( இச்சிறுகதை, ஆனந்த விகடன் 08.10.2000 இதழில் வெளியாகியுள்ளது )
பாவம் இந்த ஆம்பளைகள் !
" மனசிலே என்னதான்டி நெனச்சிட்டு இருக்கிறான் உன் புருஷன் " என்று
இரைந்தார் சூரிய நாராயணன் .
" கொஞ்சம் சாந்தமாத்தான் பேசுங்களேன் . இப்போ, நீங்க பேசிகிட்டு
இ ருக்கிறது உங்க பொண்ணு கூடத்தானே ! பிறகு ஏன் இவ்வளவு ஆவேசம் ? உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிம்பாங்க. அவ நெலைமை மத்தளம் மாதிரி ஆகிப்போச்சு " என்று சொல்லும்போதே கெளரிக்கு கண்களில்நீர் முட்டிக் கொண்டு நின்றது.
இ ருக்கிறது உங்க பொண்ணு கூடத்தானே ! பிறகு ஏன் இவ்வளவு ஆவேசம் ? உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிம்பாங்க. அவ நெலைமை மத்தளம் மாதிரி ஆகிப்போச்சு " என்று சொல்லும்போதே கெளரிக்கு கண்களில்நீர் முட்டிக் கொண்டு நின்றது.
" மத்தளம்னு சொல்லாதேம்மா.. புட்பால் மாதிரி ஆகிட்டேன். அங்கே நிம்மதி இல்லேன்னு இங்கே வந்தா, " பொண்ணாப் பொறந்தவ புருஷன் வீட்டில் இருக்கிறவரை தான் மதிப்பு, மரியாதை எல்லாம்"ன்னு சொல்லி ரெண்டேநாளில் அப்பா அங்கே விரட்டி விடறார். இந்தத் தடவை நானா வரலே. அவரே தான் " போடீ , உன் அப்பன் வீட்டைப் பார்த்து"ன்னு அனுப்பி வெச்சார் "என்றாள் சந்திரிகா.
" சரி .. சரி .. எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு. ஞாயிற்றுக்கிழமை நானே நேரில் போய் அந்த ராஸ்கலிடம் ரெண்டுலே ஒண்ணு கேட்டுடறேன் " என்று சொல்லி விட்டுக் கிளம்பிய சூரிய நாராயணன் வழி நெடுக மகளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார்
கல்யாண விஷயத்தில் நான்தான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ ?மாப்பிள்ளை பத்மநாபனைப் பற்றி எல்லோரும் நல்ல விதமாகத்தானே சொன்னார்கள். ' இப்பத்தான் கவெர்மென்ட்டில் வேலை கிடைச்சிருக்கு .வீட்டில் வயதான தாயார் மட்டுமே. வசதி கொஞ்சம் குறைவுதான் . ஆனால் தங்கமான பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ' என்று, நான் விசாரித்த அத்தனை பேருமே ஒரே மாதிரியல்லவா சொன்னார்கள் !...மாப்பிள்ளைன்னு ஆனாலே, அதுக்குன்னு ஒரு திமிர்த்தனம் வந்துடும் போலிருக்கு. உடம்பிலே என்ன கோளாறுங்கிறதை எக்ஸ்ரே எடுத்து கண்டு பிடிக்கிற மாதிரி , ஒவ்வொருவர் மனசிலும் என்ன நினைப்பு இருக்குங்கிறதை கண்டு பிடிச்சு சொல்ற மெஷின் ஒண்ணு இருந்தால் எவ்வளவு நல்லா
இருக்கும். கல்யாணமான ஆறு மாசத்திலேயே குறைந்தது நாலு தடவை
யாவது சந்திரிகா பிறந்த வீட்டுக்கு வந்திருப்பாள், அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக என்று மனம் சொன்ன அதே வேளையில், மனசின் மூலையில் இருந்து ஒரு குரல், ' உன் மக மட்டும் என்ன லேசுப்பட்டவளா ? சின்ன வயசில் இருந்தே அகங்காரம், ஆணவம், அகம்பாவம் எல்லாமே ஒண்ணு சேரவளர்ந்தவளாச்சே ! எதற்காகவும், யாருக்காகவும் தன்னோட சௌகரியத்தை கொஞ்சமும் விட்டுக் கொடுக்க மாட்டாளே . ஒண்ணு வேண்டாம்னு சொன்னா அதை வரிஞ்சு கட்டிக்கிட்டு செய்கிறவதானே ! மத்தவங்க கஷ்டத்தைப் பத்தி மனசு இரங்காட்டாலும் பரவாயில்லை. 'அப்படிக் கஷ்டப்படறது அவங்க தலையெழுத்து . இதுக்காக நாமளும் அவங்க கூட சேர்ந்து கஷ்டப்பட முடியுமா ? " என்று எதிர் வாதம் செய்கிறவளாச்சே என்று சொன்னது. என்ன இருந்தாலும்
அந்த ராஸ்கல் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம் என்று
மகளின் மீது இருந்த பாசம், அவளுடைய தப்பை நியாயப்படுத்தியது.
இந்த சலனம், கவலை எல்லாமே ஆபீஸ் வந்து சேரும் வரைதான். ஸீட்டில் உட்கார்ந்து பைலை திறந்ததுமே, வீட்டு நினைப்பு போன இடம் தெரியாமல்ஓடியது . 'நேத்தே கணக்கில் ஒரு ஐம்பது ரூபாய் உதைச்சுதே! அதை கண்டு பிடிச்சுட்டுதான் மறுவேலை... உனக்காச்சா, எனக்காச்சானு பார்த்துடலாம் 'என்று சொல்லி மேஜை மீது ரெக்கார்டுகளைப் பரப்பிப் போட்டு, தேடிக் கொண்டு இருந்தார்.
" சார் .. "
" .... "
" சார் "
'அந்த ஐம்பது ரூபாய் என்ன ஆகியிருக்கும்? ' என்று கேட்டபடியே நிமிர்ந்த சூரிய நாராயணன் , எதிரில் நின்ற பியூனிடம் " என்னப்பா ? " என்றார் எரிச்சலுடன்.
" சார், உங்க மாப்பிள்ளை கீழே நிக்கிறார். ' ரூம்லே போய்ப்பாருங்க'னு
சொன்னேன். 'வேண்டாம்ப்பா.. நான் இங்கே நிக்கிறேன்னு சொல்லி, உங்ககிட்டே, தான் வந்திருக்கிற விஷயத்தை சொல்ல சொன்னார் "
" நான் ரொம்ப பிசி. யாரையும் பார்க்க முடியாது'ன்னு சொல்லு" என்றவர்,
" இரு.. நீ சொல்ல வேண்டாம். நானே போறேன் " என்று கிளம்பினார்.
இவரைப் பார்த்ததுமே, " சாரி மாமா, ஆபீஸ் நேரத்திலே டிஸ்டர்ப் பண்றதுக்கு மன்னிக்கணும் " என்றான் பரந்தாமன்.
" பரவாயில்லையே. இன்னும் மாமனார்ங்கிற மரியாதை எல்லாம் கூட
இருக்கா? ..தாலி கட்டின பொண்டாட்டியைத்தான் ஒழுங்கா வச்சுக்கத்
தெரியாமே 'உன் அப்பன் வீட்டுக்கு போ'ன்னு சொல்லி அனுப்பிட்டே
போலிருக்கு "
" மாமா .. அவதான் எதையும் புரிஞ்சுக்காமே குழந்தைத்தனமா பேசறான்னா ,நீங்களும் அப்படியே பேசினா எப்படி ? "
" சொல்லு .. இன்னும் என்னென்ன உண்டோ, அத்தனையும் சொல்லு !
பெண்ணைப் பெத்து தொலைச்சிட்டேனே.. அதனாலே கேட்டுக்கிறேன் "
என்றார் சூரிய நாராயணன் கோபமாக.
" மாமா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க .."
" சீக்கிரம் சொல்லித் தொலை. நானே ஒரு ஐம்பது ரூபாய் எந்தக் கணக்கில் விட்டுத் தொலைஞ்சதுன்னு தெரியாமே மண்டையை உடைச்சிட்டு இருக்கேன்."
" ஐம்பது ரூபாயைவிட உங்க பொண்ணு வாழ்க்கை பெரிசா தெரியலியா
உங்களுக்கு ? நான் சந்திரி கிட்டே எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணித்தான்
போறேன்... பக்கத்து வீட்டில் வயசுப் பொண்ணு ஒண்ணு... , கல்யாணம் ஆன மூணாம் மாசமே கார் ஆக்சிடெண்டில் புருஷனைப் பறி கொடுத்துட்டு நிக்குது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவங்க யாரும் இன்னும் மீளலே. அவங்க கஷ்டத்திலே பங்கு எடுக்க நம்மாலேமுடியாது. ஆனா, அதை அதிகப்படுத்தாமே இருக்கலாமே. தினமும் இவ தலை நிறைய பூவும், விதவிதமா புடவையும் கட்ட வேண்டாம். டிராமா சினிமான்னு அலைய வேண்டாம்.நம்ம சந்தோசம் நம்ம அறைக்குள் மட்டுமே இருக்கட்டும்னு நினைச்சி, அவளை 'அப்படியிருக்காதே, இப்படி யிருக்காதே'னு சொன்னேன். உடனே என்ன சொன்னா தெரியுமா ? "
" சொல்லுங்க "
" சின்ன சின்ன விஷயத்தில் எல்லாம் தலையிட்டா , பிறகு நான் கெரசினை ஊத்திக் கொளுத்திக்குவேன்.. போகும்போது கூட சும்மா போக மாட்டேன்.வரதட்சினை கேட்டு நீங்க என்னைக் கொடுமைப் படுத்தறீங்கனு போலீசுக்கு லெட்டர் எழுதி வச்சிட்டுப் போவேன்னு சொல்றா.. .. மாமா.. புருஷன் பொண்டாட்டின்னா வீட்டில் சின்ன சின்ன சண்டைகள் இருக்கத்தானே செய்யும்? சண்டை வர்றது சகஜந்தானே. அதுக்கெல்லாம் இவ தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொன்னா, நான் என்ன பண்ண முடியும் ?. இவளைக் கட்டிகிட்ட பாவத்துக்காக நான் கம்பி எண்ண வேண்டுமா ? அதனாலேதான் ' இவ்வளவு கொடுமையை அனுபவிச்சுக்கிட்டு நீ இங்கே இருக்க வேண்டாம்.உங்க அப்பா வீட்டுலே போய் சந்தோசமா இரு'ன்னு அனுப்பி வச்சேன்...மாமா .. இப்பவும் சொல்றேன். எனக்கு அவ மேலேயோ, உங்க மேலேயோ எந்த
கோபமும் கிடையாது. அவளா மனசு திருந்தி என்னிக்கு வர்றாளோ அன்னிக்கு வரட்டும். என்னை நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாதேன்னு நேரிலே வந்து உங்ககிட்டே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். வர்றேன் மாமா .."என்றான் பத்மநாபன்.
" ஸாரி .. மாப்பிள்ளை. என்னை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு விஷயமே புரியுது " என்றார் சூரிய நாராயணன் பணிவாக .
பத்மநாபன் சென்றதும் ஸீட்டுக்கு வந்து பழையபடி லெட்ஜெர்களைத்
திறந்து சரி பார்ததார். தான் செய்த தவறைக் கண்டு பிடித்து மகிழ்ந்தார்.
ஐம்பது ரூபாய் கிடைத்து விட்டதால் வேலையில் கவனம் செல்ல வில்லை .அரைநாள் லீவு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
வாசல் கதவு தாழிடப்படாமல் வெறுமனே சாத்தியிருப்பதைப் பார்த்ததும்
கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ' இந்த கெளரிக்கு என்ன சொன்னாலும் தெரியாது. என்னிக்காவது ஒருநாள் , யாராவது ஒருத்தன் கையில் கத்தியோடு வீட்டுக்குள் நுழைந்து மிரட்டும்போதுதான் இவளுக்கு அறிவு வரும் ' என்று சொல்லிக்கொண்டே, கதவைத் தாழிட்டு விட்டு , நடைப்படியில் செருப்புகளை கழற்றி விட்டார். உள்ளே பேச்சு குரல் கேட்கவும் சிறிது நேரம் நின்றார்.
" மனுஷனா அவன் ? .. மிருகம்... பொண்டாட்டி பூ வெச்சா சந்தேகம், பொட்டு வைச்சா சந்தேகம். புதுப் புடைவை கட்டினா சந்தேகம் .. இப்படியொரு புருஷனோடு வாழறதை விட காலம்பூரா வாழா வெட்டியா இருக்கலாம்.அந்த மனுஷன் கோபத்திலே என் மேலே கெரசின் ஊத்திக் கொளுத்தினாக் கூட ஆச்சரியமே கிடையாது " என்றாள் சந்திரிகா.
" என்னம்மா பன்றது ? அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை கஷ்டப் படத்தான் பெண் ஜென்மம்னு ஆண்டவன் எழுதி வெச்சுட்டான். ஆனானப்பட்ட ஏகபத்தினி விரதன் ஸ்ரீராம சந்திரனே பொண்டாட்டியைப் படுத்தத்தானே செஞ்சான். 'அவன் அதை சொன்னான்.. இவன் இதை சொன்னான்'னு சொல்லி பொண்டாட்டியைத் தீக்குளிக்க சொன்னான்." என்று மகளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் கௌரி.
புயலாக உள்ளே நுழைந்தார் சூரிய நாராயணன். அவரை சற்றும் எதிர் பாராத இருவரும் சட்டென்று எழுந்தது உட்கார்ந்தனர் .
" ஆமாம்டி .. ஆமாம் ! அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை ஆம்பளைங்க மேலே பழி போடறதே இந்தப் பொம்பளைங்களுக்கு பழக்கமா போச்சு. சீதை பட்ட கஷ்டத்தை சொல்லி காலம் தள்ளற நீங்க அவளோட பிடிவாதத்தை ஏன் புரிஞ்சுக்கலே ? காட்டுக்குக் கிளம்பும்போது ' நீ வீட்டில் இரு'ன்னு ராமன் சொன்னதைக் கேட்டாளா ? .. ' நீ இருக்கிற இடம்தான் அயோத்தினு வசனம் பேசி கிட்டு கிளம்பிப் போனா.. சரி காட்டுக்குப் போன பிறகாவது புருஷன் பேச்சைக் கேட்டாளா ? ராமன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் மான்தான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சா. அரண்மனையை விட்டு வந்த சீதைக்கு, ஒரு மான் மேலே உள்ள ஆசையை விட முடியலே .பெண் புத்தி எப்பவும் பின் புத்திதான். 'இதைத் தொடாதே .. நெருப்பு'ன்னு சொன்னா புரியாது. பட்ட பிறகுதான் புத்தி வரும். எடுத்ததுக்கெல்லாம் பிடிவாதம் பிடிச்சு கிட்டு உங்களை நீங்களே அழிச்சுகிட்டு ஆம்பளைங்க மேலே ஏன் பழி போடறீங்க?. புருஷன் பேச்சைக் கேட்டு, ஒழுங்கா வீட்டில் இருந்திருந்தா சீதை தீக்குளிக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே. உங்க
தப்பை உணர்ந்து என்னிக்குதான் திருந்தப் போறீங்களோ தெரியலே.,
உங்களையும் வதைச்சுகிட்டு ஆம்பளைங்களையும் படுத்தறதே உங்க
பொழைப்பாப் போச்சு ! " என்று இரைந்த சூரிய நாராயணனைக் கண்டு
மலைத்துப் போய் நின்றனர் இருவரும்.
......
( இந்தக் கதைக்கு நான் கொடுத்திருந்த தலைப்பு " பிடிவாதமே உந்தன் பேர்
பெண்மையோ ? " )
No comments:
Post a Comment