( நான் எழுதிய இச்சிறுகதை May31, 1996 பாக்கியா வார இதழில் வெளியாகி யுள்ளது )
வீட்டை விட்டு கிளம்பும் முன் மூன்றாம் முறையாகக் கேட்டுவிட்டான் சிவகுமார் "வீட்டுலே இருக்கிற அத்தனை நகையையும் எடுத்துக்கிட்டு போய்த்தான் ஆகணுமா ? " என்று.
" இதோ பாருங்க,பொம்பளைங்க, நாள்கிழமைன்னா நகை போடறது, பட்டு உடுத்தறது எல்லாம் அவங்க சந்தோசத்துக்காக மட்டும் இல்லே. புருஷன் கௌரவத்தை உயர்த்திக் காட்டறதுக்காகவும்தான் . நாங்க இருக்கிற நிலையை பார்த்துதான் சொசைட்டியில் உங்களுக்கு மதிப்பு குடுப்பாங்க .நினைவில் இருக்கட்டும்" என்றாள் சீதா.
" சொசைட்டியில்னு சொல்லாதே. உன் பொறந்த வீட்டில்னு சொல்லு " என்றான் சிவகுமார்.
" சரி, ஏதோ ஒன்னு." - சீதா
"சீதா, நீ நகை போட்டுக்கிறதைப் பத்தி எனக்கொரு அப்ஜெக்சனும் இல்லே. குழந்தையை அழைச்சிகிட்டு அவ்வளவு தூரம் தனியாகப் போறே.நீ ஒரு ஞாபகமறதி ப்ரொபசர் ஆச்சே. நகையையும், குழந்தையையும் பத்திரமாக் கொண்டு போய்ச் சேர்க்கனுமேன்னுதான் கவலைப்படறேன்."
"அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம்.என் கழுத்தைப் பார்த்தீங்களா ? வெறும் கயிறு மட்டும்தான் போட்டிருக்கிறேன்.எல்லா நகையையும் ஒரு சின்ன டிபன் பாக்ஸில் போட்டு அதை டிபன் காரியருக்குள் இட்லிக்கு நடுவில் வச்சிருக்கிறேன். அதுதான் ஷேப்ட்டி லாக்கர். பார்க்கிறவங்க சாப்பாட்டு பாத்திரம்னு நினைச்சிப்பாங்க".
வீட்டைப் பூட்டிக்கொண்டு ஆட்டோ பிடித்து திருவள்ளுவர் பஸ் நிலையம் வந்து சேர்ந்தனர். பஸ் இன்னும் நிலையத்துக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. இருவரும் குழந்தையுடன் ஒரு ஓரமாக நின்றனர்.
திடீரென்று " என்னங்க, ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன் " என்றாள் சீதா .
"என்ன?" என்றான் சிவகுமார் சலிப்புடன்
" பக்கத்து வீட்டு மாமியின் ரேஷன் கார்டை பாமாயில் வாங்கிறதுக்காக நான் வாங்கினேன்.குடுக்க மறந்துட்டேன். கடிகார அலமாரியில் இருக்கு. நீங்க ஞாபகமா எடுத்துக் குடுத்துடுங்க " என்றாள் கெஞ்சலாக.
"எந்த பொருளையும் வாங்கின உடனே திருப்பி குடுக்கிறதுக்கு என்ன ? உன் அம்மா வீட்டில் சீராடிவிட்டு நீ வந்து சேர இன்னும் ஒரு மாச காலமாகும். அது வரை அவங்க ரேஷன் வாங்காமே இருப்பாங்களா ? நல்லவேளை. இப்பவாவது சொன்னியே. நான் ஆடிட்டுக்காக பம்பாய் போய் வர இன்னும் ஒரு மாசமாகும். வேறு எதை எதை மறந்து வச்சிட்டு வந்தே ? சீக்கிரமா ஞாபகப்படுத்திச் சொல்" என்றான் கடுப்புடன்.
மனைவியின் முகம் வாடுவதைக் கண்டதும் சமாதானம் செய்யும் குரலில்,"எந்தப் பொருளையும் வாங்கின மாதிரி திருப்பி கொடுக்க வேண்டாமா? போகட்டும் விடு. வீட்டில் மாமா மாமியை நான் ரொம்பவும் கேட்டதாகச் சொல்.நான் கல்யாணத்துக்கு வர முடியாமல் போனது பற்றி தப்பா நினைக்க வேண்டாம்னு எடுத்துச் சொல்லு. என் குட்டி மைத்துனியிடம், நான் ஆபீஸ் வேலையா பம்பாய் போறது தவிர்க்க முடியாத ஒன்னு. திரும்பி வரும்போது நேரே அங்கே வருவேன்னு சொல்லு. மறந்திடப் போறே. ஞாபகமா சொல்லு. நகை பத்திரம்டி. ஒண்ணு இல்லே ,இரண்டு இல்லே , முழுஸா 30 பவுன் நகை . ஜாக்கிரதை. பகலில் போகலாம்.சொன்னா கேட்டாதானே.? எதிலும் உனக்கு பிடிவாதம்தான் " என்றான்.
" உங்க பையனை வச்சிகிட்டு பகல் பிரயாணம் பண்ண முடியுமா? பஸ் கிளம்பி செங்கல்பட்டு போறதுக்குள்ளே 'போரடிக்குது. பஸ்சை விட்டு இறங்குடி' என்பான். நைட் பஸ் என்றால் பாதி தூரம் தூக்கத்திலேயே கழிந்துவிடும் .விடியற நேரத்தில் ஊர் போய்ச் சேர்ந்திடலாம் . அவன் தொந்தரவும் இராது. என் தூக்கமும் கெடாது. அதைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே " என்றாள் சீதா.
பஸ் வந்து நின்றது. டிரைவருக்கு பின் பக்கமுள்ள சீட் புக் ஆகியிருந்தது .
" சரி, பஸ் கிளம்பப் போகுது. ஜாக்கிரதையாப் போய்வா. லெட்டர் போடு.
என்னடா. குட்டிப்பயலே, அம்மாவைப் படுத்தாமல் சமர்த்தாக இரு. நீ ஒருத்தன் இருக்கிறதை அப்பப்போஅவளுக்கு ஞாபகப் படுத்து. அவளுக்கு எப்பவும் மறதி அதிகம். அம்மா வீட்டுக்குப் போகப் போகிற குஷியில் உன்னை மறந்து போய் பஸ்ஸில் விட்டுட்டு இறங்கிடப்போறா. ஒவ்வொண்ணையும் நீ ஞாபகப்படுத்து. டாட்டா " என்று சொல்லி , செல்லமாகக் கன்னத்தைக் கிள்ளி வழியனுப்பினான்.
"அம்மாக்கு நான் எல்லாத்தையும் ஞாபகப்படுத்துவேன்,டாட்டா " என்றான் சரவணன், மழலையில். பஸ் கிளம்பி சென்றது.
எல்லோரும் கண்ணயர்ந்திருந்த நேரம் . சடன் பிரேக் போட்டு பஸ் நின்றது.
கீழே விழுந்து விடாமல் சமாளித்து, குழந்தையை இறுகப் பிடித்துக் கொண்டாள் சீதா.
எங்கும் கும்மிருட்டு. பஸ் உள்ளே மட்டும் விளக்கெரிந்தது. இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு தடித்த குரல். அதைத் தொடர்ந்து ஒருவன் பஸ் உள்ளே வந்து டிரைவர் அருகில் நின்று கொண்டான். பஸ்ஸில் படிக்கட்டு
அருகே துப்பாக்கியுடன் இருவர் நிற்க, இன்னொருவன் " இருக்கிற இடத்தை விட்டு யாரும் நகர வேண்டாம்.. ஏதாவது ஹீரோ விளையாட்டு விளையாட நினைச்சா உடம்பு சல்லடை ஆகிவிடும். பொம்பளைங்க எல்லாரும் காதிலே,கழுத்திலே இருக்கிறதைக் கழக்ட்டிக் குடுங்க. ஆம்பிளைங்க கையிலுள்ள வாட்ச், மோதிரம், பணம் எல்லாத்தையும் மரியாதையா இதுலே போடுங்க " என்று சொல்லி தேர்தல் நிதி திரட்டுவது போல் துண்டை ஏந்திக் கொண்டு வந்தான் ஒரு தடித்த ஆள் . ஆண்களே மறு பேச்சு பேசாமல் கையில் உள்ளதைத் துண்டில் போடும் போது , பெண்களின் நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டாம். பயத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்
அரைகுறை தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை " என்னம்மா ?" என்றான்.
"நீ தூங்கு சரவணா . அந்த அங்கிள் நம்ம கிட்டே இருக்கிற சாமான்களைக்
கேட்கிறார்.நீ தூங்குடா " என்றாள் , குழந்டை பயந்து விடப் போகிறானோ
என்ற .பயத்தில்.
அத்தனை பேரிடமும் கலெக்சன் பண்ணின தடியன்,கடைசியாக சீதா அருகில் வந்தான்.
" உனக்கு வேறே தனியா சொல்லனுமா? உம் .. ஆகட்டும் " என்றான்.
"என்னிடம் கம்மல் மட்டுந்தான் இருக்கு. வழிச்செலவுக்கு இந்த பத்து ரூபாய் கையில் வச்சிருக்கிறேன். அவ்வளவுதான் " என்றாள் ரொம்பவும் பவ்யமாக .
"அட,சரியான பொம்பளையா இருக்கிறியே. இருக்கிறதை எடுத்துப் போடும்மா"என்று அதட்டினான் அந்த முரடன்.
"இதோ" என்றபடி வெகு சிரமப்பட்டு கம்மலைக் கழற்றி, பத்து ரூபாயுடன்
சேர்த்து டவலில் போட்டுவிட்டு, நெஞ்சைத் தொட்டு ஆசுவாசப் படுத்திக்
கொண்டாள் . முப்பது பவுன் நகையைக் காப்பாற்றிவிட்டோம் என்கிற திருப்தி சீதாவுக்கு.
கீழே இறங்குவதற்காக தடியன் வாசல் படி அருகில் சென்றான். அந்த
இருளையும் , மயான அமைதியையும் கிழித்துக் கொண்டு குழந்தை
சரவணனின் சன்னமான குரல், " ஐயோ , அம்மா, அப்பா சொல்ற மாதிரி
உனக்கு எப்பவும் மறதிதான்.டிபன் காரியரில் 30 பவுன் நகை இருக்குனு நீ
அப்பாவிடம் சொன்னியே. அதை இந்த அங்கிளிடம் குடுக்க மறந்து போயிட்டியே"
அந்த குரல் வாசற்படி அருகே சென்ற தடியனை தடுத்து நிறுத்தியது.
No comments:
Post a Comment