Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 06, 2012

கனவுகளே ! ஆயிரம் கனவுகளே !!

" நடக்கும் என்பார் நடக்காது;  
   நடக்காதென்பார் நடந்து விடும் !
  கிடைக்கும் என்பார் கிடைக்காது;  
  கிடைக்காதென்பார் கிடைத்து விடும் !! " - என்பது பழைய திரைப்பட பாடல் வரிகள்.  
  
மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்த வரிகள் அப்படியொன்றும்  இலக்கிய   நயம்  மிகுந்த வரிகளல்ல; ஆனால் என்னைப் பொருத்தவரை  இந்த வரிகள்  ஜீவனுள்ள,  உயிரோட்டமான வரிகள்.

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். தலைவலி மட்டுமல்ல; ஒருவருடைய ஆசைகளை, ஏக்கங்களை  நாம்  மிகத்  தெளிவாக   புரிந்து கொள்ள வேண்டுமா ?  அதே உணர்வுகளை நாமும் அனுபவித்து இருந்தால் மட்டுமே  மற்றவர்களின் எண்ணங்களின், ஆசைகளின் தாக்கத்தை நம்மால்  புரிந்து   கொள்ள முடியும்.
சிதம்பரம் சென்று சிவனை தரிசிக்க நந்தனார் ஆசைப்பட்டார் என்று புராணக் கதையாக கேட்டிருக்கிறோம். அந்தஆசையின் தாக்கத்தை என்னால் மிக முழுமையாக உணர முடிந்தது. காரணம், ஸ்ரீரங்கம் சென்று ரங்கனை தரிசிக்கும்  ஆசை  ஒரு  காலத்தில்  எனக்கும் இருந்தது.
இவ்வளவுக்கும் திருச்சி ஒன்றும் போகமுடியாத  தூரத்தில் இல்லை.  எனது சித்தப்பா வீடு திருச்சியில் இருந்தது;  நினைத்தால் போய்  பார்த்து  விட்டு வந்து விடலாம். ஆனால் போய் வர  முடியாதபடி  ஏதாவது ஒரு வகையில்   தடங்கல் வந்து  கொண்டே இருந்தது.
என்னுடைய  பிரண்ட்ஸ் சிலரிடம் சொல்லி குறைபட்டுக் கொள்வேன். "அதனாலென்ன? உங்க ஊர் திருநெல்வேலிக்கு போறீங்கதானே. நீங்க  ட்ரெயினில் உட்கார்ந்தே கோபுர தரிசனம் பண்ணலாமே " என்பார்கள்.
சரி, நேரில் சென்றுதான் தரிசிக்க முடியவில்லை,  எனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு போகும் போதாவது கோயில் கோபுர  தரிசனம்  செய்யலாம் என்று நினைத்து ட்ரெயினில் ஏறினதுமே ஜன்னலோரமாக  உட்கார்ந்து கொள்வேன்.
சாயங்காலம் நெல்லை எக்ஸ்ப்ரஸில் கிளம்பினால், சரியாக நடு நிசி சமயத்தில்    தான்  திருச்சி சென்றடையும். செங்கல்பட்டு தாண்டினதுமே "திருச்சி  எப்போ வரும்"னு  தவம் கிடப்பேன். 
திருச்சி வரும்போது  தூங்கி விடுவேன். அரக்கப்    பறக்க  எழும்பி  "திருச்சி வந்தாச்சா?" என்பேன் விழித்துக் கொண்டு உட்கார்ந் திருப்பவர்களிடம்.
"திருச்சி தாண்டி பத்து நிமிஷமாச்சு. ஏம்மா நீங்க திருச்சி இறங்கணுமா?"  என்பார்கள். எனக்கு அழுகையே வரும். இப்படி ஒரு முறை இருமுறை அல்ல. ஒவ்வொரு முறையும் இப்படித்தானாகும். யாராவது பில்லி சூனியம் வச்சு, திருச்சி வரும்போது  நம்மை தூங்க வைத்து விடுகிறார்களா  என்றெல்லாம் சந்தேகப் படுவேன்.

சொர்க்கவாசல் கதவு எப்படா திறக்கும்னு விடிய விடிய விழிச்சிருந்தவன்,  கதவு திறக்கும் நேரத்தில் தூங்கிப் போனான் என்று ஒரு பழமொழி 
சொல்வார்கள். என்னோட நிலைமையும் அப்படித்தான் இருந்தது.
குளிர்காலங்களில் நான் ஆஸ்துமாவில் மிகவும்  அவஸ்தைப் படுவேன்.   தெருவில் போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம்  நோய்க்கான டிப்ஸ் சொல்கிற  அளவுக்கு  என்னோட நிலைமை ஆகிவிட்டது. நான் படுகிற அவஸ்தையைக் கண்டு, மன அவஸ்தைப் பட்ட, பக்கத்து வீட்டு மாமி அவர்களுடைய குடும்ப டாக்டரிடம் என்னை  அழைத்துப்  போனார்கள் .
டெஸ்ட் பண்ணிப் பார்த்த டாக்டர், உங்களுக்கு  அப்படி யொன்றும்  நோய்   தீவிரமாக  இல்லை. ரொம்பவும் மைல்ட் தான். ஆனால் resisting power உங்களுக்கு    குறைவாக  இருப்பதால் அவஸ்தை அதிகமா இருக்குது " என்றார்
"இதுவரை என்னை டெஸ்ட் பண்ணின எல்லா டாக்டரும், dust alergy  காரணமாக எனக்கு    wheezing வருகிறது என்றார்கள்.   தூசியில்  போகாமல்   நான்  ரொம்ப  எச்சரிக்கையா இருக்கிறேன். பிறகு ஏன் வருகிறது?" என்றேன் குழந்தைத்தனமாக .
"நோய்க்கு பல காரணம் உண்டு; நிறைவேறாத  ஆசைகள்,   ஏக்கங்கள்  கூட சில சமயம் சிலருக்கு நோயாக மாறலாம்.  அப்படி ஏதாவது ஏக்கம்  உங்களுக்கு இருக்கா?" என்றார்
"திருச்சிக்கு போய் ரங்கனை தரிசிக்கனும்னு ரொம்ப வருஷமா எனக்குள்  ஒரு ஏக்கம். ஆனால் போக முடியவில்லை" என்றேன்.
"ப்பூ.இவ்வளவுதானா? நான் அடுத்த வாரம் சித்திரைமாச பூச்சொரிவுக்கு   சமயபுரம் போகிறேன், என்னோடு வாங்க. ஆனா ஒரே ஒரு கண்டிசன். என்  ஸ்பீடுக்கு ஏற்ற மாதிரி நீங்களும்  CO OPERATE  பண்ணனும்.  பூச்சொரிவுக்கு முதல்  நாள் ராத்திரி பத்துமணி பஸ் பிடிச்சு போவேன். மறுநாள் தரிசனம் முடித்துவிட்டு  ஒன்பது மணிக்குள் சென்னை  வந்து    விடுவேன். எனக்காக பேசன்ட்ஸ்  காத்திருப்பாங்க.   அதை   மட்டும்  நல்லா  நினைவில்   வைத்துக்கொண்டு    கிளம்பி வரணும்" என்றார்.
"சார், என்னோட  ஃபிரென்ட்  வெளியூர் பார்க்க ஆசைப்படுவாங்க . அவங்க, அவங்க ஹஸ்பென்ட் , ஒரு பொண்ணு, மொத்தம் மூன்று பேர். நம்ம கூட  அவங்களையும்   சேர்த்துக்கலாமா?" என்றேன்.
"எத்தனை பேர் வேணும்னாலும் வரட்டும்.  நானா  இடுப்பில்   தூக்கி   சுமக்கப் போகிறேன். பஸ் தானே சுமக்கப் போகிறது " என்றார்.
அவர் சொல்லியபடியே கரெக்ட் டைம்க்கு , நான், என்னுடைய பக்கத்து   வீட்டு மாமா-மாமி, என் தோழியின் குடும்பத்தினர்  மூன்று  பேர்  அவருடைய கிளினிக்  போய்  சேர்ந்தோம். டாக்டர் மகமாயி பக்தராம்.  ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிவுக்கு  சமயபுரம் போய் தரிசித்து விட்டு  அன்று இரவே திரும்பி விடுவாராம். 
வந்திருந்த நோயாளிகளை கவனித்து அனுப்பி விட்டு,  டாக்டரும் அவர் மனைவியும்  எங்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள். போகும்போதே, "நாளைக்காலை யில்  அஞ்சு மணிக்கெல்லாம் நாம சமயபுரம்   போயிடுவோம். குளியல், காபி, ரெண்டையும்  முடிச்சிட்டு மாரியம்மனை தரிசனம்    பண்றோம். பிறகு  அங்கிருந்து  கிளம்பி  ஸ்ரீரங்கம்  போயிட்டு மத்தியானம்  ரெண்டு மணி பஸ்  பிடிக்கணும்.  இரவு  ஒன்பதுக்குள்   சென்னை  வந்து சேரணும். எங்கேயும்  delay  ஆயிடக்  கூடாது" என்றார்.
பஸ்சில் ஏறி  உட்கார்ந்ததுதான் தெரியும். கிளம்பும் முன்பாக மாத்திரை விழுங்கி இருந்ததால்  நன்றாக  தூங்கி  விட்டேன். மறு நாள் பொழுது விடிந்து விட்டது. வாட்ச்சைப் பார்க்கிறேன். மணி 8.30.  பஸ்ஸோ  போய்க் கொண்டு இருக்கிறது 
" மணி 8.30 ஆகுதே. நாம இறங்கலையே"  என்று கேட்கிறேன்.
"இப்பத்தான் விழுப்புரம் தாண்டி இருக்கிறோம். அதற்குள் எங்கே நாம  இறங்கிறது?"   என்று பதில் வந்தது.
நான் விவரம் புரியாமல் விழிப்பதைப் பார்த்துவிட்டு, "வருகிற வழியில் ஒரு ஆக்சிடென்ட்.  இப்பத்தான் பாதை கிளியர் ஆச்சு. நூற்றுக்கணக்கில்  வண்டிகள்   வழி நெடுக  மணிக் கணக்கில் நின்னுட்டு இருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூங்கின  ஒரே  ஒரு  ஆள் நீங்க மட்டுந்தான் " என்றாள்  தோழி.
"என்னை ஏன்   எழுப்பலே?" என்று நான் சண்டை போட,  டாக்டரைப்   பார்த்து   " நான்  சொன்னேனா இல்லியா? " என்று அவள் கேட்டாள்.
"உங்க  ஃப்ரென்ட்  உங்களை எழுப்ப  ட்ரை  பண்ணினாங்க. நீங்க மெடிசின் எடுத்திருந்த தாலே, உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம்னு நான் தான்  சொன்னேன். நாம  சமயபுரம்  போய்   சேரவே  நேரமாகி விடும்  அதனாலே நீங்க ரங்கனை இங்கேயே  மறந்துடுங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் " என்றார் டாக்டர்.
அவர்மனைவி என்மீது ஒரு பரிதாபப்பார்வையை வீசினார். "கவலைபடாதேம்மா. என் மகனும், மருமகளும் எப்படியும் அடுத்த மாசம்  திருச்சி  போவாங்க. உங்களை  அழைச்சிட்டு போக சொல்றேன். காரிலேயே போயிட்டு வந்துடலாம்" என்றார்கள். ஆளாளுக்கு சமாதானம் வேறு  சொன்னார்கள்.  
நான் மனசுக்குள்ளேயே  ஒரு சபதம் எடுத்தேன். " ரெங்கா ,  இனிமே நான் உன்னைப் பார்க்கனும்னு  ஆசைப்படவோ ஏங்கவோ மாட்டேன். எந்தவொரு  முயற்சியும்  பண்ண மாட்டேன். எப்போ நீயாக என்னை "வா"ன்னு வரவழைக்கிறியோ   அன்றைக்கு வந்து நான் உன்னை தரிசித்துக் கொள்கிறேன் " என்று சொல்லி விட்டேன். 
அதன் பிறகு திருநெல்வேலி போக நேர்ந்த போதேல்லாம்கூட கோயில் கோபுரம்  பார்க்க ஆர்வம் காட்ட மாட்டேன்.
இப்படியே பல வருடம் ஓடிவிட்டது. இரண்டு ஆண்டுகள் முன்பு, என்னுடைய  தங்கை குடும்பத்தினருடன் சேர்ந்து பிள்ளையார்பட்டி போனேன். பிள்ளையார்  பட்டி,  புதுக்கோட்டை மட்டும் போய் வரலாமென்று  ப்ளான் . இரண்டு  இடத்திலும்  தரிசனம் முடித்துவிட்டு வரும்போது, கார்  டிரைவர்  "சார் திருச்சி வழியாகத்  தான்  போகிறோம். ஏதாவது கோயில் பக்கம்  போகணுமா?" என்று கேட்க,  "இன்னிக்கி புரட்டாசி சனி. அதனால்  ஸ்ரீரங்க நாதனை தரிசிக்கப்  போகலாம்" என்று  தங்கை  சொல்ல அன்றைய தினம் ரங்கன்  இருக்கும்  இடத்தில் காலடி   எடுத்து வைத்தேன். புரட்டாசி சனி என்பதால் சரியான கூட்டம். ஒரு ஆளுக்கு 250 ரூபாய் என்று டிக்கெட் வாங்கியும், கண் இமைக்கும் கணப்பொழுது நேரம்தான்  ரங்கனைக் காண முடிந்தது.
ஒவ்வொருமுறை திருப்பதி போகும் போதும், நினைத்தபடி திவ்ய தரிசனம்  சரிவர  கிடைக்காமல்  ஏமாறும்  போதும்  எனக்குள் ஒரு அசட்டு சபதம்   தோன்றும்.  அந்த சபதம் அன்றும் தோன்றியது. "என்றைக்காவது  ஒரு நாள் நான்  பிரதம  மந்திரியாக  வருவேன்.  அந்த பவரை  வச்சு  கூட்டத்தில் இடிபடாமே வரிசையில் நிற்காமே  கோயிலுக்குள்  வருவேன். என்னை யாரும்   இங்கே " ஜருகண்டி "   சொல்ல மாட்டாங்க.  வெளியே  பிடிச்சு  தள்ள மாட்டாங்க. அன்றைய  பொழுது  பூராவும் பாலாஜி  பக்கத்திலேயே உட்கார்ந்து தரிசனம் செய்வேன். மறுநாள் பிரதம மந்திரி பதவியை  ராஜினாமா செய்திடுவேன்"  என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
இதுவரை நீங்கள் கேட்டது   நடக்கும் என்பார் நடக்காது என்ற பாடல் 
வரிக்கான விவரம்; இனி நீங்கள் கேட்கப்  போவது   "நடக்காதென்பார்  நடந்து   விடும்".

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு ..  ரேடியோவில் " மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க " என்ற பாடல் ஒலி  பரப்பாகிக்  கொண்டிருக்கிறது.   ரேடியோவோடு  சேர்ந்து நானும் பாடிக் கொண்டே  வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு இருக்கிறேன். திடீரென்று மனதுக்குள் ஒரு எண்ணம். இந்த மருதமலை கோயம்புத்தூர் பக்கம் இருக்கிறதாக சொல்றாங்க.நமக்கு சொந்தம்னு சொல்லிக்க கூட  கோயம்புத்தூரில் யாரும் கிடையாது. அட்லீஸ்ட் ப்ரெண்ட்ஸ் கூட இல்லை. நாம கோயம்புத்தூர் போக  சான்ஸ் இல்லை. பிறகு  எங்கே  மருதமலை போறது? எப்படி ஈசன்  மகனோடு மனம் விட்டுப் பேசறது  என்றெல்லாம்  நினைத்துக்   கொண்டேன்.
மறுநாள் என்னைத் தேடி என் ஆபீசுக்கு வந்த என் சிஸ்டர்  "எங்க ஸ்கூல்  டீசெர்ஸ்  ஊட்டி கொடைக்கானல் போறதா இருந்தது. ஒருத்தங்களாலே  போக முடியாத சூழ்நிலை. நான் போகலே.  நீ  வேணும்னா   போயிட்டு   வாயேன் " என்றாள்.
"இல்லே.  வேண்டாம் " என்றேன்.
 " பணத்தைப் பற்றி கவலைப் படாதே, நான் தருகிறேன்" என்றாள்
"நீ வந்தால் பரவாயில்லை. நான் மட்டும் எப்படி அவங்களோடு போறது. வரலேன்னு  சொல்லிடு " என்றேன்.
"ஒரு வாரந்தானே . போய்வா " என்று  அவள்  சொல்ல,   வேண்டாம்  என்று  நான்   அடம்  பிடிக்க, " ஊட்டி  கொடைக்கானல்  பழனி  எல்லாம்  போனாக் கூட   அவங்க தங்கறது எல்லாமே   கோயம் புத்தூரில் தான். மருதமலை எல்லாம்      போறாங்க" என்றாள் .
அவ்வளவுதான். " சரி , டூருக்கு   நான் வர்றதா சொல்லிடு. சீக்கிரம் போய்  என்னோட  பேரை  புக் பண்ணு.   வேறே  யாராவது  என்னை  முந்திக்கப்   போறாங்க"னு  சொன்னேன்.
இதில் நான் வியந்த விஷயம் என்னவென்றால், ஒரு செவ்வாய்க்கிழமை யன்று,  நாம எங்கே மருதமலைக்கு போகப் போகிறோம் என்று நினைக்க  அதற்கு  அடுத்த செவ்வாய்க்கிழமையில் மருதமலையானைத்  தரிசித்துக்  கொண்டு இருக்கிறேன்.
அதைவிட ஆச்சரியமான விஷயம்: "கோயம்புத்தூரில்  எனக்கு  சொந்தம்,   ப்ரெண்ட்ஸ்னு  சொல்லிக்ககூட யாரும்  இல்லையே"னு நினைச்சேன்.
ஆனால் ஒருவாரமும் நாங்கள் தங்கி இருந்தது ஒரு V I P வீட்டில்.
கோயம்புத்தூர்  போய் சேர்ந்ததும், அங்குள்ள  ஒரு  வீட்டுக்கு  அழைத்துப்   போனார்கள். அந்த வீட்டிலுள்ள ஒருவரைப் பார்த்ததும், "இவரைப்  பார்த்தா நடிகர் பாக்கியராஜ் மாதிரி இருக்குதானே"என்று அருகில்  இருந்தவர் களிடம் கிசுகிசுத்தேன்.
"இவரை பார்த்தா பாக்கியராஜ்  மாதிரி இல்லை. பாக்கியராஜ்தான்  இவர்    மாதிரி  இருக்கிறார் " என்றார்கள்.
கிண்டல் பண்ணுகிறார்களோ என்ற  ஃபீலிங்கில் நான் விழிக்க, " இவர்  பாக்கியராஜோட  அண்ணன்" என்று விளக்கினார்கள்.என்னால் நம்பவே முடியவில்லை.
"பொய்தானே சொல்றீங்க?" என்று நான் நம்பாமல் கேட்க, என்னுடன்  வந்திருந்த  மற்ற டீச்சர்ஸ் " உனக்கு தெரியாதா? நாம தங்கியிருப்பது நடிகர் பாக்கியராஜ் ஸாரோட  சித்தி வீடு.  உங்க  அக்கா  சொல்லி  யிருக்கும்னு  நினைச்சோம்.  நம்ம  கூட வந்திருக்கும் நளினி,  பாக்கிய ராஜ் சாருக்கு சித்தி " என்று விளக்கம் சொன்னார்கள். பாக்கியராஜ்  சினி ஃபீல்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த சமயம் அது.  நாங்கள் தங்கியிருந்த ஒரு வாரமும் ராஜ உபசாரம் தான்.  ஆனால் நாங்கள் கொடைக்கானல்  போக முடியாமல் போனது  ஒரு தனிக் கதை. 
இப்போது நான்   சொல்லப்போறது  இரண்டாவது  இன்சிடென்ட்.  மொபசல் ஏரியாவில் இருந்து சிட்டிக்கு நான் ட்ரெயினில், ஆபீசுக்கு  வந்து போய்க்  கொண்டிருந்த    காலம் அது.
திடீரென்று ஒரு நாள் .... பீச் ஸ்டேஷன் டு செங்கல்பட்டு வரை போகின்ற  ட்ரைன்,  பீச்சிலிருந்து வண்டலூர் வரை  எந்த பிரச்சினையும் இல்லாமல்  வந்து சேர்ந்தது . பிறகு வண்டலூர் ஸ்டேசனில் இருந்து கிளம்பவே இல்லை.  என்ன  காரணம்  என்பதோ,  எப்போது கிளம்புமென்பதோ  யாருக்கும் தெரிய வில்லை . மிகவும்  போரடித்ததால்,  எங்களுடன் இருந்த பெண் ஒருத்தி  "எவ்வளவு நேரம்தான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருப்பது. வாங்க பக்கத்திலுள்ள  மூகாம்பிகை  கோயிலுக்கு போய்  வரலாம் " என்றாள் .
ஓரு சிலர் வரமறுக்க "அட, வாங்கப்பா.    நாம என்ன  கொல்லூர்  மூகாம்பிகை கோயிலுக்கு  போகப் போறோமா  என்ன ?  அட்லீஸ்ட்  இந்த கோவிலுக்காவது போய்வருவோம்" என்று  சொல்லி  அவர்களை அங்கு அழைத்துப் போனேன்.
அதற்கு அடுத்த ஞாயிறன்று சிறிய சகோதரி வீட்டுக்குப் போனதும்  அவள் "நாங்க எல்லாரும் கர்நாடகா, ஆந்திரா ஸ்டேட்ஸ்க்கு டூர்  போறோம். . பிரபு, மனோ  பேரோடு உன் பேரையும் குடுத்திருக்கிறேன்" என்றாள் .
எந்த கோவிலுக்கு நான் போக சந்தர்ப்பம் வராது என்று நினைத்தேனோ  அதே  கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் அந்த நினைப்பு  வந்த  ஒரு   வாரத்துக்குள்  தரிசனம்  செய்து கொண்டு இருக்கிறேன்.  எங்களை அங்கு அழைத்து சென்றது தமிழ்நாடு டூரிசம் அண்ட் டெவலப்மென்ட்CHAIRMAN ன் மனைவி என்பதால் எல்லா கோவில்களிலும் நிம்மதியாக எந்தவொரு இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்தோம்.
இப்போது சொல்லப்போவது  மூன்றாவது இன்சிடென்ட். ஆபீசில் லஞ்ச் டைம்ல் ரஜனி பற்றியும், அவர்  ஹரித்துவார்  போவது  பற்றியும்   பேச்சு வந்தது.
"ஆமாம்ப்பா. அவருக்கிருக்கிற வசதிக்கும், வாய்ப்புக்கும்  நினைச்சா போய் வரலாம்.  நாம என்ன அப்படியா ? நாம ஏதாவது சினிமாவில்தான் ஹரித்துவார் பார்க்க முடியும்" என்றேன்.
இந்த பேச்சு நடந்து முடிந்து கொஞ்ச நேரத்தில், வீட்டிலிருந்து phone. விஷயம்  என்னவென்றால்,  மீரட்டில் இருந்து சென்னை வந்திருந்த எனது  சகோதரியின்  மகளை திரும்பவும்  அழைத்து செல்ல,  தம்பியால்  இங்கு   வர  முடியாத நிலைமை. யாராவது  அவளுடன் டில்லி செல்ல வேண்டும்.
அங்கிருந்து தம்பி   மீரட்டுக்கு அழைத்து செல்வார். என்னால்  மீரட்   போக  முடியுமா  என்பது அவர்களின் கேள்வி. வேறு வழி இல்லாமல் நான் ஒத்துக் கொண்டேன். டில்லி போனோம். மீரட்டுக்கு  அழைத்து  செல்ல தம்பி,  டில்லி   வந்திருந்தார் .
வீட்டுக்குப் போனதுமே  "அக்கா, ஹரித்துவார் இங்கிருந்து நாலு மணி நேரத்தில்  போயிடலாம். வர்றீங்களா ? என்றார்.
நான் ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டேன். ஏனென்றால் மீரட்டிலிருந்து  வெகு  சுலபமாக ஹரித்வார் போய் வந்து விடலாம். அது  மிக அருகில் தான் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. இவ்வளவுக்கும் நான் ஹரித்வார் என்ற பேரைக்கூட உச்சரித்து இருக்கவில்லை.  அப்படியிருக்க மீரட்  போய்சேர்ந்ததுமே  ஹரித்வார்  போகலாமா  என்று  தம்பி கேட்டதும்  எனது ஆச்சரியத்தை  வர்ணிக்க  வார்த்தைகளே கிடையாது. 
அதைவிட ஆச்சரியம்,   டிசெம்பர்     மாதத்தில்,     ஊசிமருந்து, மாத்திரை  என்றுதான்    எனது  பொழுது கழியும். எனக்கு  குளிர்  தாங்கும் சக்தி  கிடையாது  . ஆனால்,  டிசம்பர்  மாத குளிரில் சிறு தும்மல்கூட இல்லாமல்,  டில்லி,  மீரட்,  ஹரித்துவார் என்று ஒரு வாரம் சுற்றி அலைந்திருக்கிறேன்,  எந்த வொரு  மெடிசினும் எடுத்துக் கொள்ளாமல்.
இனி  நான்காவது இன்சிடென்ட். என் வீட்டிலிருந்து என் சகோதரியின் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன்.  மீனம்பாக்கம் பிரிட்ஜில் பஸ் போய்க்கொண்டிருக்கிறது. அப்போது ஒரு flight  கிளம்பிப்  போய்க்   கொண்டு இருக்கிறது. இது  பல  வருடங்களாக  நான்  செல்லும் ரூட்தான் . பல வருடங்களாக நான் பார்க்கும்  காட்சிதான். அன்றைக் கென்று மனதுக்குள்  ஒரு பெருமூச்சு.
"நம்மால் விமானம் பறப்பதையும், யாராவது வெளிநாடு போனால், வந்து
டாட்டா சொல்லவும் முடியும். விமானத்தில் பறக்க முடியுமா என்ன ? "
என்ற   கேள்வி மனசுக்குள்.
சகோதரி வீட்டு மாடிப்படி ஏறிக் கொண்டிருக்கிறேன். " அஞ்சு, கொஞ்சம் வாங்களேன்" என்ற  குரல்கேட்டு திரும்பினேன். அழைத்தது கீழ் போர்ஷன் மாமி. "எங்க ஸ்டாப் சிலர் அந்தமான் நிகோபார்தீவுக்கு  போறாங்க. நீங்க வர்றீங்களா ? LTC போட்டுட்டு  போய் வரலாம் " என்றார்கள் .
"கப்பலில் தொடர்ந்து ரெண்டு மூணு நாள் ட்ராவெல் பண்றது ரொம்ப போர் மாமி " என்றேன்.
" flight  ல் தான் போறாங்க " என்றார்கள் 
அடுத்த நொடி, அந்தமான் போக நான் ரெடி. ஐந்து நாட்கள் அந்தமானை சுற்றினோம்.  Air India pilots   strike  காரணமாக  மேலும்  இரண்டு  நாள்  தங்கும் சூழ்நிலை. போன 35 பேரில் 33 பேர்  கிங் ஃபிஷரில்  பறந்து  விட்டார்கள். நாங்கள் ரெண்டு பேர் மட்டும் அந்தமானில் மாட்டிக் கொண்டோம்.  
முதல் நாள் ஏர்போர்ட் வரை வந்து திரும்பி போனோம். மறுநாள் ஏர் போர்ட்  வந்தோம் . அதே பதிலை சொன்னார்கள். எல்லாரும் கத்தினோம்,
ஆர்ப்பாட்டம் பண்ணிப் பார்த்தோம். கடைசியாக  அங்கிருந்த ஒருவரிடம்   ஒரே  ஒரு  கேள்வியை நாங்க ரெண்டு பேரும் கேட்டோம்.
"pilot strike என்றால் அவர்கள், நோட்டீஸ் கொடுத்துவிட்டு தானே strike பண்ண  ஆரம்பித்திருப்பார்கள். அந்த டேட்டில் நீங்க எப்படி டிக்கெட் issue  பண்ணினீங்க " என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்டோம்.
அவர் வேறொருவர் காதில் கிசுகிசுத்தார். உங்க ரெண்டு பேரையும் இன்றைக்கு   கண்டிப்பாக  இங்கிருந்து அனுப்பிடறோம்" என்றார்கள். அது தெரிந்ததும்   சிலர்  சண்டைக்கு வர, முடிவில் அனைவரையும் அங்கிருந்து தனி  flightல்  அனுப்பி  வைத்தார்கள்
ஆக முதல் விமான பயணமே "கலகலப்பா" இருந்தது.
சிறு வயது முதலே நான் போக,  பார்க்க நினைத்த இடங்கள் இரண்டே இரண்டுதான்.
ஒன்று --  இலங்கை.  ஆனால். உள் நாட்டுக் கலவரங்களால்  பிளவுபட்ட இலங்கையை பார்க்கும் ஆசை இப்போது இல்லை.
இரண்டு  -- எனது கனவு, எண்ணம், ஏக்கம் எல்லாமே, நயாகராவை  ஒரு  முறை யாவது பார்த்துவிட வேண்டும் என்பதுதான்.இதை சொல்லும்போது  எனது ஃப்ரெண்ட்ஸ்  கிண்டல் பண்ணுவார்கள். "நீங்க அங்கே போய்,  உங்க ஊர் குற்றாலம்ன்னு நினைச்சிக்கிட்டு டவலையும் சோப்பையும் எடுத்திட்டு குளிக்கக் கிளம்பீடாதீங்க "என்பார்கள்
நாம ஏதாவது பார்க்க முடியாது என்று ஏங்கினால்,  ஆசைப்பட்டால், அது உடனே  நடக்கும்தானே?!. பிறகு இந்த நயாகரா மட்டும் ஏன் தான் நம்மளை காலை   வாரி  விடுகிறதென்று  தெரியவில்லையே  என்று ஒரு நாள் ரொம்பவும் வருத்தப்பட்டேன்.  ஆனால்  அந்த  வருத்தத்தை நான் வாய் விட்டு  வெளியே சொல்லவில்லை.  அன்று இரவு எனது   சகோதரியின்    மகள்  மனோ,  " அம்மா, எங்க ஆபீசில் என்னை U S A போக சொல்றாங்கம்மா . நான் போனா,  பாப்பாவை  பார்த்துக்க  நீயும்  துணை க்கு  வர்றியா ? உனக்கு லீவு கிடைக்குமா ?" என்றாள்
என் மனசுக்குள் உடனே நயாகரா கொட்ட ஆரம்பித்து விட்டது. வெளிக் காட்டிக் கொள்ளாமல், "அட, லீவு தராட்டா என்ன ,நான்  voluntary retirement எழுதிக் குடுத்துட்டு   வந்திடறேன் "என்றேன். 
"ஐயோ அதெல்லாம் வேண்டாம்மா. நீ retire ஆனதும் போகலாம்" என்றாள் 
கடவுளே, எஞ்சாமி பகவானே, எப்படியோ கனவு   நனவானால் சரி !
ஓடிக்கொண்டிருந்து விட்டு திரும்பி பார்க்கும்போது, அடடா இவ்வளவு தூரமா வந்திருக்கிறோம் என்ற நினைப்பு தோன்றுமல்லவா. அதே போல மேலே  சொன்ன சம்பவங்கள் நடந்த கால கட்டத்தில் அது ஒரு பெரிய விசயமாகவே தோன்றவில்லை. சில வருடங்களைக் கடந்து வந்து  பழைய  சம்பவங்களை  அசை போட்டுப் பார்க்கும் போதுதான்  இந்த மாதிரி  அதிசயம் எல்லாம் நம் வாழ்வில் நடந்திருக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது. எழுத தோன்றுகிறது. 
DEAR READERS, உங்கள் வாழ்விலும் இது மாதிரியான சம்பவங்கள்
உண்டென்றால் தெரிவிக்கலாமே. அது எனது blog spot ல் பிரசுரமாகும் .
ரொம்ப போரடிச்சிட்டேனோ ?

No comments:

Post a Comment