Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, May 16, 2012

Stories told by Grand -Ma ( Story number - 15 )

  

( நான் எழுதிய இச்சிறுகதை, படக்கதையாக11.11.2000   தினமணி - சிறுவர்    
      மணியில் வெளியாகியுள்ளது ) 
     
      
                                                      இரும்பும் கண்ணாடியும் !

"பாட்டி" என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்த பாட்டி , கதவோரம் லாவண்யா நிற்பதைக்கண்டு, "மனோ அக்கா, ஜெயந்தி, புவி, ரேகா எல்லாரும் விளையாட போனாங்களே. நீ அவங்க கூட போகலையா ?" என்று கேட்க, கண்களில் கண்ணீர் வழிய "பாட்டி, மனோ அக்கா என்னை விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டேங்கிறா " என்றாள்.
"நான் கூப்பிட்டேன்னு சொல்லி அவளை வர சொல்லு" என்று பாட்டி சொன்ன அடுத்த நிமிடமே தலை தெறிக்க ஓடிய லாவண்யா, மனோவை அழைத்து வர அவள் பின்னாடியே மற்ற குழந்தைகளும் ஓடி வந்தார்கள். 
"ஏன் பாட்டி கூப்பிட்டே ? சீக்கிரம் சொல்லு. கேமை பாதியிலே விட்டுட்டு ஓடி வந்திருக்கிறேன் " என்றாள்.
"லாவண்யாவை ஏன்டி விளையாட்டில் சேர்த்துக்கலே. பாவம், அழறா பாருடி  அவ. அவளையும் சேர்த்துக்கோடி." என்று பாட்டி சொல்ல, மனோவின் முகத்தை பரிதாபமாக பார்த்தபடி லாவண்யா நின்று கொண்டிருந்தாள். 
"பாட்டி. அவ சரியான சோனி பாட்டி. நாங்க இன்னிக்கு கபடி ஆடறோம். நானே இங்கே வந்துதான் ஆட கத்துக்கறேன். நான்  ஒரு சைடு லீடர். ஏற்கனவே  எங்க சைடு ரொம்ப வீக். அவளை சேர்த்துகிட்டா கண்டிப்பா நாங்க தோத்துடுவோம் பாட்டி. விளையாட்டில் கீழே விழுந்தா அவ அழுவா பாட்டி. அன்னிக்கு ஓடி பிடிச்சு விளையாடும் போது கீழே விழுந்ததுக்கு அவ அழுதது உனக்கு தெரியும்தானே " என்று மனோ சொல்லும்போதே "பாட்டி, இன்னிக்கு நான் கீழே விழுந்தா, அடிபட்டாகூட அழ மாட்டேன் பாட்டி " என்றாள் லாவண்யா.
"பாருடி, பாவம்டி குழந்தை " என்று சிபாரிசு செய்தாள் பாட்டி.
"போ பாட்டி, நீ என்ன சொன்னாலும் சரி, அவ வேண்டாம், அவ வீக். அவளாலே ஆடி ஜெயிக்க முடியாது " என்று சொல்லியபடியே வெளியில் ஓட தயாரானாள் மனோ. 
"இரு. நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லிட்டு போடி "
"சீக்கிரம் கேளு பாட்டி "
"உங்க எல்லாருக்கும் இரும்பு, கண்ணாடி பாட்டில், ஆசிட் பத்தியெல்லாம் தெரியும்தானே ?"
"ஆமாம் " என்ற குரல் கோரசாக வந்தது.
"என்ன தெரியும் சொல்லு "
"இரும்பு ரொம்ப ஸ்ட்ராங்க். லேசில் வளைக்க முடியாது. ஒடிக்க முடியாது. கண்ணாடி பாட்டில் பார்க்க அழகாதான் இருக்கும். ஆனா கை தவறி கீழே விழுந்தா உடனே நொறுங்கி தூளாயிடும்." என்று ஜெயந்தி சொல்ல, "ஆசிட் இருக்கே அது ரொம்ப ஆபத்தானது. எந்த பொருள் மேலே பட்டாலும் அதை உடனே அரிச்சிடும்" என்றாள் ரேகா.
"இரும்பைக்கூடவா அரிக்கும். இரும்புதான் ரொம்ப ஸ்ட்ராங் ஆச்சே ?" என்று பாட்டி கேட்டாள்.
"அரிச்சிடும் பாட்டி. கொஞ்சம் கொஞ்சமா அரிக்க ஆரம்பிச்சுடும்" என்றாள் புவி.
"ஆசிடை நாம எதிலே வச்சிருப்போம் ?" என்று பாட்டி கேட்க "கண்ணாடி பாட்டிலில்தான்" என்று பதில் சொன்னாள் மனோ. 
"உறுதியான இரும்பை அரிக்கிற ஆசிடால், கீழே விழுந்ததும் உடைகிற வலுவில்லாத கண்ணாடியை எதுவும் செய்ய முடியாது . அப்படித்தானே ?"
என்று பாட்டி கேட்க "ஆமாம்" என்ற தலையாட்டல் எல்லோரிடமும் இருந்தது.
"அப்போ வலுவில்லாத பொருளுக்கும் ஒரு தனி தன்மை இருக்கிறமாதிரி நீங்க நோஞ்சானு சொல்லி ஒதுக்கிற இந்த லாவண்யாவுக்கும் எதோ ஒரு திறமை இருக்கத்தானே செய்யும். அன்றைக்கு கீழே விழுந்தாள், அழுதாள் என்கிறதுக்காக அவ என்னைக்குமே விளையாட லாயக்கில்லைன்னு நீங்களே முடிவு கட்டலாமா ? அவளுக்கு சந்தர்ப்பம் கொடுத்து பார்த்த பின்னாடிதானே எந்த முடிவுக்கும் வரணும் !" என்று கேட்டாள் பாட்டி.
மனோவின் முகத்தை நம்பிக்கையோடு பார்த்தபடி நின்றாள் லாவண்யா.
"சரி பாட்டி. அவளை விளையாட்டில் சேர்த்துக்கிறோம்" என்று அனைவரும் சொல்ல, பாட்டியின் முகத்தை நன்றியோடு பார்த்தாள் லாவண்யா.
"பாட்டி, கதை எதுவும் இல்லையா ?"என்று கிண்டலாக கேட்டாள் மனோ.
"உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச கதையே ஒண்ணு இருக்கே ! " என்று பாட்டி சொல்ல 'என்ன அது என்பதுபோல சிந்தனையில் ஆழ்ந்தார்கள் அனைவரும்.
"அதுதாண்டி, ஸ்கூலில் படிச்சிருப்பீங்களே, தூங்குகிற சிங்கத்தை ஒரு சுண்டெலி எழுப்பிடும். தூக்கம் கலைந்து கோபமா எழும்பின சிங்கம் சுண்டெலியை கையில் பிடிச்சதுமே, 'என்னை எதுவும் செய்யாமே விட்டுடு. நான் தெரியாமே பண்ணிட்டேன். என்னை விட்டுட்டா, உன்னோட கஷ்ட நேரத்தில் நான் உதவி செய்வேன்'னு சுண்டெலி ப்ராமிஸ் பண்ணும்.
"நீயாவது எனக்கு உதவி பண்றதாவது ?. உன்னாலே என்ன உதவி பண்ண முடியும்? இருந்தாலும் உன்னை பார்க்க பாவமாயிருக்கு. அதனாலே உன்னை எதுவும் செய்யாமே விடறேன்'ன்னு  சொல்லி மன்னிச்சு விட்டுடும்.  அப்புறம் ஒருநாள் சிங்கம் ஒரு வலையில் மாட்டிக்கும்போது அந்த வலையை பல்லால் அறுத்து சிங்கம் தப்பிக்க சுண்டெலி உதவி பண்ணும். உடனே சிங்கம் "நான் உன்னை சாதாரணமா நினைச்சேன். ஆனால் நீ இன்னிக்கு என் உயிரையே காப்பாத்தி இருக்கிறே. உருவத்தை வச்சு யாரையும் தாழ்வா எடை போடகூடாதுனு தெரிஞ்சுகிட்டேன்'ன்னு சிங்கம் சொல்லுமே " என்று பாட்டி நினைவு படுத்தியதுமே, "ஆமாம் பாட்டி எங்களுக்கு இந்த கதை பாட புத்தகத்திலேயே வந்திருக்கு. சரி பாட்டி நாங்க விளையாட போறோம்  " என்றார்கள்  குழந்தைகள்
"ஆமாம். நீங்கள்லாம் இருக்கீங்க, அண்ணனை எங்கேடி காணோம் ?" என்று பாட்டி கேட்க "அவன் பாய்சோடு சேர்ந்து விளையாட ஆற்றங்கரைக்கு போயிட்டான் " என்று சொல்லியபடியே வெளியில் ஓடினாள் மனோ.
"ஹும். அவன் வரும் போது எந்த வில்லங்கத்தோடு, எந்த பஞ்சாயதோடு வர்றானோ தெரியலை"  என்று முணுமுணுத்தபடியே வீட்டு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் பாட்டி.

No comments:

Post a Comment