Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 15, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 35

( எனது இச்சிறுகதை ரூபாய் 5000/- பரிசு பெறும் முத்திரைக் கதையாக 28.10.2011 ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது )

                                  ஆத்தா ...!

"என்னலேய், காலையிலேயே வெள்ளையும் சொள்ளையுமா  வந்து  நிக்குதே?" என்று தர்மகர்த்தா கேட்டதுமே,'கெக்கெக்கே'என்று வெற்றிலைக் காவி படிந்த பற்கள் வெளியே தெரியச் சிரித்தான் சுடலை.
"கோயில் விஷயம் பேச ஐயா வரச் சொன்னதா  நம்ம  வூட்டு  சின்னக்  கழுதை  ஓடியாந்து சொல்லுச்சுங்க. .. அதான்  ! " என்றான்.
" ஏன் வாசல்லே நிக்குதே ? .. உள்ளே வா ! "
"இருக்கட்டும்ங்க எஜமான்..  என்ன  சங்கதின்னு  சொன்னீகன்னா, கேட்டுப்  புட்டு டவுணுக்குப்  போயிட்டு வந்துருவேன் .. அங்கிட்டு  ஒரு  ஜோலி  இருக்கு "
" ஏலேய் .. இன்னும் பத்து நாள்லே  கோயில்லே  கொடியேறப்  போவுது.. 
அதுலேருந்து பத்தாம் நாள் தேர்த்திருவிழா .. "
 " அட .. தெரிஞ்ச சங்கதிதானே சாமி ! "
" பத்து நா திருவிழாவிலே உங்களுக்கும் ஒரு நா  கட்டளை வேணும்னு  உங்க சாதிசனம் பிரியப்படுதாக போலிருக்கு "
" அதெல்லாம் இல்லே சாமி .. "
" என் காதுக்குச் சேதி  வந்துச்சு டோய் ... ஒரு நா கட்டளையை  நீங்களும்    ஏத்துக்கலாம்.. ஒண்ணும்  தப்பில்லே .."
"இல்லே சாமி... தலைமொறை  தலைமொறையா எங்க  தொழில்  தேருக்குத்தடி போடுறதுதான். அதை விட்டுப்பிட்டு கட்டளைப்படி, மண்டகப்படி எல்லாம் கேட்போமுங்களா .. ? "
" கேட்கலாம்லேய் .. அதுலே குத்தமில்லே .. " 
"வேண்டாம் எசமான்.. நீங்க  எல்லாரும் உசந்த சாதிசனம்...  உங்க  கட்டு முட்டு எல்லாம் எங்களுக்கு எப்படிச் செய்ய வரும் சாமி ? "
"எலேய்.. நீங்களாவும் முன்னேற மாட்டீக. மத்தவகளாப்  பாத்து உங்களை  முன்னேத்தி விட்டாலும் சேத்துலேதான்  நிப்பேங்கிறீக.. கவருமென்ட் உங்களுக்கு என்னென்னவோ சலுகை குடுத்து முன்னேத்தப் பாக்குது. உங்க  பேரைச்சொல்லி எவனெவனோ முன்னேறுதானே தவிர, நீங்க  இன்னும்  செக்கு மாடு மாதிரி நின்ன இடத்திலேதான் நிக்கீக.  அய்யரு  மந்திரம்  சொன்னாதான்  சாமி பூஜையை வாங்கிக்குவாரா.. ? ஏன் .. நீங்க 
சொன் னா  வேண்டாம்பாரா ?" 
" அய்யய்யோ  எஜமான்.. அய்யருமாருங்க எங்கே, நாங்க எங்கே ? அவக
சொல்லுத மந்திரத்தைத் திருப்பிச் சொல்லகூடத்   தெரியாத  ஜென்மம்  சாமி நாங்க.. "
"ஏம்லேய்..உன்னை நீயே தாழ்த்திக்கிடுதே.' இந்த வருசத் திருவிழாவுலே  எங்களுக்கும் ஒரு நா கட்டளை வேணும்னு உங்க சாதிக்காரங்க  எல்லாருமா சேர்ந்து கேளுங்கலேய் ..."
 " சாமி.. பத்து நா திருவிழாவிலே, ஒரு நா கட்டளை உங்களுது. மீதி ஒம்பது நாளுக்கும் ஒம்பது சாதிக்காரக சரியா இருக்காக.. அப்படியிருக்க.. எந்த ஒரு நாகட்டளையை எங்களுக்குத் தருவாக  ? "
"முதல் நாள், பத்தாம் நாள் கட்டளை பிள்ளைமாருக்கு.  ஏழாம்  நாள்  கட்டளை எனக்கு. இடையிலே  உள்ளது பூரா, நாடாக்கமாரு,  கோனாக்க மாரு தேவமாரு,செட்டியாருக்கு. ஒம்பதாம் நா கட்டளை அய்யருகளுக்கு .  என்னுதுலே கை வைக்காதே .. மீதி உள்ளதுலே .. நீ கேட்டு வாங்கிக்கோ  .. "
" தருவாகளா ...? "
"உங்க சாதிக்காரக ஒண்ணாச் சேர்ந்து தர வைக்கணும். மாட்டேம்பாங்க...
விட்றாதலேய்.. தீ வைப்பேன்.. அரிவாளை எடுப்பேன்னு சொல்லு .."
" அப்படி சண்டை வந்தா ஊரு நிம்மதி போயிடுமே சாமி.." 
" தறுதலைப் பய புள்ளே.. அதைப் பத்தி உனக்கென்னலேய்   கவலை ? "
" அப்ப சரிதான் சாமி... இந்த வருஷம் ரெண்டுலே ஒண்ணு பாத்துடுதோம் .."
" நல்லது "
" அப்ப நான் உத்தரவு வாங்கிகிடுதேன் சாமி.." என்று  சொல்லி விட்டு  சுடலை  வாசலுக்கு வரும்போது , எதிரே  நெல்லையப்ப  பிள்ளையும்,  மாரிக் கோனாரும் வந்தனர். நின்று, அவர்களை  ஒரு பார்வை  பார்த்த  சுடலை, வேண்டுமென்றே முகத்தைத் திருப்பிக் கொண்டு போனான்.
அவனது செய்கைக்குக் காரணம் விளங்காத இருவரும்," நாம  எதுக்க வந்தா ஓரமா ஒதுங்கி நின்னு கும்பிடு போடுத பய இவன். இன்னிக்கு முகத்தைத் திருப்பிட்டுப்  போறானே.. என்ன சங்கதி ..?" என்றபடி உள்ளே வந்தனர்.
அவர்களைப் பார்த்ததுமே " கலி காலங்கிறது  சரியாத்தானிருக்கு ! " என்றார் தர்மகர்த்தா.
"ஆமாம்யா.. என்னிக்கும் ஒதுங்கி நிக்கிற பய,  இன்னிக்கித்  திமிரா  போறானே "என்றார் மாரிக் கோனார்.
" அட.. செத்தே முன்னே இங்கிட்டு நின்னுட்டு அவன் பேசின பேச்சைக் 
கேட்கணுமே.. என்னமா எகிறுனான் தெரியுமா ? "
" என்னாவாம் ? "
" அவனுக்கும் ஓரு நா கட்டளை வேணுமாம் " 
"காலங்காலமா கோயில் தேருக்கு சேவை பண்ற கூட்டம். ஆசைப்பட்டா 
தப்பில்லையே " என்றார் பிள்ளை 
"என்ன பிள்ளைவாள் , இப்படிச்சொல்றீக ? எல்லாரும் பல்லாக்குலே   உக்கார ஆசைப்பட்டா, பல்லாக்கு தூக்குறது யாரு? பத்து நா  கட்டளைக்கு  பத்து சாதிசனம் சரியாயிருக்கு. யாரோட கட்டளையை உனக்குக் குடுக்கிறதுன்னு கேட்டா,பிள்ளைமார் பயலுக ரெண்டு நா கட்டளையிலே ஒண்ணைக் குடுக்கட்டுமேங்கிறான் .."
"அதெப்படி? இங்கே  எங்க  ஜாதிக்காரங்கதான்  ஜாஸ்தி. அதான்  எங்களுக்கு   ரெண்டு நா கட்டளைன்னு அந்தக்காலத்திலிருந்தே  குடுத்துட்டு  வாராக.அதை எப்படி இவனுகளுக்குக் குடுக்க முடியும் ..? "
"அதைத்தான் நானும் கேட்டேன். அதுக்கு 'எங்களுக்குத்  தராட்டா  நடக்குறதே  வேற'ன்னு சவால் விட்டுட்டுப் போறான் .."
" அவனை சும்மாவா விட்டீக ? " என்றார் மாரிக் கோனார் .
" பொறகு ?.. சுமந்துட்டுப் போய் விடணுங்கிறீங்களா..? "
"நீங்க ஒண்ணு   அவன்   பொடதியிலே  நாலு தட்டுத் தட்டி  அனுப்புறது தானே ?"
" அதெல்லாம் அந்தக் காலம்.  இப்ப கவர்மென்ட் இவனுகளைக் கண்டு 
பயப்பிடுது.."
" அதுக்காக நாமளும் பயப்படணுமா   என்ன ? "
" கோனாரே, பிள்ளைமாருங்க விட்டுக் குடுக்காட்டா, அவன் கோனாக்க மாருங்க  மடியிலேதான் கை வைப்பான் போலிருக்கு "
"வைப்பான்.. வைப்பான். ஏன் வைக்க மாட்டான் ? வைக்கிற  கையை  வெட்டி  வைக்கோல் சுத்தி என் மாடுகளுக்குத் தீவனமாக் குடுத்துடுவேன் "
" ஆத்திரப் படாதீங்க கோனாரே .  அப்படியெல்லாம் எதுவும் நடக்கும்படி 
விட்டுடுவேனா ?  பொறகு, ஊரிலே பெரிய மனுசன்னு நான் என்னத்துக்கு ? இந்தப் பயலுக விசயம் ஏற்கனவே தெரிஞ்சதாலேதான் , கணக்குப் 
பிள்ளையை  விட்டு உங்களைக் கூட்டியாற சொன்னேன். திருவிழாவுக்கு 
முன்னாடி ஊர்ப் பஞ்சாயத்து கூடறப்போ உங்க உரிமைய  விட்டுக்  குடுக்காமேநீங்கதான் காப்பாத்திக்கணும். நான் அம்புட்டுதான்  சொல்வேன்  "  என்றார் தர்மகர்த்தா.
" பஞ்சாயத்து கூடட்டும்.நாங்க யாருன்னு காட்டறோம். அப்ப நாங்க 
வரோமுங்க " என்றனர் இருவரும் ஒரே  சமயத்தில்.
அவர்கள் விடை பெற்றுச் சென்றதும் , அதுவரை அங்கு நடந்தவற்றை 
வேடிக்கை   பார்த்துக் கொண்டிருந்த தர்மகர்த்தாவின் மகன் செல்வம், " அப்பா என்ன இது.. நாடகம் ? " என்றான்.
" மகனே, வெளிநாட்டிலிருந்து லீவுக்கு வந்திருக்கிற நீ இதையெல்லாம் 
பார்க்காதே. உனக்கு இது புரியாது. ஊருக்கு வந்தோமா, உங்க அம்மா கையாலே விதவிதமா செஞ்சு சாப்பிட்டோமா,  வெளிநாட்டுக்குத்  திரும்பிப்  போனோமான்னு  இரு "என்று சொல்லி விட்டு கால்களில் செருப்பை  மாட்டிக்கொண்டு கிளம்பினார் தர்மகர்த்தா
மத்தியானம் இரண்டு மணி இருக்கும். சாப்பாட்டை முடித்து விட்டு, ஊஞ்சல்பலகையில் ஓய்வாகப் படுத்திருந்தார் தர்மகர்த்தா.  வாசலில் செருப்பு சத்தம் கேட்டதுமே  " யாரது ? பாண்டித் தேவரா ? உள்ளே வாரும் " என்றார்.
உள்ளேவந்தவருக்கு, கால்களை மடக்கிக் கொண்டு ஊஞ்சல் பலகையில் 
உட்கார இடம் கொடுத்தார் தர்மகர்த்தா.
" அது எப்படிங்கையா ? இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமலே , அந்தப்  பக்கமா படுத்திருந்த நீங்க, வந்தது நாந்தான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க ?"
" ஒரு  பழமொழி சொல்லுவாங்க. 'ஆள் ஆளை இடிக்கும்; ஆள் மிடுக்கு  ஐம்பது பேரை இடிக்கும்னு. தேவரு மிடுக்குதான் தனியாச்சே. .. அதான்  அங்கிட்டு வரும்போதே இங்கிட்டு தெரியுதே !"
" என்ன விசயமா வரச்சொன்னீக ? "
" நம்ம ஊரு பய புள்ளைகளை  நினைச்சா மனசுக்கு ரொம்பவும் சங்கடமா 
இருக்கு " என்று மெல்ல அஸ்திரத்தைத் தொடுத்த தர்மகர்த்தா, சுடலை 
விசயத்தை சொல்லிவிட்டு , ' இந்த வருஷம் தேவமாருங்க கட்டளையை 
நாங்க செய்வோம்கிறாங்க " என்றார்.
"ஏன் அவனுகளுக்குக் கழுத்துக்கு மேலே தலை இருப்பது பிடிக்கலை யாமா ? தேவன் அரிவாளைத் தூக்கினா தெரியும் சேதி " 
"அப்படியெல்லாம் அவசரப் படாதீங்க. இவ்வளவு  நாள் சும்மா  இருந்தவன் இன்னிக்கு   உரிமை கேட்குதான்னா அதுக்கு காரணம், அவனுக்குப்  பின்னாடி யாராவது இருக்கணும்.  எனக்கென்னவோ  இந்த  பிள்ளை மாருங்க,கோனாக்க மாருங்க இவனுகளைத் தூண்டி  விட்டிருப் பானுகளோன்னு தோணுது "
" இருக்காதுய்யா . பிள்ளை மாருங்க  வம்பு தும்புக்கு வரமாட்டாங்களே.
அதைப் போல இன்னிக்கு வரை,  கோனாக்கமாரோடு எங்க சாதி  சனத்துக்கு   எந்தப் பிணக்கும் இல்லே. "
" பொறகு ...யாரோட வேலை இது ?"
"அவன் எந்தக் கொம்பனா இருந்தாலும் சரி.. தேவன்  அரிவாளைத்  தூக்கினா  பிறகு,  தாமிரபரணியிலே தண்ணி ஓடாது. ரத்தம்தான் ஓடும் .. சொல்லிப் புட்டேன்! ஆமாம் " .. என்று சீறினார் பாண்டித் தேவர்.
" அந்த மாதிரி ஏதும் ஆகக் கூடாது. அரிவாளைத் தூக்கிற சந்தர்ப்பம் வரக்
கூடாதுன்னு தான்    உம்மை முன்னாடியே  எச்சரிச்சு வைக்கிறேன்.  ஊர் பஞ்சாயத்தில் உம்ம உரிமை பறி போயிடாமே  பார்த்துக்கிடும் " என்றார்  தர்மகர்த்தா.
"உங்களைப் போல் தர்மவான் இருக்கப் போய்தான் நாட்டுலே மழைங்கிற பேரிலே, வானத்திலிருந்து ரெண்டு  சொட்டுத்  தண்ணியாவது  அப்பப் போ  பூமியில் விழுது  என்று  புகழாரம் சூட்டி  விட்டுப்  போனார்  பாண்டி தேவர். 
அன்று மாலை.. கோயிலில் கர்ப்பக் கிரகத்தின் முன் நின்று மெய் மறந்து 
நின்றிருந்த நடராஜ ஐயரின் அருகில்  சென்ற  தருமகர்த்தா, "அய்யரே, ஒரு முக்கியமான சமாசாரம்.  அதான் இங்கேயே வந்தேன்.." என்று பீடிகை போட்டு விசயத்தை கச்சிதமாகப் பற்ற வைத்தார். .." உம்ம உரிமை பறிபோயிடாமே பார்த்துக்க வேண்டியது உம்ம பொறுப்பு .. அப்ப... நான் வரட்டுமா .? என்றார். 
"நல்லது.நானும் இப்பவே போய் இந்த விஷயத்தை  அக்ரஹாரத்துக் காராளுக்கு  சொல்லிடறேன் " என்று விரைந்தார் நடராஜ அய்யர்..
டவுன் போலீஸ் நிலையத்துக்குள்  தர்மகர்த்தா,  கணக்குப்  பிள்ளை  வருவதைக் கண்டதும் ..." வாங்க.. உட்காருங்க... என்ன விஷயம் "  என்றார் இன்ஸ்பெக்டர் 
" வயல்வெளி கிராமங்க எனக்கு. கோயில் குளம், ஸ்கூல், ஆஸ்பத்திரி  எதுக்கும்  பஞ்சமில்லே.ஆனா, எங்க ஊரில் போலீஸ் ஸ்டேஷன் மட்டும் 
கிடையாது "
" ஆச்சரியமா இருக்கே?  நான் கோயம்புத்தூரில்  இருந்து ஒரு வாரம் 
முன்னால் தான் மாற்றலாகி இங்கே வந்தேன்.. அது சரி ... என்ன விஷயம் ...சொல்லுங்க "
" அய்யாவுக்கு அவசர கேஸ் எதுவும் இருக்கா ?"
" இல்லை .. ஏன்? "
" கொஞ்சம் விலாவாரியா பேசணும் ... அதான் "
" சொல்லுங்க. கான்ஸ்டபிள் , மூணு  காப்பி கொண்டு வர சொல்லுங்க. " என்ற இன்ஸ்பெக்டர் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார் .
" ஐயா , எங்க ஊருலே ஒரு கோயில் இருக்கு. கிட்டத்தட்ட நூத்தம்பது 
வருசத்துக்கு முன்னாடி ஒரு அழகான அம்மன் சிலை ஆத்தங்கரையோரம் கிடந்துச்சாம்,  அதைப் பார்த்த எங்க முப்பாட்டனார் ' வாழ வந்த  செல்வி' ன்னு  அம்மனுக்குப் பேர் வச்சு , ஒரு கூரைக்குக் கீழே கொண்டு வந்து பூஜை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க . அப்ப இருந்த ராஜாக்க , ஜமீண்தாருங்க , நல்லா தாராளமா நன்கொடை குடுத்ததாலே , கோயில் ரொம்பவும் பெரிசா வளர்ந்துட்டுது. அன்னிலேருந்து  இன்னிக்கு  வரைக்கும் எங்க  குடும்பத்தை சேர்ந்தவங்கதான்  இந்தக் கோயிலுக்கு  எந்த ஒரு போட்டியும் இல்லாமே  தர்மகர்த்தா பொறுப்பில் இருந்துட்டு வர்றோம். .. "
" இப்போ ஏதாவது போட்டி கிளம்பிடுச்சா ?"
" இல்லே. எங்க கோயிலில் வருசா வருஷம் பங்குனி மாசம் பத்து நாள் திருவிழா நடக்கும். பத்து நாள் செலவை  ஒவ்வொரு  சாதிக்காரங் களும்,  ஒவ்வொரு நாள் ஏத்துக்குவோம். அதை கட்டளை,மண்டகப் படின்னு  சொல்வோம்.   அந்தந்த நாளில் குறிப்பிட்ட அந்தந்த சாதித் தலைவருக்கு   முதல் மரியாதை கிடைக்கும். கோயில் தேருக்கு தடி போடறது,  காலனிக்காரன்க.  இந்த வருசம் அவன்களுக்கும் கட்டளை வேணும்னு  கேட்க்கிறாங்க "
" தேருக்காக உழைக்கிற கூட்டம். உரிமை கேட்டால் கொடுக்கிறதில் 
தப்பில்லையே.  "
" அது எனக்குத் தெரியுது. எங்க ஊர்க்கார பயலுகளுக்கு தெரியலையே "
" சரி, இதிலே நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க ? "
" இதுலே இன்னொரு விஷயம் என்னன்னா , மூணு வருஷம் முன்னாடி 
காளையன்னு ஒருத்தன் பூமியிலே ஒரு அம்மன் சிலை கிடைச்சுது.
அழகான சிலை. உலோகத்துலே செஞ்சது.அதுக்கு"கூடவந்த செல்வி' ன்னு பேர் வச்சு,  கோவிலுக்குக் கொண்டு  போனோம்.  ஆனா, அதை  வருசத்துக்கு ஒரு தரம், அதுவும் தேர் திருவிழா  அன்னிக்கு மட்டும் தான்  வெளியில் எடுப்போம். "வாழ வந்த செல்வி"யும் " கூட வந்த  செல்வி"யும் தேர் மேலே உட்கார்ந்து பவனி வர்ற கோலத்தைப் பார்க்க  ஜனம் அலை மோதும்.அவ்வளவு பிரசித்தி  பெற்ற திருவிழா  இந்த  வருஷம்   நடக்குமோ , நடக்காதோணு  பயமா இருக்கு. வழக்கமா  திருவிழாவுக்கு  முன்னாடி பஞ்சாயத்து   கூடி  என்னென்ன  செய்யணும்னு முடிவெடுப்போம்.  இந்த வருஷ  பஞ்சாயத்திலே  ஏதாவது  தகராறு  வருமோன்னு பயமா இருக்கு. அதனாலே, அன்னிக்கு அய்யா  கூட்டத்துக்கு வரணும் "
" மீட்டிங் எப்போ ? "
" ஞாயித்துக் கிழமை "
" சரி "
" வரும்போது இந்தத் துணி இல்லாமே வரணும் "
"துணியில்லாமலா ? " என்று திகைத்த இன்ஸ்பெக்டர். " ஓஹோ . யூனிபார்ம்ல வர வேண்டாம்கிறீங்களா ? .. சரி .. மப்டியில்  வர்றேன் " என்றார்.
ஞாயிற்றுக் கிழமை காலை ... ஓலைகீற்று  வேயப்பட்ட பந்தலின் கீழ் , பொது மைதானத்தில் ஊர்சனம் முழுக்க ஒன்றாகக் கூடியிருந்தது. மகன், கவுன்சிலர், இன்ஸ்பெக்டர்,கணக்குப்பிள்ளைபுடை சூழ வந்த தர்மகர்த்தா, கூட்டத்தைப் பார்த்து பெரியதொரு கும்பிடு போட்டார். வழக்கமான  நடைமுறைகள் முடிந்ததும்,"இப்போ அவகவக நினைப்பை சொல்லலாம் " என்றார்.
" ஏலேய்.. எவன்லேய்  அது..ஒரு நா கட்டளை,  மண்டகப்படி தனக்கு 
வேணும்னு  கேட்டது ?" என்று உருமினார் ஒருவர்.
" நாங்கதான் லேய்  கேட்டது.  இப்ப என்ன பண்ணிப்புடுவீக ? " என்றான் 
சுடலை.
" மாறுகால்... மாறுகை வாங்குவோம் " 
" அதுவரை எங்க கை பூப் பறிக்குமாக்கும் ? ரொம்பத்  துள்ளாதீரும் " என்றான் சுடலை.
" அவக கேக்குறதில் என்ன தப்பு " என்றார்  நல்ல சிவம் நாடார்.
" யோவ் .. நாடாரு .. சும்மா அமுக்கிக் கிட்டு உட்காரும்.  அப்புறம் உம்ம
பேருலே உள்ள நல்ல சிவம் போய் 'சவம்' ஆயிடப் போறீர் " என்று 
எச்சரித்தார் சங்கர நாயுடு. 
"எங்க அய்யா மவனே.. நீயார் பக்கம் பேசுதேனு தெரியலையே.  புரியும்படி பேசு லேய் " என்றார் பாண்டித் தேவர்.
" எங்களுக்கு மட்டும் இந்த வருஷம் கட்டளை தரலே, தேர் மேலே பெட்ரோல் குண்டு வீசுவோம் "
" ஏலேய் ,,  செய்வியா ? அப்படி செஞ்சிடுவியா என்ன.?   தேரையும்  உங்களையும்  ஒண்ணா சேர்த்து கொளுத்திப் பிடுவோம் .."
இன்ஸ்பெக்டர் காதருகில், குனிந்து ரகசியக் குரலில் "இவனுகளுக்கு  சாமிஒரு கேடு" என்று கிசுகிசுத்த தர்மகர்த்தா " முடிவா  என்ன தான்   சொல்லுதீக ?"என்றார்.
"எங்க கட்டளையை யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டோம் " என்ற குரல் 
எல்லோர் வாயிலிருந்தும் வர , " அப்ப இந்த வருஷம் தேர் ஓடாது. மீறி 
ஓடினா கொலை விழும் " என்றான் சுடலை.
"நாட்டுலே  எங்கே பார்த்தாலும் சாதி சண்டை, மதக் கலவரம்.  வேலூரில் நடந்த சிப்பாய்க் கலகம்தான்  உலகப் போருக்கு முதல் காரணம்னு என் மகன் சொல்லி , நான் கேள்விப் பட்டிருக்கேன். நம்ம ஊரில்  நடக்கிற சாதி சண்டை, நாடு முழுக்கப் பரவாமே இருக்கணும்னா , அதுக்கு ஒரே வழி ...திருவிழாவை நிப்பாட்டி வைக்கிறதுதான். கோவிலைப் பூட்டி வைக்கிறது தான். என்ன.. நான்  சொல்றது ?" என்று கேட்டார் தர்மகர்த்தா.
" நல்ல முடிவு ! " என்ற குரல் நாலா பக்கமிருந்தும் வந்தது.
"என்னிக்கு ஊர் சனம் முழுக்க ஒண்ணா சேர்ந்து, ஒத்துமையா  வாரீகளோ அன்னிக்குத்தான் திருவிழா. அது வரை  கோயில்  பூட்டியே  இருக்கட்டும்.இதோ இந்த காவல் துறை அதிகாரி, கவுன்சிலர்  முன்னிலையில் கோவிலை பூட்டுதேன் " என்றார் தர்மகர்த்தா. 
வீட்டுக்கு வந்ததுமே , " அப்பா, என்னாலே உங்களைப் புரிஞ்சுக்கவே 
முடியலையே ! " என்றான் செல்வம்.
" அதுக்கு உனக்கு வயசும் அனுபவமும் பத்தாது மவனே !"
" அப்பா.. நாம  'கூட வந்த செல்வி'யை   வெளியே  கொண்டு வர்றதே 
வருசத்துக்கு ஒரு நாளுதான்.  அவளைப் பார்க்க நம்ம ஜனங்க எவ்வளவு 
ஆசையா, ஆவலா அலை மோதுவாங்க. அந்த  ஆசையை  ஏன்  கெடுக்கி றீ ங்க ?"
" புரியாத பயலா இருக்கியே. இனிமே அவளை யாருமே பார்க்க முடியாது !"
" ஏம்ப்பா ?"
" ஏன்னா .. அவ இப்ப இங்கே இல்லை .. வெளிநாட்டுலே  ஜம்முனு  இருக்கிறா "
"   எப்படிப்பா போனா ?"
" நான்தான் அனுப்பி வச்சேன் "
" அதுலே உங்களுக்கு என்னப்பா சந்தோசம் ? " 
"பல லட்சம் ரூபா கிடைச்சா சந்தோசம் வராதா என்ன ?  நம்ம  ஊர்ப் பயலுக எவனுக்கும் அந்த சிலையோட மதிப்பு தெரியலை .  ஏன்னா,  அந்த சிலையோட வயசு பல நூறு வருசங்க.  எந்த ராஜா காலத்து சிலையோ? எப்படி இங்கே  வந்ததோ தெரியலை. வெளிநாட்டுக்காரங் களுக்குதான் அதனோட மதிப்பு தெரிஞ்சிருக்கு. அதனாலேதான்  அவளை  கள்ளத் தோணியில் அணுப்பினேன் . தோணியில்  போகிறப்போ  என்ன   சங்கடப் பட்டாளோ  ஆத்தா .." 
" போதும்  நிறுத்துங்க. போலீஸ்க்கு தெரிஞ்சா என்னாகும் ?"
" முட்டாப் பய மவனே. அம்பது ரூபா திருடினவனுக்குதான் அடி உதை 
எல்லாம். லட்சம் லட்சமா  கொள்ளையடிச்சவன்  பக்கத்திலே  போகக் கூட பயப்படுவாணுக..   இப்ப நீயே  பாரு ,  ஒருத்தனை கொலை பண்ணினா,குற்றவாளியை  தூக்கில் போடுவாங்க. பல பேரைக் கொன்னு குவிக்கிற தீவிரவாதி கிட்டே பேரம் பேசிகிட்டு தானே இருக்காங்க. என்கிட்டே பணம் இருக்கிறவரை, நான் வீசுகிற எலும்புத் துண்டுக்கு  வாலாட்டிகிட்டு ஒரு கூட்டம் எனக்கு காவலா இருக்கும்."
" அம்மன் சிலை இங்கே இல்லை என்பது ஜனங்களுக்குத் தெரிந்தால் ?"
"தெரிஞ்சாதானேடா.. கோயில் திறந்தால்தான் திருவிழா.. திருவிழா  நடந்தால் தான் தேரோட்டம். தேரோட்டம் நடந்தாத்தானே " கூட வந்த  செல்வி"யும் வெளியே வருவா.  அந்தக் காலத்தில் சங்கம் வச்சு  தமிழை வளர்த்தாங்க. இப்போ சங்கம் வச்சு ஜாதியை வளர்கிறாங்க. மனுசங்களைப் பிரிக்கிறாங்க. இந்த மாதிரி சங்கங்கள் இருக்கிறவரை நம்ம காட்டில் மழைதான் மவனே "
"உங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமா இருக்கு.  நான் இப்பவே அமெரிக்கா கிளம்பறேன் ." என்று  சொல்லி   உடனடியாக  கிளம்பினான்  செல்வம்.
" எஜமான், சின்ன மொதலாளி போறாக.. பார்த்துகிட்டு சும்மா இருக்கீக ?"
"போட்டும்டா. போனா என்ன ? என் புள்ளய பத்தி எனக்கு  தெரியாதா  என்ன ? ட்ரைன்ல்  ஏறி   உட்கார்ந்ததுமே  அவனுக்கு " கூட வந்த செல்வி "மறந்து போயிடுவா. கிளம்பி வர்ற அவசரத்தில்  கூடப் படிக்கிற  ரோஸிக்கோ, ஜூலிக்கோ திருநெல்வேலிஅல்வா வாங்காமே வந்து ட்டேமேனு வருத்தப் பட்டுகிட்டே போவான். அடுத்த வருஷ வீவுக்கு கண்டிப்பா வருவான்  ."
 " போலீஸ்க்கு போய்ட்டாகன்னா ?"
"கவலையே படாதே .. படிச்ச பய..  அப்படியெல்லாம் உருப்படியா  எதையும் செய்ய மாட்டான் " என்று சொல்லிச் சிரித்தார்  தர்மகர்த்தா.




No comments:

Post a Comment