Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, June 16, 2012

Stories told by Grand -Ma ( Story number - 17 )

                                   கூடா நட்பு !

"பாட்டி. அண்ணாவுக்கு நீதான் புத்தி சொல்லணும் " என்றாள் மனோ.
"ஏன்டீ"
"எங்க தெருவிலே ஒரு பையன் இருக்கிறான். அவனோட அப்பா குடிகாரர். எப்பவும்  அடிதடி சண்டை போலீஷ்ன்னு அவங்க வீட்டில் தினமும் ரகளைதான்.அவன் வீட்டுக்கு போகிற பழக்கம் வேண்டாம்னு மம்மி சொன்னா பிரபு கேட்க மாட்டேங்கிறான்"
"என்னைப் பத்தி போட்டு குடுக்கிறியாடி ? பாட்டி நீயே சொல்லு, அப்பா பண்ணின தப்புக்காக பையனை ஒதுக்கி வைக்க முடியுமா?" என்றான் பிரபு ஆவேசமாக.
"நீ சொல்றதை கேட்க நல்லாத்தான் இருக்கு. அந்த பையன் நல்லவனாகவே இருக்கட்டும். ஏதாவது திருட்டு கேசில் அவன் அப்பா மாட்டினாரென்றால் அவன் வீட்டை சோதனை போடும் போலீஸ்,  அங்கே  அவங்க தேடுறது கிடைக்கலைன்னா அவன் வீட்டுக்கு யார் யார் வந்து போறாங்கன்னு விசாரிச்சு அவங்க வீட்டையும் சோதனை போட வருவாங்க. இந்த தலைவலி எல்லாம் தேவைதானா ?. நீ அந்த பையனை வெறுத்து ஒதுக்க வேண்டாம். மத்த குழந்தைக  இருக்கிற மாதிரி நீயும் ஒரு அளவோடு பழக்கம் வச்சுக்கோ. ஆராய்ந்து பார்க்காமே தேர்ந்தெடுக்கிற நட்பு ஆபத்தில் கொண்டு போய் விட்டுடும் தெரியுமா ? இப்படித்தான் ஒரு கொசு ..." என்று பாட்டி சொல்லும்போதே "பாட்டி கதையா?" என்று கேட்டபடி பாட்டியின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு 'உம்' சொல்லு " என்றார்கள் இருவரும்.
பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.
"ஒரு ஊரில் ஒரு கொசு இருந்துச்சு, அது ஒரு நாள் அழகா டிரஸ் பண்ணிகிட்டு காட்டு வழியா போச்சுது. அந்த பக்கமாக வந்த யானை கொசுவை பார்த்ததும்
" அடடா அழகா டிரஸ் பண்ணிகிட்டு எங்கே போறே"ன்னு கேட்டுது. உடனே கொசு "எனக்கு ஒரு நண்பனை தேடி போறேன்"னு சொல்லுச்சுது.
" ஏன்? உன்னோட கொசு கூட்டத்தில் நண்பர்களே இல்லையா"னு யானை  கேட்க, "எனக்கு அவங்க பழக்கம் போரடிசிட்டு.  ஒரு புது நண்பனை தேடிதான்  போறேன்"னு  கொசு சொல்லுச்சு. "என்னை பார்த்தா ஒரு நண்பனா உனக்கு தெரியலியா"ன்னு யானை  கேட்க, அதை உற்று பார்த்த கொசு "உன்னோட நீளமான தும்பிக்கை எனக்கு பிடிக்கலே.  நீ வேண்டாம்"ன்னு  சொல்லிட்டு கிளம்பியது.
கொஞ்ச தூரம் போச்சு. எதிரே ஒரு கரடி வந்தது. கொசுவை பார்த்ததும் " அடடா அழகா டிரஸ் பண்ணிகிட்டு எங்கே போறேன்"னு கேட்டுது. உடனே கொசு எனக்கு ஒரு நண்பனை தேடி போறேன்"னு சொல்லுச்சுது. " ஏன்? உன்னோட கொசு கூட்டத்தில் நண்பர்களே இல்லையா"னு கரடி கேட்க, "எனக்கு அவங்க பழக்கம் போரடிசிட்டு. அதனாலே ஒரு புது நண்பனை தேடி போறேன்"னு  கொசு சொல்லுச்சுது
"என்னை பார்த்தா ஒரு நண்பனா தெரியலியா"ன்னு கரடி கேட்க, அதை உற்று பார்த்த : கொசு, "உன் உடம்பு முழுக்க முடி இருக்கு. உன்னை எனக்கு கொஞ்சமும் பிடிக்கலே"ன்னு  சொல்லிட்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தது.
எதிரே ஒரு காட்டெருமை வந்துச்சு. " அடடா அழகா டிரஸ் பண்ணிகிட்டு எங்கே போறேன்"னு கேட்டுது. உடனே கொசு "எனக்கு ஒரு நண்பனை தேடி போறேன்"னு சொல்லுச்சுது. " ஏன்? உன்னோட கொசு கூட்டத்தில் நண்பர்களே இல்லையா"னு கேட்க, "எனக்கு அவங்க பழக்கம் போரடிசிட்டுது . புது நண்பனை தேடி போறேன்"னு  கொசு சொல்லுச்சுது .
"என்னை பார்த்தா ஒரு நண்பனா தெரியலியா"ன்னு காட்டெருமை கேட்க, அதை உற்று பார்த்த : கொசு, "உன் உடம்பு கருகருன்னு  இருக்கு. உன்னை எனக்கு பிடிக்கலே"ன்னு  சொல்லிட்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தது.
இப்படி எல்லா மிருகம், பறவைகளையும் ஒவ்வொரு காரணத்துக்காக  தட்டி கழித்த கொசு, மனசுக்கு பிடிச்ச மாதிரி நண்பன் கிடைக்காத கவலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தது. அந்த மரக்கிளையில் ஒரு குரங்கு இருந்தது. அது இங்கேயும் அங்கேயும் தாவுவதும் குதிப்பதுவுமாக இருந்தது. குரங்கை கொசுவுக்கு ரொம்பவும் பிடிச்சு போச்சு. அது குரங்குகிட்டே போய் "நாம ரெண்டு பேரும் பிரண்டா இருக்கலாமா"ன்னு  கேட்டது.
இதை கேட்டு குரங்கு சிரிச்சது. " என்னது எனக்கு நீ நண்பனா?  உனக்கு என்னை போல நீள வால் இல்லை. நாலு கால் இல்லை. போயும் போயும் நீயெல்லாம் எனக்கு நண்பனா"ன்னு கேட்டது.
"உன்னை. உன்னோட விளையாட்டை  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்னோட நண்பனாகனும்"னு கொசு சொல்ல, குரங்கு "நீ வேண்டாம்"னு சொன்னதை கேட்டு கொசு அழுதுச்சு அழுதுச்சு அப்பிடி அழுதுச்சு.
கொசு விட்ட கண்ணீர் காடெல்லாம்  ஆறாக ஓடுற அளவுக்கு அழுதுச்சு. கொசு அழுறத பார்த்து பரிதாபப்பட்ட குரங்கு "சரி போனா போவுது. நாம நண்பர்களா  இருப்போம்"னு சொன்னத கேட்டு சந்தோஷ பட்ட கொசு "இப்ப நாம ஓடி பிடிச்சு விளையாடலாமா" னு கேட்டுது.
"சரி நீ ஓடு. நான் பிடிக்கிறேன்"னு குரங்கு சொல்ல விளையாட்டு அங்கே ஆரம்பமானது. குரங்கு கையில் சிக்காமல் கொசு அங்கேயும் இங்கேயும் ஓடி அலைகழிச்சுது. இப்ப இந்த கொசுவை பிடிச்சிட்டுதான் மறு வேலைன்னு சபதம் எடுத்த குரங்கு, கொசுவை பாய்ந்து சென்று பிடிச்சிது. "ஆஹா பிடிச்சிட்டேன், பிடிச்சிட்டேன்"னு சந்தோசமா சொல்லிகிட்டே  கைகளை திறந்து பார்த்தது.  கையை திறந்து பார்த்தா, குரங்கு கையிலே கொசு இல்லே. கொசுவோட ரத்தம்தான் இருந்தது. இப்படியாக, கொசு குரங்கு நட்பு, தொடங்க ஆரம்பித்த சில நொடியிலேயே  கொசுவோட வாழ்வு முடிஞ்சு போச்சுது" என்று சொல்லி கதையை முடித்தாள் பாட்டி.
"பாட்டி நீ கதை மூலமா எனக்கு என்ன சொல்ல விரும்புறேனு எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது.புரிஞ்சு நடந்துக்க ட்ரை பண்றேன் " என்றான் பிரபு
"எங்க எல்லாரோட ஆசையும் அதுதான் !" என்று பாட்டியும் மனோவும் சேர்ந்த குரலில் சொன்னார்கள் ..

No comments:

Post a Comment