Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 18, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 25



  (  நான் எழுதிய இச்சிறு கதை 1996, ஜூலை 5, பாக்கியா வார இதழில்    
       வெளியாகியுள்ளது )                       
                          சுருக்குப் பை !

" தனம், எழுந்திரும்மா., இப்படியே வூட்டுக்குள்ளார முடங்கிக் கிடந்தா போன 
உயிர்  திரும்பி வருமா? ஏதோ நமக்குக் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு 
மனசைத் தேத்திகிட்டு ஆக வேண்டியதைப் பாரு. நீ வேலைக்குப் போய் 25 
நாளைக்கு மேலே ஆகப் போகுதே. உன்னைக் காணோம்னு வேறே யாரை
யாவது வேலைக்கு வச்சிட்டாங்கன்னா உன் பொழைப்பிலே மண் விழுந்திடப் 
போகுது. " என்றாள் பாக்கியம், குரலில் பாதி கனிவும் மீதி கண்டிப்புமாக !
" போகணும்க்கா , என்னை நம்பி இன்னும் ரெண்டு உசிரு இருக்குதே. 
 பொழைப்புக்குப் போனாத்தானே அதுக வயித்துக்கு கஞ்சி ஊத்தவாவது 
முடியும். .ம் ..  எனக்கு நானே எவ்வளவோ சமாதானம் சொல்லித்தான் 
பார்க்கிறேன். மனசு  ஆற மாட்டேங்குதே.  'புள்ளைக்கு ரொம்பவும் உடம்புக்கு 
முடியலே. இந்த மருந்தை வாங்கிக் கொடுத்தாதான் புள்ளைய உசிரோட 
பார்க்க முடியும்னு டாக்டர் சொல்றார். ஒரு முன்னூறு ரூபாய் இருந்தா 
குடுத்துட்டு சம்பளத்திலே கழிச்சுக்கோ"னு வக்கீல் வீட்டம்மா கிட்டே கேட்டதும்
கொஞ்சமும் தயங்காமே முள்ளங்கி பத்தை மாதிரி முன்னூறு ரூபாயைத் 
தூக்கிக் கொடுத்தாங்க. அதை வாங்கி இடுப்பிலே சொருகிகிட்டு பஸ் ஏறி  வீடு
வந்து  சேர்றதுக்குள்ளே  எவனோ அதை எடுத்துட்டானே. அந்தப் பணம் மட்டும் 
இருந்திருந்தா என் புள்ளையப் பறி கொடுத்திருப்பேனா?  புருசன்தான் சரி
இல்லே. பொண்டாட்டியைக் காப்பாத்தவும் துப்பில்லே. பெத்தவங்களைக் 
காப்பாத்தவும் துப்பில்லே . என் புள்ளை முகத்தைப் பார்த்துதானே சந்தோசமா 
இருந்தேன். இருந்த ஒண்ணையும் வாரிக் குடுத்திட்டேனே . என் பணத்தை 
திருடினவன் நல்லா இருக்க மாட்டான். என் வயிறு எரியற மாதிரி அவன் 
குடும்பமும் எரிஞ்சு போகணும். போறேன். நேரே புவனேஸ்வரி கோயிலுக்குப் 
போறேன். போய்  ஆத்தா கோயில் வாசலில் ரெண்டு ரூபாய்க்கு கற்பூரம் 
வாங்கிக் கொளுத்தி வச்சிட்டுப் போறேன்." என்று சொல்லிக் கொண்டே 
வேலைக்கு  கிளம்பினாள் தனம் .
தனத்தின் நிலைமை பக்கத்து வீட்டு பாக்கியத்துக்கு நன்றாகவே தெரியும். குடி 
காரப் புருஷன். அவனோட வயசான தாய் தகப்பன்.  எதோ நாலு வீடுகளில் 
பத்துப் பாத்திரம் தேய்த்து, தனம்  கொண்டு  வரும் பணத்தில்தான் குடும்பம் 
நடந்து கொண்டிருந்தது. இந்த நிலைமையில் பிள்ளைக்கு மருந்து வாங்க 
பணத்துக்கு எங்கே போவாள் . கடனாக வாங்கிக் கொண்டு வந்த பணத்தையும் 
கண் மூடித் திறப்பதற்குள் எவனோ திருடிக் கொண்டு போய் விட்டான். பணமும் 
போய் பிள்ளையும் போனால் வயிறு எரியாமல் என்ன செய்யும். ஊம் .. கடவுள் 
தனத்தை  ரொம்பவும் சோதிக்கிறார் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்த சிவா " பிரபு, நீ உன் 
லக்கேஜை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போ. உன்னை ஆபீசில் வந்து மீட் 
பண்றேன். கருணாநிதி நகர் வரை போயிட்டு வந்திடறேன்." என்றான்.
"ஏண்டா, பாவி, வீட்டை விட்டுக் கிளம்பி வந்து முழுசா முப்பது நாள் ஆச்சு.
நாம பொறந்த மண்ணை மிதிப்பது எப்போ ? வீட்டில் போய்  வயிறார 
சாப்பிடுவது  எப்போ.? இந்த ஹோட்டல் சாப்பாட்டை சாப்பிட்டு நாக்கு செத்துப் 
போய்க் கிடக்குன்னு ட்ரெயினில் வழி நெடுக புலம்பிக் கொண்டு வந்தே .
இப்போ என்னடான்னா கருணாநிதி நகர் வரைக்கும்  போறேன்னு சொல்றே.
நேரே G .M வீட்டுக்கு  போகப் போறியா ? இல்லே அந்த ஏரியாவில் புதுசா 
ஏதாவது பிகரை ப்ராகெட் பண்ணி வச்சிருக்கிறியா " என்றான் பிரபு.
" இவன் ஒருத்தன் வளவளனு . ப்ராக்கேட்டும் இல்லே ஜாக்கெட்டும் இல்லே.
நாம் டூர் போறதுக்கு முன்னாடி சில டாகுமெண்டில் கையெழுத்து வாங்க  G .M
வீட்டுக்கு போயிட்டு வந்தேனில்லையா. அப்போ பஸ் ஸ்டாப் பக்கத்தில் ஒரு 
சுருக்குப் பை கிடந்தது. எடுத்துப் பார்த்தேன். உள்ளே முன்னூறு ரூபாய் 
இருந்தது.  பஸ் ஏறுகிற அவசரத்தில் யாரோ கீழே விட்டுட்டாங்க போலிருக்கு. 
யாருடையது என்று கேட்டு விசாரிக்க எனக்கு நேரமில்லை. எனக்கு  
பாம்பே மெயில் பிடிக்கிற அவசரம். அதனால் அதை கையோடு கொண்டு 
வந்துட்டேன்.  இந்த ஒரு மாசமா அதுவே மனசில் ஒரு உறுத்தலா இருந்தது.
போலீசில் ஒப்படைச்சாலும் அது சரியான நபரிடம் போய்ச் சேரும்  என்பது
என்ன நிச்சயம்? அதனால் இந்த பணத்தை எங்கிருந்து எடுத்தேனோ , அந்த 
இடத்துக்குப் பக்கத்திலேயே ஓர் கோயில் இருக்கிறது. அங்குள்ள உண்டியலில் 
போட்டு விடலாம்னு நினைக்கிறேன். அதைப் போட்டு விட்டு பிறகு என் 
வீட்டுக்குப் போகிறேன். உன்னை ஆபீசில் வந்து பார்க்கிறேன் " என்று சொல்லி 
விடை பெற்றான்  சிவா.
கருணாநிதி நகர்  புவனேஸ்வரி கோயில் வாசலில் நின்று , " கடவுளே, நான் 
செய்றது சரியா தப்பான்னு எனக்கு தெரியாது. கீழே கிடந்தது எடுத்த பணத்தை 
உன் கோயில் உண்டியலில் போடறேன். நீ அதை உரியவர்களிடம் சேர்த்து
விடு " என்று மனமுருக வேண்டிக்கொண்டு கோயில் உள்ளே சென்று உண்டியலில் 
பணத்தைப் போடும் போது  கோயில் வெளி வாசலில் நின்று  கொண்டிருந்த தனம், 
" தாயே, புவனேஸ்வரி, நீ இன்னும் எத்தனை நாளைக்கு தான் 
எல்லாத்தையும் பார்த்துக்  கொண்டு மௌனமா இருக்கப் போறே ?   என்
பணத்தைத் திருடினவன் நல்லா இருக்கக்கூடாது. என் வயிறு எரிகிற
மாதிரி அவன் குடும்பமும் குழந்தை குட்டிகளும் எரிஞ்சு போகணும்" என்று
சொல்லிக் கொண்டே நடைப் படியில் கற்பூரம் ஏற்றிக் கொண்டிருந்தாள்.

( இந்த கதைக்கு நான் கொடுத்திருந்த தலைப்பு " சாபம் யாரைச் சேரும் ? " .ஆனால்
 " சுருக்குப் பை " என்ற தலைப்பில் இந்தக் கதை வெளியாகி இருந்தது.)

No comments:

Post a Comment