரர் வீட்டிற்கு டில்லியிலிருந்து வந்திருந்த ஒரு குழந்தைதான். 
குழந்தையா , சிறுமியா ? சரி.. ஏதோ ஒன்று. அழகான தம்பதியருக்கு தங்க விக்ரகம்  மாதிரி  ஒரு பெண் குழந்தை. ஐந்து அல்லது ஆறு வயது  இருந்தால் அதுவே  அதிகம். குண்டு முகம், சிரிக்கும்போது குழிவிழும் கன்னம், துறுதுறுவென்று அலை பாயும் கண்கள், தலை கொள்ளாத அளவு  கருகருவென்ற தலை மயிர். அதை ஒழுங்காக அழகாக பாப் செய்து விட்டிருந்தனர். தலையில் எப்போதும் ஒரு ஒற்றை ரோஜா... பிளாஸ்டிக் தான்.வீட்டினருடன் சரளமாக ஹிந்தியிலும்,வெளியில் மற்றவர்களுடன்  குறிப்பாக எங்கள் பிளாக்கில் உள்ளவர்களுடன்  அரை குறை ஆங்கிலத்திலும் பேசியது. 

மொட்டை மாடிக்கு விளையாட ஓடிய  குழந்தையை வழி மறித்து 
 " வாட்ஸ் யுவர் நேம் " என்றேன்.
" நிர்மலா " என்றாள் கண்களை அகல விரித்துக் கொண்டே.
நிர்மலமான முகத்துக்கு நிர்மலா என்ற பெயர் எவ்வளவு பொருத்தம் என்றுநினைத்து மனதுக்குள்  வியந்து  கொண்டேன்.. 
எங்கள்  வீட்டில் சைனீஸ் செக்கர்ஸ், கேரம் போர்ட் இருந்ததால் 
விளையாடுவதற்காக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தாள் .
"  ஆன்ட்டி .. கோலி  ஆடலாமா ? " என்று கன்னங் குழிய சிரிப்புடன் அவள் 
கேட்கும்போது, என் கைகள் ஆட்டோமேட்டிக்காக பாடப் புத்தகங்களை 
கீழே இறக்கி வைத்தன.
" இதுதான் படிக்கிற லட்சணமா ? இப்படி நண்டு நசுக்குகளோடு சேர்ந்து 
விளையாட ஆரம்பித்தால், நீ உருப்பட்டாற்போலத்தான். இதுக்கு லீவு 
ஒரு கேடு "..-- இது அம்மாவின் ஆசிர்வாதம் .
எங்கள் பிளாக்கில் உள்ள குழந்தைகளுக்கும்  சில பெரியவர்களுக்கும், நிம்மி மிக நெருக்கமான தோழியாகி விட்டாள் . எங்கள் பிளாக்கில் 
உள்ள சில குழந்தைகள் இங்க்லீஷ் மீடியத்தில் படிப்பதாக பேர்தானே 
தவிர ஒரு நாளாவது அவர்கள் இங்க்லிஷில் பேசி, நான், கேட்டதே
இல்லை.  இப்போது எல்லாமே தலைகீழ். பெரியவர், சிறியவர் என்று 
வேறுபாடு  இல்லாமல் இல்லாமல் எல்லோருமே நிர்மலாவிடம் 
அரைகுறை ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இலக்கணம் 
என்ற ஒன்று இருப்பதைப் பற்றி எல்லாம் யாரும்  கவலைப்படவே  இல்லை.

அன்று வெள்ளிக் கிழமை என்பதால், விளக்கு பூஜைக்காக , விளக்கு, மணி, எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தேன் .
வாசலில்  நிழலாடியது. காலடி சத்தத்தைக் கொண்டே வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்ட நான்,  " கம் ஆன் நிம்மி " என்றேன், திரும்பிப் பாராமலே. எந்த அசைவும் இல்லை. திரும்பிப் பார்த்தேன் . என்னைக் கண்டதும் அவள் உதடு விசும்பியது. கண்களின் விளிம்பில் கட்டிக் கொண்டு நின்ற நீரை, இன்னும் சிறிது நேரத்தில் சிந்தி விடுவேன் என்பது   போல கண்கள் பரபரத்தன .
" என்ன நிம்மி, என்ன ஆச்சு ? வீட்டில் யாராவது திட்டினார்களா ? " 
என்றேன் பதற்றத்துடன்  ஆங்கிலத்தில்.
" இல்லை " என்பதுபோல் மெல்லிய தலை அசைப்பு.
" பிளாக்கில் உள்ள குழந்தைகள் யாராச்சும் திட்டினாங்களா ? "
" ஊ ஹூம் "
" விளையாட சேர்த்துக்கலையா ? "
" ஊ ஹூம் "
" டோன்ட் பீ சில்லி .. அப்போ ஏன் அழறே ? என்னிடம் உனக்கு என்ன 
தயக்கம் ? கம் ஆன்  " என்று இதமாக தலை முடியைக் கோதி விட்டேன் 
." ஆன்டி.. அந்தப் பையன் என்னிடம் 'ஐ லவ் யூ ' சொல்றான் "
" விச்  பாய் ? " 
" மாடி வீட்டு பிரஷாந்த் " .. சொல்லும்போதே சிறு தேம்பல் .
எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவள் 
குறிப்பிட்ட மாடி வீட்டுப் பிரஷாந்த்க்கு இன்னும் நாலு வயதுகூட நிரம்ப 
வில்லை.
 " ஆன்ட்டி .. லவ் பண்றது தப்புதானே ?"
" யாரம்மா சொன்னது ? " 
" டிவி லே நான் எத்தனை மூவி   பார்த்திருக்கிறேன் . அதிலெல்லாம் 
யாராவது  ஐ லவ் யூ சொல்லியிருந்தால் , அவங்களை அப்பா அடிப்பார். 
ரூம் உள்ளே வைச்சு பூட்டிடுவார்."
" அடடா .. நான் சினிமாவே பார்க்கிறதில்லே. ஹிந்தி மூவியில் மட்டுந் தான் அப்படி வருமா , இல்லே எல்லா மூவியிலுமா  ?" என்றேன் அவளை சமாதானம் செய்வதற்காக. சொல்லி வைத்ததுபோல் சிறிது நேரத்தில் பிரஷாந்த் வந்தான்.
" என்னடா, உடம்புக்கு எப்படி வருது ?"
" என்ன ஆன்ட்டி ? "
" நீ  நிம்மியிடம் என்னை சொன்னே ? "
" எப்ப  ஆன்ட்டி ? "
" எப்பவா ? படவா ராஸ்கல் .. முதுகுத் தோல் உறிஞ்சிடும்.,, நீ அவகிட்டே
 ' ஐ லவ் யு ' சொன்னியா ? "
" ஆமாம் " - குரலில் ஒரு குதூகலம் .
" என்னடா ஆமாம் ? ஏன் அப்படி சொன்னே ?"
" அவ எனக்கு சாக்லட்  குடுத்தா , அதான் சொன்னேன் "

இதற்குள் பூக்காரன் சைக்கிள்  மணியை அலற விடவே, கிண்ணத்தை 
எடுத்துக் கொண்டு கீழே ஓடினேன். பூ வாங்கிக் கொண்டு திரும்பும்போது, 
இருவரையும்காணோம்.சரி , சமாதானமாகிப் போய்விட்டார்கள் போலும்
என்று நினைத்துக் கொண்டேன். 

'ஒளியும் ஒலியும்' ஆரம்பிக்கும் முன்பாக, காலனி அருகிலுள்ள   கோவிலுக்கு போய்வந்து விடலாமென்று நினைத்து படியிறங்கிக்  கொண்டே, 'நிம்மி கோவிலுக்கு வர்றியா ?" என்றேன். 
அவ்வளவுதான் . ஓரு குழந்தைப்  பட்டாளமே என்னுடன் சேர்ந்து 
கோவிலுக்கு  வரத் தயாரானது. வழக்கமாக கலகலப்பாக   பேசும் 
நிம்மி, நான் கேட்ட கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் என்னுடன்
 சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள் .
" என்ன ? இன்னிக்கு  நிம்மிக்கு யார் மேலே கோபம் ? "
" அந்தப் பையன் 'திரும்பவும் ஐ லவ் யூ ' சொல்றான் ஆன்ட்டி.
இதென்னடா சனியன் வம்பாப் போச்சு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு " அவளோடு உனக்கு என்னடா தகராறு ? ஏன் அவளிடம் 'ஐ லவ் யூ ' ' சொல்றே ?
"அவ என்னைப் பார்க்குக்கு  விளையாட அழைச்சிட்டுப் போனா. அதான் ! "
எனக்கு தலையை சுற்றியது.
" நிம்மி, யூ  டொன்ட் வொர்ரி . ஹி இஸ் எ லிட்டில் பாய். ஹி டசின்ட்  நோ 
எனி திங் " என்றேன். அப்போதும் அவள் சமாதானம் ஆகவில்லை.
" இன்னொருவாட்டி அந்த பையன் அப்படி சொல்லட்டும் . பிறகு பாரேன் 
வேடிக்கையை .வீட்டில் சொல்லி முதுகில் டின் கட்டிடறேன். டேக் இட் ஈசி "

அவளுக்கு சமாதானம் சொன்னேனே தவிர என் மனம் சமாதானம் அடையவில்லை. கோவில் பூஜையில் எதிலும் மனம் ஈடு படவில்லை. 'ஒளியும்ஒலியும் 'அதைவிட அறுவையாக இருந்தது. மறுநாள் காலையில் தண்ணீர் எடுக்க குழாயடிக்கு சென்றபோது 
பிரஷாந்த்தின் அம்மாவும் என்னுடன் வந்தார்கள்.
"மாமி,உங்க பிரஷாந்தைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க. கீழ் போர்ஷனுக்கு  வந்திருக்கிற ஹிந்திக்கார பொண்ணுகிட்டே போய்  'ஐ லவ் யூ 'ன்னு சொல்லி இருக்கிறான் .பாவம் , அந்தக்  குழந்தை , பயந்து போய், நேற்று ஒரே அழுகை. கேட்டால் ' எந்த கேர்ல் கிட்டேயாவது யாராவது ' ஐ லவ் யு ' சொல்லி  இருந்தா அந்த கேர்லை அப்பா அடிப்பார்னு சொல்லுது. அந்த பயத்தில்தான் அது , இவன் சொன்னாதை வீட்டில்  சொல்லாமல் என்கிட்டே சொல்லியிருக்கு. இதெல்லாம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சா வீண் வம்புதானே?"
".வேறே ஒண்ணுமில்லே. எல்லாம் இந்த டிவி பண்ற வேலை. நாமெல்லாம் சின்ன வயசிலே காதலைக் கண்டோமா இல்லே கடற் கரையைத்தான் கண்டோமா.? இப்போ மூணு  வயசு முடியாத பசங்க கூட, டிவியில் கல்யாண சீன் ஒன்று வந்தால்  போதும்,  அடுத்த சீனில் 'இவங்க ரெண்டுபேரும் பூப்போட்ட கட்டிலில் உட்கார்ந்திருப்பாங்கன்னு சொல்லுதுங்க.  இதுங்களை என்ன பண்றதுன்னே தெரியலை" என்றாள் பிரஷாந்தின் அம்மா சலிப்பாக.
அதன் பிறகு பிரஷாந்த் மாடியிலிருந்து கீழே வரவில்லை.மற்ற குழந்தைகள் சேர்ந்து விளையாடும்போதும், அவன் அந்தக் கூட்டத்தில் இல்லை. வீட்டில் 'செமத்தி'யாக கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். இது முடிந்து சில நாளிலேயே நிம்மியும் கிளம்பி விட்டாள் டில்லிக்கு.
" வென் வில் யூ கம் ?"
" நெக்ஸ்ட் இயர் " என்று சொல்லும்போதே கண்ணில் நீர் தளும்பி நின்றது.
ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் அவளை அழவைப்பானேன்  என்று  நினைத்து  " பை .. ஸீ யூ " என்றேன் 
நிம்மி போனபிறகு எங்கும் ஒரு சூன்யம் பரவியிருப்பது போல் தோன்றியது.
நாம்தாம் அவளைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம். ட்ரைன் 
சென்டரலில் இருந்து கிளம்பும்போது, அவள்  மனம், டில்லியிலுள்ள  
அவள் ப்ரண்ட்சை தேடி ஓடி இருக்கும். நம்மைப் பற்றி ஏன் நினைக்கப் 
போகிறாள் . நல்ல குழந்தை .. வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி.. 
மன முதிர்ச்சி என்று நினைத்துக் கொண்டேன்.  திரும்பவும் படிப்பில்
கவனம் செலுத்த முயன்று தோற்றேன். என்ன மனுஷ ஜென்மமடா இது ? 
ஆரவாரத்திலும் படிக்க முடியலே  : மயான அமைதியிலும் படிக்க 
முடியலே  என்று அலுத்துக் கொண்டேன்.

பிரஷாந்த் வீட்டில் நடைபெற்ற உரையாடல் என் கவனத்தைக் கவர்ந்தது.
யாரோ விருந்தினர் வந்திருப்பார்கள் போலும். பிரஷாந்துடன் விளையாடி அவனை கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள் .
" சொல்லுடா பிரஷாந்த் .. உனக்கு யாரைப் பிடிக்கும் ?"
" ...."
" சொல்லு கண்ணா, யாரை ரொம்பப் பிடிக்கும் ? அம்மா அப்பாவையா , 
இல்லே கமல் ரஜனியையா ? "
தொடர்ந்து சிறிது நேரம் சிரிப்பு , " நீ சொன்னால்தான் விடுவேன் " என்று 
தொடர்ந்து வற்புறுத்துவதிலிருந்து , பிரஷாந்த் மௌனமாக இருக்கிறான்
என்பதைப் புரிந்து கொண்டேன். வந்திருந்தவர்களும் அவனை விடுவதாக
இல்லை.
" நீ நல்ல பையன்தானே. உனக்கு சாக்லட்  வேணுமா, வேண்டாமா ?"
திரும்பவும் மௌனம். இதற்குப் பதில் சொல்ல இந்தப் பையன் தயங்குவது  ஏன்  என்பது புரியவில்லை.
" சாக்லட்  வேணும். ஆனா, யாரைப் பிடிக்கும்னு சொல்ல மாட்டேன். ..
சொன்னா .... சொன்னா ... "
" சொன்னா என்னடா ?"
" அம்மா அடிப்பா, அப்பா ஊதுவத்தியாலே சூடு வைப்பார் "
" சும்மா ரீல் விடாதேடா கண்ணா .? யாரைப் பிடிக்கும்னு 
சொன்னா உன்னை அடிச்சு, உனக்கு சூடு  வைப்பாங்களா ?"
" ஆமாம் சித்தி .. நம்ம கீழ் போர்ஷன் ஹிந்தி மாமி வீட்டுக்கு நிம்மி வந்திருந்தா.அவளைப் பிடிக்கும்னு சொன்னதுக்கு அம்மாஅடிச்சா.  அப்பா ஊது வத்தியாலே சூடு வச்சார். " என்று சொல்லும் போதே குரல் கம்மியது.
" புளுகாதேடா. நீ அந்த பொண்ணுகிட்டே போய்  ' ஐ  லவ் யூ  ' சொன்னே. அந்தப் பொண்ணு அழுதுச்சு. ஐ  லவ் யூ சொல்ற வயசா இது ? அதான் வாங்கிக் கட்டி கிட்டே " என்று  இடைவெட்டியது பிரஷாந்தின்அம்மா தான்.
" ஆமா .. நிம்மி என்னை பார்க்குக்கு விளையாட அழைச்சிட்டுப் போனா. 
எனக்கு  சாக்லட் தந்தா. அவளை எனக்கு ரொம்ப பிடிச்சுது. அதான்  அவகிட்டே  நான்  ஐ  லவ் யூ சொன்னேன். "
" அப்படின்னா என்னடா அர்த்தம் ? "
" உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு அர்த்தம் ! ".

" அப்ப, அதைத்தான் நிம்மிகிட்டே சொன்னியா ? "
" ஆமாம் .. அவளுக்குத்தான் தமிழ் தெரியாதே. நீங்க எல்லாரும் அவ கிட்டே இங்கிலிஷில் பேசின மாதிரி  நானும் அவளிடம் இங்கிலிஷில் 
சொன்னேன்."

யாரோ சம்மட்டியால் என் தலையில் ஓங்கி அடிப்பதுபோல் இருந்தது.
அடக்கடவுளே, எல்லோரும் அரைகுறை இங்கிலிஷில் அந்தப் பெண்ணிடம் பேசுவது போல் இவனும் தனக்குத் தெரிந்த இங்கிலிஷில் அவளிடம் " உன்னை  எனக்குப் பிடிச்சிருக்கு"ன்னு சொல்லி  தன்னுடைய  நன்றியை , மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறானா?  அந்தக் குழந்தை அதை தப்பாக புரிந்து கொள்ள, நான்அதை பெரிது  படுத்தி விட்டேனா ? அட ராமச்சந்திரா ...,இந்த சின்ன விஷயம்கூட புரிந்து கொள்ள முடியாத நான் படித்து முடித்து எதை சாதித்து விடப் போகிறேன் என்ற வெறுப்பில் கையிலுள்ள புத்தகத்தை தூக்கி எறிந்தேன்.

டைரியை  மூடி , பத்திரமாக பீரோவில் வைத்துப் பூட்டினேன்.  நீ ஏன் படிப்பை " டிஸ் கன்டினியூ" பண்ணிட்டே என்று மற்றவர்கள் கேட்கும் போது நான் பதில் சொல்வது கிடையாது. ஒரு மே மாதத்தில் நடந்த சம்பவத்தை என் டைரியில்   நோட் பண்ணி வைத்து அதைப் படிப்பதன் மூலம் என் உணர்ச்சி களுக்கு ஒரு வடிகால் தேடிக் கொள்கிறேன் . 


   



No comments:

Post a Comment