Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 01, 2012

Stories told by GRAND-MA ( Story number - 20 )

                                            

                                         சிந்திச்சு செயல் பட வேண்டும் !


" பக்கத்திலே இருக்கிற காபி ஆறிபோறதுகூட தெரியாமே அப்படி என்ன யோசனையில் இருக்கிறே கண்ணு ? " என்று கேட்டாள் பாட்டி.
"பாட்டி நான் ஒரு குழப்பத்தில் இருக்கிறேன் " என்று பதில் வந்தது பிரபுவிடமிருந்து.
"பாட்டி, அது குழப்பங்கிறதில் அவன் ரொம்பவே தெளிவா இருக்கிறான் " என்றாள் மனோ..
"பாட்டி, வேண்டாம்!  சொல்லி வை" என்று பிரபு சொல்ல,
"பாட்டி, நீ அவனுக்கு என்ன கொடுத்தே? அவன் வேண்டாம் வேண்டாம்கிறான் " என்று கிண்டலடித்தாள் மனோ.
"இப்போ நான் குடுக்கிறேன் பாரு " என்று பிரபு எழுந்து வர
 "ஐயோ பாட்டி, காப்பாத்து  பாட்டி "என்று பாட்டியிடம் ஓடினாள் மனோ. 
"அவன் கிட்டே வம்பு பண்ண துணிச்சல் இருந்தது தானே . பிறகு ஏன்டி  ஓடி ஒழியறே ?  வாங்கி கட்டிக்கோ " என்று பாட்டி சொன்னாலுங்கூட, "போகுதுடா, விடுடா. உனக்கு என்ன குழப்பம்.?" என்றாள்
"எல்லாம் இந்த தமிழில்தான் பாட்டி !" 
"ஓகோ ! மற்ற லாங்குவேஜில் எல்லாம் துரை தெளிவா இருக்கிறாராமா? "
"பாட்டி,  திரும்பவும் சொல்றேன் வேண்டாம் "
"சரி விடு கண்ணு . என்ன பிரச்னை சொல்லு " என்றாள் பாட்டி.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்ற தமிழ், தனி மரம் தோப்பாகாதுன்னு சொல்லுது. ஐயம் இட்டு உண் என்று சொல்லிகிட்டே, ஏற்பது இகழ்ச்சினு சொன்னா எதை பாட்டி எடுத்துக்கிறது ? முடிஞ்ச வழியிலெல்லாம் தர்மம்  செய்யுன்னு சொல்லிட்டு, தர்மம் வாங்கிறது கேவலம்னு சொன்னா என்ன அர்த்தம் பாட்டி ? " என்று கேட்டான் பிரபு,
"நீ இப்போ என்ன சொல்றே, ஒன்னுக்கு    ஒன்னு மாறுபட்டு, முரண்பாடா இருக்குதேன்னு  தானே? எல்லா மனிதர்களும், உருவத்திலாகட்டும், பழக்கவழக்கதிலாகட்டும்  ஒரே மாதிரி இருப்பதில்லை.  எல்லாருமே மாறுபட்டு முரண்பாடுகளோடுதான் இருக்கிறோம். நியாயங்களும் தர்மங்களும் கூட சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கபடி மாறிகிட்டே இருக்கும். ஒரு இடத்தில் "சரி"ன்னு ஏற்று கொள்ள படுகிற விஷயம்,  வேறொரு சூழ்நிலையில் தப்புன்னு விவாதிக்கப்படும். இந்த உலகமே மாறுபாடு முரண்பாடுகளால் ஆனதுதானே !" என்று பாட்டி சொன்னாள்.
"போ பாட்டி, நீ சொல்லறது எதுவுமே புரியலே " என்று இருவரும் ஒன்று சேர்ந்த குரலில் சொன்னார்கள்.
"ஒரு கதை சொல்றேன். புரியுதா பாருங்க " என்று பாட்டி சொன்னதுமே "கதையா ? சொல்லு சொல்லு " என்று ஆவலுடன் ஓடி வந்து பாட்டி அருகில் உட்கார்ந்து கொண்டார்கள்.
"என்ன ? ஒரு ஊரில் ஒரு ராஜா"ன்னு தானே ஆரம்பிக்கபோறே? " என்று கிண்டலாக கேட்டான் பிரபு.
"அதேதான் ... அவர் ஒரு நாள் வேட்டைக்கு கிளம்பி காட்டுக்கு போனார் " என்று பாட்டி ஆரம்பிக்க, "அவர்ன்னா யார் பாட்டி ?" என்றாள் மனோ,
"அதான், பிரபு சொன்னானே, ஒரு ஊரில் ஒரு ராஜா, அவர்தான் " என்று பாட்டி சொல்ல, "ஐயோ, வெறுப்பேத்தாமே சப்ஜெக்டுக்கு வா பாட்டி " என்றான் பிரபு,.
வேட்டைக்கு வந்தவர் கண்ணில் ஒரு மிருகமும் தட்டுப்படலே. உடனே ஒரு மரத்து மேலே ஏறி ஏதாவது மிருகங்கள் வருதான்னு பார்க்க ஆரம்பிச்சார். அப்போ, ஒரு பொண்ணு, நிறை மாத கர்ப்பிணி, "என்று பாட்டி சொல்ல,
"அப்படின்னா என்ன பாட்டி?" என்று கேட்டாள் மனோ.
"குழந்தை உண்டாகியிருக்கிற பெண்., கூடிய சீக்கிரமே குழந்தை பிறந்துவிடும் என்ற நிலைமையில் இருக்கிற பெண், அவள் தலையில் பெரியதொரு விறகு கட்டு சுமையை சுமந்தபடி வருவதை ராஜா பார்த்தார்."
"மிருகங்கள் இருக்கிற இடத்துக்கு ஒரு பொண்ணு எப்படி பாட்டி தனியா போனாள்?" என்று பிரபு கேட்க " குட் கொஸ்டின் !" என்றாள் மனோ.
" மலைவாசி, காட்டுவாசிகளுக்கெல்லாம் எங்கெங்கு மிருக நடமாட்டம் இருக்கும்கிறது நல்லாவே தெரியும். அவங்கெல்லாம் அந்த சூழ்நிலையில் பிறந்து வளர்கிறவங்க. அதனாலே மிருகங்ககிட்டேயிருந்து எப்படி தப்பிக்கிறது என்கிறதெல்லாம் அவங்களுக்கு அத்துபடி. வேட்டையாடறது, மலையில் விறகு வெட்டி வந்து நாட்டுக்குள் விற்பது இதெல்லாம்தான் அவங்க தொழில். அந்த பொண்ணு தலையில் விறகு சுமை, வயிற்றில் குழந்தை சுமை, கையில் ஒரு அரிவாள், விறகு வெட்டறதுக்காக எடுத்துட்டு போனது - இதையெல்லாம் ராஜா பார்த்தார். . நடந்து வந்துகொண்டிருந்த பெண் சிறிது தயங்கி நின்னா. அவளோட கால் தடுமாறுச்சு. மெதுவாக விறகு கட்டை கீழே வச்சுட்டு ஒரு புதர் மறைவுக்கு போனாள். கொஞ்ச நேரத்தில் கையில் குழந்தையுடன் வெளியில் வந்தாள்" என்று பாட்டி சொல்லும்போதே, "அவளுக்கு பேபி வந்துட்டுதா பாட்டி?" என்று மனோ கேட்க, "ஆமாம்" என்றாள் பாட்டி.
கையில் குழந்தையோட வெளியில் வந்த அந்த பொண்ணு, விறகு கட்டின் பக்கத்தில் கிடந்த அரிவாளை எடுத்து, குழந்தையின் வயித்திலிருந்த தொப்புள் கொடியை அறுத்து எறிந்தாள். பக்கத்திலிருந்த ஒரு குட்டை நீரில் குழந்தையை குளிப்பாட்டினாள். அவளையும் சுத்தப்படுத்திகிட்டா. திரும்பவும் விறகு கட்டை தூக்கி தலையில் வச்சுக்கிட்டு, குழந்தையை ஒரு கையிலும், அரிவாளை மறு கையிலும் எடுத்துகிட்டு நடக்க ஆரம்பிச்சுட்டா. இதை எல்லாம் பார்த்த ராஜா, 
" ஆஹா, குழந்தை பெறுவது இவ்வளவு சுலபமான விசயந்தானா? அங்கே அரண்மனையில் ராணி, குழந்தை உண்டாகி இருக்கிறேன்னு சொல்லி என்னென்ன ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணிட்டு இருக்கிறா? அவளை சுத்தி எத்தனை பெண்கள் எடுபிடி வேலைக்கு? குனிய மாட்டேங்கிறா. நிமிர மாட்டேங்கிறா. என்னென்ன ஆர்ப்பாட்டமெல்லாம் பண்றா. இருக்கட்டும். இதை சரி பண்ணிடலாம்" என்று மனசுக்குள் நினைச்சுக்கிட்டு, வேட்டையை முடித்து விட்டு அரண்மனைக்கு வந்தவர், முதல் வேலையா, மந்திரியை கூப்பிட்டு  "குழந்தை உண்டாகியிருக்கிறதா சொல்லி ராணி இல்லாத ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. அது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான காரியமில்லை. என்  ரெண்டு கண்ணாலேயே நான் பார்த்துட்டேன். இனிமே ராணிக்குன்னு எந்த தனி கவனிப்பும் வேண்டாம் " என்று சொன்னார்.
" அது அப்படி இல்லை அரசே! நம்ம ..." என்று மந்திரி எதோ சொல்ல ஆரம்பிக்க,
" குறுக்கே எதுவும் பேச வேண்டாம்."  என்று சொல்லி விட்டு , காட்டில் பார்த்த காட்சியை சொன்னார். திரும்பவும் மந்திரி எதோ சொல்ல வாயைத்திறக்க ,
  " நான் சொன்னதை செய்யுங்க "ன்னு உத்தரவு போட்டுட்டார்.
ராஜா பேச்சை யார் மீற முடியும்? ராணிக்கென்று எந்த தனி கவனிப்பும் இல்லாமல் போயிட்டது. ஒரு வாரம் ஆனது. ராஜா அரண்மனை அருகிலிருந்த நந்தவனத்துக்கு வந்தார். செடி கொடி எல்லாம் வாடிப்போய் கிடந்தது. " ஆஹா, நாம ஒரு வாரம் இந்த பக்கம் வரலைங்கிறதாலே எல்லாருக்கும் குளிர் விட்டு போச்சு போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு, தோட்டக்காரனை கூப்பிட்டு " செடி கொடி எல்லாம் வாடி கிடக்கே?ன்னு கேட்டார். "தண்ணி இல்லாமே வாடி கிடக்கு" என்றான் தோட்டக்காரன். "ஏன் ஊத்தலே?ன்னு ராஜா கோபமா கேட்க, "தண்ணி ஊத்த வேண்டாம்னு மந்திரி சொன்னார்"ன்னு தோட்டக்காரன் பதில் சொன்னான். இந்த மந்திரிக்கு ஏதாவது பைத்தியம் கித்தியம் பிடிச்சு போச்சா என்ன என்று மனசுக்குள் நினைச்சுகிட்ட ராஜா, "ஓடிப்போய் மந்திரியை அழைச்சிட்டு வா"ன்னு சொன்னார். அடுத்த நிமிசமே மந்திரி அங்கே வந்து சேர்ந்தார். "செடிகொடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாமென்று சொன்னதன் காரணம்?" என்று ராஜா கோபமாக கேட்க,
"அரசே, காடு மலைகளிலுள்ள மரம் செடி கொடிகளுக்கெல்லாம் யாராவது தண்ணீர் கொண்டு போய் ஊற்றிக்கொண்டா  இருக்கிறோம். அதுவாக வளர்கிறது. வாழ்கிறதுதானே. அப்படி இருக்க நாட்டுக்குள் இருக்கிற செடிகொடிகளுக்கு நாம் ஏன் தண்ணீர் ஊற்ற வேண்டும்?"ன்னு கேட்டார்.
" என்ன இது முட்டாள் தனம் ?. அதது இருக்கிற சூழ்நிலைக்கு, இயற்கை அமைப்புக்கு தக்கபடி வளர்ந்து, வாழும். நீங்க நாட்டையும் காட்டையும் ஒப்பிடலாமா?"ன்னு ராஜா கேட்க,
"அதைதான் நானும் சொல்ல வர்றேன். ஒரு மலைவாசி பெண்.  அவ பிறந்து வளர்ந்து வாழ்கிற சூழ்நிலைக்கு ஏற்ப அவ உடல் தைரியம், மனோ தைரியம் இருக்கும். காலில் செருப்பில்லாமல் பல மைல் தூரம் நடக்க முடியும். மலையேற முடியும்.எவ்வளவு சுமையையும் தூக்க முடியும் . ஆனால் எங்கள் ராணியாலே, காலணி இல்லாமல் நந்தவன தோட்டதில்கூட நடக்க முடியாது. அவர்கள் வளர்ந்த சூழ்நிலை, மனோபலம், காட்டுவாசி பெண்ணுக்கு நிகராக இருக்க முடியாது.  தர்மம் நியாயம் இவை எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது நடைமுறையில் உள்ள ஒன்றுதானே?"ன்னு மந்திரி கேட்க, மந்திரி எதற்காக இப்படியொரு நாடகம் நடத்தியிருக்கிறார்ன்னு  புரிஞ்சுகிட்ட ராஜா, மந்திரியிடம், "ராணிக்கு தேவையான எல்லா வசதியையும் செய்து கொடுக்கவும்" ன்னு சொன்னார்ன்னு கதையை முடித்த பாட்டி, "என்ன பிரபு இப்போ உன்னோட குழப்பம் போயிட்டா?என்று கேட்க,
"என்னோட குழப்பத்துக்கும் இந்த கதைக்கும்  என்ன சம்பந்தம்னு புரியலே"
என்று பிரபு சொல்ல,
"போடா புண்ணாக்கு. உனக்கு புரிஞ்சா என்ன, புரியாட்டா என்ன. எப்படியோ இன்னிக்கு நமக்கு ஒரு கதை கிடைச்சுதுதானே?" என்று மனோ கேட்டாள் .
"அதுவும் சரிதான்டி" என்றான் பிரபு.




No comments:

Post a Comment