( எனது இச்சிறுகதை 10.11.1993 தேவி இதழில் வெளியாகியுள்ளது )
தண்ணீர்! தண்ணீர் !!
" என்னடா அங்கே வாசல்லே கூட்டம் ?" என்று கேட்டுக் கொண்டே தன்
அறையில் இருந்து வெளியே வந்தார் , வட்டத் தலைவர் மாதவராஜ்
எண்சாண் உடம்பை வளைத்துக் கூனிக் குறுகி, மார்பில் குறுக்காகக் கைகளை கட்டிக் கொண்டு நின்ற காத்தமுத்து , " எஜமான், அடுத்த தொகுதி மேட்டுத் தெரு பசங்கதான் " என்றான்.
அங்கிருந்த கூட்டத்தின் நடுவில் சிறைக் கைதிகள் போல் பரட்டைத் தலைஇளைஞர்கள் இருவர் நிறுத்தப் பட்டு இருந்தனர்.
" நம்ம தெருவிலே எதையாவது திருடிப்புட்டானுகளா இவனுக ? "
- விசாரித்தார் மாதவராஜ்
" பொன், பொருளைத் திருடலைதான் ! ஆனாலும் இதுவும் ஒரு மாதிரி திருட்டு தான் .."
" அது என்னடா மாதிரித் திருட்டு ? " என்று இடைவெட்டினார் மாதவராஜ்
" இவனுக இருக்கிற தெருக் குழாயில் தண்ணி வரலியாம். அதனாலே அங்கே இருக்கிற குடும்பங்களை தண்ணிக்காக இங்கே கூட்டி வந்திருக்காங்க . நம்ம தெரு ஜனங்க தடுத்து சொன்னதும் மத்தவங்க திரும்பிப் போயிட்டாங்க. ஆனா இந்த மொட்டப் பசங்க மட்டும் பிடிவாதமா தெனத்துக்கு ரெண்டு வண்டி தண்ணியாவது பிடிச்சிட்டு போயிடுதானுக. நாங்க சொல்லிப் பார்த்தோம்.கேட்கலீங்க. அதனாலே ஐயா முன்னாலே கொண்டாந்து நிப்பாட்டிட்டோம் "என்றனர் கூட்டத்தினர் .
" ஏன்டா, இவங்க சொல்றது நிஜந்தானா? " - உறுமினார் வட்டத் தலைவர் .
" இங்கே உள்ள தெருக் குழாயிலே தண்ணி எடுத்தது நிஜந்தாங்க. ஒண்ணு
ரெண்டு வீ டு, ஓட்டலுக்கு தண்ணி எடுத்து ஊத்திப் பொழைக்கிறவங்க நாங்க . எங்க தெருவுலேயும், சுத்து வட்டார குழாயிலேயும் சொட்டு தண்ணி கூட வரலீங்க. சரி, தெருக்குழாய் பொதுவானது தானேங்றதாலே தண்ணி எடுக்க வந்துட்டோமுங்க ! "
" உன் தெருவுலே தண்ணி வரலேன்னா அதுக்கு நாங்க என்னடா செய்வோம். பரதேசி நாயே, மேட்டுத் தெரு இந்த தொகுதி கூட சேராததுன்னு உனக்கு தெரியுமில்லே ?"
" தண்ணி வண்டி அடிச்சாதான் என் வீட்டிலே அடுப்பு எரியும் ஐயா."
" உன் பொழைப்பு இருக்கட்டும்டா.. இங்கே வர்ற தண்ணியை நீ எடுத்துட்டு போயிட்டா, பிறகு எங்கே உள்ளவங்க தண்ணிக்கு எங்கேடா போவாங்க ?" என்று கடுக்கடுத்தார் மாதவ ராஜ் .
" தெரு ஜனங்க பிடிச்சது போக, மத்த நேரம்தான் தண்ணீர் பிடிக்கிறோம்ங்க "
" எதிர்த்தாடா பேசறே ? நாயே .. தண்ணி இல்லாட்டா தலை கீழா நில்லுங்கடா .வானத்தைப் பொளந்துகிட்டு தண்ணி கொட்டும்... இந்தத் தெருவுக்கு ஏன்டா வர்றீங்க ? இங்கே இருக்கிற தண்ணீர் வீணாப் போயி , குழாய் இருக்கிற இடம் சாக்கடையா ஆனாக் கூட பரவாயில்லை. ஆனால், அடுத்த தொகுதியில் இருக்கிறவங்க இந்தப் பக்கம் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன்.இன்னொரு தரம் உங்க ரெண்டு பேரையும் இங்க பார்த்ததா யாராவது சொன்னா , அப்புறம் தண்ணி பிடிக்க உன் கையும் காலும் இருக்காது.ஏன்டா இன்னும் இந்த நாய்களை என் முன்னாலே நிக்க வச்சிருக்கீங்க .அடிச்சு விரட்டுங்கடா " என்று உறுமினார் மாதவராஜ்
கூட்டம் சலசலப்புடன் கலைந்து சென்றது. பஞ்சாயத்து முடித்து உள்ளே
திரும்பியவர், வரவேற்பு அறையில் தன்னைக் காண உட்கார்ந்தி ருந்தவர்களை நோக்கி ஒரு கும்பிடு போட்டார்.
" தயவு பண்ணி, எல்லாரும் நாளைக்கு வந்து என்னைப் பாருங்க. பக்கத்து
தெருவிலே ஒரு மீட்டிங்... தலைவர் வர்றார். நாட்டில் நம்மைச் சுத்தி என்ன நடக்குது என்பது நிறைய பேருக்கு தெரியறதில்லே. காவிரித் தண்ணீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தமிழ் நாட்டுக்குரிய தண்ணீரை விடச் சொல்றதுக்காக மக்களும் சேர்ந்து குரல் கொடுக்கணும்கிறது தலைவர் விருப்பம். அதப்பத்தி பேசத்தான் மீட்டிங் போட்டிருக்கிறார் . உங்களை எல்லாம் பிறகு பார்க்கிறேன் " என்று சொல்லி கைகளை உயர்த்தி கும்பிட்டார்..
இரவு பொதுக் கூட்டத்தில் , " வானமும் பூமியும், நதியும் கடலும் இறைவன் படைத்தது. ஓடுகிற நதியை தடை செய்ய நீ யார் ? உன் எல்லையில் ஓடுவதால்., நீ சொந்தம் கொண்டாட அது என்ன உன் அப்பன் பாட்டன் வீட்டு சொத்தா ? உங்கள் செய்கைக்காக வருந்தி, திருந்துங்கள். இல்லையேல் எங்கள் தாய்க்குலம் விடும் பெருமூச்சு உங்களை யெல்லாம் சுட்டுப் பொசுக்கிவிடும் ..ஜாக்கிரதை "
மாதவராஜ் முழங்க மக்கள் கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்தது.
No comments:
Post a Comment