பள்ளிக்கு செல்லும் புலிக்குட்டி !
"பாட்டி, நீ படிக்கிற காலத்தில் நீயே விரும்பி சந்தோசமா ஸ்கூல்க்கு போனியா, இல்லாட்டா உங்க அம்மா சொன்னதுக்காக போனியா ? " என்று கேட்டான் பிரபு.
" எனக்கு பள்ளிக்கூடம் போக ரொம்ப ஆசைதான். ஆனால் அந்த காலத்தில் பெண் குழந்தைகளை அதிகம் படிக்க வைக்க மாட்டாங்க . நான் அஞ்சாம் வகுப்பு வரை படித்ததே பெரிய விஷயம். எதுக்காக இப்போ இந்த கேள்வியை கேட்கிறே ?" என்றாள் பாட்டி.
"பாட்டி எங்களுக்கு ஸ்கூல்க்கு போக விருப்பம்தான். ஆனால் வீட்டுக்கு வந்ததும் ஹிந்தி கிளாஸ் போ, ஜெர்மன் கிளாஸ் போன்னு டார்சர் பண்றாங்க பாரு மம்மியும் டாடியும், அதுதான் பிடிக்கலே. ஸ்கூலில் இங்கிலீஷ் கத்துக்கிறோம், தமிழ் கத்துகிறோம். பிறகு ஏன் மற்ற மொழிகளை படிக்கணும் பாட்டி." என்ற கேள்வியை எழுப்பினார்கள் இருவரும்.
"இப்போ கஷ்டமா தெரியற ஒரு விஷயம் நாளைக்கு உனக்கு உபயோகமான ஒன்றா இருக்கலாம். உனக்கு தேவை படுற நேரத்தில் அதை போய் படிக்க உனக்கு கால அவகாசம் இல்லாமல் போகலாம். நேரம் கிடைக்கிறப்பவே தெரிஞ்சு வச்சுகிட்டா, தேவையான நேரத்தில் கை கொடுக்கும்னு உங்க அம்மா நினைச்சிருப்பா. அதனாலே போக சொல்றா. படிச்சு தெரிஞ்சிக்கிறதிலே என்ன கஷ்டம் உனக்கு."என்று கேட்டாள் பாட்டி.
"போ பாட்டி என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் ஜாலியா விளையாடறப்போ நாங்க மட்டும் புக்ஸ்ம் கையுமா இருந்தா எங்களுக்கு அழுகை வராதா என்ன ?" என்றாள் மனோ.
"படிக்கிற காலத்தில் கஷ்டமா இருக்குன்னு சொல்றே. நாளைக்கு நீ படிச்சு முடிச்சு வெளி மாநிலத்துக்கோ அல்லது வெளி நாட்டுக்கோ போகும் போதுதான் இந்த கஷ்டத்தோட அருமை புரியும். ஆஹா, நம்ம அப்பா அம்மா எந்த அளவுக்கு பிளான் பண்ணி நமக்கு இப்பிடியெல்லாம் ட்ரைனிங் குடுத்திருக்காங்கனு அப்போ நினைச்சு பார்ப்பே. இப்படித்தான் ஒரு புலிக்குட்டி" என்று பாட்டி ஆரம்பிக்கும்போதே "பாட்டி கதையா ? " என்று கேட்டபடி பாட்டியின் அருகில் ஓடிவந்து பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டார்கள் இருவரும் .
"ஆமாம் கதைதான்"
"அப்படின்னா இன்னிக்கும் தூய தமிழில்தான் "
" ஏன், உங்களுக்கு அதுதான் பிடிச்சிருக்கா ? சரி. அப்படியே ஆகட்டும் என்ற பாட்டி கதையை ஆரம்பித்தாள்.
"மிருகங்கள் வாழும் அடர்ந்த காடு அது. பள்ளியிலிருந்து திரும்பிய புலிக்குட்டி வந்த வேகத்திலேயே புத்தக பையை தூக்கி எறிந்துவிட்டு "அம்மா. இனிமே நான் பள்ளிக்கு போக மாட்டேன்" என்றது.
ஏனென்று கேட்டது தாய் புலி
"அங்கு மனிதர்களின் மொழியை படிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். மிருகங்களாகிய நாம் எதற்காக மனித மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
நமது மொழியில் இல்லாத ஒன்று அவர்கள் மொழியில் இருக்கிறதா என்ன? அதனால் நான் இனிமேல் பள்ளி செல்ல மாட்டேன்" என்று சொன்னது குட்டி புலி.
"அதில்லை கண்ணு " என்று தாய் புலி ஆரம்பிக்கும்போதே "உன் சமாதானம் எதுவும் எனக்கு தேவை இல்லை.நாளைக்கு என்னை பள்ளிக்கு போக சொல்லாதே. அதை இப்போதே சொல்லிவிட்டேன் " என்று சொல்லி விட்டு வெளியில் ஓடி விட்டது குட்டிப்புலி.
வெளியில் சென்ற குட்டிப் புலி வெகு நேரமாகியும் குகைக்கு திரும்பவில்லை. நேரம் ஆக ஆக தாய் புலிக்கு கவலையுடன் சேர்ந்து பயமும், மன சோர்வும் ஆரம்பமாகிவிட்டது. தனது கவலையை மற்ற மிருகங்களிடம் சொல்லி பதறி துடித்தது. தாய் புலிக்கு ஆறுதல் சொன்ன மிருகங்கள் குட்டியை தேடி தேடுதல் வேட்டையில் இறங்கி காடு மலை எல்லாம் சுற்றோ சுற்றுன்னு சுற்றி வந்தன.
ஒரு புதரிலிருந்து முனகல் சத்தம் வர, எல்லாம் ஓடோடி சென்று பார்த்தன. உடம்பு முழுக்க ரத்த காயங்களுடன் புலிக்குட்டி படுத்திருந்தது. ஓடோடி சென்று அதை அள்ளி அணைத்தது தாய்புலி. ஒரு புலி ஓடிபோய் சுனையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து ரத்த காயத்தை துடைக்க ஆரம்பித்தது. காய்ந்த இலையை எடுத்து மெதுவாக விசிற ஆரம்பித்தது கரடி.
குட்டியின் வாயில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றியது யானை. புலிக்குட்டி மெதுவாக கண்களை திறந்தது
"என்ன நடந்தது ?" என்று குட்டியிடம் கேட்ட மிருகங்களிடம், வலியில் முனகினபடியே " நான் விளையாடிக்கொண்டே வெகு தூரமா வந்துவிட்டேன். திரும்பவும் காட்டுக்குள் வர வழி தெரியவில்லை. இதற்குள் என்னை பார்த்துவிட்ட மனிதர்கள் என்னை துரத்த ஆரம்பித்துவிட்டார்கள். கல், கட்டைகளை என்மீது எறிந்தார்கள். நான் ஓடி வந்து இங்கே ஒளிந்து கொண்டேன். என்னை கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் திரும்பி போய்விட்டார்கள்" என்றது.
"அட அசடே! நீ ஏன் மனிதர்கள் வாழும் பகுதிக்கு போனாய். அவர்களால் நமக்கு எப்போதுமே துன்பம்தானே" என்று தாய் சொல்ல, "அது மனிதர்கள் வாழும் பகுதி என்று எனக்கு எப்படி தெரியும் ?" என்று எதிர் கேள்வி கேட்டது குட்டி.
"நீ போன திசையில் ஒரு இடத்தில்" எச்சரிக்கை. இது விலங்குகள் வாழும் பகுதி. போனால் அபாயம்" என்று மனிதர்கள் ஒரு அறிவிப்பு பலகை எழுதி வைத்திருக்கிறார்களே. அதை வைத்தே அது மனிதர்கள் வாழும் பகுதி என்பதை தெரிந்து கொண்டு அந்த சாலைக்குள் நீ வந்து விடுவதுதானே ?" என்று கேட்டது முயல்.
"தப்பி ஓடி வருகிற அவசரத்திலும் வழியில் நிறைய அறிவிப்பு பலகைகளை பார்த்தேன். ஆனால் அதில் என்ன எழுதி இருந்ததென்பது புரியவில்லை " என்று அசடு வழிந்தது குட்டி புலி.
"மனிதர்கள் மொழியை படிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்காமல் எல்லாவற்றையும் கற்று தெரிந்து வைத்திருந்தால், அறிவிப்பு பலகையை படித்து பார்த்து தப்பி வந்திருக்கலாம். இப்படி ஆபத்தில் சிக்கி தவித்திருக்க வேண்டாமே ? நமது மொழியை பாதுகாப்பதும் முக்கியத்துவம் கொடுப்பதும் நல்ல விசயந்தான். ஆனால் மற்ற எல்லா மொழியையும் தெரிந்து வைத்துக்கொண்டால் இக்கட்டான நேரத்தில் கை கொடுக்குமே " என்று தாய் புலி சொன்னது.
"அம்மா நீ சொல்வது ரொம்ப சரி. நாளையிலிருந்து நான் ஒழுங்காக பள்ளி செல்வேன். பள்ளியில் நல்ல விஷயங்கள்தானே கற்று தரப்படுகிறது. அதை ஆசையாக, அக்கறையாக கற்று கொள்வேன் " என்று குட்டி புலி சொல்ல, "அப்பாடா. இனிமேல் ஒழுங்காக பள்ளிக்கு செல்லும் புலிக்குட்டி " என்று நிம்மதி பெருமூச்சு விட்டது தாய்புலி" என்று கதையை முடித்தாள் பாட்டி.
"பாட்டி இந்த கதை மூலமா நீ எங்களுக்கு என்ன சொல்ல வரேன்னு எங்களுக்கு நல்லாவே புரியுது. நாங்களும் புலிக்குட்டி வந்த முடிவுக்கே வந்துட்டோம். மம்மி எந்தெந்த சப்ஜெக்டுக்கு எல்லாம் tuition க்கு அனுப்புறாங்களோ அத்தனைக்கும் போவோம். இப்போ உனக்கு சந்தோசம்தானே ?" என்று பிரபுவும் மனோவும் கேட்க, "ரொம்பவும் சந்தோசம். இந்த சந்தோசத்தை நாம இனிப்பு சாப்பிட்டு கொண்டாடலாம். உங்களுக்காக பால் பாயசம் செய்திருக்கிறேன். இதோ எடுத்திட்டு வர்றேன்" என்று எழும்பி சென்றாள் பாட்டி.
No comments:
Post a Comment