Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, July 16, 2012

Stories told by GRAND-MA ( Story number - 18 )

                 

  எடுத்து வச்சாலும், கொடுத்து வச்சாதான்.....? !

"பாட்டி எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்" என்ற பீடிகையுடன் சமையல் கட்டுக்கு பாட்டியை தேடி வந்தான் பிரபு.
"விஷயத்தை சொல்லு. எனக்கு தெரிஞ்சா சொல்றேன்" என்றாள் பாட்டி.
"உனக்கு தெரியாமே இருக்க சான்சே இல்லை. கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும்"
"நீ சொல்ல வந்ததை சொல்லு கண்ணு "
"பாட்டி எங்க வீட்டுகிட்டே ஒரு மாமி இருக்கிறா. அந்த மாமி எப்பவும் நமக்கு கொடுப்பினை வேணும். எடுத்து வச்சாலும் குடுத்து வச்சாத்தானே எதுவும்  கிடைக்கும்னு அலுத்துக்குவா. அதுக்கு என்ன பாட்டி அர்த்தம் ?" என்று பிரபு கேட்க  "அதுக்கு ஒரு கதை இருக்கு. அதிலிருந்தே தெரிஞ்சுக்கலாம். மனோவையும்  கூப்பிடு " என்றாள் பாட்டி.
" டீ, மனோ பாட்டி கதை சொல்ல போறாடி" என்று வாசலில் நின்று குரல் கொடுத்ததுமே, பக்கத்து வீட்டிலிருந்து மனோவும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளும் ஓடி வந்தார்கள்.
"என்ன கதை பாட்டி " என்றாள் மனோ.
"நம்ம ராதா மாமி எப்பவும் நமக்கு கொடுப்பினை வேணும். எடுத்து வச்சாலும் குடுத்து வச்சாத்தானே கிடைக்கும்னு அலுத்துக்குவாளே. அதுக்கு என்ன பாட்டி அர்த்தம்னு கேட்டேன். அதுக்கு பாட்டி ஒரு கதை வச்சிருக்கிறாளாம். அதைதான்  சொல்ல போறா " என்றான் பிரபு.
"ஒரு ஊரில் ஒரு சிவ பக்தன் இருந்தான். கடவுள் மேலே அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. மழையாகட்டும், வெயிலாகட்டும், கோயிலுக்கு போறதை மட்டும் விடமாட்டான். ஆனால் ரொம்பவும் வறுமையிலிருந்தான்.
கைலாசத்தில் இருந்த சிவனும் பார்வதியும் இவனை பத்திதான் பேசிட்டு இருக்காங்க. பார்வதி "உங்க பக்தனை இப்படி ஏழையாவே வச்சிருக்கிறது சரிதானா? நீங்க நினைச்சா அவனுக்கு வசதி வாய்ப்பை  கொடுக்கலாமே"னு சிவனிடம் கேட்க " வசதி வாய்ப்பை கொடுக்கலாம்தான். ஆனால் அதை அனுபவிக்கிற கொடுப்பினை அவனுக்கு கிடையாது. அவன் கஷ்டதில்தான் இருக்கணும்னு பிரம்மன், இவன் பிறக்கும்போதே இவன் தலையில் எழுதிட்டான்"னு சிவன் சொல்ல, "இல்லை, நீங்க ஒரு சந்தர்பத்தை கொடுத்துதான் பாருங்களேன். அவனுக்கு அது போய் சேருதா இல்லையானு பார்த்திடலாம்"னு சொல்ல, சிவனும் "இவனுக்கு இன்று ஆயிரம் பொன் கிடைக்கட்டும்"னு அருள் கொடுத்தார். அந்த நேரம் நம்ம ஆளு கோயிலுக்கு போய் சாமி தரிசனம் பண்ணிட்டு அங்கு நடந்த உபன்யாசத்தையும் கேட்டுட்டு வீட்டுக்கு திரும்பிகிட்டு இருந்தான். உபன்யாசம் பண்ணின பெரியவர், "உலகிலேயே கொடுமையான விஷயம் கண் பார்வை இல்லாதவர்களாக இருப்பதுதான். உலகிலுள்ள எந்த ஒரு விசயத்தையும் எந்த மனிதரையும் பார்க்க முடியாது என்பது ஒரு பக்கமிருக்கட்டும். கீழே விழுந்து  அடிபட்டா அடிபட்ட காயத்தைக்கூட பார்க்க முடியாமல் போவது எவ்வளவு கொடுமையான விஷயம். எங்கே ஒரு அரை மணி நேரம் கண்களை மூடிக்கொண்டு எந்த செயலையாவது செய்ய முடிகிறதா என்று சோதனை பண்ணி  பாருங்களேன். அப்போதுதான் அதிலுள்ள கஷ்டம் தெரியும். கண் பார்வை அற்றவர்களிடம் அதிக அளவு பரிவு காட்ட வேண்டும். கைப்பிடி இல்லாத கூஜாவை இரண்டு கைகளாலும் பிடித்து எந்த அளவு அக்கறையாக தூக்குகிறோமோ, அந்த மாதிரியான அக்கறை காட்ட வேண்டும்"னு சொல்லி இருந்தார்.
இதை எல்லாம் மனசில் நினைத்தபடியே வந்த நம்ம ஆளு, 'இன்னிக்கு ரெண்டு கண்ணையும் இறுக்க மூடிட்டுதான் நடந்து வீடு போய் சேரணும். வழியில் எந்த கஷ்டம் வந்தாலும் சரி, விழுந்தாலும் சரி, காயபட்டாலும் சரி, வீடு போய் சேருகிற வரை கண்ணை திறக்க கூடாது' என்ற முடிவுடன், வழியில் கிடந்த ஒரு குச்சியை கையில் பிடித்துக்கொண்டு குருடன் மாதிரியே  நடக்க ஆரம்பித்தான். இவனை பார்த்து நாய் குலைச்சுது. இவன் கண்ணை திறக்கலே. இவனை ஒரு சைக்கிள்காரன் இடித்து தள்ளி விட்டு போனான், அதற்கும் இவன் கண்ணை திறக்கலே. பார்வதி சிபாரிசில் சிவன் இவனுக்காக போட்ட பணமுடிப்பு இவன் காலில் இடறியது. கால் இடறி விழ பார்த்தான். ச்சே. யாரோ கல்லை கட்டி இப்படி நடுவழியில் போட்டு வைத்திருக்கிறார்களே. நான் விழ இருந்தேனே. என்னை போலவே நிஜமான குருடர்களோ குழந்தைகளோ விழுந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து, அந்த மூட்டையை எடுத்து அருகிலிருந்த குளத்தில் வீசி விட்டு போனான்.
இப்போ கைலாசத்தில் பார்வதியிடம் சிவன் "என்ன நடந்தது பார்த்தியா"னு கேட்க "அவனுக்குன்னு எடுத்துகொடுத்தும் அதை அனுபவிக்கிற பாக்கியம் அவனுக்கு இல்லே. என்ன செய்றது அவன் விதிப்படிதானே அவன் மதி போகும்"னு சொன்னாங்க." என்று கதையை முடித்த பாட்டி, "பிரபு கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் " என்றாள்.
"கதை நல்லாதான் இருக்கு. ஆனா ஒரே ஒரு சந்தேகம் " என்றான் பிரபு
"என்னடா அது ?"
"கைலாசத்தில் சிவனும் பார்வதியும் பேசினதை நீ எங்கே உட்கார்ந்து கேட்டே ? எப்போ கேட்டே ?" என்று கிண்டலாக கேட்க, அங்கு ஒரே சிரிப்பு சத்தம்தான். அந்த சிரிப்பில் பாட்டியும் கலந்து கொண்டாள்.

No comments:

Post a Comment