Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 14, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 40

( நான் எழுதிய இச்சிறுகதை 27.08.1995 தினமணி கதிர் நகைச்சுவை சிறப்பிதழில் வெளியாகியுள்ளது  - )
 
          மெட்ராசை சுத்திப் பார்க்கப் போறேன் !

" இந்தா புள்ளே ! நல்லா காதுலே வாங்கிக்கோங்க . மத்தியானத்துக்கு
மின்னாலே நடவு வேலை எல்லாம் முடிஞ்சிடணும். சும்மா வாயாடிக் கிட்டு இருந்துட்டு பொறகு ' அதெ முடிக்கலே, இதெ முடிக்கலேன்னு  கதை அளந்து கிட்டு நின்னீகன்னா,நாளெக்கி ஒருத்தரையும் வயல்லே எறங்க வுட மாட்டேன்.. ஆமா .. சொல்லிட்டேன் "
" அட ஏன் கணக்கையா கூப்பாடு போடுதீக.? வாயாடுனாலும் , கையும் காலும் அதது வேலையை செஞ்சுகிட்டுதானே இருக்குது. உம்ம ஜோலியைப்  பார்த்து கிட்டு போவீகளா, வந்துட்டீக பெரிசா " என்றாள் காந்தி.
" ஏம் புள்ளே .. நீ இங்கிட்டுதான் இருக்கியா ? அப்ப நான் போயிடுதேன்.
உன்கிட்டே வாய் குடுத்து மீள முடியுமா ? " என்று நழுவப் பார்த்தார் கணக்குப்பிள்ளை.
" அவக போயிட்டாக. நீ சொல்லுளா , யாருல்லாம் போறாகளாம் ? " என்று பேச்சை விட்ட இடத்திலிருந்து, எடுத்துக் கொடுத்தாள் சுப்பு.
" நம்ம நாட்டாமை, அவக வீட்டம்மா, சின்னவக "
" யாரு, அந்த சின்னப் பயலா ? "
" ஆங் .. வாயைப் பாரு , அவக வீட்டுக்குத் தான் அவக சின்னப் பய. நமக்கெல்லாம் படியளக்கிற எசமான். நெனப்பிருக்கட்டும்."
" சரி தொணைக்கி யாரு ? "
" தொணைக்கா ? நீயும் நானும் போகலாமா ? "
" இந்தப் பாரு, கேலிதான் வேணாங்கிறது . நம்ம நாட்டாமை வெள்ளையா
இருக்கிறது எல்லாமே பாலுன்னு நெனைக்கிறவக. அவக எப்படி தொணை இல்லாமே அம்புட்டு தொலைவு தனியாப் போவாகன்னு கேக்கேன்" என்று விளக்கம் கொடுத்தாள் மாரியம்மை.
" இந்தாக்கா .. ஒங்க சண்டை எல்லாத்தையும் பொறவாட்டி வச்சுக்கங்க .
இப்ப அவ முழுசா சங்கதியை சொல்லட்டும் " என்று சமாதானக் கொடி பிடித்தாள் வள்ளி
" ஆமா, எப்ப போறாங்கன்னு சொன்னே ? "
" அடுத்த வார ரயிலுக்கு டிக்கெட்டு எல்லாம் எடுத்தாச்சாம்."
" எல்லாம் நம்ம மேட்டுப்பட்டி மிராசு ஏற்பாடுதான் ! "
" ஏன்க்கா .. நமக்கு வெவரம் தெரிஞ்சு இத்தினி வருசமா நம்ம ஐயா , இந்த
ஊர் எல்லையைத் தாண்டுனதில்லே . இப்ப என்ன திடீர்ன்னு ?"
" எல்லாம் அந்த பொடுசு பண்ணுத வேலைதான். நம்ம ஊரு டூரிங் டாக்கீசிலே படம் பார்த்துட்டு வந்ததுலேருந்து, மெட்ராசை சுத்திப் பார்க்கணும். ரஜனியைப் பார்க்கணும்னு படுத்தினானாம். அதான் எல்லாரும் மெட்ராசை சுத்திப் பார்த்துட்டு வரலாம்னு கெளம்பிப்   போறாக ."
"ஏன்காந்தி, உனக்கு தெரியாமே இருக்காதே... நீங்கள்லாம் தலைமொறை தலைமொறையா இங்கிட்டு வேலைபாக்கீகளே. நம்ம ஐயா ஏன் எந்த ஊருக்கும்போக மாட்டேன்காக ? இவ்ளோ பவுசு இருந்தும், ஒரு ரேடியோ, டிவிப் பெட்டி கூட அவக வூட்டுலே இல்லியே, அது ஏம்ளா ? "
" அது மட்டுமா ? அவக வூட்டுலே இது வரை யாரும் பள்ளிக்கூடம்னு படிக்கப்போனதில்லே . அது ஏம்ளா ? "
" அதுவா ? அது பெரிய கதை ! "
" ஏய் .. ஏய் .. என்னன்னு சொல்லுளா ! "
" ஆமாம், கதைன்னு சொன்னா போதுமே , உடனே வாயைப் பொளந்துகிட்டுவந்துருவீகளே. என் பங்கையும் சேர்த்து நீ நடுதியா ? நான் ஒக்காந்து கதைசொல்லுதேன் "
"அட வேலையைப் பார்த்துகிட்டே விசயத்தையும் சொல்லேன். என்னவோ ரொம்பவும் கிராக்கி பண்ணுதியே ! "  
"அதுவா? நம்ம நாட்டாமைக்குத் தாத்தாவோட தங்கச்சி ஒருத்தி இருந்தாகளாம்.. அந்தக் காலத்திலேயே மூணாங் கிளாஸ் வரை படிக்க வச்சாகளாம் . ரொம்பக் கெட்டிக்காரியா இருந்தாகளாம் . சமஞ்சதுக்குப் பொறகு பண்ணைலே வேலை பார்த்துட்டுருந்த ஒருத்தனோடு ராவோடு ராவா ஊரை விட்டு ரயிலேறிப் போயிட்டாகளாம் . அதுக்குப் பொறகு பெரிய நாட்டாமை, ' ராவோடு ராவா என் மானம் ரயிலேறிப் போயிட்டுது . இனிமே நான் ரயில்லே ஏற மாட்டேன்னுட்டு இருந்தாகளாம் . அதுக்குப் பொறகு அவக குடும்பத்திலே எந்த புள்ளையையும் படிக்க வைக்க மாட்டேன்னுட்டு வீம்பா இருந்தாகளாம் . அதன் இன்னிக்கி வரை அவக யாரும் படிக்கலே . வரவு செலவு எல்லாமே கணக்கன் சொல்றதுதான் கணக்கு. அவன் பாதியை கணக்குலே காட்டுவான்; மீதியைத் தன் வாயில் போடுதான் . நமக்கெல்லாம் தெரியத்தான் செய்யுது . யாரு போய் அவக கிட்டே சொல்ல முடியும் ?"
 " என்ன ? எத்தனை கட்டு முடிச்சிக ? " என்று கணக்குப் பிள்ளையின் குரல் கேட்டதுமே , வயலில் நின்று கொண்டிருந்த பெண்களின் வம்பு நின்றது !
 " ஏன் பெரிசு! நம்ம ஐயா மெட்ராஸ் போறாகளாமே ? "
 " ஆமாம் .. எல்லா ஏற்பாடும் நான்தானே ! "
 " அட, நீங்களுந்தான் ஒரு நடை போயாறது "
 " ஆங் .. அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேண்டாமா ? நான் போய்ட்டா இங்கே உங்களை எல்லாம் கட்டி மேய்க்கிறது யார் ? "
"அதுக்கில்லே, கணக்கையா .. பெரியையா, வெள்ளையா தெரியற எல்லாம் பாலுன்னு நெனைக்கிறவக. மெட்ராசு தான் களவாணிப் பயலுக ஊராச்சே . நம்ம ஊருலே, ஆளுங்க தூங்கும்போதுதான் கள்ளன் வருவான். அங்கே, ஆளுங்க முழிச்சிட்டு இருக்கும்போதே முழியைத் தோண்டி கைலே குடுத்துட்டுப் போயிடுவானுகளே "
" அதான் நான் ஐயாகிட்டே படிச்சுப் படிச்சு சொல்லியிருக்கேன்லா !
வண்டியிலயோ , வெளியிலயோ யாருட்டயும் பேச்சுக் குடுக்காதீக.
மெட்ராசுக்கு வண்டி ஏத்தி உட்டுடுதேன் . மறு நா விடியக்காலைலே
கொண்டு போய் வுட்டுருவான் . மேட்டுப்பட்டி மிராசய்யா குடுத்த
விலாசம் கைலேயே இருக்கட்டும். அவக சம்பந்தி வீடு மெட்ராசை விட்டு
கொஞ்சம் தொலைவுதான். பஸ் பிடிச்சு ஏறிக்கீறிப் போக ஒங்களுக்குத்
தெரியாது. ரயிலை விட்டு எறங்கினதுமே வெளியே வந்து ஒரு வாடகை
டாக்சியைப் பிடியுங்க. " என்று சொல்லிக் கொண்டு வந்த கணக்குப்
பிள்ளையை காந்தியின் குரல் இடைவெட்டியது.
" ஏன் கணக்கையா, நம்ம ரஜனி பாட்சாவுலே ஓட்டுவாகளே , அந்த மாதிரி ஆட்டோ வண்டிதான் அங்கிட்டு நிறைய இருக்குமே, அதுலே ஏறிப் போறதுதானே ?
" அட கூரு கேட்ட களுதே , அதுக்குள்ளே ஏறி உக்கார அம்மாவாலேதான் 
முடியாதே.அப்படியே நுழைஞ்சி உள்ளே போய்ட்டாக்கூட அவகளுக்கு
மட்டுந்தான் இடம் காணும் . ஐயா எங்க உக்காருவாக ? அதுவுமில்லாமே
டாக்சியிலே போய் இறங்கினா , ஒரு அந்தஸ்தா இருக்குமில்லா ?"
" அதும் சரிதான் "
" ஒரு டாக்சியைப் புடிச்சு மேட்டுப் பட்டி மிராசு குடுத்த விலாசத்தை அவனுட்ட காமிங்க. அவங் கொண்டுபோய் விட்டுடுவான். நம்மளப் பாத்ததுமே அசலூர்னு தெரிஞ்சிகிட்டு உசாராகிடுவாணுக. பேச்சுக் குடுத்து நம்மள ஆழம் பார்ப்பாணுக. அதனாலே யாருட்டயும் பேச்சு வச்சுக்க வேண்டாம். ' இந்த விலாசத்திலே எங்களை இறக்கி விட்டுட்டு துட்டை வாங்கிக்கோன்னு கண்டிசனா சொல்லிருங்கன்னு நான் படிச்சு படிச்சு சொல்லியிருக்கேன்லே ? .. விறுவிறுன்னு ஜோலியைப் பாருங்க. ஐயா வாறாக ! "
" வரட்டும். நாங்க அவக கிட்டேயே கேக்கோம் "
" நீ கேப்பே. நீ எப்படி ஆளு ? "
" என்னங்கய்யா, பட்டணம் போறீயலாமே நீங்க ? ஊரெல்லாம் ஒரே பேச்சாருக்கு ? "
" ஆமாம்ளா ., நம்ம சின்னப்பய படுத்துத பாடு தாங்க முடியலே. மெட்ராசு போவணும் . எல்லா இடமும் சுத்திப் பாக்கணும்ன்னு என்னை புடுங்குத புடுங்கு தாங்க முடியலே. அதான் அவனுக்கும் காமிச்ச மாதிரி இருக்கும். நாமளும் பாத்தாப்புலே இருக்கும்னு பொறப்பட்டுட்டோம் . "
" பத்திரமா போயிட்டு வாங்கையா. அங்கே நிறைய கடைங்க ஆளுங்க எல்லாம் இருப்பாகளாமே ! "
" ஐயா , கோபுரம் மாதிரி ஒரு கட்டடம் இருக்குமே, சினிமாக்காரக கூட அடிக்கடி ஓடிப்பிடிச்சு வெளையாடுவாகளே , அதெல்லாம் பார்த்துட்டு வந்துருங்க. அது பேரு என்ன எழவோ சொல்லுவாக.. மறந்துட்டுது " என்றாள் சுப்பு.
" சரி, விடு கழுதைய ! அப்படியே ரஜனி வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு வந்துருங்க . நீங்க போற சமயம் அவக வூட்டுலே இல்லாட்டாக்கூட அவக வருத வரை இருந்து பார்த்துருங்க. நம்ம ஜனங்கள்லாம் அவக மே லே எம்புட்டுப் பிரியமா இருக்கோம்கிறத சொல்லுங்க " என்றாள் காந்தி .
" ஐயா , ரஜனி வூட்டுக்குப் போயிட்டு கமலைப் பார்க்காமே வந்தா அது அம்புட்டு நல்லா இருக்காது. ஒரு நடை போய் அவகளையும் பார்த்துட்டு வந்துருங்கையா."
" நம்ம சின்னையா கூட இதையேதான் சொல்லிட்டு திரியுதான். எனக்கு அவக ரெண்டு பேரையுமே தெரியாது. இந்தப் பய ஆசைபடுதாம்லே ... கொண்டு போய் காமிச்சிற வேண்டியதுதான்." என்றார் நாட்டாமை .
" அப்படியே தங்கக் கடற்கரைக்குப் போயிட்டு வாங்க. அங்க சாப்பாடு சும்மா தருவாகளாம். டிவியிலே சொல்லுவான். நீங்கதான் எதையுமே பாக்குறது கிடையாதே. ஊருக்குப் போயிட்டு வந்த கையோட ஒரு டிவி வாங்கிடனும். ஆமாம் , நான் இப்பவே சொல்லிப்புட்டேன். உடுத்துற துணிக்கு அடுத்த துணி, மாத்துத் துணி இல்லாதவன் கூட கடனை கிடனை வாங்கி 'அதுஇது'ன்னு வாங்கிடுதான். நாம வூட்டுலே இல்லாட்டா எப்படிய்யா ?"
" ம் .. ம் .. வாங்கியாறலாம் பொண்ணுகளா . ஒங்களுக்கெல்லாம் ஏதாவது வாங்கியாறனுமா ? "
" நீங்க ஒண்ணுய்யா. மூணு தலைமுறைக்குப் பொறகு மொத தடவையா ரயிலேறப் போறீக ! அதை விடவா எங்களுக்குப் பெரிய சந்தோசம் இருக்கு ? நீங்கள்லாம் நல்ல படியா போயிட்டு வாங்கையா. ஐயா , நீங்க திருநெல்வேலிலே போய்த்தானே ரயில் ஏறணும் . நாங்களும் ரயிலடி வரை வரட்டுமா ?"
" அட .. கோட்டிக்கார கழுதை, நான் என்ன சீமைக்கா போறேன். இந்தா இருக்கிற மெட்ராசுக்கு தானே போறேன் "
" ஐயா, அங்கிட்டு பாருங்க , மேட்டுப்பட்டி மிராசு வாறாக ."
வந்தவரை எதிர் கொண்டழைத்த நாட்டாமை நல்லசிவம், " வாங்க அண்ணாச்சி, ஏது இம்புட்டு தூரம்? ஒரு வார்த்தை சொல்லி இருந்தீகன்னா நானே வருவேனுல்லே ? "
" ஒண்ணுமில்லே , நான் சின்ன மவளைப் பார்க்க குத்தாலம் வரை போறேன். நீங்க பத்திரமா போய்ட்டு வாங்கன்னு சொல்லத்தான் வந்தேன். சம்பந்தி வீட்டு விலாசம் கைலே இருக்கில்லே ? அவக வீட்டில் எல்லாத்தையும் ரொம்பக் கேட்டதா சொல்லுங்க . நீங்க ஊருக்குக் கிளம்பற அன்னிக்குத்தான் நான் மவ வீட்டிலிருந்து வருவேன். இதுவரை திருநெல்வேலி ஊரைக்கூட பார்க்காத மனுஷன்,.. அம்புட்டுத் தூரம் போறீக . நான் சொன்னத எல்லாம் ஞாபகம் வச்சுக்கங்க . பத்திரமாப் போயிட்டு வாங்க!" என்று சொல்லி மேட்டுப்பட்டி மிராசு விடை பெற்றார்.
நாட்டாமை சென்னைக்குப் போகும் நாளும் வந்தது; என்ன சொல்லியும் கேட்காமல், பண்ணையாட்கள் ரயிலடிவரை வந்து அவரை வழி அனுப்பி வைத்தார்கள் .
" யப்போவ் ! நம்ம வூட்டுலே இருக்கிற மாதிரியே , ரயிலுக்கு உள்ளே கூட 
கட்டில் , பெஞ்சு எல்லாம் போட்டுருக்காக. ஹையா , ஜாலி, யப்போவ் மொதல்லே ரஜனியப் பாத்துட்டு பொறகு எங்கே வேணும்ன்னாலும் போலாம் . ஆமாம் , சொல்லிப்புட்டேன்.
" பாக்கலாம்லே . பாக்கணும்னு கிளம்பி வந்துட்டு பாக்காமே நாம போயிருவோமா ? ஒண்ணொண்ணா பாக்கலாம். "
சக பிரயாணிகள் சாமான்களை சரிபார்த்து அடுக்கிவிட்டு சகஜ நிலைக்கு
வந்ததும் ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டார்கள் . பிரயாணி ஒருவர், " ஐயா, எதுவரை போறீக ? " என்றார். மேட்டுப்பட்டி மிராசும், கணக்கும் சொன்னது நினைவுக்கு வந்தது. எனவே அவர் கேட்டதே காதில் விழாத மாதிரி எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தார்.
மற்ற பயணிகள் சாப்பிடும்போது, சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறந்தார். யாருடைய பேச்சிலும் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
மற்றவர்கள் தூங்கும்போதும் கூட, இவர்கள் யாரும் தூங்கவில்லை.
' சின்னப்பய ' கனவிலேயே, கடற்கரை மணலில் கால் பதிய குதித்தோடிக்
கொண்டிருந்தான். கனவுகள் கலைந்தபோது பொழுது விடிந்து வெகு நேரம்ஆகியிருந்தது. செங்கல்பட்டில் ரயில் நின்றிருந்தது. மற்றவர்கள் காபியோ டீயோ குடித்தபோது கூட, பல்லைத் தேய்க்காமல்காப்பி குடிக்க  
இவர்களுக்கு விருப்பமில்லை.
ரயில் மறுபடி பயணத்தை தொடர்ந்தது. "யப்போவ், அங்கே ரோடெல்லாம் பெரிசா இருக்குமாம். ரொம்ப ஜாக்கிரதையா தாண்டணும்.
இல்லாட்டி காரு பஸ்சு வந்து நம்மள நச்சுரும். ஒரு எடத்துலே மிருகங்களைக் கூண்டுலே கட்டிப் போடாமே அப்பிடி அப்பிடியே அவுத்து
விட்டுருப்பாகளாம். அதையும் பார்க்கலாம்ப்பா."
" பாத்துருவோம். எல்லாத்தையும் பாக்கனும்னுட்டுதானே நம்ம குல வழக்கத்தை மீறி வண்டி ஏறிட்டோம். பாக்காமே வுட்டுருவோமா ?" என்றவர் கோழித் தூக்கத்தில் ஆழ்ந்தார்
" யப்போவ், மெட்ராசு வந்தாச்சு. இங்கே பாரு. எல்லாரும் இறங்கிறதுக்கு வசதியா எல்லாத்தியும் எடுத்து வைக்காக."
எழும்பூரில் இறங்கியபோது, 1969 ல் நிலவில் இறங்கி ஆம்ஸ்ட்ராங் செய்த சாதனையை விட அதிகம் எதையோ சாதித்து விட்டதுபோல் பெருமிதம் மொண்டார் நாட்டாமை.
" யப்போவ் , காப்பி "
" இருலேய் . பட்டணத்து மண்ணை மிதிச்சதுமே பழக்கமெல்லாம் மாறுதா ? அங்கிட்டுப் பாரு. ஒரு கொழாய் இருறுக்கு. ஒவ்வொருத்தரா பல் தேச்சுட்டு போய் சாப்பிடலாம் " என்றார். இதற்குள் மத்தியானம் ஒரு மணி ஆகியிருந்தது. அன்று ரயில் மூன்று மணி நேரம் லேட் !
" ஸார் .. டாக்ஸி வேணுமா ? "
" வேனுங்க.. இநத விலாசத்தில் கொண்டு போய் வுடுங்க."
படித்துப் பார்த்த டிரைவர் , " ஸார் .. நீங்க எங்கிருந்து வாறீங்க ? நீங்க ட்ரெயினில் போகலாமே. சாயங்காலம் இங்கிருந்து த்ரூ ட்ரைன் இருக்கு . டாக்சியில் போனால் பணம் அதிகம் ஆகுமே ? " என்றார்
" அந்தக் கவலை எல்லாம் உனக்கு ஏன் ? இந்த விலாசத்தில் கொண்டு வுட்டுட்டு, துட்டை எண்ணி வாங்கிக்கோயேன். உனக்கு சம்மதம்னா வா. இல்லே நான் வேறே வண்டி பார்த்துகிடுதேன் "
டிரைவர்க்கு குஷி கிளம்பி விட்டது. " ஏறுங்க. ஏறிக் குந்துங்க ! " என்று உற்சாகப் படுத்தியவன், அவர் கொண்டு வந்திருந்த மூட்டை முடிச்சுகளை வண்டியில் ஏற்றினான்.
" ஸாருக்கு எந்த ஊர் ?"
" இந்தாப்பா , நான் ஒன்னும் வெவரம் இல்லாத ஆளு இல்லே. நீ என்னை ஆழம் பார்க்காதே. உன் ஜோலி எதுவோ அதை மட்டும் பாரு, நீ ஒழுங்கா "
என்றார் நாட்டாமை. அதன் பிறகு டிரைவர் வாயைத் திறக்க வில்லை.
வண்டியை ஓட்டினான் .
" ஸார் , இது திருச்சி. டிபன் காபி பண்ணிக்கிறீங்களா ?"
" யோவ், சுத்த குசும்பு பிடிச்சவனா இருப்பே போலிருக்கு. நாங்க ஏன் அதைப் பண்ணனும். அததுக்கு வீட்டில் ஆள் இருக்கு " என்றார் நல்லசிவம் அதன் பிறகு டிரைவர் எதுவேமே கேட்கவில்லை; சில இடங்களில் வண்டியை நிறுத்தி தான் மட்டும் சாப்பிட்டான். டீ குடித்தான். வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டான். 'கணக்கு சொன்ன மாதிரி, மேட்டுப்பட்டு மிராசோட சம்பந்தி வீடு கொஞ்சம் தொலைவுலதான் இருக்கு ' என்று மனைவியிடம் சொன்னவர், தூக்கத்தில் ஆழ்ந்தார். சென்னைக்குப் போகவேண்டும் என்று தீர்மானித்ததிலிருந்து இன்றுவரை சரியான சாப்பாடு கிடையாது. தூக்கம் கிடையாது. ரயிலில் வந்த அசதியாலும், டாக்சியின் மிதமான வேகம் தாலாட்டுவது போல் இருந்த தாலும் மூவரும் தன்னை மறந்து தூங்கினர். நடுநிசியைத் தாண்டியிருந்தது . வண்டி நின்றதுகூடத் தெரியாமல் மூவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். தனது வீட்டின் முன் டாக்சி வந்து நிற்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்துகொண்டு , வெளியே வந்த மேட்டுப்பட்டி மிராசு ஒரு நிமிடம் அதிர்ந்து போனார். " ஸார் .. நீங்க சொன்ன விலாசம் வந்தாச்சு. எழும்புங்க " என்று டிரைவர் உள்ளிருப்பவர்களை எழுப்பிக் கொண்டிருந்தான். " என்ன பிள்ளைவாள் ! நீங்க மெட்ராஸ் போகலியா ? என்றார் மேட்டுப் பட்டி மிராசு, டாக்சியின் உள்ளே அரைகுறைத் தூக்கத்திலிருந்து எழுந்த நல்ல சிவத்தைப் பார்த்து. அதற்குள் சின்னப்பய, " யப்போவ் ..இது மெட்ராஸ் இல்லே. நம்ம மிராசு மாமா வீடு. இந்த ஆளு நம்மள ஏமாத்திட்டான் " என்று குதித்தான் . மிராசுக்கு ஒன்றும் புரியவில்லை. டிரைவர், " ஸார் , இவர் மெட்ராசில் இந்த அட்ரசைக் காட்டி இங்கு கொண்டு போய் விடுனு சொன்னார். த்ரூ ட்ரைன் இருக்குண்ணு நான் சொன்னென். கேக்கலே . நான் எது கேட்டாலும் பதில் சொல்லலே . எனக்கு வேண்டியது மீட்டர் சார்ஜ் . அதுதான் என் வீட்டில் கூடத் தகவல் சொல்லாமே நேரே இங்கே வந்துட்டேன். என் கணக்கை சீக்கிரம் செட்டில் பண்ணி அனுப்புங்க சார் " என்றான் . நிலைமையை நொடியில் புரிந்துகொண்ட மிராசு , " அட எழவே ! இது என் சம்பந்தி எனக்குப் போட்ட கடுதாசி. அவக விலாசத்தைப் பின் பக்கம் எழுதி இருந்தாக. அதான் இதை குடுத்து அனுப்பினேன் . அந்த விலாசத்தை ஒங்கிட்டே காமிக்கிறதுக்குப் பதிலா என் வீட்டு விலாசத்தை காமிச்சிட்டாக போலிருக்கு " என்று சொல்லிக் கொண்டே காருக்குள் நல்லசிவத்தைப் பார்க்க அவர் மூர்ச்சையாகியிருந்தார் .

No comments:

Post a Comment